Published:Updated:

"ஓர் எறும்பின் உயிரைக் காப்பாற்றுவது, ஒரு பேரரசை நிறுவுவதை விடச் சிறந்தது!" - மகான் ஸ்ரீ அரவிந்தர்

"ஓர் எறும்பின் உயிரைக் காப்பாற்றுவது, ஒரு பேரரசை நிறுவுவதை விடச் சிறந்தது!" -  மகான் ஸ்ரீ அரவிந்தர்
"ஓர் எறும்பின் உயிரைக் காப்பாற்றுவது, ஒரு பேரரசை நிறுவுவதை விடச் சிறந்தது!" - மகான் ஸ்ரீ அரவிந்தர்

சுதந்திரப் போராளி, மகா யோகி, ஞானி... மகான் ஸ்ரீ அரவிந்தர் பிறந்ததினப் பகிர்வு...

சுதந்திரப் போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், கல்லூரி முதல்வர், ஆன்மிக ஞானி எனப் பன்முகத் தன்மைகளுடன் பரிணமித்தவர் மகான் ஸ்ரீ அரவிந்தர். சுதந்திரப் போராட்ட வீரராகப் பல்வேறு வீர தீரச் செயல்களுடன்  தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் மக்களிடையே ஆன்மிக எழுச்சியை உருவாக்கிய மாபெரும் ஞானி. இன்றைய கொல்கத்தா நகரில் 1872, ஆகஸ்ட் மாதம் 15 - ம் நாள் கிருஷ்ண தனகோஷ் - ஸ்வர்ணலதா தேவி ஆகியோருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். அவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் அரவிந்த் அக்ராய்ட் கோஷ். `அரவிந்தம்' என்றால் `அன்றலர்ந்த தாமரை' என்று பொருள். பெயருக்கு ஏற்றபடியே எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருந்தவர் அரவிந்தர்.

அரவிந்தர் தனது தொடக்கக் கல்வியை டார்ஜிலிங்கில் உள்ள லோரெட்டோ கான்வென்டில் பயின்றார். பிறகு, 1879 -ம் ஆண்டு சகோதரர்களுடன் இங்கிலாந்து சென்று லண்டன், கேம்பிரிட்ஜில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் `இந்திய ஆட்சிப் பணி' படிப்பில் சேர்ந்தார்.  கிருஷ்ண தனகோஷ்க்கு, தனது மகன் அரவிந்தன் அரசுத் துறையில் உயர்ந்த பதவி வகிக்க வேண்டும் என்றே ஆசை. அதன் பொருட்டுதான் அரவிந்தரை லண்டன் வரை அனுப்பிப் படிக்க வைத்தார். ஆனால், கேம்பிரிட்ஜ் கல்லூரியில் படித்த காலத்திலேயே பல்வேறு புரட்சிகரமான சிந்தனைகளைக் கொண்டிருந்தார் அரவிந்தர். 1893 - ம் ஆண்டு லண்டனிலிருந்து இந்தியா திரும்பினார்.

1893 -ம் வருடம் இந்திய அரசியலிலும், ஆன்மிகத்திலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடம். ஏனெனில், இந்த வருடத்தில்தான் பாரதத்தின் தொன்மை மற்றும் ஆன்மிகச் சிறப்பை மேலை நாடுகள் அறிந்துகொள்ளும்படிச் செய்ய, சிகாகோ நோக்கிய பயணத்தைத்  தொடங்கினார் விவேகானந்தர். இதே வருடத்தில்தான் மகாத்மா காந்தியின் தென்னாப்பிரிக்கப் பயணமும் நிகழ்ந்தது. விவேகானந்தர் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் பயணம் இந்தியாவிலிருந்து தொடங்கியதென்றால், அரவிந்தரின் பயணம் இந்தியாவை நோக்கியதாக இருந்தது. இந்தியா திரும்பிய பிறகு பரோடா சமஸ்தானத்தில் பணிபுரிந்தார் அரவிந்தர். 

இந்த நிலையில்தான் 1905 - ம் ஆண்டு வைசிராய் கர்சன் பிரபு வங்கப் பிரிவினையை ஏற்படுத்தினார். பிரிவினைக்கு எதிராக 1906 - ல் மிகப்பெரிய அளவுக்குக் கலவரங்கள் வெடித்தன. கொல்கத்தாவில் உள்ள வங்காள தேசியக் கல்லுரியில் முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த அரவிந்தரை, விடுதலைப் போராட்டத்துக்கு இழுத்துச் சென்றது கர்சன் பிரபுவின் இந்தப் பிரிவினைக் கொள்கைதான். `வந்தே மாதரம்' இதழில் ஆங்கிலேய அரசு மற்றும் வங்கப் பிரிவினைக்கு எதிராக விடுதலையைத் தூண்டும் பல்வேறு கட்டுரைகளை எழுதி மக்களிடையே விழுப்புஉணர்ச்சியை ஏற்படுத்தினார். போராட்டங்களையும் நடத்தினார். 1907 மற்றும் 1908 - ம் ஆண்டுகளில் இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார் அரவிந்தர். அந்தக் காலகட்டத்தில் பல இளைஞர்களுக்குச் சுதந்திரப் போராட்டத்துக்கான ஊக்க சக்தியாகவும் திகழ்ந்தார்.

குற்றம் நிரூபிக்கப்படாததால், 1909 -ம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட அரவிந்தர், அரசியலிலிருந்து விலகி, ஆன்மிக யோக நெறிகளில் கவனத்தைச் செலுத்தலானார். சிறையில் இருந்த காலத்தில் அவர் படித்த நூல்கள், உபதேசங்கள், கீதை ஆகியவை அவரை ஆன்மிகத்தை நோக்கி இழுத்தன. பிறகு, `கர்மயோகி' என்ற ஆங்கிலப் பத்திரிகை, `தர்மா' என்ற வங்க மொழிப் பத்திரிகை ஆகியவற்றில் ஆன்மிகம் குறித்த தனது கருத்துகளைத் தொடர்ந்து எழுதினார். பரமனின் ஆட்சியைப் பூமியில் நிலை நிறுத்துவதற்கு ஆன்மிக விடுதலை ஒன்றே தீர்வு என்று கண்டுகொண்டார்.

PC : www.aurobindo.ru

ஆன்மிக நெறியில் சென்றுவிட்டாலும் அரவிந்தரை ஆங்கிலேயே அரசு தொடர்ந்து கண்காணித்து அச்சுறுத்திக்கொண்டிருந்தது. 1910 -ம் ஆண்டில், `ஷாம்சுல் ஆலம் கொலை வழக்'கில் அரவிந்தர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதனால் மாறுவேடமிட்டு பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார் அரவிந்தர்.

ஆங்கிலேய அரசுக்கு எதிரான கொந்தளிப்பிலிருந்து முற்றாக விலகிக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து, யோக நெறியில் தன்னுடைய கவனம் முழுவதும் செலுத்தி தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டார் அரவிந்தர். 1926 ம் ஆண்டு ஆசிரமம் அமைத்து தியானத்திலும் யோகத்திலும் ஈடுபட்டார். ஆன்மிகத்தை பலருக்குப் பரப்பினார். பாரதியுடன் நட்பு கொண்டது இந்தக் காலத்தில்தான். இதே காலத்தில்தான் ஸ்ரீ அன்னை, அரவிந்தரைச் சந்தித்து அவரது ஆன்மிக சாதனைகளுக்கு உற்ற துணையாக இருந்தார். இங்குதான் அரவிந்தர் தனது ஒப்பற்ற காவியமான `சாவித்ரி'யைப் படைத்தார். பல ஆண்டுகள் தொடர்ந்து எழுதிய அவரது `சாவித்ரி காவியம்' 1950 - ம் ஆண்டு நிறைவு பெற்றது. 

 `ஓர் எறும்பின் உயிரைக் காப்பாற்றுவது, ஒரு பேரரசை நிறுவுவதை விடச் சிறந்த செயலாகும்' என்று கருணை உள்ளத்தோடு ஆன்மிகத்தைப் பரப்பிய மகான் ஸ்ரீ அரவிந்தர் இதே ஆண்டு டிசம்பர் 5 - ல் முக்தியடைந்தார்.  

ஒரு சுதந்திரப் போராட்ட வீரராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர், மகா யோகியாகவும், ஞானியாகவும், மகானாகவும் வாழ்ந்தவர் ஸ்ரீ அரவிந்தர். அவரது அவதார நாள்தான் இந்தியாவின் சுதந்திர தினமும். இறைவன் வழிகாட்டிய ஆன்மிகப் பாதையைத் தழுவி ஆன்மிக ஒளிக் கீற்றாய் திகழ்ந்த அரவிந்தரை அவரது சுதந்திர நாளில் நினைவு கூர்ந்து போற்றுவோம்... 

அடுத்த கட்டுரைக்கு