Published:Updated:

`அகங்காரத்தை விட்டொழித்தால்தான் கடவுள் அருள் கிடைக்கும்!’ - பாபாவின் அருளாடல்கள் #SaiBaba

`கடவுள் அருள் கிடைக்க எதை விட வேண்டும்?’ - பாபாவின் அருளாடல்கள்

`அகங்காரத்தை விட்டொழித்தால்தான் கடவுள் அருள் கிடைக்கும்!’ - பாபாவின் அருளாடல்கள் #SaiBaba
`அகங்காரத்தை விட்டொழித்தால்தான் கடவுள் அருள் கிடைக்கும்!’ - பாபாவின் அருளாடல்கள் #SaiBaba

பாபா அனைத்து இடங்களிலும் நிறைந்திருக்கிறார். அனைவரிடமும் இறைவனைக் காணும்படி அறிவுறுத்திய பாபா, மற்ற மகான்களும் தாமே என்பதை பல்வேறு அருளாடல்கள் மூலம் உணர்த்தியிருக்கிறார். தம்முடைய மகா சமாதிக்குப் பிறகும், மற்ற ஞானிகள் மூலம் பக்தர்களை வழிநடத்தியிருக்கிறார். 

இதைப் பின்வரும் சம்பவம் விளக்குகிறது... 

தாஸ்கணு. பாபாவின் சிறந்த பக்தர். அவரின் புகழை அனைவரும் அறியும்படிச் செய்தவர். கடவுளின் பாடல்களை இசைப்பதையே தன் தொழிலாகக்கொண்டிருந்த இவர் மீது, பாபா மிகுந்த அன்பு செலுத்தினார். 

கி.பி 1919-ம் ஆண்டில் தன் சொந்த கிராமமான நந்தத்தில் தாஸ்கணு தங்கியிருந்தார். அப்போது, அந்தக் கிராமத்துக்கு அருகேயுள்ள குன்றின் மீது ஒரு முனிவர் தங்கியிருப்பதைக் கேள்விப்பட்டார். அவரைத் தரிசிக்க விரும்பி, அங்கே சென்றார். அனைவருக்கும் புன்னகையுடன் அருள்புரிந்த முனிவர், தாஸ்கணுவை மட்டும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அடுத்தடுத்து, மூன்று முறை இப்படியே நடந்தது. 

இதனால் மிகவும் வேதனையுற்றவர், எப்படியேனும் முனிவரைத் தரிசித்துவிட வேண்டும் என்று நான்காவது முறையாகச் சென்றார். 

``எனக்கு அருள்புரிய மறுத்தது ஏன்?’’ என்று கேட்டார். 

தாஸ்கணுவை மேலும் கீழுமாக ஒரு முறை உற்று நோக்கிய முனிவர், ``கடவுளின் புகழைப் பாடுவது மிகவும் உன்னதமான செயல். நீ அதைச் செய்கிறாய் என்றால், உனக்குக் கடவுளின் ஆசீர்வாதம் முழுமையாக இருக்கிறது என்று அர்த்தம். ஆனால், நீ அகங்காரத்துடன் இருப்பதால்தான் நான் உனக்குத் தரிசனம் கொடுக்க விரும்பவில்லை'' என்றார். 

எதையும் விவாதித்து, அதற்கு சரியான விளக்கம் கிடைத்த பிறகுதான் ஒரு கருத்தை ஏற்றுக்கொள்ளும் தாஸ்கணு, முனிவரின் கருத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர், தன் வழக்கமான விவாதத்தை ஆரம்பித்தார். 

``மனிதனாகப் பிறந்தவனுக்கு அகங்காரம் கூடவே இருக்கிறது. அனைவருக்கும் இது பொதுவானது. அப்படியிருக்க, என்னை மட்டும் நீங்கள் அனுமதிக்காதது ஏன்?" என்றார். 

இதைக் கேட்ட முனிவர், ஒரு சிறு புன்னகை புரிந்துவிட்டு பின்வருமாறு தொடர்ந்தார்... 

``அகங்காரம், அனைவரிடமும் இயல்பாகக் காணப்படும் ஒன்றுதான். ஆனால், பல்வேறு ஊர்களிலும் கிராமங்களிலும் கடவுளின் புகழைப்பாடும் நீ, அகங்காரத்துடன் இருப்பது எப்படிச் சரியாகும். பல குணங்கள்கொண்ட மக்கள் மனதில் கடவுள் நம்பிக்கையை வளர்க்கும் நீ, கடவுள் உன் அருகே இருந்தும் அதை உணராதது ஏன்? இதற்கெல்லாம் காரணம், நிச்சயம் உன் அகங்காரம்தான்" என்றார். 

இதைக் கேட்ட தாஸ்கணு, அமைதியாக யோசிக்கத் தொடங்கினார். `நான் செய்த தவறு என்னவாக இருக்கும்' என்று யோசித்தார். 

முனிவர் தொடர்ந்தார்... ``காசி பிரயாகையில் நீ நீராட விரும்பினாய். ஆனால், பாபா உன்னை அவ்வளவு தொலைவுக்குப் போகவிடாமல், தன் கால் கட்டை விரலிலிருந்தே கங்கை நீர் விழும்படிச் செய்தார். அந்த நீரை நீ, உன் தலையில் தெளித்துக்கொண்டாயே தவிர, அதைப் பருகவில்லை. அவர் ஒப்பற்ற மகான் என்பதை மறந்து, அவர் ஓர் இஸ்லாமியர் என்பதாலேயே நீ அந்த நீரைப் பருகவில்லை. கங்கை நீரை, தன் பாதார விந்தங்களில் வரவழைத்த பாபாவை நீ கடவுள் என்று அறிய மறுத்துவிட்டாய். இப்படி உன் மனமே அறியாமையால் நிறைந்திருக்கும்போது நீ எப்படி பிறர் மனதில் கடவுள் நம்பிக்கையை வரவழைக்க முடியும்? வெறும் ஏழு நாள்கள் நாம சங்கீர்த்தனம் செய்த நீ கடவுளின் வடிவமான பாபாவிடமே கடவுளின் தரிசனத்தைக் காட்டும்படிக் கேட்டிருக்கிறாய். உனக்கு அருகிலேயே இருப்பவரைக் கடவுளாக அறிந்துகொள்ள முடியாமல் போனதற்குக் காரணம் நிச்சயமாக உன் அகங்காரம்தான். அப்படியிருக்க, நான் எப்படி உனக்குத் தரிசனம் கொடுக்க முடியும்?’’ என்றார். 

இதைக் கேட்ட தாஸ்கணு, தன் வீட்டுக்கு விரைந்து சென்றார். பாபா திருவுருவப் படத்துக்கு முன்னால் விழுந்து வணங்கினார். கடவுளின் அவதாரமேயான பாபாவின் மகிமைகளைப் புரிந்துகொள்ளாத தன் தவற்றை உணர்ந்து, அழுது புலம்பினார். பாபாவுடனேயே இருந்தும் அவரைக் கடவுளின் அவதாரம் என்பதை அறியாத தன் அறியாமையை எண்ணி வெட்கம்கொண்டார். பாபாவிடம் மனமுருகி மன்னிப்புக் கேட்டார். 

தன்னைப் பற்றிய தாஸ்கணுவின் அறியாமையை விலக்கி, அவரை ஆட்கொள்ள நினைத்த பாபா, தாம் நினைத்ததை மற்றொரு முனிவரின் மூலம் நிறைவேற்றிக்கொண்டார். 

இந்தக் கதையின் மூலம், `நான்' என்ற அகங்காரத்தைக் கைவிட்டு, கடவுளைத் தரிசிக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். அகங்காரத்தை விட்டொழித்தால் மட்டுமே நம்மைக் கடவுள் ஏற்றுக்கொண்டு அருள்புரிவார்.