Published:Updated:

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 25

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 25
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 25

சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 25

சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

Published:Updated:
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 25
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 25
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 25

‘ஓர் இளம்பெண் விலை மதிப்புள்ள ஆபரணங்களை அணிந்துகொண்டு, நடு இரவில் தன்னந்தனியே எப்போது வெளியே பயமின்றி நடமாட முடிகிறதோ, அன்றைக்குத்தான் உண்மையான பெண் சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்’ன்னார் மகாத்மா காந்தி. அட, ஆபரணங்கள் வேண்டாங்க; நடு இரவா இருக்கணும்கிற அவசியம்கூட இல்லீங்க. பட்டப்பகல்லயே ஒரு பெண் பயமில்லாம நடமாட முடியலியே இன்னிக்கு.

டெல்லியில நிர்பயா, சென்னையில சுவாதின்னு தொடங்கி, கரூர், தூத்துக்குடி, திருச்சின்னு வரிசையா ஒவ்வொரு ஊர்லயும் இளம்பெண்கள் அடுத்தடுத்துக் கொலை செய்யப்படறதைக் கேள்விப்படறப்பல்லாம் பகீர் பகீர்னு இருக்கு. நாடு எங்கே போயிட்டிருக்குன்னு கவலையா இருக்கு.

டெல்லியில ஒரு பதினாறு வயசுப் பையன், ஒன்பதாம் வகுப்பு படிக்கிற பெண்ணை பாலியல் பலாத்காரம் செஞ்சு, அதை வீடியோ எடுத்து, மாசக் கணக்குல அவளை பிளாக் மெயில் பண்ணிட்டிருந்திருக்கான். ஆந்திராவில், பெண் குழந்தைதான் பிறக்கும்னு ஒரு ஜோசியர் சொன்னதுனால மருமகள் வயித்துல ஆசிட் ஊத்தின மாமியாரைப் பத்தின செய்தி வந்திருக்கு.

என்ன ஆச்சு இவங்களுக்கெல்லாம்? இவங்க மூளைக்குள்ளே வக்கிரமும் வன்முறையும் மட்டும்தான் நிரம்பியிருக்கா?

பெண் இனத்தின் மீதான இந்தத் தொடர் தாக்குதல்கள் மனசைப் பதற வைக்குது.

‘மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’னு பாடினார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. ‘எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பிள்ளை காணென்று கும்மியடி’ன்னு பாடினார் மகாகவி பாரதி.

பெண் குழந்தைன்னு தெரிஞ்சா அதைக் கருவிலேயே கொல்கிற கொடுமை, ஒரு பெண் பிறந்து வளர்ந்துட்டா, அவ மீது நடத்தப்படுற பாலியல் கொடுமை, இணையத்தின் மூலமாக அவளுக்கு ஏற்படுகிற பாலியல்ரீதியான தாக்குதல்கள், திருமணமானால், கணவனாலும் புகுந்த வீட்டாராலும் அவளுக்கு உண்டாகிற மென்டல் டார்ச்சர், குழந்தை பிறக்கவில்லை என்றால், சுற்றத்தாரிடம் அவள் படுகிற பாடு, மகன் பிறந்து பெரியவனானால் அவன் அவளிடம் காட்டுகிற அலட்சியம், முதியவளானால் அவளைக் கொண்டு போய்  அநாதரவாக முதியோர் இல்லத்தில் தள்ளிவிடுற கொடுமைன்னு எல்லா காலகட்டத்திலும் ஒரு பெண் மீதான வன்முறையைத் தொடர்ந்து நடத்திட்டே இருக்கு இந்த ஆண் இனம்.

ராத்திரியில வெளியில ஊரைச் சுத்தாதே, துப்பட்டாவை ஒழுங்கா போடுன்னு பெண் களைக் கண்டிக்கிற இந்தச் சமூகம் அதே அளவுக்குப் பையன்களைக் கண்டிச்சு வளர்க் கறதில்லை.

ஒரு வீடுதான் பிள்ளைங்களுக்கு நல்லறங் களைப் போதிக்கக்கூடிய முதல் ஆன்மிகக் கேந்திரம். தாய் தகப்பன்தான் பிள்ளைகளை நெறிப்படுத்தி நல்ல வழியில் செலுத்தக்கூடிய முதல் ஆன்மிக குருமார்கள். ஆனா, இன்னிக்கு அப்பாக்களும் அம்மாக்களும் தங்கள் பிள்ளைங்க நல்லா படிச்சு முதல் மாணவனா வரணும், நல்ல வேலைல அமர்ந்து கை நிறைய சம்பாதிக்கணும்னு ஆசைப்படறாங்களே தவிர, தங்கள் பிள்ளை ஒழுக்கமானவன்னு பேர் எடுக்கணும், பண்பானவன்னு சமுதாயத்துல நாலு பேரால மதிக்கப்படணும்னு நினைக்கிறதே இல்லே.

பெற்றோர்கள் எல்லாம் மார்க்கைத் துரத்திட்டு ஓடுறதால, பள்ளிக்கூடங்களும் ரிசல்ட்டுல சென்டம் காண்பிக்கிறதைத்தான் முக்கியமா நினைக்குதே தவிர, பிள்ளைங்களுக்கு ஒழுக்கத்தை ஒரு பாடமா போதிக்கிறது பத்தி யோசிக்கிறதே இல்லே. முன்னெல்லாம் மாரல் கிளாஸஸ் நடக்கும். வாரத்துல ஒரு நாள் பசங்களுக்கு ஒழுக்கத்தை போதிக்கிறதுக்காகவே ஒரு பீரியடை ‘நீதி போதனை’க்காக ஒதுக்கியிருப்பாங்க. இப்ப அதெல்லாம் போச்சு!

வீடு, பள்ளிக்கூடம்தான் இப்படின்னா வெளிச் சூழலும் சமூகமுமாவது பிள்ளைங்களை நல்வழிப்படுத்துறதா இருக்கான்னா, இல்லை. செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் எல்லாத்திலேயும் வன்முறைச் செய்திகள்தான். போதாததுக்கு வாட்ஸப்பில் அங்கங்கே நடக்கிற அநியாயங்கள் எல்லாம் உடனுக்குடன் வந்துட்டே இருக்கு. இன்டர்நெட்ல கேக்கவே வேண்டாம், எத்தனையோ நல்ல விஷயங்கள் இருந்தாலும், வேண்டாத குப்பைகளும் நிறையவே இருக்கு. பிள்ளைங்க கையிலயும் இந்த அப்பாக்கள் ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்துடறாங்களா, அவங்க அதை போன் பேசறதுக்குதான் பயன்படுத்தறாங்களா, வெறுமே கேம் ஆடறதுக்கு யூஸ் பண்றாங்களா, அல்லது அதுல வேறென்னன்ன பார்க்குறாங்கன்னு ஃபாலோ பண்றதே இல்லை. ஏதோ பையன் ஆசைப்பட்டானா, ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்தோமா, அதோட நம்ம கடமை முடிஞ்சுதுன்னு நினைக்கிறாங்க.

டி.வி-க்கள்ல வர்ற மெகா சீரியல்களும் இந்த லட்சணத்துலதான் இருக்கு. எல்லாத்துலயும் கொலை, கொள்ளை, கள்ளத் தொடர்பு இதுதான். முன்னெல்லாம் சினிமாக்கள்ல நம்பியார், அசோகன், மனோகர்னு தனியான வில்லன்கள் இருப்பாங்க. அவங்க சதித் திட்டம் தீட்டும்போது, அவங்க முகத்துல சிவப்பு வெளிச்சத்தைப் பாய்ச்சி, சமுதாயத்துக்குக் கேடான கேரக்டர்ங்கிறதை உணர்த்துவாங்க. இப்ப அப்படியில்லே. ஹீரோக்களையே பொறுக்கிகளாகத்தான் காட்டறாங்க. அந்த மாதிரியான இளைஞர்களைத்தான் பெண்களும் விரும்பறதா காட்டறாங்க. அதைப் பார்க்கிற பிள்ளைங்களும் அதுதான் ஹீரோயிஸம்னு நினைச்சுக்கிட்டு, ஒரு படத்துல வடிவேலு சொல்றாப்ல, ‘நானும் ரவுடிதான்… நானும் ரவுடிதான்’னு தங்களை மோசமா வெளிப்படுத்திக்க ஆர்வம் காட்டுறாங்க. அதன் விளைவுதான், பெண்களுக்கெதிரான வன்முறைக் குற்றங்கள் இன்னிக்கு அதிகரிக்கக் காரணம்னு எனக்குத் தோணுது.

இங்கிலீஷ்ல copycat-னு சொல்வாங்க. அடுத்தவங்களோட பேச்சு, நடை, செயலால கவரப்பட்டு, அதையே தானும் காப்பியடிக்கிறது. நமக்குத்தான் நல்லதைவிட கெட்டது ஈஸியா ஒட்டிக்குமே! திரும்பத் திரும்ப ஊடகங்கள்ல ஒரு மோசமான காட்சியைப் பார்த்துப் பார்த்து வக்கரிச்சுப் போன மனசு அதையே செய்யத் தூண்டும். இது ஒருவிதமான மன நோய். இதுலேர்ந்து நம்ம இளைஞர்களை மீட்க வேண்டியதுதான் நாம உடனடியா செய்ய வேண்டிய வேலை. இதை வேற யாரோ ஒரு பெரியவர் வந்து செய்வார்னு எதிர்பார்த்துக் காத்திருக்கத் தேவையில்லை. உடம்பின் கோளாறுகளை நமக்குள்ளே இருக்கிற இம்யூன் சிஸ்டம் தனக்குத்தானே சரி செய்துக்கிற மாதிரி நம்ம கிட்ட இருக்கிற குறைகளை நாமேதான் சரிப்பண்ணிக்கணும்; திருத்திக்கணும். 

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 25

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘பொம்பளை சிரிச்சா போச்சு, புகையிலை விரிச்சா போச்சு’, ’பெண் புத்தி பின் புத்தி’, ‘பொட்டைக் கோழி கூவியா பொழுது விடியப் போகுது’ன்னு பெண்களுக்கு எதிரான நூத்துக்கணக்கான கிழமொழிகளை இந்த விநாடியே கொளுத்திப் போடுவோம். 
 
சர்வதேச மகளிர் தினம்னெல்லாம் பிரமாதமா கொண்டாட ஆரம்பிச்சு, நூறு வருஷத்துக்கு மேல ஓடிடுச்சு. வருஷத்துக்கு ஒரு தினத்தை மகளிர் தினம்னு கொண்டாடிட்டு அதோடு மறந்துடறதுல அர்த்தமில்லை. தினம் தினம் மகளிர் தினம்தான், சமுதாயத்துல ஆண், பெண் ரெண்டு பேருமே சமமானவங்கதான் என்கிற எண்ணத்தை விதைப்போம்; வளர்த்தெடுப்போம்!

- இன்னும் பேசுவோம்.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 25

பாவேந்தர் பாரதிதாசன், இளைஞர்களுக்குச் சொன்ன யோசனைகளில் ஒரு ஐந்து மட்டும் இங்கே...

1)     மூலையிலோர் சிறுநூலும் புதுநூலாயின் முடிதனிலே சுமந்துவந்து தருதல் வேண்டும்!

2)     கலையைப் பரிகசிக்காதே! இயலுமாயின் அவற்றை வளர்க்க முயல்!

3)     எண்ணத் துணிபவனுக்கும் செய்யத் துணிபவனுக்கும்தான் வெற்றி கிட்டும்!

4)     மனமறிந்து தவறு செய்யாதே! அவ்வாறு தவறிழைத்துவிட்டாலும், மீண்டும் அத் தவற்றைச் செய்யாதே!

5)     அறிவை விரிவு செய். அகண்டமாக்கு! விசாலப் பார்வையால், விழுந்த மக்களை அணைந்துகொள்!

சவால்!

1 முதல் 9 வரையிலான ஒற்றை இலக்க எண்களை தலா ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி, நான்கு இலக்க எண் மற்றும் ஐந்து இலக்க எண்ணை எழுதிக் கொள்ளுங்கள். நிபந்தனை: நான்கு இலக்க எண்ணைப் போல் ஐந்து இலக்க எண் சரியாக மூன்று மடங்கு இருக்க வேண்டும்.

உங்கள் பதிலை உடனே 97911 21738 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அல்லது வாட்ஸப்பில் அனுப்புங்கள். குரல் பதிவாகவும் அனுப்பலாம். புத்தகப் பரிசு பெறும் வாய்ப்பு உண்டு.

பரிசு யாருக்கு?

சாறு, திரண்டு, தட்டு, சத்து, ஊன்று, எண்பது, தாங்கு, நைந்து, இன்று, வாழு. இந்தச் சொற்களை ஒரு சரியான விதத்தில் வரிசைப்படுத்த வேண்டும் என்பதுதான் சென்ற இதழில் கொடுக்கப்பட்ட சவால். ஒன்று, இரண்டு, மூன்று... என பத்து வரையிலான எண்களின் உச்சரிப்புக்கேற்ப இவற்றைக் கீழ்க்காணும் விதத்தில் வரிசைப்படுத்த முடியும்.

இன்று, திரண்டு, ஊன்று, தாங்கு, நைந்து, சாறு, வாழு, தட்டு, எண்பது, சத்து

இந்தச் சரியான விடையை எஸ்.எம்.எஸ். மற்றும் வாட்ஸப் மூலம் அனுப்பியிருந்தவர்களில், பெங்களூரைச் சேர்ந்த எல்.என்.சுப்ரமணியன் என்ற வாசகருக்கு டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் எழுதிய ‘உறக்கத்திலே வருவதல்ல கனவு!’ என்ற புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism