Published:Updated:

ரொட்டி கொண்டு வந்தவரிடம் உயிரைப் பரிசாகக் கேட்கலாமா? - பாபாவின் அருளாடல் #SaiBaba

ரொட்டி கொண்டு வந்தவரிடம் உயிரைப் பரிசாகக் கேட்கலாமா? - பாபாவின் அருளாடல் #SaiBaba
ரொட்டி கொண்டு வந்தவரிடம் உயிரைப் பரிசாகக் கேட்கலாமா? - பாபாவின் அருளாடல் #SaiBaba

ரொட்டி கொண்டு வந்தவரிடம் உயிரைப் பரிசாகக் கேட்கலாமா? - பாபாவின் அருளாடல் #SaiBaba

ரு மரத்தின் சிறப்பு, அந்த மரத்திலிருந்து கிடைக்கும் மலர், காய், கனிகளைக்கொண்டே அமைகிறது. அதைப்போலவே சத்குருவின் அருமை பெருமைகளும், அவருடைய அருளால் எத்தனை பேர் குருவுக்கு உரிய தகுதியைப் பெற்று, மற்றவர்களை நல்வழிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அறியப்படும். அப்படி ஷீர்டி பாபாவின் அருளால் மக்களை நல்வழிப்படுத்திய சில குருமார்களில் ஶ்ரீகாட்கி மஹராஜும் ஒருவர்.

ஷீர்டி பாபாவின் பக்தர்களில் ஒருவர் தாமோதர் ராஸ்னே. அவருடைய மகன் நானா சாகேப் ராஸ்னே. அவர் ஶ்ரீகாட்கி மஹராஜ் சுவாமிகளை தரிசித்து வணங்கி, அவரைத் தன்னுடைய வீட்டுக்கு வருமாறு அழைத்தார். காட்கி மஹராஜும் நானாவின் வீட்டுக்குச் சென்றார். முறைப்படி காட்கி மஹராஜை உபசரித்த நானா சாகேப், அவர் துறவறம் மேற்கொண்டதன் பின்னணியைப் பற்றிக் கேட்டார்.

காட்கி மஹராஜ் முதலில் மறுத்துவிட்டார். ஆனால், நானா வற்புறுத்தினார். தம்மிடம் மிகுந்த பக்தி கொண்டிருக்கும் நானா ஏமாற்றம் அடைந்துவிடக் கூடாது என்பதற்காக, தாம் துறவறம் மேற்கொண்ட பின்னணியைப் பற்றி விவரித்தார்.

``நான் சிவகாம் பதார்த்தி என்னும் ஊரிலுள்ள ஒரு கடையில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். என் பெற்றோர் துணி வெளுக்கும் தொழில் செய்பவர்கள். ஒருநாள் நான் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு பக்கீர் வந்து பிட்சை கேட்டார். கடை முதலாளி அவருக்கு பிட்சை போடாமல் அனுப்பிவிட்டார். அந்த பக்கீரின்  கண்களில் தெரிந்த தெய்விக ஒளி என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அவர் மிகப் பெரிய மகானாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது. அவருக்கு எப்படியும் உணவளிக்க வேண்டும் என்று விரும்பினேன். உடனே கடைக்கு அருகிலேயே இருந்த என்னுடைய வீட்டுக்குச் சென்று இரண்டு ரொட்டித் துண்டுகளைக் கொண்டு வந்தேன். அதற்குள் அந்தத் துறவி எங்கோ சென்றுவிட்டார். அவருக்கு எப்படியாவது உணவு அளிக்க வேண்டும் என்று என் மனம் துடித்தது. என் கால்கள் என்னையும் அறியாமல் அவரைத் தேடிச் சென்றன. இயற்கை எழில் மிகுந்த ஓரிடத்தில் அவர் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்த சந்தோஷத்தில் நான் அவரை நோக்கி ஓடினேன். என்னைப் பார்த்ததும் அவர் என் மேல் கோபம் கொண்டார். நான் அங்கே வந்தது அவருக்குப் பிடிக்கவில்லையோ என்று நினைத்துக்கொண்டு, அவரை சமாதானப்படுத்துவதற்காக, `உங்களுக்கு யாரும் உணவளிக்காத காரணத்தால், நான் மிகவும் மனம் வேதனையடைந்தேன். உங்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்று எண்ணித்தான், நான் என்னுடைய வீட்டுக்குச் சென்று ரொட்டி கொண்டு வந்தேன்’ என்று சொன்னேன். அதைக் கேட்டதும் அவர், 'நான் எதைக் கேட்டாலும் தருவாயா?' என்று கேட்டார். நான் கொஞ்சமும் தயங்கவில்லை. `எதைக் கேட்டாலும் தருகிறேன்’ என்று சொன்னேன். உடனே அவர் என்னுடைய உயிரைக் கொடுக்கும்படி கேட்டார். நானும் அதிர்ச்சியடையாமல், `என் உயிரைக் கொடுக்கும் உரிமை எனக்கு இல்லை. நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறினேன்.

நான் இப்படிக் கூறியதைக் கேட்டதும், மகிழ்ச்சியடைந்த பக்கீர், என் தலை மீது கைவைத்து ஆசீர்வதித்தார். அப்போது என்னுள் ஓர் இனம் புரியாத மாறுதல் ஏற்பட்டது. அவரைத் தவிர வேறெதிலும் பற்றில்லாமல் போனது. அவரருகில் இருப்பதையே நான் எப்போதும் விரும்பினேன். எனவே, நான் என் பெற்றோரிடம் சென்று, நான் துறவறம் மேற்கொள்ளப் போவதாகச் சொல்லி வீட்டிலிருந்து வெளியேறிவிட்டேன். 

அந்த துறவியைத் தேடி அலைந்தேன். இறுதியாக ஒரு மயானத்தில் அவரைக் கண்டேன். `நான் உனக்குக் கொடுத்தது போதாதென்று இன்னும் கேட்டு தொல்லைப் படுத்துகிறாயா?’ என்று என்னைக் கடிந்துகொண்டார். அவர் ஒரு சமாதியருகே பள்ளம் ஒன்றைத் தோண்டி, அதில் இரண்டு பானை நீர் ஊற்றும்படி கூறினார். அதிலிருந்து அவர் உள்ளங்கையளவு நீரெடுத்து மூன்று முறை பருகினார். என்னையும் பருகச் செய்தார். 

அதை அருந்தியதும், நான் சிறிது நேரம் மூர்ச்சையடைந்தேன். எனக்கு மீண்டும் உணர்வு திரும்பியவுடன், அவர் எங்கோ சென்றுவிட்டிருந்தார். அவரைத் தேடி பல இடங்களுக்கும் அலைந்தேன். இறுதியாக ஷீர்டி துவாரகாமயிக்குச் சென்றேன். அங்கே ஒரு திரை தொங்கவிடப்பட்டிருந்தது. உள்ளே அவர் நீராடிக்கொண்டிருந்தார். நான் தேடி வந்தவர் அவர்தானா என்பதைத் தெரிந்துகொள்ள நினைத்து, அந்தத் திரையை விலக்கிப் பார்த்தேன். எனக்கு அருள் புரிந்த பக்கீர் இவரே என்று அறிந்து மகிழ்ந்தேன். என்னைக் கண்டதும் அவர் மிகவும் சினம் கொண்டார். கோபமான வார்த்தைகளால் என்னைக் கடிந்துகொண்டார். அவர் இப்படிக் கடிந்துகொண்டே ஒரு செங்கல்லை எடுத்து என் மீது வீசினார். அது என் தலையில் பட்டு ரத்தம் கசிந்தது. அடுத்த நொடியே அவர் என்னை ஆசீர்வதித்து, `கடவுளின் அருள் உனக்கு எப்போதும் இருக்கும், இனிமேல் நீ என் பின்னால் வர வேண்டாம்' என்று கூறி அனுப்பினார். அப்படி ஷீர்டி பாபாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவன்தான் நான்'' என்று நானா சாகேபிடம் கூறினார்.

ஷீர்டி பாபாவின் அருளால் பலருக்கும் குருவாக இருந்து நல்வழிப்படுத்திய காட்கி மஹராஜ் ஒரு முறை தமது பக்தர்களுடன் நாம சங்கீர்த்தனம் செய்தபடி ஷீர்டிக்குச் சென்றுகொண்டிருந்தார். இடையிடையே தான் தன்னுடைய ஊருக்குச் செல்லப்போவதாகக் கூறியபடியே இருந்தார். ஷீர்டியை அடைந்த காட்கி மஹராஜ், பாபாவின் சமாதிக்கு எதிரில் வடக்கு நோக்கி அமர்ந்தபடி நாம சங்கீர்த்தனம் செய்தார்.

பிறகு தம் சீடர்களிடமும் பக்தர்களிடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டவர், நர்மதை நதிக்கரையில் மகா சமாதி அடைந்தார்.
 

பாபா பற்றி மேலும் தகவல் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...

அடுத்த கட்டுரைக்கு