
எங்கே நிம்மதி?
அரசன் ஒருவன் அந்த ஞானியிடம் வந்து, ‘‘எனக்கு நிம்மதியே இல்லை’ என்று புலம்பினான். ‘‘உனது கடமைகளை நீ சரியாகச் செய்கிறாயா?’’ என்று ஞானி கேட்டார்.
மன்னன் பதில் சொன்னான்: ‘‘எனது நாட்டுக்கு அந்நியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகளும் விதிப்பது இல்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. ஆகவே, நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால், என் மனதில் மட்டும் அமைதி இல்லை’’ என்றான்.
‘‘அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு’’ என்றார் ஞானி. மன்னவனும் அதற்கு ஒப்புக் கொண்டான். உடனே ஞானி, ‘‘நீ என்ன செய்வாய்?’’ எனக் கேட்டார். ‘‘நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்’’ என்றான் அரசன். ‘‘எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய்யலாமே’’ என்ற ஞானி, ‘‘எனது பிரதிநிதியாக இந்த நாட்டை நீயே ஆட்சி செய். ஒரு வருடம் கழித்து வந்து கணக்கு வழக்குகளைப் பார்க்கிறேன்’’ என்று கூறிவிட்டு அவனிடம் விடைபெற்றார்.
ஓர் ஆண்டு கழிந்த பின் ஞானி திரும்பிவந்தார். அவரிடம் கணக்கு வழக்குகளை ஒப்படைத்தான் மன்னன். ‘‘இவை இருக்கட்டும். நீ எப்படி இருக்கிறாய்?’’ எனக் கேட்டார்.
‘‘நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன்’’ என்றான் மன்னன்.
‘‘அதெப்படி. இதே பணிகளையே அப்போதும் செய்தாய். இப்போது மட்டும் நிம்மதி வாய்த்தது எப்படி?’’ எனக் கேட்டார் ஞானி. மன்னன் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தான்.
ஞானியே தொடர்ந்தார்: ‘‘அப்போது நீ ‘இது என்னுடையது’ என்று எண்ணினாய். இப்போது ‘இது எனதில்லை’ என்ற மனநிலையோடு பணிபுரிந்தாய். அதுவே காரணம். நான், எனது என்ற எண்ணம் தலைதூக்கும்போது, நிம்மதியும் சந்தோஷமும் நம்மைவிட்டு விலகிவிடும். புரிந்ததா?’’ என்று கூறி விடைபெற்றார் ஞானி. அதன்பிறகு மன்னவன் ஒருபோதும் நிம்மதியை இழக்கவில்லை.
- எம்.பாஸ்கரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுயநலத்தைப் பெரிதாக எண்ணாமல் சமுதாய நலனுக்காக செயல்படுபவனின் சொல், செயல் எல்லாமே புண்ணிய கர்மம்தான்.
- புத்த பிரான்