யோகா என்பது, மனதை ஒரு நிலைப்படுத்தும் மந்திரம். உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி கடவுளை அறிய வேண்டும் என்பதுதான் யோகா செய்வதின் சாரம் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள்.
நாம் மனம் ஒன்றி ஒன்றைச் செய்யும் போதுதான், அந்தச் செயல் வெற்றிகரமாக முடியும். மனம் ஒன்றிய நிலையில்தான் இறை சக்தியையும் நம்மால் உணர முடியும். எனவே, மன ஒருமையானது, நம்முடைய செயல்களைச் செய்வதற்கு மட்டுமல்ல, இறைவனை தியானிப்பதற்கும் மிகவும் அவசியமாகும்.
அதேநேரத்தில் இது ஒரு மருத்து வம் சார்ந்த வாழ்வியல் முறை என்பதால், பல உடல் பிணிகளைப் போக்கி, மனம் புத்துணர்ச்சியைப் பெற உதவுகிறது. எனவே, இன்றைய இளைஞர்களின் ஆற்றலை வலுப்படுத்த யோகா அடிப்படையாகும்.

யோகாவுக்குத் தயாராகும் முன்...
யோகா செய்வதற்கு முன்பாக மனதை ஓய்வு பெறச் செய்ய வேண்டும்.
* தரையில் கால்களை சப்பணம் போட்டு உட்கார வேண்டும். பின்னர் கால் முட்டியின் மீது கைகளை சின் முத்திரையுடன் வைத்துக்கொள்ளுங்கள்.
* கட்டை விரல், ஆள்காட்டி விரலுடன் இணைந்திருக்க, மற்ற விரல்களை நீட்டிய நிலையில் அமைவது சின்முத்திரை.
பின் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு மூச்சைக் ஆழமாக உள்ளிழுத்து, மெதுவாக வெளிவிட வேண்டும். இப்படி 10 முறை செய்வதால் மனம் அமைதி பெறும்.
