Published:Updated:

``அவர் வார்த்தைகள் பொய்ப்பதில்லை!’’ - பாபாவின் அருளாடல்கள் #SaiBaba

``அவர் வார்த்தைகள் பொய்ப்பதில்லை!’’ - பாபாவின் அருளாடல்கள் #SaiBaba
``அவர் வார்த்தைகள் பொய்ப்பதில்லை!’’ - பாபாவின் அருளாடல்கள் #SaiBaba

சாயிபாபாவின் மகிமையை உணர்த்தும் ஆன்மிகக் கதை

ஷீரடி பாபாவின் வார்த்தைகள் சத்திய மொழிகள். அவை எப்போதும் பொய்ப்பதில்லை. ஒருவேளை பொய்த்துப் போனால்..? பாபாவின் வார்த்தைகளில் தவறில்லை; அவர் கூறிய வார்த்தைகளை மேலோட்டமாக எடுத்துக்கொண்டதால் ஏற்பட்ட தவறு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி பாபா சொன்ன வார்த்தைகளைத் தவறாகப் புரிந்துகொண்ட பக்தையைப் பற்றிய நிகழ்ச்சி இது. பின்னர் அந்த பக்தை, பாபாவுக்கும் பாபாவின் பக்தர்களுக்கும் தாயாகும் பேற்றைப் பெற்றாள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த இளம் பக்தையின் பெயர் சுந்தரிபாய். அகமது நகரில் தன் கணவனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தாள். அழகிலும் அன்பிலும், மற்றவர்களை உபசரிக்கும் உயர் பண்பிலும் நிகரற்ற தம்பதியாக வாழ்ந்துவந்தார்கள். 

யார் கண்பட்டதோ தெரியவில்லை. சுந்தரிபாயின் கணவனுக்கு இன்னதென்று தெரியாத ஒரு நோய் வந்து மிகவும் சிரமப்பட்டான். எத்தனையோ வைத்தியம் பார்த்தும் பயன் இல்லை. இந்த நிலையில் ஷீரடி பாபாவைப் பற்றியும், தீராத நோய்களை அவர் தீர்த்துவைக்கிறார் என்றும் கேள்விப்பட்ட சுந்தரிபாய், தன் கணவனை அழைத்துக்கொண்டு ஷீரடிக்குச் சென்றாள். 

துவாரகாமாயிக்குச் சென்று பாபாவை நமஸ்கரித்தாள். அவளை ஆசீர்வதித்த பாபா, ``குழந்தாய், எந்த நிலையிலும் மன உறுதியை விட்டுவிடாதே. இப்போது தைரியம்தான் உனக்குத் தேவை. விரைவிலேயே நீ தாயாகும் பேற்றினை அடையப்போகிறாய்’’ என்று கூறி உதி பிரசாதம் கொடுத்து அனுப்பினார்.

சுந்தரிபாயும் மகிழ்ச்சியுடன் கணவனை அழைத்துக்கொண்டு ஊருக்குச் சென்றாள். ஆனால், அவள் மகிழ்ச்சி நிலைக்கவில்லை. அவளுடைய கணவனின் உடல்நலன் நாளுக்கு நாள் மிகவும் மோசமாகிக்கொண்டே வந்தது. சில வாரங்களுக்குப் பிறகு இறந்துவிட்டான். கணவன் இறந்து, காரியங்கள் அனைத்தும் முடிந்த பிறகு சுந்தரிபாய் ஷீரடிக்குச் சென்றாள். 

தலைவிரிகோலமாக துவாரகாமாயிக்குச் சென்ற சுந்தரிபாய், ``பாபா, உங்களைத்தான் நான் கண்கண்ட தெய்வமாக நினைத்திருந்தேன். ஆனால், என்னை மிகவும் சோதிக்கிறீர்களே... என் கணவர் உங்களையே தெய்வமாக எண்ணி வழிபட்டு வந்தார். அவரை  என்னிடமிருந்து பிரித்துவிட்டீர்களே... ஷீரடித் தலத்தை மிதித்தவர்கள் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்டுவிடுவார்கள் என்று சொல்வீர்களே... ஆனால், நான் பாவியாக நிற்கிறேனே...’’ என்று அழுது அரற்றினாள். 

அவளைச் சமாதானப்படுத்துவதுபோல் பாபா அவளிடம், ``எந்தச் சக்தியையும் பின்னுக்குத் தள்ளி முன்னால் வந்துவிடும் சக்தி படைத்தது விதி. அதை வெல்ல எவராலும் முடியாது. எல்லாம் விதிப்படியே நடந்திருக்கிறது. நீ மன அமைதி பெறுவாயாக...’’ என்றார்.

சுந்தரிபாய்க்கு அடக்கமாட்டாத கோபம் வந்துவிட்டது. ``அப்படியென்றால் என்னைத் தைரியமாக இருக்கும்படியும், விரைவிலேயே நான் தாயாகும் பேற்றை அடைவேன் என்றும் நீங்கள் கூறியது பொய்யா?’’ என்று கேட்டாள். 

அவளுடைய கோபத்தை சிறு குழந்தையின் கோபமாக எடுத்துக்கொண்ட பாபா மெள்ளச் சிரித்தபடி, ``நான் எப்போதும் பொய் சொல்வதில்லை. உன் கணவனின் விதி முடிந்துவிட்டது. அவன் விதிப்படி அவன் போய்விட்டான். அதைத் தடுக்க யாராலும் முடியாது. அதனால்தான் நீ எந்த நிலையிலும் தைரியமாக இருக்க வேண்டும் என்று கூறினேன். உன் கணவன் இறந்ததும், நீ இங்குதான் வருவாய் என்பதும் எனக்குத் தெரியும். நீ கருவுற்று பிள்ளை பெற்றிருந்தால், ஓரிரு குழந்தைக்குத்தான் தாயாகி இருக்க முடியும். ஆனால், இப்போது துவாரகாமாயியில் இருக்கும், இனிமேல் வரப்போகும் அனைவருக்கும் நீ தாயாகப் போகிறாய். அதுமட்டுமல்ல, இந்த பாபாவுக்கும்கூட நீதான் தாய்’’ என்று பாபா பாசத்துடனும் பரிவுடனும் கூறினார்.

சுந்தரிபாய், பாபாவின் வார்த்தைகளில் ஆறுதல் பெற்றவளாக, பாபாவின் திருவடிகளைச் சரணடைந்தாள். ``பாபா, உங்களுக்கே தாயாகும் பாக்கியத்தை அல்லவா தந்துவிட்டீர்கள். இனி நீங்கள்தான் எனக்கு ஒரே அடைக்கலம்’’ என்று கூறி மறுபடியும் நமஸ்கரித்தாள்.

பாபா, துவாரகாமாயியில் கூடியிருந்த மகல்சாபதி, ஷாமா, தாஸ்கணு போன்ற அடியவர்களையும் எண்ணற்றப் பக்தர்களையும் பார்த்து, ``என் அன்புக்கு உரியவர்களே, இனிமேல் நம் அனைவருக்கும் இந்தப் பெண் தாயாவாள். இனி இந்தப் பெண்ணின் பெயர் ராதாகிருஷ்ணமாயி. எல்லோரும் அந்தப் பெயருடனேயே இந்தப் பெண்ணை அழைக்க வேண்டும். நம் தாயிடம் அன்பு செலுத்துவதுபோல் ராதாகிருஷ்ணமாயியிடமும் அன்பு செலுத்த வேண்டும்'' என்றார்.

தாய்மைக்குதான் வயது என்பது இல்லையே! பாபாவுக்கும் அவருடைய அடியார்களுக்கும் இளம் தாயாகும் பேற்றை ராதாகிருஷ்ணமாயிக்கு அருளிய பாபாவின் கருணைத் திறம், அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அனைவரும், ராதாகிருஷ்ணமாயியை தங்கள் தாயாகவே எண்ணி அன்பு செலுத்திவந்தார்கள்.

***

பாபா பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள, இங்கே க்ளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு