Published:Updated:

பசியென்று வரும் உயிருக்கு உணவிடுக..!- பக்தர்களுக்கு பாபாவின் அறவுரை #saiBaba

இதுவரை என்னால் அறிந்துகொள்ள முடியாத உண்மையை இன்று தங்கள் அருளால் உணர்ந்துகொண்டேன்'' என்று கூறி சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். பாபாவும் அவருக்கு ஆசிகளை வழங்கி அருள்புரிந்தார்....

பசியென்று வரும் உயிருக்கு உணவிடுக..!- பக்தர்களுக்கு பாபாவின் அறவுரை  #saiBaba
பசியென்று வரும் உயிருக்கு உணவிடுக..!- பக்தர்களுக்கு பாபாவின் அறவுரை #saiBaba

பாபாவின் பக்தரான நானா சந்தோர்க்கர் ஆசாரம் மிக்க வைதீகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். வேத சாஸ்திரங்களைக் கற்றறிந்தவர். வேதங்களில் கூறியுள்ளபடி நாள்தோறும் தேவர்களை வழிபட்டு, உணவு சமைத்து இறைவனுக்கு நைவேத்தியம் செய்வது வழக்கம். மேலும், தினமும் அதிதியாக வரும் ஓர் அந்தணருக்கு உணவு வழங்குவதையும் ஒரு பழக்கமாகவே வைத்திருந்தார். ஆனால், பல நேரங்களில் அதிதியாக அந்தணர் யாரும் வராத காரணத்தினால் பாபாவின் பக்தரான நானா சந்தோர்க்கரின் விருப்பம் நிறைவேறாமலே போய்விடுவதும் வழக்கமாக இருந்தது.

தான் முறைப்படி வேத பாராயணம் செய்து, உணவு சமைத்து இறைவனுக்கு நைவேத்தியம் செய்தபோதும், பல நாள்களில் அதிதியாக அந்தணர் எவரும் வராமல் இருந்தது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

ஒருநாள் பாபாவை தரிசிக்கச் சென்றபோது பாபாவிடமே இதைப் பற்றிக் கேட்டுவிட்டார். ''பாபா, நான் தினமும் வேத பாராயணம் செய்து, இறைவனுக்கு நைவேத்தியமும் செய்கிறேன். மேலும், வேதம் சொல்கிறபடி தினமும் அதிதியாக வரும் அந்தணர் ஒருவருக்கு உணவு வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். பல நாள்களில் அந்தணர் எவரும் அதிதியாக வருவதில்லை. என்னால் வாழ்க்கையில் பின்பற்ற முடியாத ஒரு விஷயத்தை வேதங்கள் கூறுவது எதற்காக?'' என்று கேட்டார்.

அனைத்தையும் அறிந்த பாபா, நானா சொன்னதைக் கேட்டு மெள்ள புன்னகைத்தபடி, ''நானா! வேதங்கள் எப்போதும் பின்பற்றுவதற்கு எளிமையான விஷயத்தையே நமக்குப் போதிக்கின்றன. நீதான் வேதம் கூறுபவற்றின் பொருளை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை'' என்று கூறினார்.

பாபா இப்படிக் கூறியதைக் கேட்டு நானா அதிர்ச்சியடைந்தாலும், மேலும் அவர் கூறப்போவதைக் கேட்க பொறுமையுடன் அமர்ந்திருந்தவர் தொடர்ந்தார்: ''அதிதிகள் என்று வேதங்கள் உரைப்பது அந்தணர்களை மட்டும் என்று நீ எண்ணுவது எந்த விதத்தில் சரியாகும்?''

பாபாவின் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கத் தெரியாமல் நானா அமைதியுடன் இருந்தார்.

''தினந்தோறும் ஒன்றல்ல, பல அதிதிகள் உணவுக்காக உன் வீட்டுக்கு வருகிறார்கள். நீதான் அவர்களை அறிய முடியாமல் அவர்களுக்கு உணவளிக்காமல் இருக்கிறாய். கடவுள், அந்தணர் ரூபத்தில்தான் வருவார் என்று எதிர்பார்க்கும் நீ, அவர் அனைத்து உயிர்களிடத்திலும் இருக்கிறார் என்பதை ஏன் அறிய மறுக்கிறாய்? ஈ, எறும்பு, காக்கை, ஆறறிவு மனிதன் என அனைவரிடத்திலும் கடவுள் வாசம் புரிகிறார். 

அதிதி என்பவர் அந்தணர் ரூபத்தில்தான் வருவார் என்ற உன் கருத்தினை முதலில் மாற்று; பசியோடு உன் வீட்டு வாசலுக்கு வரும் எந்த உயிரையும் அதிதியாக மதித்து அவற்றுக்கு உணவளிப்பதால், நீ நாள்தவறாமல் உன் கடமையைப் பின்பற்ற இயலும்''.

இவ்வாறு பாபா அவருக்கு வாய்மொழியில் கூறியதுடன் அதை நானா உணரும்படி ஒரு லீலையை நிகழ்த்தினார்.

நானா, பாபாவுடன் பல வருடங்கள் பழகியிருந்தாலும், அவரைக் கடவுளின் அவதாரம் என்பதை அறியத் தவறிவிட்டார். அவரின் இந்த நினைப்பையும் பாபா மாற்ற எண்ணினார்.

பாபாவுக்கு ஆரத்தி எடுக்கும் நேரங்களில் பக்தர்கள் அனைவரும் எழுந்து நிற்கும்போது நானா மட்டும் பாபாவின் அருகில் அமர்ந்திருப்பார். 

ஒருநாள் பாபா நானாவை எட்டு போளிகள் செய்து கொண்டு வந்து நைவேத்தியம் செய்து, பின்னர் அவற்றை மற்றவர்களுக்குக் கொடுத்து அவரையும் உண்ணும்படி கூறினார்.

பாபா கூறியபடியே நானாவும் எட்டு போளிகளைத் தன் கையால் செய்து எடுத்துக் கொண்டு வந்து பாபாவுக்கு நைவேத்தியம் செய்து, அந்தப் போளிகளில் ஒன்றையாவது பாபா உண்ணவேண்டும் என்று நினைத்து, அந்தப் போளிகளை பாபாவின் முன்பு வைத்தார். சற்று நேரத்தில் போளிகள் முழுவதையும் ஈக்கள் மொய்த்தன. சற்றுப் பொறுத்து அந்தப் போளிகளை எடுத்துச் செல்லும்படி நானாவிடம் கூறினார். 

நானா, 'பாபா! நான் தங்களுக்காகக் கொண்டு வந்த இந்த போளிகளில் ஒன்றைக்கூட தாங்கள் சாப்பிடாமல் என்னை எடுத்துக் கொள்ளச் சொல்கிறீர்கள். இதிலிருந்து ஒன்றையாவது தாங்கள் எடுத்து உண்டால் நான் மகிழ்ச்சியடைவேன்' என்றார்.

இதைக் கேட்ட பாபா, ''நான்தான் அதை வயிறார உண்டுவிட்டேனே. நான் உண்ட மிச்சத்தைத் தான் உன்னை எடுத்துக்கொள்ளச் சொன்னேன்'' என்று கூறினார்.

பாபாவின் வார்த்தைகள் எதுவும் நானாவுக்கு விளங்கவில்லை. ஆயினும் அவர் அந்தப் போளிகளை எடுத்துக் கொண்டு சாவடிக்குச் சென்றார்.

சிறிது நேரம் கழித்து நானாவை அழைத்த பாபா அவரிடம், "நானா! நான் இந்த எண்சாண் உடம்பில் தான்  இருக்கிறேன் என்று நினைக்கிறாயா; என்னுடன் இத்தனை வருடங்கள் நீ இருந்தபோதும் நான் அனைத்து உயிர்களிடத்திலும் வாசம் புரிபவன் என்பதை நீ எப்படி அறிந்து கொள்ளாமல் போனாய்? என்று கேட்டார்.

அதற்கு நானா, ''சாய்தேவா! இதுவரை என்னால் அறிந்துகொள்ள முடியாத உண்மையை இன்று தங்கள் அருளால் உணர்ந்துகொண்டேன்'' என்று கூறி சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். பாபாவும் அவருக்கு ஆசிகளை வழங்கி அருள்புரிந்தார்.

இதன் மூலம் பாபா, 'அனைத்து ஜீவராசிகளும் கடவுளின் இருப்பிடம் என்றும், கடவுள் வாசம் புரியும் அனைத்து உயிர்களையும் நாம் கடவுளாகவே பாவிக்க வேண்டும்' என்பதை நமக்கு உணர்த்தியுள்ளார்.

சாயி பற்றி மேலும் அறிந்துகொள்ள, இங்கே க்ளிக் செய்யவும்...