Published:Updated:

``உம்மைவிட உயர்ந்தவர் வேங்கடமுடையான்தான்'' திருமலைநம்பியின் அன்பில் நெகிழ்ந்த ராமாநுஜர்!

``உம்மைவிட உயர்ந்தவர் வேங்கடமுடையான்தான்'' திருமலைநம்பியின் அன்பில் நெகிழ்ந்த ராமாநுஜர்!
``உம்மைவிட உயர்ந்தவர் வேங்கடமுடையான்தான்'' திருமலைநம்பியின் அன்பில் நெகிழ்ந்த ராமாநுஜர்!

திருவரங்கத்தை வைணவத்தின் தலைநகராகக் கொண்டு `உடையவர்' எனும் ராமாநுஜர் ஆற்றிய தொண்டுகளும், ஆகமப் பணிகளும் அளவிட முடியாதவை. வைணவத் திருத்தலங்களுக்கெல்லாம் சென்று, மக்கள் மனங்களில் பக்தியுணர்வை ஏற்படுத்தி, பக்தி மார்க்கத்தில் புதிய எழுச்சியை ஏற்படுத்தினார். திருமலையில்கூட ராமாநுஜர் வகுத்துத் தந்த வைகாநச ஆகமப்படித்தான் நித்திய பூஜைகளும் திருவிழாக்களும் நடைபெறுகின்றன. 


ஒருமுறை கீழ்த்திருப்பதிக்கு ராமாநுஜர் வந்து சேர்ந்தார். நீண்ட நாளாகத் தன் சீடர்களுடன் பல திவ்ய தேசங்களுக்குப் பயணம் செய்து வந்த களைப்புக்கு இளைப்பாறுதலும் மன உற்சாகமும் தரும் இடமாக திருப்பதி அமைந்தது. முன்னதாகவே அவரது அணுக்கத் தொண்டரான அனந்தாழ்வான்,  உடையவரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு ஏற்கெனவே திருமலைக்கு வந்து நந்தவனம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.   

திருப்பதிக்கு வந்த ராமாநுஜரை அன்புடன் வரவேற்று, அவருக்கும் அவரது சீடர்களுக்கும் உணவளித்து உபசரித்தார். ``தங்களின் வருகையை நோக்கி திருமலையில் பலரும் காத்திருக்கிறார்கள்'' என்ற கோரிக்கையையும் உடன் வைத்தார்.

``திருவேங்கட மலை நாராயணன் லக்ஷ்மி தேவியுடன் உறையும் மகிமை பொருந்திய மலை. வெங்கடேசப்பெருமாள் குடிகொண்டிருக்கும் ஏழு மலைகளுமே திவ்யமானவை. அதில் எனது பாதங்கள் படக் கூடாது'' எனக் கூறி திருமலைக்கு வர ராமாநுஜர் மறுத்தார். கீழ்த்திருப்பதியிலேயே தங்கியிருந்தார். திருமலையிலும் திருப்பதியிலும் உள்ள கோயில்களில் எப்படி பூஜைகள் நடக்கவேண்டுமென வழிவகைகளை வகுத்துக்கொடுத்தார்.

ஆனால், திருமலையில் தங்கியிருந்த தவசிரேஷ்டர்களுக்கும், சாதுக்களுக்கும், ராமாநுஜரின் இந்த முடிவு மிகவும் வருத்தத்தைத் தந்தது. அவர் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். மகா புருஷரான தாங்களே இப்படிக் கூறினால், பின்னாளில் வரும் பக்தர்களும் இதையே சொல்லிக்கொண்டு பெருமாளை தரிசிக்க வராமல் போகும் அபாயம் ஏற்படும் எனக் கூறவே, ராமாநுஜரும் ஒருவாறாக திருமலைக்குப் புறப்பட்டார்.   

திருமலை முழுவதும் பச்சைப் பசேலென இருந்த மரங்களும், மலர்களின் நறுமணமும் காற்றில் தவழும் குளிர்த்தன்மையும் ராமாநுஜரின் மனதில் விவரிக்க முடியாத பரவசத்தை ஏற்படுத்தின. சீனிவாசனின் ஆளுமைமிக்க சாம்ராஜ்யம் அல்லவா? அந்தப் பரவச அனுபவத்துடனே தமது சீடர்களுடன் சென்றுகொண்டிருந்தார்.  

அப்போது மிகப்பெரும் கூடை ஒன்றினைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு ஒரு பெரியவர் அவர்கள் எதிரே வந்து நின்றார்.
அவரைப் பார்த்ததும்,ராமாநுஜர் கூடையை இறக்கி வைத்துவிட்டு அவரை ஆரத்தழுவிக் கொண்டார். ராமாநுஜரின் கண்கள் குளமாகி கண்ணீர் வடித்தன. 

அவர், `சைலப்பூரணர்' என்றழைக்கப்படும் திருமலைநம்பிதான். அவர் வேறு யாருமல்ல. ராமாநுஜரின் தாய்மாமன். உடையவருக்குக் குருவாக பல வகையிலும் திகழ்ந்தவர். அவருடைய பொறுப்பில்தான் திருமலையின் பூஜைகள் அத்தனையும் விடப்பட்டிருந்தன. 

திருமலைக்குத் தனது சீடர்களுடன் வரும் ராமாநுஜருக்கு, தானே பெருமாளுக்கு நைவேத்தியம் செய்து, அமுது படைத்த பிரசாதத்தையும் தீர்த்தத்தையும் திருவமுதாகப் படைக்க விரும்பியே தன் தலையில் சுமந்து வந்திருந்தார்.  

அப்போது  ராமாநுஜர், திருமலைநம்பியிடம், ``சுவாமி இத்தனை சுமையை நீங்கள்தான் சுமந்து வரவேண்டுமா? வேறு சிறியவர்கள் எவருமில்லையா?'' எனக் கேட்டார்.

``ராமாநுஜா! நானும் அப்படித்தான் ஏதேனும் உபாயம் செய்யலாமென யோசித்தேன். இந்த மலை முழுவதும் தேடிப்பார்த்தேன். எல்லோருமே ஏதோ ஒருவிதத்தில் பெரியவர்களாகவே இருந்தார்கள். அதனால்தான் நானே கொண்டுவரத் தீர்மானித்தேன்'' எனக் கூறினார்.


``திருவருளும் குருவருளும் மிக்க திருமலைநம்பியே! உம்மைவிட உயர்ந்தவர் வேங்கடமுடையான்தான்'' என்று பெருமைப்படுத்திவிட்டு அவர் அளித்த பிரசாதத்தை உண்டு மகிழ்ந்தார். ராமாநுஜரும் அவரது சீடர்களும் உண்டு முடித்து, இளைப்பாறி பயணக் களைப்பைப் போக்கிக்கொண்டனர்.

திருமலைநம்பியின் பணிவான பதிலால் ராமாநுஜர்  மிகவும் நெகிழ்ந்துபோனார். திருப்பதியில் ஓராண்டு காலம் தங்கி இருந்தார். திருமலையிலும் திருப்பதியிலும் உள்ள கோயில்களில் எப்படி பூஜைகள் நடக்கவேண்டுமென விதிமுறைகளையும் வகுத்துக்கொடுத்தார். இப்போதும் பெருமாளை தரிசிக்கச் செல்லும்போது பிரதான வாயிலின் வலதுபுறம் திருமலை நம்பிக்கு என இருக்கும் தனிச்சந்நிதியை தரிசிக்கலாம்.