Published:Updated:

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 21

சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

பிரீமியம் ஸ்டோரி
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 21

ஜார்ஜ் டெனிஸ் பேட்ரிக் கார்லின் பத்திக் கேள்விப் பட்டிருக்கீங்களா, ப்ரோ? அவர் ஓர் அமெரிக்க காமெடி நடிகர். சமூக விமர்சகர். அரசியல் அவலங்களை நையாண்டி செய்யறதுல கில்லாடி! இங்கே நம்ம கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், சமூக அவலங்களைச் சாடி, சினிமா மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லி நம்ம மனசுல பதிய வெச்சார் இல்லையா, அது மாதிரி அங்கே ஜார்ஜ் கார்லின்.

நம்ம வாழ்க்கையில இருக்கிற முரண்பாடுகள் பத்தி ஜார்ஜ் கார்லின் ரொம்ப அழகா சொல்லியிருக்கார். அதைக் கொஞ்சம் ஆழ்ந்து படிச்சுப் பார்த்தோம்னா, வாழ்க்கைன்னா என்ன, நாம எப்படி வாழணும்,  என்னென்ன பண்புகளை வளர்த்துக்கணும், எதையெதையெல்லாம் மிஸ் பண்றோம்னு நமக்குப் புரிய வரும்.

“உயர உயரமான கட்டடங்களை எழுப்பியிருக்கோம்; ஆனா, நம்ம மனசு மட்டும் இன்னும் வளராம குட்டையாவே இருக்கு. அகல அகலமான ரோடுகளுக்குக் குறைச்சல் இல்லே; ஆனா, நம்ம பார்வை மட்டும் குறுகலாத்தான் இருக்கு. நிறைய வாங்கிக் குவிக்கிறோம்; ஆனா, அனுபவிக்கிறது குறைவுதான். வீடுகள் பெரிசா இருக்கு; ஆனா, குடும்பம்தான் சிறுத்துப் போயிடுச்சு. வீட்டுல வசதிகள் அதிகம்; ஆனா, அனுபவிக்கிற நேரம் குறைவு!

நம்மகிட்ட படிப்பு அதிகம்; அதுக்குண்டான பண்பு குறைவு. நிறையத் தெரிஞ்சு வெச்சி ருக்கோம்; ஆனா, எதையும் புரிஞ்சுக்கிற பக்குவம் இல்லே. நிறைய மருந்துகள் இருக்கு; அதைவிட அதிகமா நோய்களும் இருக்கு. நிறைய நிபுணர்கள் நம்மிடையே இருக்காங்க; ஆனா, பிரச்னைகளுக்கும் குறைவில்லே.

அதிகம் குடிக்கிறோம்; அதிகம் புகைக் கிறோம்; பொறுப்பற்ற வகைகள்ல நேரத்தை அதிகம் செலவு செய்யறோம்; அதிகம் டி.வி. பார்க்கிறோம்; அதிகம் கோபப்படறோம்; லேட்டா தூங்கப் போறோம்; களைப்பா எழுந்திருக்கிறோம்; கொஞ்சமா படிக்கிறோம்; கொஞ்சமா சிரிக்கிறோம்; எப்பவாவது பிரார்த்தனை பண்றோம்.

நம்முடைய சொத்துக்களைப் பெருக்கிக்கிட்டோம்; நம்முடைய மதிப்பைக் குறைச்சுக்கிட்டோம். அதிகம் பேசறோம்; கொஞ்சமா கவனிக்கிறோம். சட்டுனு ஒருத்தரை வெறுத்துடறோம்; ஆனா, அன்பு செலுத்த மட்டும் ஆயிரம் யோசிக்கிறோம்.

நல்லா பேசக் கத்துக்கிட்டிருக்கோம்; நல்லதா பேசக் கத்துக்கலை. வாழ்க்கைக்குத் தேவையானது என்னென்னனு தெரிஞ்சு வெச்சிருக்கோம்; வாழத்தான் தெரிஞ்சுக்கலை. நிலவுக்குப் போய் அங்கே என்ன இருக்கு, என்ன இல்லைன்னு பார்த்துட்டோம்; ஆனா, நம்ம பக்கத்து ஃப்ளாட்டுல யார் இருக்காங்க, அவங்க தேவை என்னன்னு பார்க்க விரும்பலை. நமக்கு அதுக்கெல்லாம் நேரமும் இல்லை. பெரிய பெரிய விஷயங்களைப் பண்றோம்; அரிய விஷயங்களைப் பத்தி யோசிக்கிறதுகூட இல்லை.

நாம வெளி உலகை ஜெயிக்க ஆசைப்பட றோம்; அக உலகை அடைய முயற்சி செய்யறது இல்லை. நிறைய திட்டங்கள் தீட்டுறோம்; அதைச் செயல்படுத்த முனையறது இல்லை. தகவல் சேகரிப்புல பலமா இருக்கோம்; தகவல் பரிமாற்றத்துல பலவீனமா இருக்கோம்.

இது ஃபாஸ்ட் ஃபுட் காலம்; செரிமானக் கோளாறுகள் அதிகம் உள்ள காலம். பெரிய மனிதர்கள் என்கிற போர்வைக்குள் அற்ப குணங்கள் குடியிருக்கிற காலம்;

நமக்குப் பணம் முக்கியம்; பந்தங் களும் சொந்தங்களும் அநாவசியம்.

ஒரு குடும்பம் நடத்த ஒருவர் வேலை செய்தா போதாதுன்னு கணவன், மனைவி இருவருமே வேலைக் குப் போறோம்; ஆனா, விவாகரத்துகளும் பெருகிடுச்சு. வீட்டை அலங்காரமா வெச்சிருக்கோம்; குடும்பத்தைதான் அலங்கோலமா ஆக்கிட்டோம்.

காபி கப், பால் பாயின்ட் பென், டயாப்பர், ரேசர், சிரிஞ்ச்னு பலவற்றையும் உபயோகப்படுத்திட்டுத் தூக்கி எறியற பொருள் களா மாத்திட்டோம். கூடவே, அறநெறிகளையும் தூக்கி எறியப் பழகிட்டோம். அமைதியா தூங்க மாத்திரை, கோபத்தை அடக்க மாத்திரை, சந்தோஷம் கிடைக்க மாத்திரைனு மாத்திரை உலகமா மாத்தி வெச்சிருக்கோம்.

நம்முடைய ஷோ-ரூம்ல நிறைய விஷயங்கள் பார்வைக்கு இருக்கு; ஸ்டாக் ரூம்தான் காலியா இருக்கு.

இந்தத் தொழில்நுட்ப உலகம் என்னுடைய இந்தத் தகவலை உங்ககிட்டே சுலபமா கொண்டு வந்து சேர்த்துடுச்சு. அதே தொழில்நுட்ப உலகம்தான் உங்களுக்கு இதை ஜஸ்ட் ஒரு க்ளிக்ல வேற ஒருத்தருக்கு ஃபார்வேர்டு செய்யவோ, டெலீட் செய்யவோ வழிவகை செய்து தந்திருக்கு.

நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றுதான்... உங்கள் நேசத்துக்குரியவர்களோடு சில மணி நேரங்களைச் செலவு செய்யுங்கள். காரணம், அவர்கள் என்றென்றைக்கும் உங்களைச் சுற்றி இருக்கப் போவதில்லை. உங்களைப் பிரமிப்பாக அண்ணாந்து பார்க்கிறவர்களிடம் அன்பாக நாலு வார்த்தை பேசுங்கள். காரணம், அவர்கள் வெகு சீக்கிரமே வளர்ந்து, உங்களைக் கடந்து சென்றுவிடுவார்கள். உங்கள் அருகில் இருப்பவர்களை இறுக அணைத்துக் கொள்ளுங்கள். அதுதான் அவருக்கு உங்கள் இதயத்திலிருந்து தரும் உண்மையான, விலைமதிப்பற்ற பரிசு. உங்கள் வாழ்க்கைத் துணையிடமும், உங்கள் நேசத்துக்குரியவர்களிடமும், ‘நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்’ என்று அதன் முழுமையான அர்த்தத்துடன் உங்கள் அடிமனதிலிருந்து சொல்லுங்கள். உங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து வரும் அன்பான வார்த்தைகளும், ஆதுரமான அணைப்பும் மனக் காயங்களை ஆற்றும் சக்தி படைத்தவை. உங்கள் நட்புக்குரியவர்களின் கையோடு உங்கள் கையைக் கோத்துக்கொண்டு, அந்த ஆனந்தத்தை நெஞ்சில் தேக்கிக் கொள்ளுங்கள். என்றைக்காவது ஒருநாள், அவர் உங்கள் அருகில் இல்லாது போகலாம்.  

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 21

பேச நேரம் ஒதுக்குங்கள்; நேசிக்க நேரம் ஒதுக்குங்கள்; இந்தப் பொக்கிஷ நினைவுகளை உங்கள் மனதில் அசைபோட நேரம் ஒதுக்குங்கள்.தயவுசெய்து மறக்காதீர்கள்... எத்தனை முறை மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கிறோம் என்பதை வைத்து வாழ்க்கை அளவிடப்பட வில்லை; எத்தனை தருணங்களில் அந்த மூச்சை வெளியே விடுகிறோம் என்பதை வைத்துத்தான் வாழ்க்கை நிர்ணயிக்கப்படுகிறது.”

ஜார்ஜ் கார்லின் சொல்லியிருக்கிறதை யெல்லாம் மறுபடி மறுபடி படிச்சுப் பார்ப்போம். இதுல நாம எங்கெங்கெல்லாம் மிஸ்ஸாகுறோம் என்பதை கவனிச்சு, அதையெல்லாம் சரிபண்ணிப்போம்.

கிழிஞ்சு போன உலக வரைபடத்தை சரியான விதத்துல ஒண்ணு சேர்க்கிறது கொஞ்சம் கஷ்டமான காரியம்தான்; ஆனா, அதன் பின்னால இருக்கிற ஒரே ஒரு மனித உருவத்தை ஈஸியா ஒண்ணு சேர்த்துட லாம்தானே? அப்படிச் சேர்த்துட்டா, உலகமும் ஒழுங்கா சேர்ந்துடும்னு ஒரு சின்ன குட்டிக் கதை சொல்வாங்க இல்லியா... அது போல, நாம நம்மை மாத்திக்க முயற்சி பண்ணுவோம். ஒவ்வொரு தனி மனுஷனும் திருந்தினா இந்த உலகமே திருந்திடும்; ஒவ்வொரு தனி மனுஷனுக்குள்ளேயும் அன்பை விதைச்சுக் கிட்டோம்னா, இந்த ஒட்டு மொத்த உலகமும் அன்பால சூழப்பட்டதாக ஆகிடும் இல்லையா?

- இன்னும் பேசுவோம்.

பரிசு யாருக்கு?

லீலா, நீலா, பாலா, கலா என நான்கு சிறுமிகளிடம் உள்ள ரிப்பன்களின் நிறமென்ன என்று சென்ற இதழில் கேட்டிருந்தேன்.

இதோ, விடை:

லீலாவிடம் உள்ளவை சிவப்பு, பச்சை ரிப்பன்கள்;

நீலாவிடம் உள்ளவை பச்சை, நீல ரிப்பன்கள்;

பாலாவிடம் உள்ளவை மஞ்சள், சிவப்பு ரிப்பன்கள்;

கலாவிடம் உள்ளவை மஞ்சள், நீல ரிப்பன்கள்.

இந்தச் சரியான விடையை எஸ்.எம்.எஸ். மற்றும் வாட்ஸப் மூலம் அனுப்பி யிருந்தவர்களில் சேலத்தைச் சேர்ந்த எம்.புவனேஸ்வரி என்ற வாசகருக்கு டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் எழுதிய ‘உறக்கத்திலே வருவதல்ல கனவு!’ என்ற புத்தகம் பரிசாக அனுப்பிவைக்கப்படுகிறது.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 21

மகாகவி பாரதி, இளைஞர்களுக்குச் சொன்ன யோசனைகளில் ஒரு ஐந்து மட்டும் இங்கே.

1) மனதில் உறுதி வேண்டும்; வாக்கினிலே இனிமை வேண்டும்!

2) தெளிவு பெற்ற மதியினாய் வா, வா, வா! சிறுமை கண்டு பொங்குவாய் வா, வா, வா!

3) மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!

4) உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!

5) சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

சவால்!

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 21இங்கே 16 சிறு கட்டங்கள் கொண்ட ஒரு சதுரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில்... 1, 2, 3, 4 ஆகிய எண்களை தலா மூன்று முறையும், எண் 5-ஐ நான்கு முறையும் எழுதிப் பூர்த்தி செய்ய வேண்டும்.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 21

முக்கிய நிபந்தனை: எந்த எண்ணும் இடம் வலமாகவோ, மேலிருந்து கீழாகவோ, குறுக்கிலோ ஒரே வரிசையில் ஒரு முறைக்கு மேல் அமையக்கூடாது.

உங்கள் பதிலை உடனே 97911 21738 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அல்லது வாட்ஸப்பில் அனுப்புங்கள். புத்தகப் பரிசு பெறும் வாய்ப்பு உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு