
சிற்பமாக சிருஷ்டிப்போம் வாழ்க்கையை!
ஒரு மலையடிவாரத்தில் இரண்டு பெரிய பாறைகள் கிடந்தன. பல ஆண்டுகளாக மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் கிடந்த அந்தப் பாறைகள், ‘இந்தச் சூழலில் இருந்து எப்போதுதான் விடிவு கிடைக்குமோ?’ என்று ஏங்கிக் கிடந்தன. அந்த மலையடிவாரத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஒரு நகரம் இருந்தது.
ஒரு நாள், சிற்பிகள் சிலர் அந்த நகரத்தில் அமையவிருக்கும் கோயிலுக்குத் தேவையான சிற்பங்களைச் செய்வதற்கு உகந்த பாறையைத் தேடி மலையடிவாரத்துக்கு வந்தனர். அவர்களது பார்வையில் அடிவாரத்தில் கிடந்த இரண்டு பாறைகளும் தென்பட்டன. அருகில் வந்து சோதித்துப் பார்த்தவர்களுக்கு மிகவும் திருப்தி. அவற்றின் மீது அடையாளக் குறியும் இட்டுச் சென்றனர். சிற்பிகள் சென்றதும், ‘சந்தோஷம்... சந்தோஷம்... ரொம்ப காலம் கழித்து நமக்கு விடிவு பிறந்துள்ளது’ என்று கூவி மகிழ்ச்சியில் திளைத்தது முதல் பாறை. ஆனால், இரண்டாவது பாறையோ கோபத்தில் சீறியது. ‘‘முட்டாளே... இது சந்தோஷமான விஷயம் இல்லை. அவர்கள் உன்னை தூக்கிச் சென்று சுத்தியலால் அடி அடியென்று அடிப்பார்கள்; உளி கொண்டு செதுக்குவார்கள்... மொத்தத்தில் நரக வேதனை’’ என்று அங்கலாய்த்தது. அதற்கு முதல் பாறை, ‘‘நன்றாகச் செதுக்கட்டுமே... ஒன்றைப் பெறவேண்டும் எனில், ஒன்றை இழந்துதானே ஆகவேண்டும். ஆகவே, நான் வலியைப் பொறுத்துக்கொள்வேன்’’ என்று பதில் சொன்னது.
‘‘அது உன் இஷ்டம். நான் இங்கிருந்து நகர்ந்து கொடுக்கப்போவதில்லை’’’ என்று விடாப்பிடியாகக் கூறிவிட்டது இரண்டாவது பாறை. மறுநாள் சிற்பிகள் வந்தனர். முதல் பாறையை தூக்கி வண்டியில் வைத்தனர். இரண்டாவது பாறை அசைந்து கொடுக்கவில்லை ஆதலால், அதை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றார்கள். முதல் பாறை செதுக்கப்பட்டு அழகான தெய்வச் சிலையானது; எல்லோராலும் வணங்கப்பட்டது. இரண்டாவது பாறையோ இன்னும் காட்டுக்குள்தான் கிடக்கிறது!
நாமும் சோதனைகளையும், துயரங்களையும் எதிர்கொள்ளத் தயங்கினால், இரண்டாவது பாறையைப் போன்று பயனற்றுப் போவோம். நம்பிக்கையுடனும், திடமான மனதுடனும் அனைத்தையும் எதிர்கொண்டால், அனுபவங்கள் நம் வாழ்க்கையை செதுக்கும்; நமது எதிர்காலம் சிறப்பாகும்.
- செங்கமலக்கண்ணன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முயற்சி செய்து, மனதை எண்ணங்களில் இருந்து விடுவிக்கவேண்டும். அந்த நிலையில் தொடர்ந்து நாம் இருப்போமேயானால், அதுவே நமது சாதனைகளுக்கு வழிவகுக்கும்.
- ஸ்ரீரமண மகரிஷி