Published:Updated:

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 31

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 31
பிரீமியம் ஸ்டோரி
News
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 31

சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

போன வாரம், ஒரு ரெஸ்ட்டாரன்ட்ல சாப்பிட்டுட்டு இருந்தேன். அப்போ, என் பக்கத்து டேபிள்ல நாலஞ்சு இளைஞர்கள் வந்து உட்கார்ந்து சலசலன்னு பேசிட்டிருந்தாங்க. காதுல விழுந்த வரைக்கும், அவங்க நண்பர்கள்ல எவனோ ஒருத்தன் தற்கொலை முயற்சி செய்யப்போய், இவங்க தலையிட்டு காப்பாத்திவிட்டிருக்காங்கன்னு புரிஞ்சுது.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 31

“என்னப்பா, யாருக்கு என்ன ஆச்சு”ன்னு கேட்டேன். “ஒண்ணுமில்லண்ணே… எங்க ஃப்ரெண்டு ஒருத்தன்… பத்துப் பதினஞ்சு இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணி, எதுலயும் செலக்ட் ஆகலே. நேத்திக்கும் அப்படித்தான், நொந்துபோன மனசோட வீட்டுக்குப் போயிருக்கான். அவங்க சித்தி, அதான் அவங்க அப்பாவோட ரெண்டாவது வொய்ஃப்… ‘வெட்டியா ஊரைச் சுத்திட்டு வர தண்டக் கழுதைங்களுக்கெல்லாம் என்னால வடிச்சுக் கொட்ட முடியாது’ அப்படி இப்படின்னு வாயில வந்தபடிக்குத் திட்டியிருக்காங்க. இவன் ஆத்திரத்துல அடிக்கப் போயிருக்கான். அவங்க அப்பா தடுத்து, அவனைக் கழுத்தைப் புடிச்சு வெளியே தள்ளிட்டாரு. பாவிப்பய, இதோ இவனுக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொல்லி, ‘எல்லாரையும் கேட்டதா சொல்டா! நான் உலகத்துல வாழவே லாயக்கில்லை. சூஸைடு பண்ணிக்கறதா இருக்கேன். குட் பை!’னு என்னென்னவோ உளறி, அழுது, கட் பண்ணியிருக் கான். இவன் உடனே எங்களுக்குத் தகவல் சொல்ல, பதறிப் போய் ஓடினோம் அவன் வீட்டுக்கு. நல்லவேளை, எதுவும் விபரீதமா ஆகறதுக்கு முன்னால, அவனைக் காப்பாத்தி, கூட்டிக்கிட்டு வந்துட்டோம்…”னு நடந்ததைச் சுருக்கமா சொன்னான் ஒருத்தன்.

“அவன் இப்போ எங்கே”ன்னேன். இதுக்குப் பதில் சொல்லாம, ஒருத்தனை ஒருத்தன் பார்த்துக்கிட்டாங்க. “இல்லே, எதுக்குக் கேக்கிறேன்னா, உங்க தலை மறைஞ்சதும் மறுபடியும் அவன் ஏதாவது ஏடாகூடமா செய்துக்கப் போறான்”னதும், “இல்லேண்ணே… தகுந்த இடத்துல அவனை ஸேஃபா வெச்சிருக்கோம்”னு பதில் சொன்னான் இன்னொருத்தன்.

அந்த நாலஞ்சு பேர்ல ஒருத்தன் மட்டும் எதுவும் பேசாம உம்முனு இருந்தான். எனக்கென்னவோ, சூஸைட் அட்டெம்ப்ட் கேஸ் அவனாத்தான் இருக்கணும்னு தோணிச்சு. சரி, அது அவங்க பர்சனல் மேட்டர்ங்கிறதால மேற் கொண்டு தோண்டித் துருவிக் கேக்க விரும்பலை. ஆனா, பொதுவா சில விஷயங்களை அவங்களுக்கு எடுத்துச் சொல்லணும்னு நினைச்சேன். சொல்லவும் செஞ்சேன்.

எல்லாத்துக்கும் தீர்வு சூஸைட்தானா? பரீட்சைல தோல்வியடைஞ்சா சூஸைட்; மார்க் அதிகம் வரலேன்னா சூஸைட்; வாத்தியார் திட்டினா சூஸைட்; மேலதிகாரி குடைச்சல் கொடுத்தா சூஸைட்; கடன் சுமை அதிகம் ஏறினா சூஸைட்; விவசாயம் பொய்ச்சதுன்னா சூஸைட்; தலைவரை ஜெயில்ல போட்டுட்டாங்கன்னா சூஸைட்; அபிமான நடிகருக்கு உடம்பு சரியில்லேன்னா சூஸைட்; எவனோ ஒருத்தன் சோஷியல் மீடியாவுல நம்மளைப் பத்தி ஏதாவது அபாண்டமா எழுதிட்டான்னா சூஸைட்… அப்பப்பா!

சூஸைட் சைக்காலஜி ஒண்ணு உண்டு. தற்கொலை பண்ணிக்கிற எண்ணம் வந்ததுமே, உடனே அதுக்கான செயல்ல இறங்காம, ஒரு டம்ளர் தண்ணி குடிச்சுட்டு, அமைதியா ஓரிடத்துல உட்கார்ந்து, சுவாசத்தை ஆழமா இழுத்து நிதானமா விட்டு, மனசை அலைபாயவிடாம  ஒரு நிமிஷம் நிலைநிறுத்தி வெச்சிருந்தால், நூத்துக்குத் தொண்ணூறு தற்கொலைக் கேஸ்கள் தவிர்க்கப்படும்னு சொல்வாங்க.

கலோனல் ஹார்லேண்ட் டேவிட் சாண் டர்ஸ்னு ஒருத்தரைப் பத்திச் சொல்றேன். அமெரிக்கத் தொழிலதிபர். ஆனா, அவரோட சின்ன வயசு ரொம்பத் துயரமானது.

சாண்டர்ஸுக்கு அஞ்சு வயசு ஆனப்போ, அவர் மேல ரொம்பப் பாசம் வெச்சிருந்த அவங்கப்பா இறந்துட்டாரு. அவங்க அம்மா, தக்காளிகளைத் தகர டின்ல அடைச்சு விக்கிற ஒரு கம்பெனில வேலைக்குச் சேர்ந்தாங்க. இந்தப் பையன்தான் தன் தம்பி, தங்கைக்கு சமைச்சுப் போட்டு, பொறுப்பா பார்த்துக்க வேண்டியிருந்தது. படிப்பு வரலை. பள்ளிக்கூடத்தை விட்டு நின்னு, விவசாயக் கூலி வேலைக்கு இவனும் போனான்.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 31

அவங்க அம்மா, வேறு ஒருத்தரைக் கல்யாணம் செஞ்சுகிட்டாங்க. அந்த அப்பாவுக்கு இந்தப் பசங்களைக் கண்டாலே பிடிக்கலை. சாண்டர்ஸும் அவரோடு முறைச்சுக்கிட்டு நின்னான். 13 வயசுல வீட்டை விட்டு ஓடி, குதிரை லாயத்துக்கு பெயின்ட் அடிக்கிற வேலைல சேர்ந்தான். அதுக்கப்புறம், பொய்யா பர்த் சர்ட்டிஃபிகேட் கொடுத்து, ராணுவத்துல சேர்ந்தான். ஒரே வருஷம்தான்… அதையும் விட்டுட்டு, அலபாமாவுல இருந்த தன் மாமா கிட்டே போய்ச் சேர்ந்தான். அவர் ரயில்வேல இருந்தார். இவனுக்குக் கொல்லன் பட்டறையில ஒரு வேலை வாங்கிக் கொடுத்தார். இரண்டு மாசம் செஞ்சான்.

அதுக்கப்புறம், அங்கிருந்து ஜாஸ்பர் என்கிற ஊருக்குப் போனான். அங்கே ரயில் பெட்டிகளைச் சுத்தப்படுத்துற வேலைல சேர்ந்தான். அப்படியே, இன்ஜினுக்குக் கரி அள்ளிப் போடுறவனா ஆனான். அப்போ அவனுக்கு 16 வயசுதான். 19 வயசுல, தண்டவாளங்களைச் சரிபார்க்குற, செப்பனிடற வேலை. அப்போ, ஜோசப்பைன்கிற ஒருத்தியை லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக் கிட்டான். மூணு குழந்தைகள். பையன் ஜூனியர் ஹார்லேண்ட் இருபது, இருபத்திரண்டு வயசுல இறந்து போயிட்டான்.

இதுக்கிடையில, தபால் மூலம் சட்டம் படிக்க ஆரம்பிச்சான் சாண்டர்ஸ். ஒருநாள், சக தொழிலாளியோடு அடிதடியில இறங்கினதால, இவனோட சீட்டைக் கிழிச்சு அனுப்பிடுச்சு ரயில்வே நிர்வாகம். வேலை போச்சு. கூடவே, இவன் மனைவியும் தன் குழந்தைகளைக் கூட்டிக் கிட்டு, தன் அப்பா வீட்டுக்குப் போயிட்டாள்.

சாண்டர்ஸ் மனம் தளராம, சட்டப் படிப்பை முடிச்சு, பிராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சான். மூணு வருஷம் நல்லாத்தான் போயிட்டிருந்தது. கையில போதுமான அளவுக்குப் பணம் சேர்ந்துடுச்சு; தன் மனைவி, குழந்தைகளை இனிக் கூப்பிட்டுக்கலாம்னு இருந்தப்போ, தன் சொந்த கிளையன்ட்டோடு ஏற்பட்ட தகராறுல, அவனை இவன் அடிச்சு உதைக்கவும், உருப்படியா இருந்த சட்டத்துறை வேலையும் போச்சு!

அதுக்கப்புறம் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டா சில நாள் வேலை பார்த்தான். ஆயில் கம்பெனி சர்வீஸ் ஸ்டேஷன்ல கொஞ்ச நாள் வேலை செஞ்சான். படகு சர்வீஸ்கூடப் பண்ணினான். அப்புறம் ஒரு சின்ன ரெஸ்ட்டாரன்ட்ல பாத்திரம் கழுவுற வேலைக்குச் சேர்ந்தான். அப்படியே நல்லா சமைக்கவும் கத்துக்கிட்டான். இதுக்கு நடுவுல, தன் பொண்ணு ஞாபகம் வந்து, அவளை நைஸா அவ அம்மாகிட்டேர்ந்து கடத்திட்டு வரவும் முயற்சி பண்ணான். ஆனா, அவன் முயற்சி தோல்வியில முடிஞ்சுது.

அப்புறம், அரசாங்கத்தின் வெடி மருந்து தயாரிப்புப் பணியில் இருந்தவங்களுக்காக உணவு விடுதி நடத்தினான். தொடர்ந்து, ஓர் உணவு விடுதியின் துணை நிர்வாகி ஆனான். அங்கே ஒரு மோட்டல் மேனேஜரா இருந்த கிளாடியா என்பவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். அப்போ சாண்டர்ஸுக்கு வயசு 54.

65 வயசுல ரிடையரானார் சாண்டர்ஸ். கையில சேமிப்புன்னு எதுவும் இல்லே. அநாதையானதுபோல் உணர்ந்தார். தான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு ஏதாவது அர்த்தம் இருக்கானு யோசிச்சார். இனி இந்த உலகத்துக்கு பாரமாயிட்டோம்னு தன் மேலேயே ஒரு கழிவிரக்கம் வந்தது. தற்கொலை பண்ணிக்கிற முடிவுக்கே வந்துட்டார்.

கடைசியா, தன் வருத்தங்களைக் கொட்டி, ஒரு கடிதம் எழுத உட்கார்ந்தார். ஆனா, அதுக்கு பதிலா, தான் என்னவெல்லாம் செய்திருக்கோம்னு எழுதத் தொடங்கினார். அப்போதான் அவருக்கு ஒண்ணு புரிய வந்தது. மத்த யாரையும்விட தன்னால ஒரு காரியத்தை மிகச் சிறப்பா பண்ண முடியும்; ஆனா, அதை இதுவரைக்கும் தான் பண்ணினதே இல்லே! அது… சமையல்!

ஆமாம்… சுவையா, சூப்பரா சிக்கன் சமைக்கிறதில் கில்லாடி அவர். அவ்வளவுதான்… தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டார். தெரிஞ்சவங்க கிட்டே கொஞ்சம் பணம் கடன் வாங்கினார். அதுக்கு சிக்கன் வாங்கி சமைச்சு, அக்கம்பக்கத்து வீடுகள்ல கொண்டு போய்க் கொடுத்தார். அந்தச் சுவை அவங்களைக் கட்டிப் போட்டுடுச்சு. அவங்க அவரோட ரெகுலர் கஸ்டமர் ஆனாங்க.அப்புறம், ஒரு சின்ன சிற்றுண்டி விடுதியைத் தொடங்கினார். வாடிக்கையாளர்கள் பெருகி, வியாபாரம் மளமளன்னு உயர்ந்து, ‘கெண்டகி’ என்கிற அந்த நகரத்தின் பெயரிலேயே ‘கெண்டகி ஃப்ரைடு சிக்கன்’னு ஒரு ரெஸ்ட்டாரன்ட் தொடங்கினார்.

ஆமாம், இத்தனை நேரம் நான் சொல்லி வந்த உண்மைக் கதையின் நாயகன் கலோனல் ஹார்லேண்ட் டேவிட் சாண்டர்ஸ், வேறு யாருமல்ல… உலகெங்கும் வியாபித்திருக்கும் பிரபல கே.எஃப்.சி. ரெஸ்ட்டாரன்ட் சாம்ராஜ்யத் தின் நிறுவனர்தான். அதன் லோகோவில் இருக்கும் குறுந்தாடி முகத்துக்குச் சொந்தக்காரர் அவர்தான்.

இவரது கதையிலேர்ந்து நாம தெரிஞ்சுக்கவேண் டியது ஒண்ணே ஒண்ணுதான்… விட்டுக் கொடுக்காதீங்க! மத்தவங்களோட நலனுக்காக சிலவற்றை விட்டுக்கொடுக்கலாம்;   தப்பில்லை. விட்டுக்கொடுத்தவன் கெட்டுப் போவதில்லை! ஆனா, எப்பவும், எந்தச் சூழ்நிலையிலயும், எதுக்காகவும் உங்களை நீங்க விட்டுக்கொடுத்துடாதீங்க. சிலருக்கு மட்டுமே சொந்தமானதல்ல வெற்றி! நம் ஒவ்வொரு வருக்குமே உரிமையானது! சாதிப்போம். ஜெயிப்போம்!

- இன்னும் பேசுவோம்

சவால்!

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 31

ரு பகடையின் ஆறு பக்கங்களிலும் பச்சை, மஞ்சள், நீலம், சிவப்பு, வெள்ளை, கறுப்பு என ஆறு வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. அந்தப் பகடைக் காயின் இரு வேறு தோற்றங்கள்தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிறத்துக்கும் நேர் எதிர்ப் பக்கத்தில் உள்ள நிறம் என்ன என்று கண்டுபிடித்து, உங்கள் விடையை உடனே 97911  21738 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அல்லது வாட்ஸ் அப்பில் அனுப்புங்கள். புத்தகப் பரிசு பெறும் வாய்ப்பு உண்டு.

நடிகர், தொழிலதிபர், திரைப்படத் தயாரிப்பாளர், சமூக சேவகர், அரசியல்வாதி எனப் பன்முகங்கள் கொண்ட அர்னால்டு ஸ்வார்ஷ்நெகர், இளைஞர்களுக்குச் சொன்ன யோசனைகளில் ஐந்து மட்டும் இங்கே...

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 31

1) வெற்றிகளிலிருந்து உங்களுக்கு வலிமை கிட்டாது. நெருக்கடிகளும் போராட்டங்களுமே உங்களுக்கு வலிமை சேர்க்கும். இன்னல்களின்போதும் கொண்ட முயற்சியில் இருந்து பின்வாங்காமல் இருந்தீர்களேயானால், அதுவே உங்கள் பலம்!

2) ‘வானமே எல்லை’ என்பார்கள். இல்லை; உங்கள் மனமே எல்லை! ஒன்றை நீங்கள் 100 சதவிகிதம் நம்பினால் மட்டுமே, அதை மிகச் சிறப்பாக உங்களால் செய்ய முடியும்.

3) உங்கள் கைகளை பாக்கெட்டுகளில் நுழைத்துக்கொண்டிருந்தால், உங்களால் வெற்றி எனும் ஏணியில் ஏற முடியாது!

4) மற்றவர்களைப் போலவேதான் நாமும் இருக்கப்போகிறோம் என்றால், நாம் இந்த உலகில் இருப்பதற்கான அர்த்தம்தான் என்ன?

5) வெற்றிக்குக் குறுக்கு வழிகள் கிடையாது. மீண்டும் மீண்டும் மீண்டும் முயன்றுகொண்டே இருப்பதொன்றுதான் வழி!

பரிசு யாருக்கு?

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 31

‘கைதி என்ன கேள்வி கேட்டால், மூன்று அறைகளில், நாகங்கள் இருக்கும் அறையைத் தவிர்த்து, ரத்தினங்கள் இருக்கும் அறைகளில் ஒன்றை அவனால் 100% சரியாகத் தேர்ந்தெடுக்க முடியும்?’ என்று கேட்டிருந்தேன்.

நடுவில் இருக்கும் அறைக் கதவைத் தொட்டபடி, “இதற்கு வலது பக்கத்தில் உள்ள அறையில் ரத்தினங் கள் உள்ளதா” என்று அவன் கேட்க வேண்டும். வாயிற்காப்போன் ‘ஆமாம்’ என்றால், வலது பக்க அறையையும், ‘இல்லை’ என்று பதில் வந்தால், இடது பக்க அறையையும் கைதி தேர்ந்தெடுக்க வேண்டும். சரி, இப்படிச் செய்தால், ரத்தினங்கள் உள்ள அறையை கைதி 100% உத்தரவாதமாகத் தேர்ந்தெடுக்க முடியுமா?

முடியும். கைதி தொட்டிருக்கும் நடு அறையில் ரத்தினங்கள் இருந்தால், அவனது கேள்விக்கு வாயிற்காப்போன் ‘ஆமாம்’ என்றோ, ‘இல்லை’ என்றோ, எது உண்மையான பதிலோ அதைச் சொல்லுவான். அதுவே, நாகங்கள் இருந்தால், ‘ஆமாம்’ என்று உண்மையான பதிலும் வரலாம்; ‘இல்லை’ என்று பொய்யான பதிலும் வரலாம். ஆக, ‘ஆமாம்’ என்ற பதில், வலது பக்கம் இருப்பது ரத்தின அறை என்பதையும், ‘இல்லை’ என்ற பதில் இடது பக்கம் இருப்பது ரத்தின அறை என்பதையும் 100% உறுதிப்படுத்தும்.

சரியான விடையை எஸ்.எம்.எஸ். மற்றும் வாட்ஸ் அப் மூலம் அனுப்பியிருந்தவர்களில், சென்னையைச் சேர்ந்த உஷா மாதவன் என்ற வாசகிக்கு தமிழருவி மணியன் எழுதிய மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்ற புத்தகம் பரிசாக அனுப்பிவைக்கப்படுகிறது.