Published:Updated:

`பாபாவின் அனுமதியில்லாமல் நம் வாழ்க்கையில் எந்த நிகழ்வும் நடக்காது!’ #SaiBaba

பாபா தன் பக்தர்களை எப்படி நல்வழிப்படுத்துவார் என்பதை உணர்த்தும் இரு கதைகள்

`பாபாவின் அனுமதியில்லாமல் நம் வாழ்க்கையில் எந்த நிகழ்வும் நடக்காது!’ #SaiBaba
`பாபாவின் அனுமதியில்லாமல் நம் வாழ்க்கையில் எந்த நிகழ்வும் நடக்காது!’ #SaiBaba

பாபா, தன் பக்தர்களுக்குப் பல்வேறுவிதங்களில் அருள்பாலித்திருக்கிறார். சில நேரங்களில் நேரடியாகவும், பல நேரங்களில் மறைமுகமாகவும் பக்தர்களை நல்வழிப்படுத்துவார். இதைப் பின்வரும் கதைகள் நமக்கு உணர்த்துகின்றன.

நாராயண் அம்பேத்கர் என்பவர் பாபாவின் தீவிர பக்தர். அவர் தன் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின், பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தார். அவரின் மனம் அமைதியின்றி தவித்தது. தன் கஷ்டங்களைப் போக்க, பாபாவால்தான் முடியும் என்று எண்ணினார். பாபா இருக்கும் ஷீரடிக்குச் செல்ல முடிவெடுத்தார். அங்கே சென்று, தனது குறைகளைச் சொன்னால் மனதுக்கு அமைதி கிடைக்கும் என்று எண்ணினார். தன் மனைவியுடன் ஷீரடிக்கு வந்தார். பாபாவை தரிசித்தார். ஆனாலும், அவரது பிரச்னைகள் தொடர்ந்தபடியே இருந்தன. பிரச்னைகளைச் சமாளிக்க முடியாமல் திணறினார். இறுதியாக, தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்வதுதான் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வாக இருக்கும் என்று முடிவு செய்தார். பாபா இருக்குமிடத்தில் மரணமடைந்தால், அடுத்த பிறவியிலாவது தனக்கு நல்லது நடக்கும் என்று கருதி, தீக்‌ஷித் வாதாவுக்கு எதிரிலிருக்கும் கிணற்றில் குதிக்கத் தீர்மானித்தார்.

அப்போது, அருகிலிருந்த டீக்கடை உரிமையாளர் அங்கு வந்தார். நாராயண் அம்பேத்கரிடம் `அக்கல்கோட் மஹராஜ்’ என்பவரின் புத்தகத்தைக் கொடுத்து, படிக்கக் கூறினார். அந்தப் புத்தகத்தின் ஒரு பக்கத்தை யதேச்சையாக அம்பேத்கர் திறந்தார். அதில், `அக்கல்கோட் மஹராஜ், கிணற்றில் குதித்து தன் உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணினார். அப்போது பாபா, தன் பக்தரின் கரத்தைப் பிடித்து இழுத்து, அவனிடம் `நீ போன பிறவியில் செய்த பாவத்தினால்தான் இந்தப் பிறவியில் இவ்வளவு துன்பங்களை அனுபவிக்கிறாய்; நீ தற்கொலை செய்துகொண்டாலும், உன்னுடைய அடுத்த பிறவியிலும் இந்தப் பாவங்கள் தொடர்ந்து வந்து உன்னைத் துன்புறுத்தும்’ என்ற வாக்கியத்தைப் படித்தார். இதைப் படித்ததும், அம்பேத்கரின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. 

தன் முடிவை மாற்றுவதற்காகவே பாபா இப்படி ஒரு நிகழ்வை நடத்தினார் என்று எண்ணி, தற்கொலை முடிவைக் கைவிட்டார். பின்னாளில் பாபாவின் அருளால் அம்பேத்கர் ஜோதிடம் கற்று, அதில் சிறந்து விளங்கினார். அதன் மூலம் நிறையப் பணம் சம்பாதித்தார். தன்னுடைய எல்லாப் பிரச்னைகளிலிருந்தும் விடுபட்டு, மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார். இந்தக் கதை `பாபாவின் அனுமதியில்லாமல் நம் வாழ்க்கையில் எந்த நிகழ்வும் நடக்காது’ என்பதை உணர்த்துகிறது. 

பாபாவின் மற்றொரு பக்தரின் அனுபவம் இது.

ஸாதே என்பவர் பாபாவின் மீது மிகுந்த பக்திகொண்டவர். திடீரென்று, அவர் செய்து வந்த வியாபாரம் பெரும் நஷ்டமடைந்தது. தொடர்ந்து, பல பிரச்னைகள் அவரை வாட்டி வதைத்தன. தன்னுடைய துன்பங்கள் நீங்க, பாபாவை வேண்டினார். தன் பக்தரின் மீது கருணை கொண்ட பாபா, அவருக்கு ஸ்ரீகுரு சரித்திரத்தை அளித்து அதை சப்தாஹ பாராயணம் செய்யச் சொன்னார். ஸாதேவும் பாபாவின் முன்னிலையில் அதைப் பாராயணம் செய்தார். இறுதி நாளன்று, பாபா கையில் புத்தகத்தை வைத்துக்கொண்டு எதையோ அவருக்கு உபதேசம் செய்வதுபோல கனவு கண்டார். இந்தக் கனவு பற்றி பாபாவிடம் தெரிவித்தார் ஸாதே. 

அப்போது, துவாரகாமாயியில் ஹேமத்பந்த் இருந்தார். இவரும் பாபாவின் தீவிர பக்தர். ஸாதேவின் கனவைப் பற்றி அறிந்ததும் மிகவும் வேதனையடைந்தார். தன் வாழ்நாள் முழுக்கப் பாராயணம் செய்தும், தனக்குக் கிடைக்காத பலன் ஸாதேவுக்கு ஒரேயொரு முறை பாராயணம் செய்து கிடைத்ததை எண்ணி மனம் வருந்தினார். அவரின் எண்ணத்தை அறிந்திருந்த பாபா அதைப் போக்குவதற்காக ஹேமத்பந்த்தை ஷாமாவின் வீட்டுக்கு அனுப்பி, அங்கு அவருடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு வரச் சொன்னார். 

ஹேமத்பந்த் ஷாமாவின் வீட்டை அடைந்தார். அப்போது ஷாமா பூஜை செய்துகொண்டிருந்தார். பூஜையின்போது அவரைத் தொந்தரவு செய்யாமல், திண்ணையில் காத்திருந்தார் ஹேமத்பந்த். அப்போது அங்கிருந்த ஜன்னலில் `ஏக்நாத் பாகவதம்’ என்ற புத்தகத்தைக் கண்டார். தினந்தோறும் அவர் அந்தப் புத்தகத்தின் ஒரு பகுதியைப் படிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அன்று, துவாரகாமாயிக்கு வரும் அவசரத்தில் படிக்க மறந்துவிட்டார். அதைப் படிப்பதற்காகத்தான் தன்னை ஷாமாவின் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார் சாய் என்று உணர்ந்தார். பாபாவின் கருணையை எண்ணி வியந்தார்.

புத்தகத்தின் அந்தப் பகுதியைப் படித்து முடிக்கும் முன்னரே, ஷாமா பூஜையை முடித்துவிட்டு வெளியே வந்தார். அவரிடம் ஹேமத்பந்த், `உங்களிடம் சிறிது நேரம் உரையாடிவிட்டு வருமாறு பாபா அனுப்பினார்’ என்று சொன்னார். ஷாமாவும், `மிகவும் நல்லது. எனக்கு இப்போது ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது’ என்றவாறே, பின்வரும் கதையைக் கூறினார்.

பாபாவைத் தரிசிக்க ஒரு மூதாட்டி வந்தார். `தமக்கு பிரம்ம ஞானத்தை பாபா உபதேசிக்கும்வரை உணவும் நீரும் இல்லாமல் தான் பட்டினியாக இருக்கப் போகிறேன்’ என்று கூறினார். அப்படியே பட்டினியும் இருந்தார். ஷாமா, அவளின் நிலையைக் கண்டு இரக்கம் கொண்டு பாபாவிடம், `ஓ தேவா! அந்த மூதாட்டியின் மீது சிறிது இரக்கம்கொள்ளுங்கள். அவள் உயிர் துறந்தாள் என்றால் அந்தப் பழி உங்களையே சேரும். அவளை தயவுகூர்ந்து சாப்பிடச் செய்யுங்கள்’ என்று வேண்டினார்.

இதைக் கேட்ட பாபா அந்த மூதாட்டியிடம் வந்தார். `அம்மா! என் சொற்களைச் சற்று கேளுங்கள். பிரம்ம ஞானத்தைத் உங்களுக்கு உபதேசிக்குமாறு கூறுகிறீர்கள். ஆனால், அப்படி ஒரு விஷயத்தை என் குரு எனக்கு உபதேசித்தது இல்லை. அப்படி இருக்கும்போது நான் எப்படி உங்களுக்கு உபதேசிக்க முடியும்? ஆமை, தன் குட்டிகளை அருகில்வைத்து போஷிப்பதில்லை. தாய் ஆமை ஒரு கரையிலும், குட்டிகள் மற்றொரு கரையிலும் இருந்தாலும் அது தன் பார்வை ஒன்றாலேயே குட்டிகளைப் போஷிக்கிறது. அதேபோல் என் குருவும் அவரது பார்வையினாலேயே என்மீது அன்பு பொழிந்தார். தயவுகூர்ந்து என்மீது இரக்கம்கொண்டு இந்த உணவை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினார். பாபாவின் இனிய சொற்களைக் கேட்ட அந்த மூதாட்டி மிகவும் மகிழ்ந்து, தன் விரதத்தை முடித்துக்கொண்டாள்.

இதைக் கேட்ட ஷாமாவின் கண்களில் கண்ணீர் பெருகியது. பாபா, தனது உள்ளக் குறிப்பை நன்கு அறிந்திருப்பதை அவர் உணர்ந்தார். ஸாதேவைவிட தாமே மிகவும் அதிர்ஷ்டம் படைத்திருப்பதாக எண்ணி மகிழ்ந்தார். ஏனெனில், பாபாவுடன் தங்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. பாபா அவரைத் தன் அருகிலேயேவைத்திருந்து போஷிப்பதை எண்ணி ஷாமா மிகுந்த ஆனந்தம் கொண்டார்.

பாபா பற்றி மேலும் தெரிந்துகொள்ள, இங்கே க்ளிக் செய்யவும்.