திருத்தலங்கள்
தொடர்கள்
திருக்கதைகள்
Published:Updated:

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 30

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 30
பிரீமியம் ஸ்டோரி
News
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 30

சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

ல்லையில் தாக்குதல், அப்போலோவில் தமிழக முதல்வருக்குச் சிகிச்சை, இடைத்தேர்தல் பரபரப்பு என எல்லாத்தையும் கொஞ்ச நாளைக்கு மறக்கடிச்சுட்டுது, இந்தப் புது 2000 ரூபாய் நோட்டு விவகாரம். இதனால கறுப்புப் பணம் ஒழியுமா, ஒழியாதா என்கிற விவாதம், கள்ள நோட்டைத் தடுக்க முடியுமா, முடியாதா என்கிற சர்ச்சை, பழைய நோட்டுகளைக் கொடுத்துட்டு புது நோட்டு மாத்திக்க அடித்தட்டு மக்கள் படுற அவதின்னு இதுல பேச நிறைய விஷயங்கள் இருந்தாலும், என் கவனத்தைக் கவர்ந்தது ஒரு சில சம்பவங்கள்தான்.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 30

சில பணக்காரக் குடும்பங்கள்ல தங்கள் வீட்டுப் பணியாளர்களுக்கு 10,000, 20,000-ம்னு ஐந்நூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அன்பளிப்பா அள்ளி வழங்கியிருக்காங்க. சில ஹோட்டல்களின் வாசல்ல, ‘வேண்டியதைச் சாப்பிட்டுட்டுப் போங்க, காசை அப்புறமா கொடுங்க’ன்னு தாராள மனப்பான்மையை வெளிப்படுத்தியிருக்காங்க. இன்னும் சில சிறிய உணவகங்கள்ல இலவசமாவே சாப்பாடு போட்டிருக்காங்க.

ஒரு இடர்ப்பாடு வரும்போது மனுஷனுக்கு மனுஷன் செய்யுற இந்த உதவிகள் என்னை நெகிழ வைக்குது. இந்த மனித நேயம்தான் இன்னும் பெரிய அளவுல நம்ம சமுதாயத்துல பல்கிப் பெருகணும்னு நான் விரும்புறேன்.

அன்பாலே இந்த உலகை அழகாக்குவோம்னு சொல்லியிருந் தேன். அதுக்கு முதல் படி, யாரையும் கடுஞ்சொல் பேசாமல் இருப்பது.

ஒரு சாதுவும் அவரோட சிஷ்யர்கள் சில பேரும், கங்கையில குளிச்சுட்டுக் கரையேறினாங்க. அங்கே யாரோ சிலர் காச் மூச்சுனு சத்தம் போட்டு, ஒருவரை ஒருவர் திட்டிப் பேசிக்கிட்டிருந்தாங்க. அதைப் பார்த்த சாது, தன் சீடர்கள் கிட்டே, ‘கோபம் வந்தா இந்த மனுஷங்க ஏன் இப்படிச் சத்தம் போட்டுச் சண்டை பிடிச்சுக்கிறாங்க?’ன்னு கேட்டார்.

‘கோபத்தில் நாம் அமைதியை இழக்கிறோம், குருதேவா! அதனால் சத்தமிடுகிறோம்’னார் ஒரு சீடர்.

‘அது சரியப்பா! ஆனா, கோபம்னு வந்துட்டா உனக்கு மிக அருகில் இருக்கிறவர்கிட்டே கூட ஏன் உன் தொண்டைத் தண்ணி வறள கத்திப் பேசணும்? அவங்க உன் அருகில்தானே இருக்காங்க? சொல்ல வேண்டியதை கோபமா, கடுப்பா, ஆனா அவங்களுக்கு மட்டும் கேட்கிற மாதிரி சொல்லலாமே? எதுக்குக் கத்திப் பேசணும்?’ன்னு கேட்டார் சாது.

சீடர்கள் ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னாங்க. ஆனா, யாருக்கும் சரியான விடை சொல்லத் தெரியலை. கடைசியா, சாதுவே இதுக்கு பதில் சொன்னார்… ‘எப்போ இரண்டு பேர், ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பவே அவங்க உடல்கள் தான் அருகருகே இருக்கு; அவங்க ரெண்டு பேர் மனசும் விலகி, வெகு தொலைவுக்குப் போயிடுது. ஆகையால், தூரத்தில் இருக்கும் மனசுக்குக் கேட்கணும்கிறதுக்காகத்தான் கத்திப் பேசறாங்க. மனசு எவ்வளவு தூரம் விலகிப் போகுதோ, அவ்வளவு தூரம் இவங்க கத்திப் பேச வேண்டியிருக்கும். பல இடங்கள்ல பார்த்திருக்கலாமே, கோபத்தில் பேசுறவங்களோட குரல் கொஞ்சம் கொஞ்சமா உயர்ந்துக்கிட்டே போறதை! அப்படின்னா, அவங்களோட மனசு விலகி விலகிப் போயிட்டிருக்குன்னு அர்த்தம்!’

உண்மைதானே? இதுவே, இரண்டு பேர் ஒருவர் மீது ஒருவர் அன்பா இருக்கும்போது, அவங்க குரல் எத்தனை நிதானமா, அன்பா ஒலிக்குது! சொல்லப்போனா, அவங்க பேசவே தேவையிருக்காது. பார்வையிலேயே கருத்துக்களைப் பரிமாறிக்க முடியும். இதைத்தான் வள்ளுவர் ‘கண்ணொடு கண்ணோக்கின் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல’ன்னு சொன்னாரு.

அதனால, எதிராளியுடன் வாதிடும்போது, நம்ம கருத்துக் களை தாராளமா முன்வைக்கலாம். ஆனா, ரெண்டு பேர் மனசும் தொலைவாகப் போயிடாதவாறு பார்த்துக்கறது முக்கியம். மனங்களின் தொலைவை அதிகப்படுத்துறது, தேவையில்லாம நாம உபயோகப்படுத்துற கடுமையான வார்த்தைகள்தான். எனவே, அவற்றைத் தவிர்ப்போம். மனங்களுக்கு இடையேயான தூரம் அதிகரிச்சுக்கிட்டே போனா, கடைசியில விரும்பினாலும் ஒண்ணு சேர முடியாதவாறு, நடுவில் இருக்கும் பாதையே மறந்துபோயிடும்; அல்லது, காணாம போயிடும். கடைசியில எல்லாரும் தனித்தனித் தீவுகளா நிக்க வேண்டியதுதான்.

வாழ்க்கை நெறிமுறைகளைக் கற்றுத் தரும் மிகச் சிறந்த நூல் திருமந்திரம். அதிலுள்ள எல்லா பாடல்களுமே, வாழ்க்கையில் நாம எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல செயல்களை நினைவுபடுத்தும். உதாரணத்துக்கு, ஒரு பாடலைப் பார்ப்போம்.

யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுரை

யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 30

இந்த நான்கு வரிகளுமே நாலு விதமான அறங்களை வலியுறுத்துது. முதல் வரி, இறைவனுக்கான தொண்டு; அடுத்த வரி, மற்ற ஜீவன்கள் மீது நாம காட்ட வேண்டிய கருணை; மூன்றாவது வரி, மனித நேயத்தைச் சொல்லுது. கடைசி வரி, ரொம்ப முக்கியம். யாரிடமும் கடுஞ்சொல் பேசாமல், இனிமையான வார்த்தை களையே பேச வேண்டும் என வலியுறுத்துகிறது.

எதிராளியைக் குறைச்சு மதிப்பிடறது, யூகத்தின்பேர்ல அவரைப் பத்தின தப்பான அபிப்ராயத்தை வளர்த்துக்கறது இதையெல்லாம் தவிர்த்தோம்னாலே, தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தறதையும் நாம விட்டுடுவோம்.

இங்கே, என் நண்பர் சொன்ன ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது.

ஒரு ஸ்டார் ஹோட்டலுக்குப் போயிருந்தாராம். முதல்ல குடிக்க ‘வெல்கம் டிரிங்க்’ கொடுத்தாங்களாம். சாப்பிட்டு முடிச்சதும் கை கழுவ, டேபிள்ல ஒரு கண்ணாடி ‘பௌல்’ல தண்ணி வெச்சாங்களாம்.

“வேடிக்கையைப் பாருங்க. குடிக்கக் கொடுத்த ‘வெல்கம் டிரிங்க்’ல செயற்கை யான எலுமிச்சை ஃப்ளேவர் கலந்திருந்தாங்க. ஆனா, கை கழுவக் கொடுத்த தண்ணியில நிஜ எலுமிச்சம்பழத்தை வெட்டிப் போட்டிருந்தாங்க. அசலை அலட்சியப்படுத்தறோம்; போலியைத் தலைல வெச்சுக் கொண்டாடுறோம். என்னத்தைச் சொல்றது?”ன்னு சிரிச்சார்.

கேட்கத் தமாஷா இருந்தாலும், யோசிக்க வேண்டிய விஷயம் இது. பழைய சினிமா பாட்டு ஒண்ணு உண்டு… ‘யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே… அட, அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியலே…’ இனியாவது புரிஞ்சுப்போம்!

- இன்னும் பேசுவோம்

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 30

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் எஃப்.கென்னடி, இளைஞர்களுக்குச் சொன்ன யோசனைகளில் ஐந்து மட்டும் இங்கே...

1) நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே! நீ அதற்கு என்ன செய்தாய் என்று உன்னையே கேட்டுக்கொள்!

2) எதிரிகளை மன்னித்துவிடு; ஆனால், அவர்கள் பெயர்களை மறந்துவிடாதே!

3) போர், மனிதத்தன்மைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் முன், போருக்கு மனிதத்தன்மை முற்றுப் புள்ளி வைப்பது அவசியம்.

4 )மோசமான தோல்வியையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பவர்களால்தான் சாதனைகள் படைக்க முடியும்.

5) இலக்கும் பாதையும் இல்லாமல், முயற்சிகளும் தைரியமும் இருந்து பயனில்லை.

பரிசு யாருக்கு?

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 30

மூன்று பழுப்புத் தவளை களும், மூன்று பச்சைத் தவளைகளும் இடம் மாற வேண்டும் என்பதுதான் சென்ற இதழில் கொடுக்கப்பட்டிருந்த சவால். நிபந்தனைகளை மீறாமல் கீழ்க்காணும் முறையில் அவை இடம் மாற முடியும்.

முதலில், இடமிருந்து மூன்றாவதாக உள்ள பச்சைத் தவளை, நான்காவதாக இருக்கும் காலி இலை மீது குதிக்கும். அடுத்து, ஐந்தாவதாக இருக்கும் பழுப்புத் தவளை, எதிரில் உள்ள பச்சைத் தவளையைத் தாண்டி, மூன்றாவதாக உள்ள இலை மீது குதிக்கும். (3-4, 5-3) இப்படியே தொடர்ந்து… 6-5, 4-6, 2-4, 1-2, 3-1, 5-3, 7-5, 6-7, 4-6, 2-4, 3-2, 5-3, 4-5 என்ற முறையில் மாறலாம்.

இதையே உல்டாவாக பழுப்புத் தவளையிலிருந்து தொடங்கி, 5-4, 3-5, 2-3, 4-2, 6-4, 7-6, 5-7, 3-5, 1-3, 2-1, 4-2, 6-4, 5-6, 3-5, 4-3 என்ற முறையிலும் இடம் மாறலாம். 

இந்தச் சரியான விடையை எஸ்.எம்.எஸ். மற்றும் வாட்ஸ் அப் மூலம் பதில் அனுப்பி இருந்தவர்களில், காட்பாடியைச் சேர்ந்த எஸ்.சுஜாதா என்ற வாசகிக்கு, தமிழருவிமணியன் எழுதிய ‘மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்...’ என்ற புத்தகம் பரிசாக அனுப்பிவைக்கப்படுகிறது.

சவால்!

வரிசையாக மூன்று அறைகள். ஒன்றில் கொடிய விஷ நாகங்கள் உள்ளன. மற்ற இரண்டிலும் விலையுயர்ந்த ரத்தினங்கள் உள்ளன. ஆனால், எந்த அறையில் என்ன இருக்கிறதென்று வாயிற்காப்போனுக்கு மட்டுமே தெரியும். அந்த அறைகளின் முன் ஒரு கைதி நிறுத்தப்பட்டிருக்கிறான். அவனுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மூன்று அறைகளில் அவன் ஏதேனும் ஒரு அறையைத் தேர்ந்தெடுக்கலாம். ரத்தின அறைகளில் ஒன்றை அவன் தேர்ந்தெடுத்தால், அவை அவனுக்கு அன்பளிப்பாகக் கிடைக்கும். மாறாக, நாகங்கள் உள்ள அறையை அவன் தேர்ந்தெடுத்துவிட்டால், அந்த அறையில் அவன் அடைக்கப்படுவான்.

அறையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னதாக, கைதி ஒரு கேள்வி கேட்கலாம். அதற்கு வாயிற் காப்போன் ஆமாம் அல்லது இல்லை என ஏதேனும் ஒரு பதில் சொல்லுவான். கைதி அந்த மூன்று அறைக் கதவுகளில் ஏதேனும் ஒன்றைத் தொட்டபடி கேள்வி கேட்கவேண்டும். அவன் தொட்டிருக்கும் அறையில் ரத்தினங்கள் இருக்குமானால், வாயிற்காப்போன் உண்மையான பதிலைச் சொல்லுவான். மாறாக, நாகங்கள் இருக்கும் அறைக் கதவைத் தொட்டபடி கேட்டால், வாயிற்காப்போன் உண்மை சொன்னாலும் சொல்லுவான்; பொய் சொன்னாலும் சொல்லுவான். அது அவன் விருப்பம்.

கைதி என்ன கேள்வி கேட்டால், நாகங்கள் இருக்கும் அறையைத் தவிர்த்து, ரத்தினங்கள் இருக்கும் அறைகளில் ஒன்றை அவனால் 100% சரியாகத் தேர்ந்தெடுக்க முடியும்?

உங்கள் விடையை உடனே 97911  21738 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அல்லது வாட்ஸப்பில் அனுப்புங்கள். புத்தகப் பரிசு பெறும் வாய்ப்பு உண்டு.