Published:Updated:

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 24

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 24
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 24

சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 24

சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

Published:Updated:
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 24
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 24
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 24

போன வாரமெல்லாம் ஒட்டுமொத்த இந்தியாவே குதூகலிக்கும்படியான செய்திகளா வந்துட்டிருந்துது. ஒலிம்பிக் போட்டியில முதல்ல, ஹரியானாவைச் சேர்ந்த சாக்‌ஷி மலிக் மல்யுத்தத்துல வெண்கலப் பதக்கத்தைத் தட்டிக்கிட்டு வந்தாங்க. அடுத்து, ஆந்திராவைச் சேர்ந்த பி.வி.சிந்து, ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மின்டன் இறுதிப் போட்டியில வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைச்சிருக்காங்க. சந்தோஷமா இருக்கு. இவங்களுக்கு அரசாங்கங்களும் பரிசுத் தொகைகள், அரசு வேலை வாய்ப்புகள்னு அறிவிச்சு, இவங்க வெற்றியை கௌரவப்படுத்தியிருக்கு.

ஃபேஸ்புக்லயும் நிறையப் பேர் இவங்களை வரவேற்றுப் பாராட்டிப் பதிவுகள் போட்டிருக்காங்க. இவங்க யாரு, எந்த மாநிலத்துக்காரங்க என்பதையெல்லாம் தாண்டி, நம்ம இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவங்கன்ற முறையில இவங்க வெற்றியை தங்களோட வெற்றியா எண்ணிக் கொண்டாடியிருக்காங்க. நல்ல விஷயம்.

ஆனா, இந்த சந்தோஷத்துக்கு மத்தியில சங்கடமான சில விஷயங்களையும் பார்க்க நேர்ந்ததுங்கிற உண்மையை நான் இங்கே சொல்லித்தான் ஆகணும். சாக்‌ஷி மலிக், சிந்து இவங்க மாதிரியான வீராங்கனைகள், வீரர்கள், கலைஞர்கள் எல்லாம் ஒரு குறுகிய இடத்துக்கோ, இனத்துக்கோ சொந்தமானவங்க இல்லே.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை உலகமே கொண்டாடுது. அவர் நம்ம தமிழ்நாட்டுக் காரர்ங்கிறதிலே நமக்குக் கொஞ்சம் கூடுதல் பெருமை வேணா இருக்கலாம். ஆனா, ஒட்டுமொத்த இந்தியாவின் ஐகான் அவர்.

சச்சின் டெண்டுல்கர் நம்ம தமிழ்நாட்டுக்காரர் இல்லையே! ஆனாலும், அவர் சாதனைகளின் போது நாம எவ்வளவு குதூகலிச்சோம்! அவருக்கு பாரத் ரத்னா விருது கொடுத்தப்போ நாமும்தானே அதை வரவேற்று மகிழ்ந்தோம்!

அவ்வளவு ஏங்க… மைக்கேல் ஜாக்சனுக்கும் நமக்கும் என்ன, ஒட்டா உறவா? அவரை நாம தலையில தூக்கி வெச்சுக் கொண்டாடலையா? அவரோட பாட்டுக்கும்  நடனத்துக்கு மயங்கலையா? நம்ம பிரபுதேவாவுக்கு ‘தென்னகத்து மைக்கேல் ஜாக்சன்’னு அவர் பேரை வெச்சே பட்டம் கொடுத்து சந்தோஷப்பட்டுக்கலையா? அவர் திடுமென இறந்தப்போ, நாமும்தானே அதை ஜீரணிக்க முடியாம கதறித் துடிச்சோம்! இவங்க எல்லாம் எந்த நாட்டுக்காரங்க, என்ன மதம், என்ன சாதின்னு பார்த்துப் பார்த்தா இவங்களை நேசிச்சோம்?

ஆனா, ஒலிம்பிக்ல வெள்ளிப் பதக்கம் வாங்கின சிந்து என்ன சாதின்னு ரெண்டு லட்சத்துக்கும் அதிகமான பேர் தேடியிருக் கிறதா கூகுள் சொல்லுது. ஒரு திறமைசாலியை, ஒரு சாதனையை அங்கீகரிக்கக்கூடவா சாதியும் மதமும் குறுக்கே வருதுன்னு நினைக்கிறப்போ… கேப்டன் பாணியில சொல்லணும்னா, ‘எவ்ளோ பெரிய கேவலம் இது!’.

அதேபோலத்தான், சாக்‌ஷி மலிக்! அவங்க பேரை இங்கிலீஷ்ல பார்த்து ‘மாலிக்’னு புரிஞ்சுக்கிட்டு, ஃபேஸ்புக்ல முஸ்லிம் பதிவர்கள் சிலபேர், சாக்‌ஷி மாலிக்கை தங்கள் மதத்துக்காரரா நினைச்சு, அதுக்காகவே அவரைப் பாராட்டியிருக் காங்க.  வருத்தமா இருக்குங்க.  திறமைசாலிகள், இந்த நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர்கள் யாராக இருந்தாலும், எந்த மதத்துக்காரராக, எந்தச் சாதிக்காரராக இருந்தாலும் அவங்களைக் கௌரவிக்க வேண்டியது, கொண்டாட வேண்டியது நம்ம கடமை இல்லியா!

கான் அப்துல் கஃபார்கான் இந்த நாட்டின் மீது வெச்சிருந்த பற்றுக்காக, அவரை காந்திக்கு நிகரா மதிச்சு ‘எல்லை காந்தி’ன்னு கொண்டாடின நாடுங்க இது. ஆனா இன்னிக்கு, செக்கிழுத்த செம்மல் வ.உ.சி., கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் முதலான தலைவர்களை, அவர்கள் எங்க சாதின்னு ஒரு குறுகிய வட்டத்துக்குள்ள அடைச்சுப் பெருமைப் பட்டுக்கறதும், போஸ்டர் ஒட்டறதும் நடந்துக்கிட்டிருக்கு. நம்ம நாடு எங்கேதாங்க போயிட்டிருக்கு?

‘சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’னான் பாரதி. மனிதர்களிடையே மட்டுமில்லே, இந்த உலகத்தில் வாழும் அத்தனை ஜீவராசிகளும் ஒண்ணுதான்; அதுவும் நம்ம இனம்தான்னு வலியுறுத்தற மாதிரி, ‘காக்கை குருவி எங்கள் சாதி, காடும் மலையும் எங்கள் கூட்டம்’னு இன்னும் அழுத்தம் கொடுத்துச் சொன்னான்.

டாக்டர் ஹிமான்ஷு ராய் பத்தி நீங்க கேள்விப்பட்டிருக்கலாம். பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் ‘ஸ்ரீஜன்’கிற பேர்ல இவர் ஒரு கிளினிக் நடத்திட்டு வரார். குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகளுக்கு செயற்கைக் கருத்தரிப்பு முறையில சிகிச்சை கொடுத்து, அவங்களை குழந்தைப் பேற்றுக்குத் தகுதியானவங்களா ஆக்குறதுதான் இந்தக் கிளினிக்கின் பிரதான பணி. இதுக்காக அவர் ஒரு ‘ஸ்பெர்ம் பேங்க்’கையும் நடத்திட்டு வரார்.

ஸ்பெர்ம் கேட்டு வர தம்பதிங்க, ஸ்பெர்ம் தானம் பண்ணினவரோட உணவுப் பழக்கம், உடல் ஆரோக்கியம், அவரோட குணநலன்கள் இதையெல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்கறது வழக்கம்தான். இதுல ஒரு நியாயம் இருக்கு. ஆனா, ‘அவரோட சாதி என்னன்னு கேட்டு, அதுக்குப் பிறகுதான் அந்த ஸ்பெர்மை ஏத்துக்கறாங்க, பல பேர்.

இதனால பலரோட தேவைகளை எங்க கிளினிக்னால பூர்த்தி பண்ண முடியாமலே இருக்கு’ன்னு வருத்தத்தோடு சொல்றாரு ஹிமான்ஷு. பீகார்ல சில ஸ்பெர்ம் பேங்க்குகள்ல ‘யாதவ்’, ‘ராஜ்புத்’னு சாதிப் பெயர்களுக்கான ஸ்டிக்கர்கள் ஒட்டி வகைப்படுத்திதான் சேமிச்சு வைக்கிறாங்களாம். அந்த அளவுக்கு சாதி வெறி அங்கே தலைவிரிச்சு ஆடிட்டிருக்கு.

சாதி வித்தியாசம் பார்க்குறது தப்புன்னு உணர்த்தறதுக்காக, ‘எல்லோருடைய ரத்தமும் ஒரே நிறம்தானே?’ன்னு கேட்கறதுண்டு. அதுக்கும் சில குதர்க்கவாதிகள், ‘ஆனா, எல்லா ரத்தமும் ஒண்ணு இல்லையே?

வெவ்வேற குரூப்புகளா பிரிஞ்சில்லே கிடக்கு?’ம்பாங்க. ரத்தம் வெவ்வேறு குரூப்பா பிரிஞ்சிருந்தாலும், அந்த எல்லா குரூப்பும் எல்லா சாதி மக்களிடமும்தானே இருக்கு?

ஆனாலும், அதுலயும் சாதிப் பிரிவினையைக் கொண்டு வந்துட்டாங்க நம்மாளுங்க. சமீபத்துல, ஹைதராபாத்ல ஒண்ணரை வயசுக் குழந்தைக்கு ஓ பாஸிட்டிவ் ரத்தம் தேவைன்னு கேட்டு, ஒரு ஃபேஸ்புக் பதிவு பார்த்தேன். இதுல என்ன வேதனைன்னா, இந்த வகை ரத்தம் உள்ள குறிப்பிட்ட சாதி மக்கள் மட்டும் அணுகவும்னு போட்டிருந்துது. என்ன கொடுமை சரவணன்?

‘சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி’

சாதிப் பித்து உள்ளவங்க மண்டையில அடிக்கிற மாதிரி அன்னிக்கே பாடி வெச்சுட்டுப் போயிட்டாங்க நம்ம அவ்வைப் பாட்டி. கொடுக்கறவன்தான் பெரிய மனுஷன்; கொடுக்காதவனெல்லாம் இழிபிறவி. இந்த ரெண்டே சாதியைத் தவிர, வேற சாதி இல்லைன்னு தெளிவா சொல்லிட்டாங்க.

கொடுக்குறதுன்னா இன்னொரு தனி மனிதனுக்கு, ஜீவனுக்குத் தன் கிட்டே இருக்கிறதைக் கொடுத்து உதவி பண்றதுன்னும் வெச்சுக்கலாம்; அல்லது, தன் கிட்டே இருக்கிற திறமையை, சரக்கை இந்த சமுதாயத்துக்குப் பயன்படற மாதிரி பகிர்ந்துக்கிறதுன்னும் எடுத்துக்கலாம். ஆக, இட்டார் பெரியோர்; இடாதார் இழி குலத்தோர். அவ்வளவுதாங்க மேட்டரு!

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 24

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுல ஒரே ஒரு நல்ல விஷயம் என்னன்னா, சிந்துவின் சாதி குறித்து கூகுள்ல தேடினவங்க ரெண்டு லட்சம் பேர்னு எண்ணிக்கை மிரட்டினாலும், சிந்துவைக் குறித்த மொத்தத் தேடல்களோடு ஒப்பிடறப்போ இதன் பர்சன்டேஜ் ரொம்ப ரொம்பக் கம்மி. அது மட்டுமில்லாம, மொத்த மக்கள் தொகையில இந்தச் சாதி பாக்குறவங்க எண்ணிக்கை 0.01 சதவிகிதத்துக்கும் குறைவு!

அதனால எனக்கு நம்பிக்கை இருக்கு. இந்தக் குறைஞ்ச சதவிகிதம்கூட எதிர்காலத்துல இருக்கக்கூடாதுங்கிற என்னோட ஆசை நிச்சயமா நிறைவேறும்கிற நம்பிக்கை இருக்கு.

நாம என்ன சாதிக்குப் பிறந்தோம்னு பார்க்கிறதை விட்டுட்டு, என்ன சாதிக்கப் பிறந்தோம்னு பார்க்கலாமே, பாஸ்! என்ன சொல்றீங்க?

- இன்னும் பேசுவோம்.

சவால்!

கீழே உள்ள சொற்களை ஏதோ ஓர் ஒழுங்கில், ஏதோ ஒரு விதத்தில் வரிசைப்படுத்த முடியும். என்ன விதத்தில் என்று கண்டுபிடித்து, வரிசைப்படுத்துங்கள், பார்க்கலாம்!

சாறு, திரண்டு, தட்டு, சத்து, ஊன்று, எண்பது, தாங்கு, நைந்து, இன்று, வாழு.

உங்கள் பதிலை உடனே 97911 21738 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அல்லது வாட்ஸப்பில் அனுப்புங்கள். குரல் பதிவாகவும் அனுப்பலாம். புத்தகப் பரிசு பெறும் வாய்ப்பு உண்டு.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 24

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, இளைஞர்களுக்குச் சொன்ன யோசனைகளில் ஒரு ஐந்து மட்டும் இங்கே.

1) தெளிவான தொலைநோக்குச் சிந்தனை உங்களிடம் இருக்க வேண்டும். அதற்கான முழு நியாயத்துடன் கூடிய மிகச் சிறந்த பங்களிப்பை நீங்கள் தரத் தயாராக இருக்க வேண்டும். அப்படி முடியாத பட்சத்தில் அதிலிருந்து வெளியேறிவிடுவது உத்தமம்.

2) நீங்கள் செய்து முடிக்க வேண்டிய விஷயங்களில் எவ்வளவு முடியுமோ அவற்றை அன்றன்றே செய்து முடித்துவிடுங்கள். நாளைக்கே திடுமென இறக்க நேர்ந்தாலும், நாம் செய்து முடிக்க வேண்டிய பணி என எதுவும் மிச்சம் இருக்கக் கூடாது.

3) நாம் ஒவ்வொருவருமே சுய போலீஸ் அதிகாரியாக இருந்து செயல்பட்டால்தான், உண்மையான தேசியப் புரட்சி என்பது மலரும்.

4) வாடுகின்ற மக்களுக்காக வாழ வேண்டும் எனும் வைராக்கியம் உங்கள் உள்ளத்தில் எப்போதும் தழைத்திருக்கட்டும்!

5) முன்னேறிச் செல்வதற்கு நமக்கான வழிகளை நாம்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

பரிசு யாருக்கு?

11 நிமிடங்கள் மற்றும் 7 நிமிடங்கள் காட்டும் இரண்டு மணல் கடிகாரங்களைக் கொண்டு, மிகச் சரியாக 15 நிமிடங்களைக் கணக்கிட்டுக் கூற வேண்டும் என்பதுதான் சென்ற இதழ் சவால்!

முதலில், இரண்டு மணல் கடிகாரங்களையும் இயங்கவிடவும். சிறிய மணல் கடிகாரத்தில், ஒரு பக்கக் குடுவையில் இருக்கும் மொத்த மணலும் மிகச் சரியாக 7 நிமிடத்தில் மறு குடுவைக்கு மாறியதும், அதை உடனே கீழ் மேலாகத் திருப்பி, மீண்டும் இயங்க விடவும். பெரிய மணல் கடிகாரத்தில் அடுத்த 4 நிமிடங்களில் ஒரு குடுவையிலிருந்து மறு குடுவைக்கு மொத்த மணலும் இறங்கிவிடும். (இப்போது மொத்தம் 11 நிமிடங்கள் கடந்துள்ளன.)

அதே வேளையில், சிறிய மணல் கடிகாரத்தை மீண்டும் கீழ் மேலாகத் திருப்பி வைக்கவும். இப்போது அதன் மேல் குடுவையில் உள்ள மணல் கீழ்க் குடுவைக்கு மிகச் சரியாக 4 நிமிடங்களில் இறங்கும். ஆக, மொத்தம் 15 நிமிடங்கள்! 

இந்தச் சரியான விடையை எஸ்.எம்.எஸ். மற்றும் வாட்ஸப் மூலம் அனுப்பியிருந்தவர்களில், சென்னையே சேர்ந்த ஆனந்தலட்சுமி என்ற வாசகிக்கு டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் எழுதிய ‘உறக்கத்திலே வருவதல்ல கனவு!’ என்ற புத்தகம் பரிசாக அனுப்பிவைக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism