Published:Updated:

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 22

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 22
பிரீமியம் ஸ்டோரி
News
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 22

சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 22

ரெண்டு நாளைக்கு முன்னால, சென்னை, புழுதிவாக்கத்துல இருக்கிற என் ஃப்ரெண்டைப் பார்க்க, அவன் வீட்டுக்குப் போயிருந்தேன். அவனோட தங்கச்சி பிள்ளையை இப்பத்தான் ஸ்கூல்ல எல்.கே.ஜி. சேர்த்திருக்காங்க. ஏற்கெனவே அந்தக் குழந்தை ரொம்பச் சுட்டித்தனம் பண்ணும். செம வாலு. ரொம்பவே சேட்டை பண்ணும். வெடுக் சுடுக்னு சுட்டியா பேசும். அது கேக்குற கேள்விகளுக்குப் பெரியவங்களாலகூட பதில் சொல்ல முடியாது. எங்கிட்டே அங்கிள், அங்கிள்னு ஒட்டிக்கும். குழந்தையைப் பார்த்து நாளாச்சா… அதான், பார்த்துட்டு, ஃப்ரெண்டையும் பார்த்துப் பேசிட்டு, குழந்தை ஒழுங்கா ஸ்கூலுக்குப் போய் வர்றானானு அவன் தங்கச்சி சாந்தியையும் விசாரிச்சுட்டு வரலாம்னு போயிருந்தேன்.

நான் போன நேரத்துல அந்தக் குழந்தைக்கும் அதன் அம்மாவுக்கும் ஏதோ வாக்குவாதம். என்னன்னு கிட்ட போய்ப் பார்த்தேன். அந்தக் குழந்தை தன் அம்மாவைப் பார்த்து, “பேட் மம்மி! யூ ஆர் வெரி பேட் மம்மி!’னு மூஞ்சியை உர்ருனு வெச்சுக் கத்திட்டிருந்துது. எனக்குப் புரியலை. “என்ன தங்கச்சி ஆச்சு? ஏன் இப்படி ரகளை பண்றான் உன் பையன்? சும்மா இல்லாம எதுனா சீண்டி விட்டுட்டியா என் மருமவனை?”னு கேட்டேன்.

“அவனையே கேளுங்கண்ணே!” என்றாள் சாந்தி.

“என்னடா பிரவீண் குட்டி? எதுக்கு அம்மாவைத் திட்டறே?” என்றேன் குழந்தையிடம்.

“ஜூஜூ பாவம்தானே அங்கிள்? அதுபாட்டுல சமத்தா படுத்திருக்கு. மம்மி அதும்மேல தண்ணியக் கொட்டி, விரட்டி விடுறாங்க” என்றது குழந்தை.

“என்னம்மா, குழந்தை கேக்கறதும் நியாயம்தானே? நாய் மேல தண்ணியைக் கொட்டலாமா?”ன்னு தங்கச்சியைக் கேட்டேன்.

“நீங்க வேறண்ணே… நான் என்ன வெந்நீரையா ஊத்துறேன்? சில் தண்ணியத்தான் அதும் மேல ஊத்துறேன்…”

“அது கூடத் தப்புதானேம்மா? பாவம், அது உன்னை என்ன பண்ணிச்சு?”

“என்ன பண்ணிச்சா? நல்லா கேட்டீங்க. அதுபாட்டுல ‘கேட்’டைத் தாண்டி, வீட்டு காம்பௌண்டுக்குள்ள, காரை பார்க்கிங் பண்ற இடத்துல வந்து தினமும் படுத்துக்குது. படுக்கறதோட மட்டுமா… அங்கேயே நம்பர் டூ போய் இடத்தை அசுத்தம் பண்ணி வெச்சிடுது. தினமும் கழுவித் தள்ள என்னால முடியலைண்ணே!

அதான், அதும் மேல ஒரு சொம்பு தண்ணியைக் கொட்டி, அதைப் படுக்க விடாம விரட்டிடுவேன். இன்னிக்கு அதைப் பார்த்துட்டான் என் அருமைப் புத்திரன். அது அவனோட செல்ல நாயாம். எப்படி அதும் மேல நான் தண்ணியக் கொட்டலாம்னு என்னோடு ஒரே சண்டை. வேடிக்கையைக் கேளுங்கண்ணே…. நான் அந்த நாய்கிட்டே ஸாரி கேக்கணுமாம். இல்லன்னா தொரை சாப்பிட மாட்டாராம்!” என்றாள் சாந்தி.

ஐந்தறிவு ஜீவன் மீது ஒரு குழந்தைக்கு இருக்கும் அன்பும் கரிசனமும் என்னை நெகிழ்த்தியது. இருந்தாலும், தங்கச்சி சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறதே! தினம் தினம் ஒரு நாளைப்போல் அந்த நாய் வந்து, இடத்தை அசுத்தம் செய்துவிட்டுப் போனால், யாரால்தான் சகிக்க முடியும்?

“இல்லடா கண்ணா… அது இங்கே எல்லாம் வந்து டூ பாத்ரூம் போய் அசிங்கம் பண்ணிடுது இல்லியா, அதான், மம்மி அதை விரட்டறாங்க. அதுக்காக அவங்களை நீ பேட் மம்மின்னு சொல்றதா?”ன்னு, குழந்தையின் முகவாயை வருடி, சமாதானம் செய்யப் பார்த்தேன்.

அந்தக் குழந்தை என் கையைத் தட்டிவிட்டுச் சொல்லிச்சு பாருங்க ஒரு தேவ வாக்கு… “நமக்கெல்லாம் டாய்லெட் இருக்கிற மாதிரி, ஜூஜூக்கு டாய்லெட்டே இல்லியே, அங்கிள்? பாவம், அது எங்கே டூ பாத்ரூம் போகும்?”

சட்டென என் உடல் சிலிர்த்துப் போயிற்று. குழந்தையை அள்ளிக் கொஞ்சினேன். இத்துனூண்டு சின்ன மனசுக்குள்ளே எவ்ளோ பெரிய யோசனை பாருங்க! ‘குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று’னு சினிமா பாட்டு இருக்கு. சத்தியமான விஷயங்க!

குழந்தைகளா இருக்கிற வரைக்கும் நாமெல்லாருமே தெய்வ குணங்களோடுதான் இருக்கோம். வளர வளரத்தான் எப்படியோ நமக்குள்ளே சைத்தான் குணங்கள் புகுந்துக்கிட்டு, நம்மை மனிதன்னு சொல்லிக்கவே லாயக்கில்லாத இழிபிறவிகளா மாத்தி வெச்சுடுது.

சில நாளைக்கு முன்னால, அப்பாவி நாய் ஒண்ணை நாலாவது மாடியிலேர்ந்து தூக்கிப் போட்டு, அதை வீடியோவும் எடுத்து இணையத்தில் பதிவேத்தின இளைஞனை நினைக்கிறப்போ வேதனையா இருக்குங்க. அவனுக்கு என்னதான் பிரச்னை? ஒரு விதமான சைக்கோத்தனம் இல்லையா அவன் செஞ்ச காரியம்? அவன் மனசு எத்தனை குரூரம் நிரம்பியதா இருந்தா, அவன் இந்தக் காரியத்தைப் பண்ணியிருப்பான்? இத்தனைக்கும் அவன் மருத்துவக் கல்லூரி மாணவனாம். அவனோட கிளினிக்ல அவன்கிட்டே அம்பது அறுபது பேர் அறுவை சிகிச்சை செய்துக்கக் காத்திருக்கிற மாதிரி கற்பனை பண்ணிப் பார்த்தாலே, ஒரு மாதிரி நெஞ்சுக்குள்ள படபடன்னு வருது. ‘உன்னைப் பார்த்தா டாக்டர் மாதிரி தெரியலியேடா, எமன் மஃப்டில வந்த மாதிரியே இருக்கேடா!’னு வடிவேலு ஒரு படத்துல சொல்றதுதான் ஞாபகத்துக்கு வருது.

அதுக்கடுத்து சில நாள் கழிச்சு, ஹைதராபாத்ல ஐந்தாறு சின்னப் பசங்க மூணு நாய்க் குட்டிகளை உசுரோடு நெருப்புல போட்டுப் பொசுக்கியிருக்காங்க. சத்தியமா சொல்றேங்க, அந்த வீடியோவைப் பார்த்தப்புறம் நைட்டு சாப்பாடு தொண்டையில இறங்கலீங்க. ராத்திரி தூக்கம் வரலே. கண்ணை மூடினா, அந்த நாய்க் குட்டிங்க கதர்ற கத்தல்தான் காதுக்குள்ள கேக்குது.

சென்னைல வெள்ளம் வந்தப்போ, ஓடி ஓடி வந்து உதவி பண்ணின இளைஞர்கள் எங்கே போனாங்க? அந்த அன்பும் அக்கறையும் கொண்ட இளைஞர்கள் வேற, இந்தக் கொலைஞர்கள் வேறயா? இவங்களோட புத்தி மட்டும் ஏன் இப்படி வக்கரிச்சுப் போச்சு? எதனால வக்கரிச்சுப் போச்சு? இவங்க ஆசைப்பட்டது கிடைக்காததுதான் காரணமா? அல்லது, ஆசைப்பட்டதெல்லாம் தட்டாம கிடைச்சுட்டதுதான் காரணமா?

ஏதோ ஒரு த்ரில் வேணுங்கிறதுக்காகத்தான், ஏதோ ஒரு பப்ளிசிடி வேணுங்கிறதுக்காகத்தான் இப்படியெல்லாம் லூசுத்தனமா, கிறுக்குத் தனமா, சைக்கோத்தனமா, மென்டல் மாதிரி நடந்துக்கறாங்களா?

சில மாசங்களுக்கு முன்னால நான் பார்த்த இன்னொரு வீடியோ பத்தியும் இங்கே சொல்லியாகணும். சேறும் சகதியும் நிரம்பிய சாக்கடை மாதிரி ஒரு குட்டையில தெரு நாய் ஒண்ணு எப்படியோ விழுந்து, வெளியே வர முடியாம தத்தளிச்சிட்டிருக்கு. ஹீனமா கத்திக்கிட்டிருக்கு. அந்த வழியா போகிற நாலு இளைஞர்கள் நிக்கிறாங்க. அதை எப்படி வெளியே எடுக்கலாம்னு யோசிக்கிறாங்க.

மேட்டுல ஒருத்தன் நிக்கிறான். அவன் கையைப் பிடிச்சுக்கிட்டு இன்னொருத்தன் உள்ளே இறங்கறான். அவன் கையோடு தன் கையைக் கோத்துக்கிட்டு, இன்னொரு ஃப்ரெண்ட் சாக்கடைக்குள்ள மெதுவா கால் வெச்சு ஆழம் எவ்ளோ இருக்குன்னு பாக்கறான்.

நாலாவது ஃப்ரெண்ட் இன்னும் உள்ளேயே இடுப்பளவு ஆழத்துல அந்தச் சாக்கடையில இறங்கிப் போய், அந்த நாயை இடுப்போடு அணைச்சுத் தூக்கி, மெதுவா கரையில கொண்டு வந்து இறக்கிவிடறான். உடனே அது உடம்பைச் சிலிர்த்து உதறிக்கிட்டு, தலை தெறிக்க ஓடி மறையுது. இந்தப் பசங்க மூஞ்சியில ஓர் உசிரைக் காப்பாத்தின மகிழ்ச்சி!

அந்த நாலு பசங்களையும் அப்படியே கட்டியணைச்சு முத்தமிடணும்போல இருந்துதுங்க எனக்கு. அவ்வளவு டச்சிங்கா இருந்துது அந்த வீடியோ!

எனக்கு இன்னும் நம்பிக்கை போகலை, ப்ரோ! அங்கொண்ணும் இங்கொண்ணுமா நடக்கிற சில வக்கிர விளையாட்டுகளால, இன்றைய இளைஞர்களே மோசமானவங்கங்கிற முடிவுக்கு வர நான் தயாரா இல்லே.

ஒரு சிலர் அப்படி இருக்கலாம். அதுக்கு அவங்களோட குடும்பம், அவங்களோட சூழல், வாழ்க்கை முறை, பின்னணின்னு பல விஷயங்கள் காரணமா இருக்கலாம். ஆனா, பொதுவா இன்றைய இளைஞர்கள் உதவி செய்யுற மனப்பான்மை உள்ளவங்களாதான் இருக்காங்க.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 22

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஜார்ஜ் கார்லின் சொன்னதுபோல், தங்கள் நேசத்துக்குரியவர்களிடம், ‘நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்’னு அடிமனதிலிருந்து சொல்றவங்களாகவும், இதயத்தின் ஆழத்தி லிருந்து அன்பான வார்த்தைகளை உதிர்ப்ப வர்களாகவும், நட்புக்குரியவர்களின் கையோடு தங்கள் கையைக் கோத்துக்கொண்டு, அந்த ஆனந்தத்தை நெஞ்சில் தேக்கிக் கொள்பவர் களாகவும் இருப்பதைத்தான் பார்க்கிறேன்.

அன்பான தோழர்களே, உங்ககிட்ட ஒரு வேண்டுகோள்… உங்களோட இந்த அன்பை உங்களுக்கான குணமா மட்டுமே வெச்சுக் காதீங்க. இந்த அன்பின் விதைகளை நீங்கள் சந்திக்கிற மனங்களிலெல்லாம் விதையுங்கள்; பழகுகிற நபர்களிடமெல்லாம் இந்த அன்புப் பயிரை வளர்த்தெடுங்கள். அன்புப் பயிர் விளைவதற்குத் தடையாக யாரிடமாவது வேண்டாத சில குணங்கள் களையாக முளைத்திருப்பதைக் கண்டால், உடனடியாக அதை வேரோடு வெட்டி எறியுங்கள்.

அன்பே சிவம்! அன்புதான் இன்ப ஊற்று; அன்புதான் உலக ஜோதி; அன்புதான் உலக மகா சக்தி!

- இன்னும் பேசுவோம்.


பரிசு யாருக்கு?

சென்ற இதழில் கேட்கப்பட்டிருந்த சவால் புதிருக்கான விடை:

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 22

எண்களை வேறு சில விதங்களிலும் பூர்த்தி செய்து, சரியான விடை காண முடியும். அப்படி, எஸ்.எம்.எஸ். மற்றும் வாட்ஸப் மூலம் சரியான விடைகளை அனுப்பியிருந்தவர்களில், மதுரையைச் சேர்ந்த ரேணுகாதேவி என்ற வாசகிக்கு டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் எழுதிய ‘உறக்கத்திலே வருவதல்ல கனவு!’ புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது.


ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 22

புரட்சி நாயகன் சே குவேரா, இளைஞர்களுக்குச் சொன்ன யோசனைகளில் ஐந்து மட்டும் இங்கே...

** விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்!

** எதிரிகளைப் பற்றிக் கவலைப் படாதே! வாழ்க்கையில் எதிரிகளே இல்லாமல் இருப்பவன், வாழ்க்கையை முழுதாக வாழவில்லை என்றுதான் அர்த்தம்!

** உலகத்தில் அநீதி கண்டு, கோபமும் வெறுப்பும் கொண்டு நீ குமுறி எழுவாயானால், நாம் இருவரும் தோழர்களே!

** இயல்பாக இருங்கள்; ஆனால், சாத்தியம் இல்லாதவற்றை அடையப் போராடுங்கள்!

** உண்மையான புரட்சி என்பது, அன்பான உணர்வுகளாலேயே வழிநடத்தப்படுகிறது.


சவால்!

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 22
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 22

ந்த வரிசையில் அடுத்து வரவேண்டிய தெய்வத்தின் திருவுருவம் எது? கீழே கொடுக்கப் பட்டுள்ளவற்றிலிருந்து பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் விடைக்கான காரணத்தையும் சொல்லவும்.

(ராமன், ஐயப்பன், கிருஷ்ணன், சிவன், அனுமன்)

உங்கள் பதிலை உடனே 97911 21738 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அல்லது வாட்ஸப்பில் அனுப்புங்கள். புத்தகப் பரிசு பெறும் வாய்ப்பு உண்டு.