Published:Updated:

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 32

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 32
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 32

சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 32

சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

Published:Updated:
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 32
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 32

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.

துக்கு நான் தனியா பொழிப்புரை சொல்லவேண்டிய அவசியம் இல்லை. வள்ளுவரே ரொம்ப ஈஸியா, எல்லாருக்கும் புரியற மாதிரிதான் சொல்லியிருக்காரு. அன்பு இல்லாதவங்க, எல்லாவற்றையும் தன்னுடையதா நினைப் பாங்க; அன்பு மனம் கொண்டவங்களோ தங்களோட எலும்பும் பிறர்க்கு உதவணும்னு விரும்புவாங்க.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 32

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மூளைச்சாவு அடைஞ்ச அல்லது விபத்தில் இறந்துபோன தங்கள் வாரிசின் உடல் உறுப்புகளைத் தானம் செய்யும் பெற்றோர்களைப் பத்தி அவ்வப்போது கேள்விப்படறோம். அத்தனை சோகத்துக்கு மத்தியிலும் இப்படி மத்தவங்களுக்குப் பயன்படும் விதத்தில் தானம் செய்ய எத்தனை பெரிய மனசு வேணும்னு நினைக்கிறப்போ, அவங்களைக் கையெடுத்துக் கும்பிடத் தோணுது.

‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்’ங்கிற மாதிரி, ஒரு மனிதன் தான் உயிரோடு இருக்கும்போதும் பிறருக்கு உதவியா இருக்கணும்; இறந்த பின்னாலும் மத்தவங்க பயன்பெறும்படியான விஷயங் களைச் செய்துட்டுப் போகணும்.

ட்ரூஆக்டிவிஸ்ட் டாட்காம்-ங்கிற வலைதளத்தில் சில மாசங்களுக்கு முன்னால பிரையன்னா அக்யுஸ்ட்டா என்பவர் போட்டிருந்த ஒரு பதிவைப் படிச்சதும் அசந்துட்டேன். நீங்களும் படிச்சிருக்கலாம்.

பிரேசில் நாட்டின் பெரும்பணக்காரர்கள்ல ஒருத்தர் சிக்குன்ஹோ ஸ்கார்ப்பா. அவர் ஒருமுறை சமூக வலைதளத்தில், தனக்கு மிகவும் பிரியமான தன்னோட விலை உயர்ந்த பென்ட்லி காரை தன் வீட்டுத் தோட்டத்தில் குழி தோண்டிப் புதைக்கப்போறதா எழுதியிருந்தார். அந்தப் பதிவைப் படிச்சுட்டு அவருக்கு எதிரா ஏகப்பட்ட கண்டனங்கள். `இவருக்கு என்ன பைத்தியமா, தன்னோட ஆடம்பரத்தை இப்படியா வெளிப் படுத்திக்கணும், இவருக்குத் தேவையில்லேன்னா அதை ஏதாவது தொண்டு நிறுவனத்துக்குக் கொடுத்தா பயன்படுத்திப்பாங்களே, மீடியாவைத் தன் பக்கம் திருப்புறதுக்காக இப்படி ஸ்டன்ட் அடிக்கிறாருபோல'ன்னு கடுமையான விமர் சனங்கள்.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 32

ஸ்கார்ப்பா எதையும் கண்டுக்கலே. வீட்டுத் தோட்டத்துல பெரிய குழியை வெட்டினார். அதும்பின்னால தன் காரைக் கொண்டு வந்து நிறுத்தினார். காருக்கும் குழிக்கும் அருகில் நின்னு போட்டோ எடுத்துக்கிட்டு, அதையும் வலை தளத்தில் பதிவேற்றினார். அவர் தன் காரைப் புதைக்கும் சடங்கைச் செய்யப்போறதா அறிவிச்ச அன்னிக்கு அவர் வீட்டில் ஏகப்பட்ட கூட்டம். மீடியாக்கள் வேறு குழுமிட்டாங்க.

காரை குழியில் இறக்கிப் புதைக்க வேண்டியது தான் பாக்கி! எல்லார் கண்ணும் அவர் மேலயும் அந்த கார் மேலயும் படிஞ்சிருந்தது. எல்லாரும் அந்தத் தருணத்துக்காகப் படபடப்பா காத்திருந்தாங்க. அப்போ, தன் காரை புதைக்கப் போறதா அறிவிச்சது ஏன்னு ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்தார் ஸ்கார்ப்பா.

“என் விலை உயர்ந்த காரை புதைக்கப் போறதா நான் சொன்ன துமே, எனக்கு ஏகப்பட்ட கண்ட னங்கள். இந்த காரின் மதிப்பு வெறும் 4 லட்சத்து 50 ஆயிரம் டாலர்கள்தான். இதுக்கே, நான் என்ன முட்டாளா, பைத்தியக்காரனான்னு வசவுகள் வந்தன. ஆனா, இதைவிட விலை மதிப்பு வாய்ந்த பொருள்களை எத்தனையோ பேர் தினம் தினம் மண்ணுல புதைச்சுட்டிருக்காங்களே, அவங்களை என்ன சொல்றது? மனிதனோட இதயம், நுரையீரல், கல்லீரல், கண்கள், சிறுநீரகங்கள்னு எல்லாமே என் காரைவிட விலை உயர்ந்தவைதான். ஆனா, ஒரு மனிதன் இறந்தவுடனே அத்தனை உறுப்புகளையும் யாருக்கும் பயனில்லாம மண்ணுல புதைக்கிறோமே, இது எத்தனை பெரிய முட்டாள்தனம்!

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 32

எத்தனையோ ஆயிரம் பேர் டிரான்ஸ்பிளான்ட் சிகிச்சைக்கு மாற்று உறுப்புகள் கிடைக்காம உயிரைக் கையில பிடிச்சுக்கிட்டுக் காத்திருக்கும் போது, ஆரோக்கியமான நம்ம உறுப்புகளை இப்படி அநியாயமா புதைச்சு அழிக்கிறது அபத் தமான காரியமில்லையா? ஓர் உயிரைக் காக்கும் மனித உறுப்புகளைவிட என்னோட பென்ட்லே கார் அப்படி ஒண்ணும் விலைமதிப்பானது இல்லை. இதை எல்லாருக்கும் உணர்த்தத்தான் நான் என் காரை புதைக்கப் போறதா சொன்னேன். நான் இறந்த பிறகு என்னோட உறுப்புகளை தானம் பண்றதாக முடிவெடுத்திருந்தேன். அதை, இப்போ இந்த நிமிஷம் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன். நான் ரெடி? நீங்களும் இதுபோல் அறிவிக்கத் தயாரா?”

வாவ்..! எத்தனை பவர்ஃபுல்லான மெசேஜ், பாருங்க! ‘மனிதர்கள் அத்தனை பேருக்கும் தங்கள் உடம்பின்மீது முழு உரிமை உண்டு. தங்கள் இறப்புக்குப் பின் அதை என்ன செய்யணும், என்ன செய்யக்கூடாதுன்னு தீர்மானிக்கிற அதிகாரம் உண்டு. ஆனா, விலைமதிப்பற்ற, இன்னும் சில உயிர்களைக் காப்பாற்றும் வலிமை பெற்ற ஆரோக்கியமான தங்கள் உறுப்புகளை தானம் செய்ய மனசு வராம, அவற்றைத் தங்கள் உடம்போடு சேர்த்து வீணாக மண்ணில் புதைக்கணும்னு ஏன் சில பேர் நினைக்கிறாங்கன்னே புரியலை’னு வருத்தப் படறார் ஸ்கார்ப்பா.

அவரது வருத்தம் நியாயமானதுதானே? மனசிருந்தால் மார்க்கமுண்டு!

‘அதெப்படிங்க, தானம் செய்ய நாம ஆசைப் பட்டா போதுமா? அப்பா, அம்மா, குடும்பத்தார் எல்லாம் இதுக்குச் சம்மதிக்க வேணாமா?’னு சிலர் கேக்கலாம். இந்தச் சாக்குப்போக்கெல்லாம் வேணாம். முதல்ல நாம இதுக்கு முழு மனசா சம்மதிச்சு, நம்ம உறுப்புகளைத் தானம் பண்ணு வோம். அப்புறம் பேசிப்பேசி கன்வின்ஸ் பண்ணி, அவங்களையும் சம்மதிக்க வைப்போம். மறுபடி யும் சொல்றேன், மனமிருந்தால் மார்க்கமுண்டு!

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 32

சட்டுனு ஒரு முடிவெடுத்து, ரொம்ப நாள் பிரச்னைக்கு நொடியில முற்றுப்புள்ளி வெச்சு, பலரின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற மோடி பத்தி இங்கே சொல்லியாகணும். கொஞ்சம் இருங்க… நான் சொல்லப்போறது நரேந்திர மோடி பத்தி இல்லே; ருஸ்ஸி மோடி பத்தி!

டாடா ஸ்டீல் கம்பெனியில் 1984 முதல் 1993 வரை தலைவராக இருந்தவர்தான் இந்த ‘ருஸ்ஸி மோடி’. அவரின் நிர்வாகத்திறன் பத்திப் பெருமையா சொல்லுவாங்க. அவர் ஒருமுறை ஜாம்ஷெட்பூரில், தனது ஊழியர்களோடு ஒரு மீட்டிங் நடத்தினார். அப்போ ஓர் ஊழியர் ஒரு பிரச்னையை முன்வெச்சார். அதாவது, பணியாளர்களுக்கான டாய்லெட்டுகள் மகா மட்டமா இருக்குன்னும், அதுவே உயர் அதிகாரி களுடைய டாய்லெட்டுகள் மட்டும் மிகச் சுத்தமாவும் சுகாதாரமாவும் பராமரிக்கப்படுதுன்னும் சொன்னார்.

உடனே பக்கத்தில் இருந்த உயர் அதிகாரி பக்கம் திரும்பி, “இந்தப் பிரச்னையை உடனே சரிபண்ணியாகணுமே!”ன்னார் ருஸ்ஸி மோடி. “ஒரு மாசம் டயம் கொடுங்க. சரிபண்ணிடலாம்”னார் அந்த அதிகாரி. “அதெல்லாம் முடியாது! இந்தப் பிரச்னையை உடனடியா தீர்க்கணும்”னார் மோடி. “சரி சார், ஒரு பத்து நாள்ல முடிச்சுடலாம்!”னு கொஞ்சம் இறங்கி வந்தார் அதிகாரி. “நோ நோ… பத்து நாள்லாம் காத்திருக்க முடியாது. எனக்கு இப்பவே, இந்த நிமிஷமே இந்தப் பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வெச்சாகணும்”னார் மோடி. “அதெப்படி சார் முடியும்… குறைஞ்சபட்சம் ஒரு வாரமாவது வேணாமா?”ன்னு கேட்டார் அதிகாரி.

“வேணாம். உடனே ஒரு கார்ப்பென்ட்டரை வரவழைங்க”ன்னார் மோடி. யாருக்கும் எதுவும் புரியலை.

கார்ப்பென்ட்டர் வந்தார். அவர்கிட்டே, உயரதிகாரிகளுக்கான டாய்லெட்டின் கதவில் இருந்த ‘எக்ஸிக்யூட்டிவ்ஸ்’ என்கிற போர்டைக் கழட்டி பணியாளர்களுக்கான டாய்லெட்டின் கதவிலும், அங்கே இருந்த ‘வொர்க்கர்ஸ்’ என்கிற போர்டைக் கழட்டி இங்கேயும் மாத்திப் பொருத்தச் சொன்னார் மோடி. பிரச்னை நொடியில் சால்வ்டு! கூடவே, பதினஞ்சு நாளைக்கு ஒரு தடவை இப்படி போர்டுகளை மாத்தி மாத்தி வைக்கணும்னும் உத்தரவு போட்டார். அதுக்கப்புறம் இரண்டு டாய்லெட்டுகளுமே மிகச் சுத்தமா பராமரிக்கப்பட்டுதுங்கிறதை தனியா வேற சொல்லணுமா என்ன? எதுக்குச் சொல்றேன்னா, எல்லாமே நம்ம எண்ணத்துலதான் இருக்கு; உறுதியான செயல்பாட்டுல இருக்கு. தெளிவான சிந்தனையும், சரியான திட்டமிடலும் இருந்தா எதையுமே நம்மால சாதிக்க முடியும்.

சாதிச்சுக் காட்டுவோம்! வணக்கம். 
 
(ஆட்டம் நிறைவுற்றது)

சவால்!

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 32

மேலே உள்ள நட்சத்திரத்தில் வெளி முனைகள் 5, மற்றும் இணைப்புப் புள்ளிகள் 5 என மொத்தம் 10 இடங்கள் உள்ளன அல்லவா? இந்தப் பத்தில் ஏதேனும் ஒன்பது இடங்களில் நீங்கள் புள்ளி வைக்க வேண்டும். முக்கிய நிபந்தனை: ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணி, மூன்றாவது இடத்தில்தான் புள்ளி வைக்க வேண்டும். எங்கிருந்து வேண்டுமானாலும் எண்ணத் தொடங்கலாம்; ஆனால், ஒவ்வொரு முறையும் எண்ணத் தொடங்கும் முதலாவது இடம், புள்ளி இல்லாத காலி இடமாகத்தான் இருக்க வேண்டும். தனியாக ஒரு தாளில் இந்த நட்சத்திரத்தை வரைந்து, இந்தச் சவாலை முயன்று பாருங்கள். இதை வெற்றிகரமாகச் சாதிக்க, ஒரு சூட்சுமம் உள்ளது. அது என்ன?

உங்கள் விடைகளை உடனே 97911 21738 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அல்லது வாட்ஸ்அப்பில் அனுப்புங்கள். புத்தகப் பரிசு பெறும் வாய்ப்பு உண்டு.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 32

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், இளைஞர்களுக்குச் சொன்ன யோசனைகளில் ஐந்து மட்டும் இங்கே...

1) ஞானம் என்பது உள்ளிருந்து வருவது. அறிவு என்பது தேடிப் பெறுவது. சில நேரங்களில் அறிவானது உங்கள் ஞானத்தைத் திரையிட்டு மூடிவிடக்கூடும். கவனமாக இருங்கள்.

2) உங்கள் கடமைகள், பொறுப்புகளில் கவனம் வையுங்கள்; அது அற்ப சந்தோஷங்களில் இருந்து உங்களை மீட்டெடுத்து, மேன்மையான நிலைக்கு உயர்த்தும்.

3) எல்லாப் புகழும் இறைவனுக்கே! குறிப்பிட்ட காலங்களில் நம்மை வந்து அடையும் நன்மைகளெல்லாம் இறைவனின் ஆசியினால் மட்டுமே என நான் முழுமையாக நம்புகிறேன்.

4) பெருத்த ஏமாற்றத்துக்குப் பிறகு மிகப் பெரிய வெற்றி உங்களுக்காகக் காத்திருக்கிறது. எனவே, சோர்ந்து போகாதீர்கள்.

5) வெறுப்பு, அன்பு... நமது வாழ்க்கைப் பயணத்துக்கு இந்த இரண்டில் ஒன்றைத்தான் நாம் தேர்ந்தெடுக்க முடியும். நான் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தேன். அதனாலேயே இந்த இடத்தில் இருக்கிறேன்.

பரிசு யாருக்கு?

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 32

கடைக் காயின் இரு வேறு தோற்றங்களை கவனமாகப் பாருங்கள். முதல் படத்தில், நீலத்துக்குப் பக்கத்தில் சிவப்பும் பச்சையும் உள்ளன. அடுத்த படத்தில் கறுப்பும் மஞ்சளும் உள்ளன. ஆகையால், நீலத்துக்கு நேர் எதிரே உள்ள நிறம் வெள்ளைதான். அதேபோல், சிவப்புக்கு நேர் எதிரே நீலம், பச்சை ஆகிய நிறங்கள் இருக்க வாய்ப்பில்லை. வெள்ளையும் இருக்க முடியாது. காரணம், அதுதானே நீலத்துக்கு நேர் எதிரே உள்ளது! எனவே, சிவப்புக்கு நேர் எதிரே கறுப்பு அல்லது மஞ்சள் இரண்டில் ஒன்றுதான் இருக்க முடியும்.

ஒரு பேச்சுக்கு, சிவப்புக்கு நேர் எதிரே மஞ்சள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது இந்த நிறங்களின் இடங்களை மனதில் கொண்டு, நீலம் நமக்கு எதிரேயும், மஞ்சள் மேல்புறமும் (சிவப்பு இப்போது தரையில் படிந்திருக்கும்) வரும்படி வைத்தால், வலப்பக்கத்தில் என்ன நிறம் வரும் என யோசியுங்கள். பச்சை வரவேண்டும்தானே? ஆனால், படம்-2-ல் கறுப்பு நிறம் காட்டப்பட்டுள்ளது.

ஆக, சிவப்புக்கு எதிரே உள்ள நிறம் மஞ்சள் அல்ல; கறுப்புதான். பச்சைக்கு எதிரே உள்ள நிறம் மஞ்சள். நீலத்தின் எதிரே வெள்ளை.

சரியான விடையை எஸ்.எம்.எஸ். மற்றும் வாட்ஸ் அப் மூலம் அனுப்பியிருந்தவர்களில், பெருவளநல்லூரைச் சேர்ந்த ரோஹித் என்ற வாசகருக்கு தமிழருவி மணியன் எழுதிய மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்ற புத்தகம் பரிசாக அனுப்பிவைக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism