Published:Updated:

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 26

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 26
பிரீமியம் ஸ்டோரி
News
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 26

சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 26

னி நல்லதையே பேசணும், நல்லதையே பகிரணும்னு போன இதழுக்கான கட்டுரையை எழுதும்போதே தீர்மானிச்சு வெச்சிருந்தேன். திரும்பத் திரும்பக் கொலைச் செய்திகளையும், ஈவு இரக்க மற்ற கொடுஞ்செயல்களையும் பகிரும்போது, அது நாளடைவுல படிக்கிறவங்க மனசுல, ‘ப்பூ… இவ்வளவுதானா? இது ஒண்ணும் பெரிய விஷயமில்லையே! இதைவிட எவ்வளவோ நடந்திருக்கே’ன்னு நினைக்க வெச்சுடும்.

யாரோ ஒரு அரசு அதிகாரி அல்லது டிராஃபிக் கான்ஸ்டபிள் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார்னு செய்தி படிச்சோம்னா, இப்ப நம்ம மனசுலயே என்ன தோணுது? அவர் மேல நியாயமா எழ வேண்டிய கோபம் வருதா? நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்க, இல்லேல்ல? ‘விடுங்க, என்னவோ இல்லாதவன் பாவம், ஆயிரம் ரூபாய் கேட்டுட்டானாக்கும். எத்தனையோ அரசியல்வாதிங்க கோடி கோடியா கொள்ளை அடிக்கலையா? அவங்களை எல்லாம் விட்டுடுவாங்க. பிசாத்து ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதைப் போய் பெரிசுபடுத்தறாங்க!’ன்னு லஞ்சம் வாங்கிய ஊழியருக்கு சப்போர்ட்டாதான் பேசத் தோணுது, இல்லையா? இதுதான்… இப்படித் தப்புகளை நியாயப்படுத்தற மனோபாவம் வளர்றதுதான் இந்த மாதிரி செய்திகளைப் பரப்புறதனால வர்ற வினை.

‘அந்நியன்’ல சுஜாதா எழுதின மாதிரி, ‘அஞ்சு பைசா திருடினா தப்பா?’னு கேக்கும்போது முதல்ல ‘இல்லை’ங்கிறவன், ‘அஞ்சு கோடி பேரு, அஞ்சு கோடி தடவை அஞ்சு அஞ்சு பைசாவா திருடினா தப்பா?’னு கேக்கும்போது, ‘தப்பு மாதிரிதாங்க தெரியுது’ம்பான். அதுமாதிரி, எது தப்பு, எது சரின்னே பிரிச்சு அறியமுடியாதபடிக்கு நம்ம மூளையை மரத்துப் போகச் செய்யற காரியத்தைதான் இந்த மாதிரி நெகட்டிவ் செய்திகள் பண்ணிக்கிட்டிருக்கு. எப்போ தப்பை நியாயப்படுத்த ஆரம்பிச்சுட்டோமோ, அப்பவே அந்தத் தப்புகளை நாமும் செய்யத் தயாராயிட்டோம்னுதான் அர்த்தம். இதனால தான், ஒரு குற்றம் நிகழ்ந்தவுடனே அடுத்தடுத்து அதே மாதிரியான குற்றங்கள் நிகழுது; ஓரிடத்துல வன்முறைச் சம்பவம் நிகழ்ந்ததுமே அது காட்டுத் தீயா பரவி, அங்கங்கே பல வன்முறைச் சம்பவங்கள் வெடிக்கத் தொடங்கிடுது. நல்லது பரவ நாளாகுது. அதுவே ஒரு கெட்டது, கண் மூடிக் கண் திறக்கறதுக்குள்ள உலகம் பூரா பரவிடுது. ஒரு நல்ல விஷயத்தை நம்ம மனசு ஏத்துக்க, அதை உறுதியா கடைப்பிடிக்கப் போராட வேண்டியிருக்கு. கெட்ட விஷயங்கள் மட்டும் ரொம்ப சுலபமா நம்ம மனசுக்குள்ள சப்பணம் போட்டு உட்கார்ந்துக்குது.

தீயதைப் பகிர வேண்டாம்னு நினைச்சாலும், மனசுல ஆறலீங்க. கொட்டாம இருக்க முடியலே!

காவிரியைக் காரணமா வெச்சு, ரணகளம் பண்ணிட்டாங்களே! அதுலயும் ஒரு வீடியோவைப் பார்த்து மனசு உடைஞ்சு போயிட்டேன். அப்பா வயசுல இருக்கிற ஒருத்தரைக் கன்னத்துல அறையறான் ஒருத்தன். அந்த வன்முறைக் கும்பலுக்கெதிரா ஒண்ணும் செய்ய முடியாம நிர்க்கதியா நிக்கிற அந்த மனுஷன், லாரி டிரைவர் சோணமுத்து, பரிதாபமா சிரிக்கிறதைப் பார்த்து அழுகையே வந்துடுச்சு எனக்கு. காவிரிப் பிரச்னைக்கும் அந்த மனுஷனுக்கும் என்னங்க சம்பந்தம்? காரணமே இல்லாம, கையில எவன் சிக்குறானோ அவனைப் போட்டு அடிக்கிறதுன்னா, இது என்ன மனோபாவம்?

கடைஞ்செடுத்த அரக்கத் தனமில்லையா? காட்டுமிராண்டிக் காலத்துக்கா போயிட்டிருக்கோம் நாம?

அத்தனை பாதிப்புகள்- அவமானங்களுக்கு இடையிலும், “பெங்களூருவில் எனக்கு நேர்ந்த இந்தக் கதி, இங்கே வரும் கன்னட டிரைவர் களுக்கு நேரக்கூடாது”ன்னு சோணமுத்து சொன்னதைப் பற்றிப் படிச்சதும் மானசிகமா அவரைக் கையெடுத்துக் கும்பிட்டேன். எத்தனைப் பெரிய உள்ளம்!

ஆனா, இங்கேயும் அவங்களைப் பழிக்குப் பழி வாங்குறதா நினைச்சுக்கிட்டு ஆங்காங்கே சில சம்பவங்கள் நடக்கவே செய்தன. பத்துப் பைசாவுக்குப் பிரயோஜனம் உண்டா இதனால? அப்புறம் அவனுக்கும் நமக்கும் என்னங்க வித்தியாசம்? அவங்களைக் குறை சொல்ல யோக்கியதை உண்டா நமக்கு? டிரைவர் சோண முத்துவின் பரந்த உள்ளம் நம்மில் பல பேருக்கு ஏன் வரமாட்டேங்குது?

நியாயமா நாம என்ன செய்திருக்கணும்? தமிழர் அமைப்புகள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து, “பதிலுக்கு இங்குள்ள கன்னடர்களைத் தாக்க மாட்டோம். அவங்களுக்கு எந்த பாதிப்பும் நேராதபடி பாதுகாப்போம்”னு அறிக்கை விட்டிருக்க வேணாமா? அதுதானே கம்பீரம்! அதுதானே ஆண்மைக்கு அழகு!

‘தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு’ன்னு நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை எழுதிய பாடலின் முதல் வரி மட்டும் நமக்குத் தெரியும். அதை மட்டும்தான் நம்ம பேச்சுல கொட்டேஷனா பயன்படுத்துவோம். அந்தப் பாடலின் அடுத்த வரி தெரியுமா? தமிழனின் தனியான குணம்னு ராமலிங்கம் பிள்ளை எதைச் சொல்றார்னு தெரியுமா? ‘அமிழ்தம் அவனுடை மொழியாகும், அன்பே அவனுடை வழியாகும்’ என்பதுதான் தமிழனின் தனிக் குணம். அடிக்கு அடி, உதைக்கு உதைன்னு கிளம்புற நாமெல்லாம் தமிழர்கள்தானான்னு யோசிக்கணும்.

பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட சம்பவம் உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்கும். 1989-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி நடந்த ஒரு சந்தோஷ மான விஷயம் அது. ஒண்ணா ஒத்துமையா ஒரே நாடா இருந்த ஜெர்மனி, இரண்டாம் உலகப் போருக்கப்புறம், கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனின்னு ரெண்டா பிரிஞ்சுது. இரண்டு நாட்டையும் பிரிக்க இடையில ஒரு முள்கம்பி வேலி எழுப்பினாங்க. அப்புறம், அது போதாதுன்னு பெரிய கான்கிரீட் சுவராவே நெட்டுக்க எழுப்பிட்டாங்க. சும்மா இல்ல… நாலடி அகலம், பதினஞ்சு அடி உயரத்துல, 165 கி.மீட்டர் நீளத்துக்கு எழுப்பப்பட்ட மெகா சுவர் அது.

அந்தச் சுவர், ஜெர்மனியின் தலைநகரான பெர்லினையும் இரண்டா பிரிச்சுது. இருபது, இருபத்தஞ்சு ஆண்டுகளுக்கப்புறம், அந்த பெர்லின் சுவரைத்தான் இரண்டு நாட்டு மக்களும் மறுபடி ஒண்ணா, ஒத்துமையா சேர்ந்து உடைச்சு எறிஞ்சாங்க. அன்னியிலேர்ந்து நவம்பர் 9-ஐ ஒற்றுமை தினமா கொண்டாடிக்கிட்டு வர்றாங்க ஜெர்மானியர்கள்.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 26

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பெர்லின் சுவர் இருந்தப்போ, அந்த எல்லையை யாரும் தாண்டிடாம கண்காணிக்க பாதுகாப்பு வீரர்கள் இருந்தாங்க. குறிப்பா, மேற்கு ஜெர்மனியிலிருந்து யாரும் கிழக்கு ஜெர்மனிக்கு வந்துடக்கூடாது, இங்கே மலிவு விலையில் விற்கிற கோதுமை போன்ற உணவுப் பண்டங்களையெல்லாம் மேற்கு ஜெர்மனிக்காரங்க வாங்கிட்டுப் போயிடக் கூடாதுன்னு கண்காணிக்கிறதே அவங்க வேலை. ஆனா, ‘இந்தச் சுவர் சகோதரர்களைப் பிரிச்சு வைக்கும் அவமானச் சுவர்’ங்கிறது மேற்கு ஜெர்மனிக்காரங்க கருத்து. கிழக்கு ஜெர்மனி மக்களுக்கும் இதே கருத்து உண்டு. ஆனாலும், சோவியத் ருஷ்யாவின் பிடியில இருந்ததால, அதை மீறி அவங்களால எதுவும் செய்ய முடியலே! அப்போ நடந்த ஒரு விஷயத்தை இங்கே பகிர்ந்துக்க விரும்பறேன்.

ஒருநாள், கிழக்கு பெர்லின்காரங்க நிறையக் குப்பைகளைக் கொண்டு வந்து, பெர்லின் சுவருக்கு அப்பால், மேற்கு ஜெர்மனி எல்லைக்குள் கொட்டிட்டுப் போனாங்களாம். பதிலுக்கு மேற்கு ஜெர்மனிக்காரங்க என்ன செஞ்சாங்க, தெரியுமா? ஒரு லாரி நிறைய ரொட்டிகள், பழங்கள், மளிகைப் பொருட்களையெல்லாம் எடுத்து வந்து, அழகா பெர்லின் சுவர் மேல அடுக்கி, குப்பையைப் போட்டவங்களுக்கு உறைக்கிற மாதிரி, ‘தன்னிடம் உள்ளதையே ஒருவன் மற்றவர்களுக்குக் கொடுப்பான்’னு ஒரு அட்டையில எழுதி வெச்சுட்டுப் போனாங் களாம்.

உண்மைதானே? நம்மகிட்ட இருக்கிறதைத் தானே மத்தவங்களுக்குக் கொடுக்க முடியும்?

நாமெல்லாம் சோணமுத்துவா எப்போ ஆகப்போறோம்? நம்ம மாநிலங்களுக்கு இடையில இருக்கிற கண்ணுக்குத் தெரியாத பகைமைச் சுவரை எப்போ உடைச்செறியப் போறோம்? நமக்கெல்லாம் எப்போ நவம்பர் 9?

- இன்னும் பேசுவோம்.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 26

சவால்!

கேள்விக்குறியிட்ட இடத்தில் வர வேண்டிய எண் என்ன? உங்கள் பதிலை உடனே 97911 21738 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அல்லது வாட்ஸ்அப்பில் அனுப்புங்கள். குரல் பதிவாகவும் அனுப்பலாம். புத்தகப் பரிசு பெறும் வாய்ப்பு உண்டு.

பரிசு யாருக்கு?

‘1 முதல் 9 வரையிலான எண்களைப் பயன்படுத்தி, நான்கு இலக்க எண் ஒன்றையும், ஐந்து இலக்க எண் ஒன்றையும் எழுத வேண்டும்; நாலு இலக்க எண்ணைப் போல் ஐந்திலக்க எண் சரியாக மூன்று மடங்கு இருக்க வேண்டும்’ என்பது தான் சென்ற இதழில் கொடுக்கப்பட்ட சவால்.

இதற்கு எஸ்.எம்.எஸ். மூலமும் வாட்ஸ்அப் மூலமும் 200-க்கும் மேற்பட்டவர்கள் பதில் அளித்திருந்தார்கள். ஆனால், பலர் ‘0’ என்ற எண்ணையும், வேறு பலர் ஒரே எண்ணை இரண்டு முறையும் பயன்படுத்தியிருந்தார்கள்.

5823, 17469 அல்லது 5832, 17496 என்ற சரியான விடையை எஸ்.எம்.எஸ். மற்றும் வாட்ஸப் மூலம் அனுப்பியிருந்தவர்களில், சென்னை-சாலி கிராமத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி ராமசாமி என்ற வாசகிக்கு, டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் எழுதிய ‘உறக்கத்திலே வருவதல்ல கனவு!’ என்ற புத்தகம் பரிசாக அனுப்பிவைக்கப்படுகிறது.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 26

சமீபத்தில் மறைந்த குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி, இளைஞர்களுக்குச் சொன்ன யோசனைகளில் ஒரு ஐந்து மட்டும் இங்கே...

1) ரிஸ்க் எடுக்கத் தைரியமில்லாவிட்டால், வாழ்க்கையில் உன்னால் எதையும் சாதிக்க முடியாது!

2) நாட்களை எண்ணாதே! எண்ணிப் பார்க்கும்படியாக உன் நாட்களை ஆக்கு!

3) உன்னைச் சோர்வடையச் செய்வது, நீ ஏற வேண்டிய உயரமான மலை அல்ல; உன் ஷூவில் இருக்கும் சின்ன கூழாங்கல்தான்!

4) பிறருக்கு நீ செய்யும் சேவைதான், இந்த பூமியில் நீ தங்கியிருப்பதற்கான வாடகை!

5) சாம்பியன்கள் ஜிம்களில் உருவாக்கப்படுவதில்லை. அவர்களின் அடிமனதில் உள்ள விருப்பம், கனவு, தொலைநோக்குப் பார்வை இவற்றாலேயே உருவாகிறார்கள்.