Published:Updated:

ஞானி, யோகி, பக்திக் கவிஞர்... 21 வயதில் ஸித்தியடைந்த ஞானேஸ்வர்! #Dnyaneshwar

ஞானி, யோகி, பக்திக் கவிஞர்... 21 வயதில் ஸித்தியடைந்த ஞானேஸ்வர்! #Dnyaneshwar

இறைவனின் பேரருளைப் பெற வயது தடையில்லை’ - வாழ்ந்து உணர்த்திய மகான் ஞானேஸ்வர்...

ஞானி, யோகி, பக்திக் கவிஞர்... 21 வயதில் ஸித்தியடைந்த ஞானேஸ்வர்! #Dnyaneshwar

இறைவனின் பேரருளைப் பெற வயது தடையில்லை’ - வாழ்ந்து உணர்த்திய மகான் ஞானேஸ்வர்...

Published:Updated:
ஞானி, யோகி, பக்திக் கவிஞர்... 21 வயதில் ஸித்தியடைந்த ஞானேஸ்வர்! #Dnyaneshwar

பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் திருமாலின் அம்சமாகக் கருதப்படும் ஞானேஸ்வர், மகாராஷ்டிரா மாநிலத்தில் தோன்றிய மிகப்பெரிய ஞானி, யோகி, பக்திக் கவிஞர். 13-ம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவில் பக்தியைப் பரப்பியவர். தன் சிறு வயதிலேயே வேதத்தையும் மற்ற புராணங்களையும் பாமர மக்கள் அனைவருக்கும் புரியும்படி உபதேசித்தவர் ஞானேஸ்வர். தம்முடைய ஜீவித காலத்தில் அவர் நிகழ்த்திய அற்புதங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்...

இல்லற வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழ்ந்து முடித்த பிறகு துறவறம் மேற்கொண்டவர்கள் ஏராளம். ஆனால், துறவறம் மேற்கொண்ட பிறகு இல்லற வாழ்க்கைக்குத் திரும்பியவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஞானேஸ்வரரின் தந்தை விடோபா திருமணம் ஆன பிறகு காசிக்கு யாத்திரை மேற்கொண்டார். அங்கு குரு ராமானந்தரின் உபதேசத்தால்,  தான் திருமணமானவன் என்பதையும் மறந்து துறவறம் மேற்கொண்டார்.  பிறகு ஒருமுறை, சுவாமி ராமானந்தர் விடோபாவுடன் யாத்திரை மேற்கொண்டு மகாராஷ்டிராவுக்கு வந்தார். அப்போது சுவாமி ராமானந்தரைச் சந்தித்த விடோபாவின் மனைவி ருக்மணி, தனது மனக்குறையைத் தெரிவித்தார். விடோபாவைக் கண்டித்த ராமானந்தர் மீண்டும் அவரை இல்லற வாழ்க்கையைத் தொடரப்  பணித்தார். இருவரின் இல்லற வாழ்க்கையின் பயனாக அவர்களுக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் பிறந்தார்கள், இரண்டாவது மகனாக அவதரித்தவரே ஞானேஸ்வர். ஞானேஸ்வரரை திருமாலின் அம்சம் என்றே அனைவரும் கருதினார்கள். சிறு வயதிலேயே வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் ஆகியவற்றைக் கற்று சிறந்து விளங்கினார் ஞானேஸ்வர். அதனை அனைத்து மக்களும் அறிந்துகொள்ளும்படி எளிய முறையில் போதித்தும் வந்தார்.

விடோபா துறவறம் மேற்கொண்டு இல்லறத்துக்குத் திரும்பியதால், ஆசார்யப் பண்டிதர்கள் அனைவரும் அவரை ஒதுக்கிவைத்தார்கள். இதனால் மனம் உடைந்த விடோபா - ருக்மணி தம்பதி, தங்கள் குழந்தைகளும் தங்களைப்போல் பாதிக்கக் கூடாது என்பதற்காக ஊரைவிட்டுப் புனித யாத்திரை மேற்கொண்டனர். பெற்றோர் செய்த தவறு ஞானேஸ்வர் மற்றும் அவருடன் பிறந்தவர்களையும் விரட்டத் தொடங்கியது. அவர்களின் விரட்டல்தான், சிறு வயதிலேயே ஞானேஸ்வர் தமது ஞானத்தையும் அற்புதத்தையும் வெளிப்படுத்துவதற்குக் காரணமானது. அப்படித்தான், ஒருநாள் ஞானேஸ்வர் எளிய மக்களுக்கு வேதங்களுக்கு விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆசார்யர்கள், ஞானேஸ்வரின் செயலைத் தடுத்து நிறுத்தினார்கள். ``முறையற்ற வாழ்க்கை வாழ்ந்த அந்தணன் பெற்ற குழந்தைகள் நீங்கள். வேதம் ஓதுவதற்கு உரிய தகுதி உங்களுக்கு இல்லை. அது எம்மைப் போன்று ஆசாரத்துடன் வாழும் பண்டிதர்களுக்கு மட்டுமே உண்டு’’ என்றார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. எதிரே வந்த எருமையின் மேல் கைவைத்தார் சிறுவனான ஞானேஸ்வர்.  அப்போது எருமை வேதம் ஓதத் தொடங்கியது. `கர்ம வினைகளாலும், நடத்தையாலும்தான் ஒருவன் உயர்ந்தவனாகிறான்' என்று உணர்த்தும்படியான வேதப் பாடலை வரி பிசகாமல் பாடியது எருமை. எருமை பாடியதைக் கேட்டதும் ஆசார்யர்கள் மறு வார்த்தை பேசாமல் ஞானேஸ்வரின் காலடியில் விழுந்து வணங்கினார்கள். பிறகு ஞானேஸ்வர் தனது அண்ணனான நிவ்ருத்திநாத்தை குருவாக ஏற்று அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். தனது 15-ம் வயதில் பாமரரும் புரிந்துகொள்ளும்படி பகவத் கீதையை மராட்டிய மொழியில் மொழிபெயர்த்து எளிய விளக்கத்துடன் பாடினார். அந்தக் காலத்தில் இது மிகப் பெரிய எழுச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

சித்தபுருஷர் சாங்கதேவர்தான் ஞானேஸ்வரின் ஞானத்தையும் திறமையையும் உலகறியச் செய்தவர். அந்த சித்தபுருஷர் தன் யோக சக்தியின் மீது அதீத கர்வம்கொண்டவர். ஆயிரம் வருடங்களைக் கடந்தும் அவர் வாழ்ந்துகொண்டிருந்தார் என்று மக்கள் நம்பினார்கள். தனது யோகத்தின் மூலம் அனைத்து உயிர்களையும் வசப்படுத்தும் வித்தையைக் கற்றுவைத்திருந்தவர். சிறுவனான ஞானேஸ்வரின் புகழைக் கேட்டு, சந்திப்பதற்காகச் சிறுத்தை ஒன்றின் மீது ஏறி அமர்ந்துகொண்டு பாம்பைத் தனது கழுத்தில் சுற்றியபடி சென்றார். `அனைத்து உயிர்களையும் கட்டுப்படுத்தத் தெரிந்தவன் நான்' என்பதை ஞானேஸ்வருக்கு உணர்த்தும்படி இருந்தது சாங்கதேவரின் செயல். சாங்கதேவரின் செயலைப் பார்த்து அனைவருமே மிரண்டு போனார்கள். ஆனால், அமைதியாகத் தனது பீடத்தின் மீது அமர்ந்திருந்த ஞானேஸ்வர், தனது கைகளை உயர்த்தினார். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அவர் அமர்ந்திருந்த பீடம் அப்படியே பின்னால் நகர்ந்து போனது. உயிருள்ள பொருள்களை மட்டும் கட்டுப்படுத்திக்கொண்டிருந்த சாங்கதேவர், உயிரற்ற பொருளைக் கட்டுப்படுத்திய ஞானேஸ்வரின் யோகத் திறமையைக் கண்டார். பிறகு, சிறுத்தை மீதிருந்து கீழே இறங்கி, ஞானேஸ்வரின் திருவடிகளில் பணிந்து வணங்கியதுடன் கர்வமும் நீங்கப்பெற்றார். 

சிறு வயதிலேயே பல அற்புதங்களை நிகழ்த்தியவரும், மஹாராஷ்டிர மக்களிடையே பக்தி உணர்வைப் பரப்பியவருமான மகான் ஞானேஸ்வர், தமது 21-வயதில் ஜீவசமாதி அடைந்தார். 

ஞானேஸ்வரின் நினைவாக வருடா வருடம் ஜூலை மாதம் `சாந்த் ஞானேஸ்வர் மகாராஜா பால்கி யாத்திரை' மேற்கொள்ளப்படுகிறது. 700 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்றுவரும் யாத்திரை இது. `இறைவனின் பேரருளையும் ஞானத்தையும் அடைவதற்கு வயது என்றுமே ஒரு பொருட்டாக இருப்பதில்லை' என்பதை உணர்த்துவதற்காகவே அவதரித்தவர்தான் மகான் ஞானேஸ்வர். மகாராஷ்டிரா மண்ணில் தமது எளிய உபதேசம் மற்றும் தத்துவத்தினால் பக்திப் புரட்சி செய்த ஞானேஸ்வரை பக்தியுடன் நினைவுகூர்வோம்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism