Published:Updated:

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் ஸ்வாமிகளுக்கு இன்று பிருந்தாவனப் பிரவேசம்!

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் ஸ்வாமிகளுக்கு இன்று பிருந்தாவனப் பிரவேசம்!
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் ஸ்வாமிகளுக்கு இன்று பிருந்தாவனப் பிரவேசம்!

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் ஸ்வாமிகளுக்கு இன்று பிருந்தாவனப் பிரவேசம்....

ஶ்ரீரங்கம் திருக்கோயிலில் பூஜை முறைகளை ஒழுங்குபடுத்திய ஸ்ரீராமாநுஜர், ஶ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் மடத்தை நிறுவினார். ஶ்ரீராமாநுஜருக்குப் பிறகு திருமடத்தின் மடாதிபதிகளாக எழுந்தருளியிருந்த ஶ்ரீரங்க நாராயண ஜீயர் ஸ்வாமிகளில் பல அறிஞர்களும், ஆன்மிகத்துக்கு அரும்பணி ஆற்றியவர்களும் இருந்திருக்கின்றனர்.

திருமடத்தின் 50-வது பட்டமாக எழுந்தருளியிருந்த ஶ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஶ்ரீ ஶ்ரீரங்க நாராயண ஜீயர் ஸ்வாமிகள் நேற்று பிற்பகலில் ஸித்தியடைந்தார். 

1929-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் நயினார்பாளையத்தில் பாலகிருஷ்ணமாச்சாரி–சேஷலட்சுமி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவர் பூர்வாஸ்ரமத்தில் ராமாநுஜரால் ஸ்தாபிக்கப்பட்ட 74 ஆசார்ய பீடாதிபதிகளில் ஒருவரான கொங்கிலாச்சான் வழித் தோன்றிய ஆசார்ய புருஷர். இவர் இளமையில் திருவானைக்கோவில் வேத பாடசாலையில் ரிக்வேதத்தை முறையாகப் பயின்றார். காஞ்சி மடாதிபதியாக இருந்த ஸ்ரீஜயேந்த்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் இவரும் ஒரே வேதபாடசாலையில் பயின்றவர்கள்.

பின்னர், சிதம்பரம் பிரம்மஸ்ரீ ராமசுப்பா சாஸ்திரியிடம் வடமொழி சாஸ்திரங்களையும், சித்திரக்கூடம் மகாவித்வான் அஷ்டகோத்ரம் வேங்கடாசார்ய ஸ்வாமியிடம் வைணவ சம்பிரதாய கிரந்தங்களையும் கற்றறிந்தார். ஜோதிட சாஸ்திரத்திலும் நிபுணத்துவம் பெற்றிருந்தார்.

ஸ்ரீபாஞ்சராத்ர ஆகமத்தில் பயிற்சி பெற்றவர். இவருடைய பாண்டித்யத்தையும் திறமையையும் பாராட்டி காஞ்சி மஹா மஹிமோபாத்யாய அண்ணங்கராசார்ய ஸ்வாமிகள் இவருக்கு `பரமார்த்த ஸ்வார்வபௌமர்' என்ற விருதை அளித்து கௌரவித்திருக்கிறார்.

ஸ்வாமிகள் பூர்வாஸ்ரமத்தில் பலமுறை வைணவ திவ்ய தேசங்களுக்கு அடியார்களுடன் யாத்திரையாகச் சென்று, அங்குள்ள எம்பெருமான்களுக்குத் திருமஞ்சனம், உற்சவம், மஹா சம்ப்ரோக்ஷணம் ஆகியவற்றை நடத்தியிருக்கிறார். பத்ரிநாத் வரை பலமுறை பெரும் கோஷ்டிகளை அழைத்துச் சென்று இறைபக்தியை வளர்த்திருக்கிறார்.

ஸ்ரீரங்கம், கோவை, பத்ரிநாத், அயோத்தி, திருமலை, திருமந்திரம் விளைந்த வேதராஜபுரம், சென்னை திருவான்மியூர் முதலிய இடங்களில் பல யாகங்கள், ஹோமங்கள் ஆகியவற்றை உலக க்ஷேமத்துக்காகப் பலமுறை நடத்திவைத்திருக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் எம்பெருமானாருக்கு சேஷ வாகனம் சமர்ப்பித்திருக்கிறார். வானமாமலையில் எண்ணெய்க் காப்பு உற்சவம் செய்ய உதவியிருக்கிறார். நாதமுனிகள், ஆளவந்தார் அவதரித்த காட்டுமன்னார்கோயில், குருகைக் காவலப்பன் சந்நிதி, மாமுனிகள் அவதரித்த சிக்கில் கிடாரம், பெரியவாச்சான் பிள்ளை அவதரித்த சேங்கனூர் கோயில்களில் சம்ப்ரோக்ஷணங்களை நடத்திவைத்திருக்கிறார். திருப்புல்லாணி கோயிலில் கோபுரத் திருப்பணிக்கு உதவி செய்து நிறைவு செய்திருக்கிறார். தேருக்குச் சக்கரங்களும், தாயார் சந்நிதி மூலவருக்குத் திருவாட்சியும் வழங்கியிருக்கிறார்.

கோவையில் தமக்குக் கிடைத்த ஏராளமான செல்வங்களைத் துறந்து, அரங்கன் சேவையில் தம்மை அர்ப்பணித்துக்கொள்ள விரும்பினார். தமது 60-வது மணிவிழா நடைபெற்ற அன்றே கோவையிலிருந்து புறப்பட்டு ஶ்ரீரங்கம் வந்து சேர்ந்தவர், உடையவர் சந்நிதியில் சந்நியாச ஆசிரமம் மேற்கொண்டு, ஶ்ரீரங்கநாராயண ஜீயராகப் பட்டமேற்றுக்கொண்டார். 

அரங்கன் அருட்பணியில் தன்னை முழுமையாக ஆட்படுத்திக்கொண்ட ஜீயர் ஸ்வாமிகள், திருவரங்கன் கோயிலுக்கு யானை ஒன்றும் ஏற்பாடு செய்து கொடுத்தார். `ஆண்டாள்’ என்ற பெயருடன் அந்த யானை அரங்கனுக்கு சேவை செய்துவருகிறது.

ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் மூலஸ்தானத்தில் 63 கிலோ எடையுள்ள இரட்டைக் கதவுகளும், முன் கதவு ஒன்றும், கருவறைக்கு வெள்ளிக் கதவுகளும் செய்து கொடுத்திருக்கிறார்.
ஸ்ரீரங்கம் கோயில் வடக்குக் கோபுரத் திருப்பணியினையும் ஏற்று நடத்திவைத்திருக்கிறார்.

அரங்கன் சேவையில் தினந்தோறும் பெருமாள், தாயாரை சேவித்தல், வெள்ளிக்கிழமையன்று பெரிய பெருமாளுக்குப் புனுகு காப்புச் சாத்தும்போது திருவாலவட்டம் (விசிறி) வீசும் கைங்கர்யமும், திருவாராதனம், கோஷ்டி கைங்கர்யங்களிலும் ஈடுபட்டார். திருவாபரணப் பாதுகாப்பு அறையின் முக்கியச் சாவியும் இவரிடம்தான் இருந்தது. அதற்குரிய தங்க முத்திரை இடுவதையும் செய்துவந்தார்.
ஶ்ரீரங்கம் நம்பெருமாள் சேவையில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட ஜீயர் ஸ்வாமிகள், தம்மிடம் அருளாசி பெற வரும் அடியார்களிடம் வேறுபாடு காணாமல் அனைவரையும் ஆட்கொண்டு, அன்புக்கும் பக்திக்கும் உரியவராக விளங்கி, வைணவத்தை வளர்த்தும், ராமாநுஜர் ஸ்தாபித்த பீடத்தைச் சிறப்பித்தும் வந்தார்.

ஜீயர் ஸ்வாமிகளின் திக்விஜய யாத்திரை:
ஸ்ரீமத் ஜீயர் ஸ்வாமிகள் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் மடாதிபதியாக எழுந்தருளி அரங்கன் சேவையில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட பிறகு, திவ்ய தேச யாத்திரை செல்லவில்லை. 1989-ம் ஆண்டில் பட்டத்துக்கு வந்த பின்னர், பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தன் அடியார் குழுவோடு திருப்பதி–திருமலைக்கு எழுந்தருளி, மடாதிபதிக்கு உரிய மரியாதையோடு ஆண்டுதோறும் மங்களாசாஸனம் செய்துவந்தார். பீடாதிபதியாகப் பொறுப்பேற்றதிலிருந்து 27 முறை சாதுர்மாஸ்ய சங்கல்பம் மேற்கொண்டு, உலக நன்மைக்காக ஜப, தபங்கள் செய்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் சாதுர்மாஸ்ய சங்கல்பத்தை நிறைவுசெய்யும் நாளில் ஸ்வாமிகளின் சீடர்கள் ஜீயரை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அமரவைத்து ஸ்ரீரங்கம் சித்திரை, உத்தர வீதிகளில் பட்டினப்பிரவேசமாக அழைத்துவருவதும், அப்போது வழிநெடுக திரளான திருமால் அடியார்கள், ஜீயர் ஸ்வாமிகளிடம் அட்சதையுடன் அருளாசி பெறுவதும் கண்கொள்ளாக் காட்சி.

திருவரங்கத்திலும் மற்றும் பல இடங்களிலும் நடக்கும் ஆன்மிக வைபவங்களுக்கு ஸ்ரீமத் ஜீயர் ஸ்வாமிகளை அழைக்கும்போது அங்கு சென்று தொடக்கவுரை, மங்களாசாஸனம் ஆகியவற்றை அருளிச் செய்து வைணவத்தின் சிறப்பு அம்சங்களை நாடும் நகரமும் நன்கு அறியச் செய்துவந்தார்.

சிறிது காலம் நோய்வாய்பட்டிருந்த ஜீயர் ஸ்வாமிகள் கடந்த சில மாதங்களாக வெளியூர் யாத்திரைகளை தவிர்த்து மடத்திலேயே ஓய்வில் இருந்தார். இடையிடையே தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தார். இதயம் மற்றும் சிறுநீரகச் செயல்பாடு பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த ஜீயர், நேற்று (11.7.18) மதியம் திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் காலமானார். ஜீயரின் பூதவுடல் ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் ஜீயர் மடத்தில் பொதுமக்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டது. பிருந்தாவனப்பிரவேசம் எனப்படும் அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் நடைபெறுகிறது.

அடுத்த கட்டுரைக்கு