Published:Updated:

மூன்று விஷயங்கள்!

மூன்று விஷயங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மூன்று விஷயங்கள்!

இளைஞர் சக்தி

மூன்று விஷயங்கள்!

ம்பிக்கை, முயற்சி, உழைப்பு... இந்த மூன்றும் இருந்தால் வெற்றி நிச்சயம் எனப் பெரியோர்கள் சொல்லி பலர் கேட்டிருப்பீர்கள். ஆனால், இந்த மூன்றிலும் பூரணத்துவம் தேவை என்பதே நிதர்சனம். இல்லையேல் அவை வீணாகிவிடும்.

ஆமாம்! நம்பிக்கை மட்டுமே போதாது தன்னம்பிக்கை வேண்டும்; முயற்சி விடாமுயற்சி யாகப் பரிணமிக்கவேண்டும்; உழைப்பு திட்டமிட்ட உழைப்பாக இருக்கவேண்டும்.

2011-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்துகொண்டிருந்த தருணம் அது. ஒருநாள் இரவு நமது அணியைச் சேர்ந்த அந்த வீரர் கடும் இருமல், மூச்சுத்திணறலால் பெரும் பாதிப்புக்கு ஆளானார். எனினும், அணியின் வெற்றிதான் முக்கியம் எனக் கருதியவர், இறுதிப்போட்டி வரை விளையாடினார்; இந்திய அணி கோப்பையை வென்றது.

போட்டி முடிந்த சில நாட்களிலேயே ரத்த வாந்தி, மூச்சு விடுவதில் சிரமம் என கடும் பாதிப்புக்குள்ளான அந்த வீரர், மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், ‘நுரையீரல் புற்றுநோயின் துவக்கநிலை’ என்று தெரியவந்தது. அவரது ரசிகர்கள் துடித்துப்போனார்கள். ஆனால், அந்த வீரரோ சிறிதும் தன்னம்பிக்கைக் குறையாமல், மேல் சிகிச்சைக்காக வெளிநாடு புறப்பட்டார்; சிகிச்சை எடுத்துக்கொண்டார்; புது பலத்துடன் மீண்டு வந்தார்.

ஆமாம்! நீங்கள் யூகித்தது மிகச் சரியே! யுவராஜ் சிங்தான் அந்த வீரர்.

புற்றுநோயின் துவக்கநிலை என்பதால் எளிதில் மீண்டுவிட முடிந்தது. மருத்துவர்களின் சிகிச்சை, தாயாரின் அணுக்கம், ரசிகர்களின் பிரார்த்தனை போன்றவை பக்கபலமாக இருந்தது... இப்படி பல காரணங்களைச் சொல்லலாம் என்றாலும், `யுவி’ பூரண பலத்துடன் மீண்டு வருவதற்கு, மிக முக்கியக் காரணம் அவரது தன்னம்பிக்கை என்றே சொல்வேன்.

மூன்று விஷயங்கள்!

சுவாமி விவேகானந்தரும் தன்னம்பிக்கையைப் போற்றுகிறார். கடவுள் நம்பிக்கையைக் காட்டிலும், தன்னம்பிக்கை இல்லாதவனையே நாத்திகன் எனச் சாடுகிறார் அவர்.

அடுத்தது விடாமுயற்சி! எவரொருவரும் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றதாகச் சரித்திரம் கிடையாது. இளைஞன் மாரியப்பனும் அதற்கு விதி விலக்குக் கிடையாது. தந்தை, குடும்பத்தை நிராதரவாக விட்டுச்செல்ல, தாயின் அரவணைப்பில் வளர்ந்தவன். அவனுக்கு ஐந்து வயதாக இருக்கும்போது விபத்தொன்றில் கால் முறிந்தது; உற்சாகமாக ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தவன்,  ஒரே நாளில் மாற்றுத் திறனாளி ஆனான். ஆனாலும் மனம் ஒடிந்துபோகவில்லை அவன். மனதுக்குள் ‘ஏதேனும் சாதிக்கவேண்டும்’ எனும் பொறியை பத்திரமாகப் பொதிந்து வைத்துக்கொண்டான்.

ஒருநாள், எவரும் அருகில் இல்லாத ஒரு தருணத்தில், பள்ளியில் இருந்த உயரம் தாண்டும் கம்பியைக் கண்டவன், ஆர்வமிகுதியில்  ஓடிவந்து தாண்டிக் குதித்தான். தொலைவில் இருந்து இதைப் பார்த்துவிட்ட உடற்கல்வி ஆசிரியர், மாரியப்பனை அழைத்து அணைத்துக்கொண்டார். அவனைப் பட்டைத் தீட்ட ஆரம்பித்தார். முடங்கிப்போனது கால்தான் வாழ்க்கையல்ல என்பதை உணர்ந்த மாரியப்பனும், விடாமுயற்சியுடன் பயிற்சிகளை மேற்கொண்டான். அதன் விளைவு, சாத்தியமற்ற இலக்கையும் தாண்டி சாதித்தான்; பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது பாரதம்.

இதோ... இந்தக் கட்டுரையை தட்டச்சு செய்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், மாரியப்பனுக்கு ‘பத்மஸ்ரீ விருதை அறிவித்து கவுரவித்துள்ளது, இந்திய அரசு.

மூன்று விஷயங்கள்!

மூன்றாவது விஷயம் திட்டமிட்ட உழைப்பு.

ஞானி ஒருவர் தன் சீடர்களிடம், ``நான் நாளை தொலைதூர நாட்டிற்குப் பயணம் போகிறேன். மீண்டும் இங்கே திரும்ப மாட்டேன்!’’ என்றார். தங்களைவிட்டுப் பிரிந்து போவதற்கு முன் குரு ஏதாவது அறிவுரை சொல்வார் என சீடர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், ஞானியோ மறுநாள் வழக்கம்போல் எழுந்தார்; குளித்தார்; பிரார்த்தனை செய்தார்; உணவு அருந்தினார்; வந்தவர்களுடன் உரையாடினார். எல்லா வேலைகளையும் நேரம் தவறாமல் சரியாகச் செய்தார். அடுத்து சிறிதுநேரம் ஓய்வுக்குப் பிறகு பயணத்துக்கான ஏற்பாடுகளையும் செய்யத் துவங்கினார்.

சீடர்களோ ஏமாற்றம் தாங்காமல் குருவிடம் கேட்டனர்: ‘‘குருவே! நீங்கள் போவதற்கு முன் எங்களுக்கு ஏதாவது அறிவுரை சொல்லக் கூடாதா?’’

இதைக்கேட்டு புன்னகைத்த குருநாதர், ‘‘அறிவுரையாக நான் உங்களுக்குச் சொல்லக்கூடியதைத்தானே இன்று முழுவதும் செய்து கொண்டிருந்தேன்!’’ என்றார். சீடர்களும் புரிந்து கொண்டு ஞானிக்கு விடைதந்தனர்.

அவர்கள் புரிந்துகொண்டது இருக்கட்டும், இந்தக் கதையில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன?

வெற்றி மீது நமக்கு மிகப் பெரிய விருப்பம் இருக்கிறது. வாழ்க்கையில் வெற்றியையே பிரதானமாகக் கொண்டு செயல்படுகிறோம். போட்டி நிறைந்த உலகில் இதைத் தவிர்க்க முடியாதுதான். ஆனால், அந்த வெற்றியைப் பெற அவசியமான ஒன்று `இலக்கைத் திட்டமிடல்’.

அந்த ஞானியைப்போன்று... பல்வேறு குறுக்கீடுகள் இருந்தாலும் அவற்றை மனதில் ஏற்றாமல், அந்த இலக்கை அடைவதற்கான பணிகளை ஒவ்வொன்றாக மிகத் துல்லியமாக நிறைவேற்ற வேண்டும். தங்கள் திறன் முழுவதையும் பயன்படுத்தி, தியானம் போன்று ஒரு செயலை நினைத்து நிறைவேற்றிய பின்னர் அடுத்த செயலுக்குப் போக வேண்டும். இப்படி, சரியான திட்டமிடல் இருந்தால், வெற்றி நிச்சயம்.

இப்போது சொல்லுங்கள்... வெறும் முயற்சி, நம்பிக்கை, உழைப்பு மட்டுமே போதுமா, நமது இலக்கை அடைய? போதாதுதானே!

ஆகவே, தன்னம்பிக்கைக் கொள்வோம்; விடாமுயற்சியுடன் திட்டமிட்டு உழைப்போம்; வாழ்வில் சாதிப்போம்!

- பரணி,
பு. விவேக் ஆனந்த்