Published:Updated:

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 29

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 29
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 29

சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 29

சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

Published:Updated:
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 29
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 29

பிரையன் ஆண்டர்ஸன்கிறவருடைய அனுபவத்தை இன்னிக்குச் சொல்லலாம்னு இருக்கேன். அமெரிக்காவில், கிளேட்டன் நகரை நோக்கிப் போயிட்டிருந்தார் அவர். வழியில, சாலை ஓரமா ஒரு மெர்ஸிடிஸ் பென்ஸ் நிக்கிறதைப் பார்த்தார். அதுக்குப் பக்கத்துல ஒரு லேடி கையைப் பிசைஞ்சுக்கிட்டுத் தவியா தவிச்சுட்டிருந்ததையும் பார்த்தார். அந்தம்மா சாலையில போற வாகனங்களைக் கையைக் காட்டி நிறுத்தி உதவி கேக்கறதையும், ஆனா யாருமே நிக்காம போயிட்டிருந்ததையும் பார்த்து, இவர் அந்த கார்கிட்டே போனார். டயர் பஞ்சராகி நின்னுட்டிருந்தது அந்த கார். பாவம், அந்தம்மாவுக்கு ஸ்டெப்னி மாட்டத் தெரியலே.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 29

இவர் ஒரு புன்னகையோடு அந்தம்மாவை நெருங்கவும், ‘ஆளு பார்த்தா காட்டான் மாதிரி இருக்கானே, தனியா நிக்கிற பொம்பளைகிட்டே வந்து ரவுடித்தனம் பண்ணா என்ன செய்யறது’னு அவங்களுக்குள்ளே லேசா உதறல்!

பிரையனுக்கு அந்தம்மா பயப்படறாங்கன்னு புரிஞ்சுது. அதனால, ரொம்பவும் மென்மையான குரல்ல, “நான் உங்களுக்கு உதவி பண்ணத்தாம்மா வந்திருக்கேன். ஏன் இந்தக் குளிர்ல வெளியே நிக்கறீங்க? கார் உள்ளே போய் உட்காருங்க. நான் நொடியில ஸ்டெப்னி மாட்டித் தரேன்”னு சொல்லி, கிடுகிடுன்னு வேலையில இறங்கினார்.

கார் அடியில தவழ்ந்து போய், ஜாக்கியைப் பொருத்தி, காரை லேசா உயர்த்தினார். அடுத்த இருபது நிமிஷத்துல ஸ்டெப்னியை மாட்டிட்டு வெளியே வந்தார். அவர் உடம்பெல்லாம் அழுக்கு. முழங்கையில லேசா சிராய்ப்பு. டிக்கியைத் திறந்து டூல்ஸை எல்லாம் வெச்சு, கதவை மூடிட்டு, டிரைவர் ஸீட்டுக்கு வந்து, அந்த லேடிகிட்ட, “ஓகேம்மா! வேலை முடிஞ்சுது. இனிமே நீங்க கிளம்பலாம்”னார்.

“உனக்கு எவ்ளோப்பா தரணும்?”னு கேட்டாங்க அந்தம்மா. அவர் எவ்ளோ கேட்டாலும் கொடுக்கத் தயாரா இருந்தாங்க.

ஆனா, பிரையன் ஒரு புன்னகையோடு, “நான் மெக்கானிக் இல்லம்மா. இது என் தொழில் இல்லை. ஜஸ்ட், ஒரு ஹெல்ப்பாதான் இதைப் பண்ணினேன். அதனால, எனக்கு எதுவும் வேணாம். நீங்க கிளம்புங்க. ஜாக்கிரதையா போய் வாங்க!”ன்னு கைகூப்பி, விடை கொடுத்தார்.

“இல்லப்பா… நான் செயின்ட் லூயி(ஸ்) சிட்டி வரைக்கும் போகணும். நடுவழியில நீ மட்டும் வந்து உதவி செய்திருக்கலேன்னா, யாருமில்லாத இந்த ஹைவேஸ்ல என்ன கதி ஆகியிருப்பேன்னு எனக்கே தெரியாது! அதனால, எவ்ளோ வேணும்னு தயங்காம கேளு. கொடுக்கிறேன்”னாங்க அந்த லேடி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“அப்படின்னா ஒண்ணு பண்ணுங்க, மேடம். என் பேர் பிரையன் ஆண்டர்ஸன். அடுத்த முறை உதவி தேவைப்படற யாரையாவது பார்த் தீங்கன்னா, இப்போ எனக்குக் கொடுக்க நினைக் கிற தொகையை அவங்களுக்குக் கொடுத்துட்டு, என்னை மனசுல நினைச்சுக்கோங்க. அது போதும்!”னு சிரிச்சுட்டு, அவர் பாட்டுல வந்த வழியைப் பார்த்துப் போயிட்டே இருந்தார்.

அந்த அம்மா, ‘இப்படியும் ஒரு மனுஷனா இந்தக் காலத்துல!’ன்னு ஆச்சர்யத்தோடு, வண்டியைக் கிளப்பி ஓட்டிட்டுப் போனாங்க. சில மைல் தூரம் போயிருப்பாங்க. வழியில ஒரு சின்ன சிற்றுண்டிச் சாலை. ஏதாவது சாப்பிட்டுட்டுப் போவோம்னு அங்கே வண்டியை நிறுத்தினாங்க.

உடனே ஒரு பணிப்பெண் வேகமா வந்து, இவங்க முகத்தைத் துடைச்சுக்க ஒரு டவலைக் கொடுத்தாள். சாப்பிட என்ன வேணும்னு கேட்டாள். பரபரன்னு, அதே நேரம் பாந்தமா அவள் வேலை செய்யற அழகை ரசிச்சுட்டிருந்தாங்க இந்த அம்மா. இத்தனைக்கும் அந்தப் பொண்ணு எட்டு மாச கர்ப்பிணியா வேற இருக்குன்னு தெரிஞ்சுது. இருந்தாலும், முகத்துல அதுக்கான அயர்ச்சியோ, கஸ்டமரை உபசரிக்கிறதுல சலிப்போ காட்டாம, எப்பவும் ஒரு புன்சிரிப்போட அவள் வேலை செஞ்சுட்டிருந்தாள்.

இந்தம்மா சாப்பிட்டு முடிச்சதும், நூறு டாலர் கொடுத்தாங்க. கொடுக்கும்போது பிரையன் ஆண்டர்ஸனை நினைச்சுக்கிட்டாங்க. பில் பணம் போக, அந்தப் பொண்ணு கல்லாவுலேர்ந்து மீதி சில்லறை வாங்கிட்டு வரதுக்குள்ள இவங்க வெளியேறி, கார்ல கிளம்பிப் போயிட்டாங்க. ‘அடடா… மீதியை வாங்காம போயிட்டாங் களே!’ன்னு நினைச்சுக்கிட்டே டேபிள்ல பார்த்தா, நாப்கின் கீழே இன்னும் 400 டாலர் பணம் இருந்துது. கூடவே, ஒரு துண்டுச்சீட்டுல, ‘மை டியர் சைல்ட்! இந்தப் பணம் உனக்குத்தான். இந்தச் சமயத்துல உனக்கு இது தேவைப்படலாம். மத்தபடி, நீ எனக்கு எதுவும் தரவேண்டியது இல்லை. ஒரு நெருக்கடியில, முகம் தெரியாத ஒருத்தர் எனக்கு ஹெல்ப் பண்ணாரு. அதன் தொடர்ச்சியா இப்ப உனக்கு நான் பண்ணியிருக் கேன். ஒருவேளை, எனக்கு நீ ஏதாவது பண்ணணும்னு நினைச்சியானா, இந்த அன்புச் சங்கிலி அறுந்துடாம, ஹெல்ப் தேவைப்படற வேற ஒருத்தருக்கு உன்னால முடிஞ்ச உதவியைப் பண்ணு. அப்படிப் பண்றப்போ என்னை மனசுல நினைச்சுக்கோ. அது போதும்!’னு எழுதி வெச்சிருந்தாங்க.

அதைப் படிச்சவுடனே, மளுக்குனு கண்ணுல நீர் கோத்துக்கிச்சு அந்தப் பொண்ணுக்கு. அடுத்த மாசம் பிரசவம்… செலவுக்கு என்ன பண்றதுன்னு அவளும் அவள் கணவனும் ரொம்பவே கவலைப் பட்டுக்கிட்டிருந்தாங்க. இப்ப இந்தப் பணம் பெரிய உதவி!

ராத்திரி வீட்டுக்குப் போனதும், அந்தப் பொண்ணு தன் கணவன்கிட்டே நடந்ததை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமா விவரிச்சு, “எல்லாம் நல்லபடியா போயிட்டிருக்கு. கவலையை விடு, மை டியர் பிரையன் ஆண்டர்ஸன்!”னு சொன் னாளாம்.

இந்த உண்மை அனுபவம், பின்னாளில் ஒரு சிறுகதையா, 1996-ல் வெளியான ‘சிக்கன் சூப்’ சிறுகதைத் தொகுதிப் புத்தகத்தில் பிரசுரமாச்சு!

இது வெறும் கதை இல்லே. நாமே அனுபவபூர்வமா சோதிச்சுப் பார்த்துத் தெரிஞ்சுக்க முடிகிற உண்மை. நாம ஒருத்தருக்கு உதவி செஞ்சா, அவரேதான் திருப்பி நமக்கு உதவணும் கிறது இல்லே. அந்த உதவி வேற ஒரு நாள்ல, வேற ஒருத்தர் மூலமா நமக்கு வந்து சேரலாம்.

‘என்ன கொடுக்கிறோமோ, அதுவேதான் திரும்பக் கிடைக்கும்’னு சொல்வாங்க. அது சத்தியமான பேச்சு!

‘உதவும் மனப்பான்மை’ தொடர்பா யூ-டியூப்ல நிறைய வீடியோக்கள் இருக்கு. உதாரணமா, ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு வெளியே வருவான் ஒருத்தன். வெளியே இருக்கிற பிச்சைக்காரனைப் பார்த்ததும், மறுபடியும் உள்ளே போய் டிபன் வாங்கிட்டு வந்து அவனுக்குத் தருவான். பிச்சைக்காரன் நன்றியோடு இவனைக் கையெடுத் துக் கும்பிடுவான். பிச்சைக்காரன் டிபன் சாப்பிட்டு முடிக்கவும், அந்த வழியா பிளாட்பாரத் துல வந்துட்டிருந்த ஒரு சிறுவன் அங்கே இருந்த ஒரு பள்ளத்துல விழப் போக, பிச்சைக்காரன் ஓடிப் போய், அந்தப் பையனை இழுத்துக் காப்பாத் துவான். அடுத்து அந்தப் பையன் போற வழியில, ஒரு அம்மா கையிலேர்ந்து பழக்கூடை தவறி விழுந்து, பழங்கள் சிதறி ஓட, இந்தப் பையன் ஓடிப் போய் அதையெல்லாம் பொறுக்கிக் கொடுப்பான். இப்படி அந்த வீடியோ நீளமா போயிட்டே இருக்கும். பிறருக்கு உதவுவதில் கிடைக்கிற சந்தோஷத்தை அழகா புரிய வைக்கிற வீடியோ அது.

இதுபோல மனசைத் தொடற மாதிரி, யூ-டியூப்ல நிறைய வீடியோக்கள் இருக்கு. ஒவ்வொண்ணையும் பார்க்கப் பார்க்க மனசு லேசாகுது. நாமும் யாருக்காவது உதவணும்கிற எண்ணம் வருது.

பிரபல பிரிட்டிஷ் எழுத்தாளர் ஹென்றி ஜேம்ஸ்; நாடகங்கள், பயணக் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள்னு நிறைய எழுதியிருக்காரு இவரு.  இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குக்கூட பரிந்துரைக்கப்பட்டவர் இவர். ‘மனித வாழ்க்கை யில் மூணு விஷயங்கள் ரொம்ப ரொம்ப முக்கிய மானவை’ங்கிறாரு இவரு. அதென்ன மூணு விஷயங்கள்? முதலாவது, அன்பாக இருப்பது; இரண்டாவது,  மிக அன்பாக இருப்பது; மூன் றாவது மிக மிக அன்பாக இருப்பது! சூப்பர்ல?! 

வாங்க, நாமும் உதவுவோம். அன்புச் சங்கிலி அறுந்துடாம பார்த்துப்போம்! அன்பாலே இந்த உலகை இன்னும் அழகாக்குவோம்!

- இன்னும் பேசுவோம்

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 29

நாடக ஆசிரியரும் தத்துவ மேதையுமான ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, இளைஞர்களுக்குச் சொன்ன யோசனைகளில் ஐந்து மட்டும் இங்கே...

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 29

1)     வாழ்க்கை என்பது, உங்களைக் கண்டுபிடிப்பது பற்றியதல்ல; உங்களை உருவாக்குவது பற்றியது!

2)     பணத்தைச் சம்பாதிக்காமல்கூட நீங்கள் அதை அனுபவிக் கலாம்; ஆனால், மகிழ்ச்சியை உருவாக்காமல் அதை அனுபவிக்க உங்களுக்கு உரிமை இல்லை!

3)     தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் இறுதிவரை போராடுபவர்களுக்கு, வாழ்வின் இருள் அத்தனையையும் வெற்றிகொள்வது சாத்தியம்தான்!

4)     நல்லவராய் இருப்பது நல்லதுதான். ஆனால், எது நல்லது, எது கெட்டது என்று தெரியாத நல்லவராய் இருப்பது நல்லதல்ல!

5)     சின்ன தப்புதானே என்று அலட்சியமாக இருக்காதீர்கள்; சின்ன ஓட்டைதான் பெரிய கப்பலையும் மூழ்கடித்துவிடும்!

சவால்!

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 29

இங்கே ஆறு தவளைகள் உள்ளன. மூன்று பழுப்புத் தவளைகளும் மூன்று பச்சைத் தவளைகளும் இடம் மாற வேண்டும்.

நிபந்தனைகள்

காலியான தாமரை இலையில்தான் தவளை குதிக்கும். தவளையால் தன் எதிரே உள்ள இன்னொரு தவளையை தாண்டிக் குதிக்க முடியும். ஆனால், இரண்டு தவளைகளைத் தாண்டிக் குதிக்க முடியாது.

தவளை தன் நிறத் தவளையைத் தாண்டிக் குதிக்காது. பின் பக்கமாகவும் குதிக்காது.

எந்த முறையில் நகர்ந்தால், இரண்டு நிறத் தவளைகளும் இடம் மாற முடியும் எனக் கண்டு பிடியுங்கள். அந்தச் சரியான நகர்வை எண்களால் குறித்து அனுப்புங்கள். உதாரணமாக, 5-ம் இடத்தில் உள்ள பழுப்பு நிறத் தவளை 4-ம் இடத்துக்கும், அதைத் தொடர்ந்து 3-ம் இடத்தில் உள்ள பச்சைத் தவளை 5-ம் இடத்துக்கும் நகர்வதாக வைத்துக்கொண்டால், அதை நீங்கள் 5-4; 3-5 எனக் குறிப்பிட்டால் போதுமானது.

உங்கள் விடையை உடனே 97911 21738 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அல்லது வாட்ஸ் அப்பில் அனுப்புங்கள். புத்தகப் பரிசு பெறும் வாய்ப்பு உண்டு.

பரிசு யாருக்கு?

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 29

சென்ற இதழ் சவாலுக்கான விடை: பெட்டிக்குள் இருந்த ஆப்பிள்கள் மொத்தம் 28 அல்லது 29. இரண்டுமே சரியான விடைகள்தான். எப்படி?

பெட்டிக்குள் இருந்த ஆப்பிள்களின்

எண்ணிக்கை 23, 25, 27, 30, 32, 34 என ஆளுக்கொரு யூகம் தெரிவித்தார்கள். ஒவ்வொருவரின் யூகத்துக்கும் உண்மையான எண்ணிக்கைக்கும் 1, 2, 3, 4, 5, 6 என வித்தியாசங்கள் இருந்தன என்று சொல்லியிருந்தோம். எனில், உண்மையான எண்ணிக்கை 28-ஆக இருக்கலாம். (23+5, 25+3, 27+1, 30-2, 32-4, 34-6); அல்லது, 29-ஆகவும் இருக்கலாம். (23+6, 25+4, 27+2, 30-1, 32-3, 34-5)

இந்தச் சரியான விடையை எஸ்.எம்.எஸ். மற்றும் வாட்ஸ் அப் மூலம் பதில் அனுப்பியிருந்தவர்களில், சிதம்பரத்தைச்  சேர்ந்த பி.அருள்வாசகம் என்ற வாசகருக்கு தென்கச்சி கோ.சுவாமிநாதன் எழுதிய 'நினைத்தால் நிம்மதி' என்ற புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism