Published:Updated:

மனம் திருந்தினால் மனமிரங்குவார்! - பாபாவின் அருளாடல்கள் #SaiBaba

மனம் திருந்தினால் மனமிரங்குவார்! - பாபாவின் அருளாடல்கள் #SaiBaba
மனம் திருந்தினால் மனமிரங்குவார்! - பாபாவின் அருளாடல்கள் #SaiBaba

பாபா அனைத்து மதங்களைச் சேர்ந்த பக்தர்களையும் சமமாக நேசித்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதேபோல் அவர் தம் பக்தர்கள் தவறு செய்வதை ஒருபோதும் அனுமதித்ததேயில்லை. அப்படியே யாராவது அறியாமல் செய்த தவற்றையும் அவர்கள் மனப்பூர்வமாக திருந்திய பிறகே அதிலிருந்து விடுவித்தார்.

ஔராங்காபாத்தில் இமாம்பாய் சோடாய்கான் என்ற காவலாளி ஒருவர் இருந்தார். இவர் ஓர் ஆசிரியரை விசாரித்தபோது அவர் சரியாக தகவல் அளிக்கவில்லை. அதனால் கோபம் கொண்டு அவரை அடிக்கத் தொடங்கினார். அந்த ஆசிரியர் ரத்தம் பெருக, வலி தாங்க முடியாமல் மயக்கமுற்று கீழே விழுந்தார். இதைக் கண்டு இமாம்பாய் மிகவும் பயந்துபோனார்.

உயரதிகாரி ஒருவர், யாராவது அவர் மீது வழக்கு தொடருவார்கள் என்று கூறி அவரை அங்கிருந்து அனுப்பினார். மிகுந்த அச்சம் அடைந்த இமாம்பாய் தன் பணியை ராஜினாமா செய்தார். எனினும், அவரது மனம் அமைதியடையவில்லை. எனவே, அவர் தனது குருவான தர்வேஷா என்ற முஸ்லிம் மகானைச் சென்று தரிசித்தார்.

தர்வேஷா, அவரை ஷீரடிக்குச் சென்று அங்கிருக்கும் பாபாவை தரிசித்து அவரின் முதுகின் பின்னால் நின்று குரானில் இருக்கும் முதல் பாடலை ஓதும்படியும், சாயிநாதர் அவரைக் காப்பார் என்றும் கூறினார்.

இதைக் கேட்ட இமாம்பாய் உடனே ஷீரடிக்குக் கிளம்பினார். அவர் பாபாவை தரிசித்தபோது அவர் தெருவில் நின்றுகொண்டிருந்தார். இமாம்பாய் அவருக்குப் பின்னால் சற்று தொலைவில் நின்றுகொண்டு குரானில் முதல் அத்தியாயத்தை தன் மனதுக்குள் மெதுவாக ஓதத் தொடங்கினார்.

உடனே பாபா அவரைத் திரும்பிப் பார்த்து, கடுமையான வார்த்தைகளால் அவரை திட்டத் தொடங்கினார். ``என் பின்னால் நின்றுகொண்டு என் தந்தையை அதிகாரம் செய்ய நீ யார்?’’ என்று கடுமையாக சத்தம் போட்டார்.

இதைச் சற்றும் எதிர்பாராத இமாம்பாய் மிகுந்த துயரம் கொண்டார். மேலும் பாபா அவரை மசூதிக்குள் நுழையவும் அனுமதிக்காததால், அவர் வெளியிலேயே நின்றுகொண்டிருந்தார்.

அவரின் நிலைமையைக் கண்டு இரக்கம்கொண்ட காகாஸாஹேப், அவருக்கு அருள்புரியும்படி பாபாவை வேண்டினார். இதைக் கேட்டதும் பாபா, ``அவனுக்காக இரக்கம்கொள்ளாதே! அவன் தன் ஆசிரியரையே அடித்து துன்புறுத்தியவன். அவனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது’’ என்று கூறினார்.

இதைக் கேட்ட இமாம்பாய் மிகவும் மனம் வருந்தினார். தான் செய்த தவற்றை உணர்ந்து மிகவும் கவலைகொண்டார். அவர் தன் தவற்றை உணர்ந்ததை அறிந்த சாய்நாதர், அவர் மீது கருணை கொண்டார். அவரைக் கூப்பிட்டு ஆசீர்வதித்து அருள்புரிந்தார். இமாம்பாய் அந்தப் பிரச்னையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

அதற்கு சில நாள்கள் கழித்து அவர் மறுபடியும் ஷீரடிக்கு வந்தார். அவர் பாபாவைத் தரிசித்து அவரிடம் ஆசிபெற்று தன் கிராமத்துக்குச் செல்லவிருந்தார். ஆனால், பாபா அவரைப் போக வேண்டாம் என்றும், அப்படிச் சென்றால் கடுமையான இயற்கைச் சீற்றத்தால் அவதியுறுவார் என்றும் அறிவுறுத்தினார்.

ஆனால், இமாம்பாய் அவசரமாகச் செல்லவேண்டியிருந்ததால், அவர் அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டார். மாலையில் கிளம்பிய அவர், வாரி என்னும் இடம்வரைக்கும் எந்தவோர் இடையூறும் இல்லாமல் சென்றார். ஆனால், அதற்குப் பிறகு சுராலா என்னும் இடத்திலுள்ள நதியின் கரையில் நடந்துகொண்டிருந்தபோது, ஒரு கிராம அதிகாரி அவரை நோக்கி வந்தார்.

வானம் மேக மூட்டத்துடன் இருப்பதால், இப்போது நதியைக் கடக்க வேண்டாமென்றும், அப்படிச் செய்தால் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்றும் கூறினார். ஆனால், இமாம்பாய் அதை ஏற்றுக்கொள்ளாமல் அங்கிருந்து செல்ல முயல, அப்போது பலமாகக் காற்று வீசத் தொடங்கியது. ஒரு மின்னல் அங்கிருந்த ஒரு மரத்தின் மீது பாய்ந்து, அதை இரண்டாகப் பிளந்தது. அந்த வெளிச்சத்தைக் காண முடியாமல் அவர் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார்.

அப்போது அவர் சாய் பாபா அங்கு நிற்பதைக் கண்டார். அவர் தன் கைகளில் இரண்டு பழுப்பு நிற நாய்களைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தார். அவரை இமாம்பாய் தரிசித்ததும், பாபா அங்கிருந்து மறைந்தார்.

அவரைத் தரிசித்ததும் தைரியம்கொண்ட இமாம்பாய் நதியைக் கடக்கத் தொடங்கினார். அதிசயிக்கும் வகையில் நதி முழுவதும் முழங்கால் அளவே நீர் இருந்தது. அவர் நதியின் கரையை அடைந்ததும், நதியைத் திரும்பிப் பார்த்தார். நதியில் கரையின் இருபுறங்களிலும் வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. பாபாவே இந்த ஆபத்திலிருந்து தன்னைக் காத்தார் என்று அறிந்த இமாம்பாய் மனதுக்குள் அவருக்கு நன்றி தெரிவித்தார்.

அன்றிலிருந்து அவர் பாபாவின் சொற்களை ஒருபோதும் மீறியதில்லை.

பாபா தன் பக்தர்கள் தங்களுக்குப் பிரச்னை வரவிருப்பதை அறியும் முன்னரே அவர்களை அதிலிருந்து மீட்டுக் காப்பார். அவரை வணங்கி நாம் நன்மை அடைவோம்!

***

பாபா பற்றி மேலும் அறிந்துக்கொள்ள, இங்கே க்ளிக் செய்யவும்.