Published:Updated:

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 28

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 28
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 28

சிட்டிசன் பாபு - ஓவியம்: ரவி

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 28

சிட்டிசன் பாபு - ஓவியம்: ரவி

Published:Updated:
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 28
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 28
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 28

‘கடவுள் என்பதெல்லாம் பெரிய வார்த்தை. அட்லீஸ்ட், முதல்ல மனுஷனா இருக்கவாவது ட்ரை பண்ணுவோம், பாஸ்!’னு போன இதழ்ல முடிச்சிருந்தேன். மனுஷனா நடந்துகிட்டதால உயிராபத்துலேர்ந்து தப்பின ஒருத்தனைப் பத்தின கதையை இப்போ பார்க்கலாம். உங்கள்ல சில பேர் ஃபேஸ்புக், வாட்ஸ் அப்-னு எதுலயாவது ஏற்கெனவே இதைப் படிச்சிருக்கலாம். அது ஆண் இல்லை, பெண்மணி; அது ஓர் இறைச்சிக்கூடம்னு இதே கதை வெவ்வேறு ரூபங்கள்லயும் உலா வருது. எதுவா வேணா இருந்துட்டு போகட்டும்; இந்தக் கதையிலேர்ந்து நாம தெரிஞ்சுக்க வேண்டிய கருத்தை மட்டும் எடுத்துப்போம்.

ஒரு ஃபுட் புராடெக்ட் கம்பெனியின் ஃப்ரீஸர் பிளான்ட், அதாவது, உறைவிக்கும் தொழிற்கூடத்தில் வேலை முடிஞ்சு, எல்லாரும் புறப்படத் தயாரானாங்க. ஒரு சின்ன தொழில்நுட்பக் கோளாறை சரிபண்றதுக்காக ஒரே ஒருத்தன் மட்டும் அங்கேயே இருந்து, வேலை பார்த்துட்டிருந்தான். மத்தவங்க எல்லாரும் வெளியேறிட்டதையோ, எல்லாரும் போயாச்சுன்னு நினைச்சு வாட்ச்மேன் அந்தத் தொழிற்கூடத்தின் கதவுகளை இழுத்துப் பூட்டிட்டதையோ, வேலை மும்முரத்துல அவன் கவனிக்கவே இல்லை.

வேலை முடிஞ்சு, சுற்றுமுற்றும் பார்த்தவன் திடுக்கிட்டான். அவன் இருந்த பகுதியில மட்டும் கொஞ்சம் வெளிச்சம். மத்தபடி, அங்கிருந்த லைட்டெல்லாம் அணைஞ்சிருந்தது. கதவுகள் மூடியிருந்தது. காத்துக்கும் வழியில்லை. நேரமாக ஆக, குளிர் அதிகமாகிக்கிட்டே இருந்தது. மைனஸ் டிகிரியில் உறைய வைக்கும் குளிர். இதே நிலையில ராத்திரி பூராவும் இருந்தா பரலோகம் போக வேண்டியதுதான்னு புரிஞ்சுடுச்சு அவனுக்கு. குளிரோடு சேர்ந்து பீதியும் அவன் உடம்பை நடுக்கியெடுக்க ஆரம்பிச்சது.

போன், செல்போன் வசதியெல்லாம் இல்லாத காலம். தான் இங்கே மாட்டிக்கிட்டு இருப்பதை வெளியே இருக்கிறவங்களுக்கு எப்படித் தெரிவிக்கிறதுன்னு தெரியலை. இருட்டில் தடவித் தடவிப் போய், வாசல் கதவைப் பலமா தட்டிப் பார்த்தான். எந்த ரெஸ்பான்ஸும் இல்ல! ஒரு கட்டத்துல அழுகை வெடிச்சு வர, அப்படியே சோர்ந்து உட்கார்ந்துட்டான். அப்புறம் உட்காரவும் தெம்பு இல்லாம, படுக்கவே படுத்துட்டான்.

நேரம் ஓடிக்கிட்டே இருந்தது. அவன் உடம்பு குளிர்ல விறைச்சுக்கிட்டே இருந்தது. ‘அவ்வளவு தான்,  நம்ம கதை முடிஞ்சுபோச்சு’ன்னு முடிவே கட்டிட்டான் அவன்.

அப்போ… அதிசயம்! வாசல் கதவை யாரோ சாவி போட்டுத் திறக்கிற மாதிரி இருந்தது. எழுந்து உட்கார்ந்தான். கதவைத் திறந்தது வேறு யாருமல்ல, செக்யூரிட்டி கார்டுதான்.

வெளியே வந்ததும், ஆச்சர்யத்தோடு கேட்டான்… “நான் இங்கே சிக்கியிருக்கேன்னு உங்களுக்கு எப்படிங்க தெரிஞ்சுது? நான் கதவைத் தட்டின சத்தம் கேட்டுச்சா? இல்லே, யாராவது உங்களுக்குச் சொன்னாங்களா?”

கார்டு சொன்னார்… “இல்லே சார், நீங்க கதவைத் தட்டினது எனக்குக் கேட்க வாய்ப்பில்லே. நான் அதோ, அங்கே இருக்கிற என் கேபின்லதான் எப்பவும் இருப்பேன். இங்குள்ளவங்கதான் இதைப் பூட்டிட்டு, சாவியை என்கிட்டே கொண்டு வந்து கொடுத்துட்டுப் போவாங்க.”
“அப்புறம், எப்படிங்க கரெக்டா வந்து கதவைத் திறந்தீங்க? வேற ஏதாச்சும் எடுக்க வந்தீங்களா?”னு ஆச்சர்யமா கேட்டான் அவன்.

“இங்கே எடுக்க என்ன சார் இருக்கு?” என்றவர், “இந்த யூனிட்ல அம்பத்தஞ்சு பேர் வேலை செய்யறாங்க. வழக்கமா என்னைக் கடந்து உள்ளே வர்றவங்க எல்லாரும் கார்டு பஞ்ச் பண்ணிட்டு, அவங்க பாட்டுக்கு போயிட்டே இருப்பாங்க. நீங்க மட்டும்தான் என்னைப் பார்த்து, ‘ஹாய்… ஹலோ…’னு சொல்லிச் சிரிச்சுட்டுப் போவீங்க. அதேபோல, சாயந்திரம் திரும்பிப் போறப்பவும் மறக்காம எனக்கு ‘பை’ சொல்லிட்டுப் போவீங்க. இன்னிக்கும் காலைல நீங்க  ‘ஹாய்’  சொல்லிட்டுப் போனது ஞாபகம் இருக்கு. ஆனா, சாயந்திரம் ‘பை’ சொன்ன மாதிரி தெரியலையே… ஒருவேளை, மறந்து, சொல்லாம போயிட்டீங்களோன்னு கூட நினைச்சேன். ஆனா, அப்படிப் போறவர் இல்லையே நீங்க, இதுவரைக்கும் ஒருநாளும் சொல்லிக்காம போனதில்லையேனு தோணுச்சு. அதான், எதுக்கும் வந்து பார்ப் போம்னு வந்தேன். என் சந்தேகம் உண்மையாகிடுச்சு!” என்ற செக்யூரிட்டி கார்டு, “இதுவே வேற யாராவது உள்ளே மாட்டியிருந்தாங்கன்னா, எனக்கு அது தெரிஞ்சிருக்குமாங்கிறது சந்தேகம்தான்!”னார்.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 28

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தான் யதார்த்தமா செஞ்ச ஒரு சின்ன காரியம், தன் உசுரையே காப்பாத்தும்னு அவன் நினைக்கவேயில்லை. அவர் கையைப் பிடிச்சுக் கிட்டு கரகரன்னு அழுதுட்டான்.

அத்தனை முக்கியமான ஒரு பணியிடத்துல எமர்ஜென்ஸி அலாரம் எதுவும் இருக்காதா, உள்ளே யார் யார் போறாங்க, யார் யார் வெளியே வராங்கன்னு ரிஜிஸ்டர்ல என்ட்ரி ஆகியிருக்காதா, கதவைப் பூட்டுறவங்க அதுக்கு முன்னாடி, உள்ளே யாராவது இருக்காங் களான்னு செக் செய்ய மாட்டாங்களான்னு இந்தக் கதையில இருக்குற ஓட்டைகளைச் சுட்டிக்காட்டி குதர்க்கமா கேள்வி கேட்பது ஒரு பக்கம் இருக்கட்டும்; இந்தக் கதை சொல்ற நீதியை நாம உணர்கிறோமா என்பதுதான் முக்கியம்.

பரஸ்பரம் ஒருத்தருக்கொருத்தர் கொடுக்குற மரியாதை, காட்டுற அன்பு இதெல்லாம்தாங்க மனுஷனை மனுஷனா வெச்சிருக்கும். பணமோ, பட்டமோ, பதவியோ இல்லை. திருக்குறளார் முனுசாமி ரொம்ப அழகா சொல்லுவார்… “ஒருத்தன் மண்டையைப் போட்டான்னா, ‘ஐயோ பாவம், பத்து லட்சத்துக்குச் சொந்தக்காரன், பரிதாபமா செத்துப் போயிட்டான்’னு ஜனங்க சொல்ல மாட்டாங்க. அல்லது, ‘ஆஹா, எவ்ளோ பெரிய உயரதிகாரி, அநியாயமா செத்துட்டாரேன்’னும் சொல்ல மாட்டாங்க.  ‘அடடா, எம்.ஏ ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணினவனாச்சே, படக்குனு செத்துப் போயிட்டானே’ன்னும் சொல்ல மாட்டாங்க. அடப் பாவமே, ரொம்ப நல்ல மனுஷனாச்சே… ஊருக்கு உபகாரியாச்சே… தங்கமான பிள்ளையாச்சே… ஒருத்தருக்கு ஒரு கஷ்டம்னா ஓடி வந்து உதவுறவனாச்சே… இப்படி அநியாயமா அல்பாயுசுல போயிட்டானே’ன்னு அவனோட நல்ல குணங்களைச் சொல்லித்தான் புலம்புவாங்க. அதனால, நற்குணம்தான் பெரிய சொத்து. மனிதனுக்குப் பெருமை வருவதெல்லாம் அவனது பண்பினால்தான்! தூரத்துல போற ஒருத்தரைச் சுட்டிக்காட்டி, ‘அதோ போறாரே, அவர் எம்.ஏ கோல்டு மெடலிஸ்ட்! எரிஞ்சு எரிஞ்சு விழுவார்’னு அறிமுகப்படுத்தினா, அத்தனை வருஷம் அவர் படிச்ச படிப்புக்கு என்ன அர்த்தம்?”னு மனிதப் பண்புகள் பத்தி திருக்குறளார் பேசுறப்போ அத்தனை ரசனையா இருக்கும்.

ஆனா, ரசிக்கிறதோட நிறுத்திக்காம, அந்த நல்ல விஷயங்களை இந்த நிமிஷத்துலேர்ந்து நாமும் கடைப்பிடிக்கத் தொடங்குவோம். என்ன சொல்றீங்க?

- இன்னும் பேசுவோம்

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 28

இளைஞர்களுக்கு, ‘கேப்டன் கூல்’ மகேந்திரசிங் தோனி சொன்ன யோசனைகளில் ஐந்து மட்டும் இங்கே...

1)     முற்றுப்புள்ளி வைக்கிற வரைக்கும் வாக்கியம் முடிந்ததாக அர்த்தம் இல்லை; உங்கள் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற வரைக்கும் நீங்கள் தோற்றதாக அர்த்தம் இல்லை.

2)     ஒரு துறையில் மிகுந்த ஆர்வமும், அதில் உங்களால் 100 சதவிகிதத்துக்கும் அதிகமாகச் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையும், அந்த நம்பிக்கையோடு பலனைப் பற்றிக் கவலைப்படாமல் செயல்படும் தன்மையும் இருந்தால், அதுவே உங்களின் உண்மையான வெற்றி!

3)    என்னிடம் மூன்று நாய்கள் உள்ளன. நான் வெற்றி வாகை சூடி வந்தாலும், தோல்வியுற்றுத்திரும்பினாலும், அவை என்னை ஒரே மாதிரிதான் நடத்துகின்றன; என்னிடம் ஒரே மாதிரிதான் நடந்துகொள்கின்றன. என் மனத்தையும் அந்த நாய்கள் போலத்தான் பழக்கியுள்ளேன்.

4)     நீங்கள் 100 சதவிகிதத் தகுதி இன்றியோ, அல்லது உங்கள் திறனில் 100 சதவிகித பங்களிப்பு இன்றியோ ஒரு செயலைச் செய்வீர்களேயானால், அது மற்றவரை மட்டுமல்ல; உங்களையே நீங்கள் ஏமாற்றுவதாகும்!

5)     பணிவான குணம் உங்களின் பலம்தான்; பலவீனமல்ல!

பட்டமும் பாடமும்!

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 28

ப்பாவும், பிள்ளையும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார்: “கண்ணா! நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்?”

பையன் கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னான்: “நூல்தாம்ப்பாபட்டத்தை இழுத்துப் பிடிச்சிருக்கு”.

அப்பா ஒப்புக்கொள்ளவில்லை. அவர், “இல்லை மகனே நூல்தான் அதைப் பறக்க வெச்சிக்கிட்டிருக்கு” என்றார். பையன் சிரித்தான். உடனே, ஒரு கத்திரியால் நூலை வெட்டினார் அப்பா.முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது. கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது.

இப்போது அப்பா சொன்னார்: “ஒழுக்கமும் இப்படியானதுதான் மகனே! அது உன்னை இழுத்துப் பிடித்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அதிலிருந்து அறுத்துக் கொண்டால் சுதந்திரம் என்று நினைத்திருக்கிறாய். ஆனால், அந்த சுதந்திரம் ரொம்ப தற்காலிகமானது. சீக்கிரமே கீழே விழுந்துவிடுவாய். ஒழுக்கம்தான் உன்னைக் கொடி கட்டிப் பறக்கவைத்துக் கொண்டிருப்பது. உன்னை அதிலிருந்து அறுத்துக் கொள்ளாதே” என்றார்.

- என்.கணேசன்

சவால்!

ஒரு பெட்டிக்குள் சில ஆப்பிள்கள் இருந்தன. 23 ஆப்பிள்கள் இருக்கலாம் என்று ஒருவன் தன் யூகத்தைச் சொன்னான். 25, 27, 30, 32, 34 என மற்றவர்களும் தங்கள் யூகத்தைச் சொன்னார்கள். ஆனால், ஆறு பேர் சொன்னதும் தவறான எண்ணிக்கையே! உண்மையான எண்ணிக்கைக்கும் இவர்கள் ஒவ்வொருவர் சொன்ன எண்ணிக்கைக்கும் 1, 2, 3, 4, 5, 6 என வித்தியாசங்கள் இருந்தன. எனில், பெட்டிக்குள் இருந்த ஆப்பிள்கள் எத்தனை?

உங்கள் விடையை உடனே 97911 21738 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அல்லது வாட்ஸ் அப்பில் அனுப்புங்கள். குரல் பதிவாகவும் அனுப்பலாம். புத்தகப் பரிசு பெறும் வாய்ப்பு உண்டு.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 28

பரிசு யாருக்கு?

11223344 – இந்த எட்டு இலக்க எண்ணை, இரண்டு 1-களுக்கு இடையில் ஒரு எண்ணும், 2-களுக்கு இடையில் இரண்டு எண்கள், 3-களுக்கு இடையில் மூன்று எண்கள், 4-களுக்கு இடையில் நான்கு எண்களும் இருக்கும்படியாக வேறு ஒரு எட்டிலக்க எண்ணாக மாற்றி அமைக்க வேண்டும் என்பதே சென்ற இதழில் கேட்கப்பட்டிருந்த சவால். இதற்கான விடை: 41312432. அல்லது, இதையே 23421314 என ரிவர்ஸிலும் சொல்லலாம்.

இந்தச் சரியான விடையை எஸ்.எம்.எஸ். மற்றும் வாட்ஸ் அப் மூலம் பதில் அனுப்பி யிருந்தவர்களில், ஈரோடு நகரைச் சேர்ந்த ஏ.சிவசிதம்பரநாதன் என்ற வாசகருக்கு டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் எழுதிய ‘உறக்கத்திலே வருவதல்ல கனவு!’ என்ற புத்தகம் பரிசாக அனுப்பிவைக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism