Published:Updated:

அறியாமல் செய்யும் பிழைகளைச் சரியான நேரத்தில் திருத்துவார் பாபா!#SaiBaba

அறியாமல் செய்யும் பிழைகளைச் சரியான நேரத்தில் திருத்துவார் பாபா!#SaiBaba
அறியாமல் செய்யும் பிழைகளைச் சரியான நேரத்தில் திருத்துவார் பாபா!#SaiBaba

சாயிபாபா அனைத்தையும் அறிந்தவர். அனைத்து இடங்களிலும் வியாபித்திருப்பவர். பக்தர்கள் எங்கிருந்து தம்மை நினைத்தாலும், இருந்த இடத்திலிருந்தே அருள்புரியும் அன்பர்.  `நானா சாஹேப் சந்தோர்க்கர்' எனும் பக்தருக்கு அப்படியான பல அனுபவங்கள் உண்டு. 

ஒரு நாள் மசூதியில் பாபா, தன் பக்தர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சத்தமாக, ``என் நானாவின் உயிர்... என்னை மீறி, அவனை விட்டுப் போகாது. நான் அவ்வளவு எளிதாக அவனைச் சாக விடுவேனா?" என்றார். பிறகு, சிறிது நேரத்தில் சாதாரணமாக உரையாட ஆரம்பித்துவிட்டார். அங்கிருந்தவர்களுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.  அவரிடம் கேட்கவும் அவர்களுக்குத் தைரியம் வரவில்லை. எனவே, அதை அப்படியே விட்டுவிட்டனர்.

இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் நானா,  பாபாவைத் தரிசிக்க ஷீரடிக்கு வந்தார். அவரிடம், மசூதியில் இருந்த பக்தர்களில் ஒருவர், ``சில நாட்களுக்கு முன்பு பாபா, உங்களுடைய பெயரைச் சொல்லி, உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும், `நான் இருக்கும்போது அப்படி எதுவும் நேரவிடமாட்டேன்’ என்றும், உணர்ச்சியோடுப் பேசினார்” என்றார்.

இதைக் கேட்ட நானாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. ஷீரடியில் பாபா அப்படிச் சொன்ன அதே நாளில் நானா சாந்தோர்க்கரும் அவரது நண்பரான லாலா சாஸ்திரியும் ஒரு குதிரைவண்டியில் பூனாவுக்குப் பயணித்துக்கொண்டிருந்தனர். அதுவரை அமைதியாகச் சென்று கொண்டிருந்த குதிரைகள் திடீரென தாறுமாறாக ஓடின. வண்டி ஒரு மரத்தின் மீது மோதியது. வண்டியிலிருந்து இருவரும் கீழே விழுந்தனர். நானா, `நிச்சயம் உயிர் பிழைக்க மாட்டோம்’ என்றே எண்ணினார். ஆனால், பாபாவின் ஆசியால் உயிர்பிழைத்துக்கொண்டார்.

நானா ஓடிச்சென்று பாபாவின் பாதங்களில் வீழ்ந்தார். பாபா, அவரிடம் ஒரு வார்த்தைகூட பேசாமல் அமைதியாக இருந்தார். ஏற்கெனவே, உடல் காயம் ஆறாமல் வலியுடனே இருந்த நானாவுக்குப் அவரின் அமைதி மேலும் வலியை அதிகரித்தது. அவர் பாபாவைப் பணிந்து, ``சாயிதேவா... நான் என்ன தவறு இழைத்தேன்... என்னுடன் உரையாட மறுப்பதேன்?” என்று கேட்டார். 

இதற்குப் பாபா, ``என்னுடைய பக்தர்கள் ஒருபோதும் என் போதனைகளை மீற மாட்டார்கள். என் போதனையை மறந்த உன்னிடம், நான் எப்படி பேச முடியும்?” என்றார். பாபாவின் வார்த்தைகளைக் கேட்டு, நானா அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தார். அவரின் சொல்லையே வேதவாக்காகக் கொண்ட நானா, பாபாவிடமே அதுபற்றி கேட்டார்.

``தத்தர் கோயிலில் இருக்கும் ஒரு சாது, உன்னிடம் உதவி கேட்டார். நீ அவருக்கு 300 ரூபாய் அளிப்பதாகக் கூறினாய். பின்னர், அதை மறந்துவிட்டாய். `இந்தமுறை மறந்துவிட்டேன்... அடுத்த முறை வரும்போது எடுத்து வருகிறேன்’ என்று சொன்னால், அவர் உன்னை விழுங்கிவிடவா போகிறார். அவருக்குப் பயந்து, நீ ஏன் ஊரைச் சுற்றிக் கொண்டு வந்தாய்?. அதனாலேயே உனக்கு இவ்வாறு நேர்ந்தது” என்று கூறினார். 

இதைக் கேட்ட நானா, பாபாவின் பாதங்களில் வீழ்ந்து மன்னிப்பு கோரினார்.  ``இன்னொரு முறை இவ்வாறு செய்ய மாட்டேன்” என்று வாக்குறுதி அளித்தார். இதிலிருந்து பாபா, தன் பக்தர்களை ஆபத்திலிருந்து மீட்பது மட்டுமல்லாமல், அவர்கள் அறியாமல் செய்யும் பிழைகளையும் சரியான நேரத்தில் திருத்துகிறார் என்பது விளங்குகிறது.

மற்றொரு சம்பவம்...     

ஒரு சமயம் நானா, பாபாவின் தரிசனத்தைப் பெறுவதற்காக ஷீரடிக்கு வந்தார். அப்போது, ``நானா... மாவட்ட ஆட்சியரைப் பார்க்க உடனே கோபர்கான் வர வேண்டும்" என்ற செய்தி கொண்ட கடிதம் அவரிடம் கிடைத்தது. ஒருவர் ஷீரடிக்கு வருவதாக இருந்தாலும், அங்கிருந்து விடைபெறுவதாக இருந்தாலும் பாபாவின் அனுமதி இருந்தால் மட்டுமே செல்ல முடியும். எனவே, ஷீரடியில் இருந்து விடைபெறுவதற்காக நானா, பாபாவிடம் அனுமதி கேட்க சென்றார். பாபா, அவரை ஒரு நாள் தன்னுடன் தங்க வைக்க வேண்டும் என்ற ஆசையில், ``இன்று ஒரு நாள் தங்கிவிட்டு நாளை செல்” என்றார்.

பாபாவின் வார்த்தைகள் சக்தி நிறைந்தவை. அவை எப்போதும் பின்பற்றப்பட வேண்டும். எனவே, பாபாவின் மீது நம்பிக்கை கொண்ட நானா, அன்று ஷீரடியில் தங்கிவிட்டு, அடுத்த நாள் புறப்பட்டு கோபர்கான் சென்றார்.

ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பணியாளர்களிடம், ``நேற்று, ஆட்சியர் வந்தாரா?” என்று கேட்டார். அதற்கு ஒரு அலுவலர், “வரவில்லை... இன்றுதான் வரவிருக்கிறார்” என்று பதிலளித்தார். இதைக் கேட்டதும், நானாவின் மகிழ்ச்சி அதிகரித்தது. எங்கும் நிறைந்திருக்கும் பாபாவின் பேரறிவு தன்னுடைய வாழ்க்கையில் மெய்ப்பிக்கப்பட்டதை எண்ணி, மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்.