Published:Updated:

``செப்டம்பர் 11... இனி விவேகானந்தர் தினம்!’’ - சிகாகோ சொற்பொழிவுக்கு இல்லினாய்ஸ் அங்கீகாரம்

``செப்டம்பர் 11... இனி விவேகானந்தர் தினம்!’’ - சிகாகோ சொற்பொழிவுக்கு இல்லினாய்ஸ் அங்கீகாரம்
``செப்டம்பர் 11... இனி விவேகானந்தர் தினம்!’’ - சிகாகோ சொற்பொழிவுக்கு இல்லினாய்ஸ் அங்கீகாரம்

உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப்படுகிறேன்...

``பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய இரு பண்புகளை உலகத்துக்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக்கொள்ளவும் செய்கிறோம். உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப்படுகிறேன்.'

இந்தியாவைப் பற்றியும், இந்தியர்களின் மேன்மையைப் பற்றியும் உலகறியச் செய்த சுவாமி விவேகானந்தரின் உரைவீச்சு இது. விவேகானந்தர் சிகாகோ சர்வ சமய மாநாட்டில் சொற்பொழிவாற்றி 125 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அவரது பேச்சு உலக அளவில் ஏற்படுத்திய தாக்கம் இன்றளவும் குறையாமல் இருக்கிறது. அமெரிக்காவின் இல்லினாய்ஸ் (Illinois ) மாநிலக் கவர்னர் புரூஸ் ரேனார், விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றியதன் நினைவாக செப்டம்பர் 11-ம் தேதியை 'சுவாமி விவேகானந்தர் தினமாக' அறிவித்து பெருமைப்படுத்தியிருக்கிறார். விவேகானந்தர் உரையாற்றிய சிகாகோ நகரம் இந்த இல்லினாய்ஸ் மாநிலத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் உரையாற்றுவதற்கு முன்பு, 'சாதுக்களும் குரங்காட்டிகளும் நிறைந்த நாடு இந்தியா. மற்றவர்களை மதிக்கத் தெரியாத அறிவிலிகள்தான் இந்தியர்கள்' என்ற ரீதியில்தான் உலகத்தினர் இந்தியாவைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தார்கள். "அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே..." என்ற தனது முதல் சொற்றொடரிலேயே இந்தியாவைப் பற்றிய உலகத்தினரின் எண்ணங்களைப் புரட்டிப்போட்டவர் விவேகானந்தர். அப்போது அமெரிக்கா ஆணாதிக்கவாதிகளால் நிறைந்திருந்தது. சுவாமி விவேகானந்தர் அமெரிக்கப் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தொடங்கிய உரைக்கு, அவையினர் எழுப்பிய நீண்ட கரவொலிகள் அடங்குவதற்குச் சில நிமிடங்கள் ஆனது. வேறு எவருக்கும் கிடைக்காத பாராட்டு இது. 

சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றியதைப் பற்றி அறிந்திருப்போம். ஆனால், அவர் அமெரிக்காவுக்குச் சென்றதைப் பற்றியும் அங்கு அவர் அனுபவித்த இன்னல்களைப் பற்றியும் பெரும்பாலும் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...

அமெரிக்காவில் சர்வசமய மாநாடு நடைபெறுகிறது என்பதைக் கேள்விப்பட்டதும், 'நரேந்திரனை (விவேகானந்தரின் இயற்பெயர், நரேந்திரன்) அனுப்பி வைக்கலாம்' என்று முடிவு செய்யப்பட்டது. குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் உத்தரவு இல்லாமல் அவர் எதுவும் செய்வதில்லை. எனவே, குருதேவரை நினைத்துப் பிரார்த்தித்தார். அப்போது குருதேவர் கடல் மீது நடந்து செல்வது போன்ற காட்சி தோன்றியது. அதையே ஸித்தியடைந்துவிட்ட தம் குருநாதரின் உத்தரவாகப் புரிந்துகொண்டார். பின்னர், தூய அன்னை சாரதாதேவியின் ஆசிகளுடன் அமெரிக்கா செல்லத் தயாரானார்.

நரேந்திரன் அமெரிக்காவுக்குப் பயணப்படப்போகிறார் என்று கேள்விப்பட்டதும் சென்னை வாழ் இளைஞர்களும் முக்கியப் பிரமுகர்களும் அவருக்காக நிதி திரட்டத் தொடங்கினார்கள். நரேந்திரனது பயணத்துக்கு கேத்ரி மகாராஜா உதவி செய்து பாராட்டு விழாவும் நடத்தினார். அங்குதான் நரேந்திரனுக்கு 'சுவாமி விவேகானந்தர்' என்ற திருப்பெயர் சூட்டப்பட்டது. பலரிடமும் நிதி திரட்டி இந்தியாவின் - இந்துக்களின் பிரதிநிதியாக சுவாமி விவேகானந்தர் மும்பையில் கப்பல் ஏறினார். அந்தக் கப்பல் சீனா, ஜப்பான், கனடா என்று உலகைச் சுற்றிக்கொண்டு வட அமெரிக்காவின் மேலைக் கரையிலிருக்கும் சிகாகோ நகருக்கு அவரை அழைத்துச் சென்றது. சர்வ சமய மாநாடு செப்டம்பர் மாதம்தான் தொடங்கப்போகிறது. ஆனால், இவரோ ஜூலை மாதத்திலேயே சிகாகோவை அடைந்துவிட்டார். மாநாடு தொடங்குவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள்தான் இருக்கின்றன. இரண்டு மாதங்களும், 'எங்கு தங்குவது, யாரைப் பார்ப்பது? செலவுக்கு என்ன செய்வது' என்று தெரியாமல் துணைக்கு யாருமில்லாமல் பரிதவித்தார் சுவாமி விவேகானந்தர்.

அந்தத் தருணத்தில் சிகாகோவைவிடவும் போஸ்டனில் தங்குவது செலவு குறைவாக இருக்குமென்பதால் ரயிலில் போஸ்டனுக்குச் சென்றார். செல்லும் வழியில் ஹார்வார்டு பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த ஜான் ஹென்றி ரைட் என்பவரின் அறிமுகம் விவேகானந்தருக்குக் கிடைத்தது. பேராசிரியர் ரைட், சர்வ சமய மாநாட்டின் தலைவருக்கு விவேகானந்தரைப் பற்றி ஒரு கடிதம் எழுதினார். அதில் என்ன எழுதியிருந்தார் தெரியுமா? “இவர் நம் நாட்டு பேராசிரியர்கள் அனைவரைக் காட்டிலும் அதிகம் கற்றுத் தேர்ந்த அறிஞர்” என்று எழுதியிருந்தார்.

இரண்டு மாதங்கள் போஸ்டனில் தங்கிய பிறகு, மீண்டும் சிகாகோ நகருக்கு வந்தார் விவேகானந்தர். எப்போதும் கையில் எதுவும் வைத்திருந்து பழக்கமில்லை என்ற காரணத்தால் வரும் வழியிலேயே தான் கொண்டு வந்திருந்த பையைத் தொலைத்துவிட்டார்.  மாநாட்டில் இவர் யாரைச் சந்திக்க வேண்டும், மாநாடு நடைபெறும் முகவரி என்ற எந்த விவரமும் கையில் இல்லை. சிகாகோ நகரில் அப்போது கடுமையான பனிப்பொழிவு வேறு. விவேகானந்தரிடம் கம்பளி உடை இல்லை. போர்வையும் கிடையாது. என்ன செய்வது, எங்கு செல்வதென்று தெரியாமல் குளிரில் நடுங்கியபடியே தனது காவி உடையுடன் அமர்ந்திருந்தார். பிறகு, தெருவில் வரிசையாக வளர்ந்திருந்த மரங்களுக்கு நடுவே அமர்ந்து கண்களை மூடி தியானத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். காவி உடையுடன் குளிரில் நடுங்கியபடி மரத்தடியில் அமர்ந்திருந்த காட்சியை வியப்புடன் பார்த்தார் மாதரசி ஒருவர். அவரது பெயர் திருமதி ஜார்ஜ் டபிள்யு. ஹேல். சுவாமிஜியின் தேஜஸ் நிறைந்த திருமுகத் தோற்றம் கண்டு சிலிர்த்தவர், 'இவர் இப்படியே இரவு முழுவதும் அமர்ந்திருந்தால் குளிரில் விறைத்தே இறந்துவிடுவார்' என்று எண்ணி, தன் கணவரிடம் பேசி சுவாமி விவேகானந்தரைத் தனது இல்லத்துக்கு மரியாதையுடன் அழைத்துச் சென்று தங்க வைத்தார். அதன் பிறகு சுவாமி விவேகானந்தருக்கு அனைத்து உதவிகளையும் செய்தவர்கள் இவர்கள் இருவரும்தான். பிற்காலத்தில் இந்த ஹேல் தம்பதிதான் சுவாமிஜியின் நெருங்கிய சீடர்களாகத் திகழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

1893-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் நாள் உலக சமய மாநாடு தொடங்கியது. சுமார் 7,000 பேர் உலக மதத் தலைவர்களின் பேச்சைக் கேட்பதற்கு ஆர்வத்துடன் கூடியிருந்தார்கள். கூட்டத்தைப் பார்த்ததும் சுவாமி விவேகானந்தருக்கு அச்சம் ஏற்பட்டிருந்தது. ஏனெனில், அவர் இவ்வளவு பெரிய கூட்டத்துக்கு மத்தியில் உரையாற்றியது இல்லை. எப்படிப் பேசுவது, எங்கிருந்து தொடங்குவது என்று குழப்பத்துடன் மேடையில் அமர்ந்திருந்தார். மாநாட்டுத் தலைவர் ஒவ்வொரு முறையும் சுவாமி விவேகானந்தரிடம், "நீங்கள் பேசுங்கள்..." என்று கூறியபோதெல்லாம் சுவாமி விவேகானந்தர், "பிறகு பேசுகிறேன்" என்று காலத்தைக் கடத்திக்கொண்டிருந்தார். சுவாமி விவேகானந்தருக்குக் கடைசி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அப்போதும் மறுத்தார் அவர்.

மாநாட்டுத் தலைவர், "உங்களுக்குக் கிடைக்கும் கடைசி வாய்ப்பு இதுதான். இதை விட்டுவிட்டால் இனி தங்களால் பேசவே முடியாது" என்று எச்சரிக்கை செய்தார். இந்த வாய்ப்பைத் தவறவிட்டால் பேச முடியாமல் போகலாம் என்ற நிலையில்தான் பேசுவதற்கு சம்மதித்தார் சுவாமி விவேகானந்தர். மாபெரும் கூட்டத்தைப் பார்த்ததும் மீண்டும் அவருக்குப் பயம் தோன்றியிருந்தது. சில விநாடிகள் பேச்சு வராமல் தவித்தபடி நின்றார். ஒரு கணம் கண்களை மூடி தனது குரு ராமகிருஷ்ண பரமஹம்சரை நினைத்துத் தனது உரையைத் தொடங்கினார். "அமெரிக்க நாட்டின் எனதருமை சகோதரிகளே, சகோதரர்களே..." என்று தொடங்கிய இந்த வரிகள்தான் அவர் பெயரை உலக நாடுகள் மத்தியில் அவரை  உயர்வாக நினைக்க வைத்தன. இந்தியாவின் புகழையும் உலகறியச் செய்தன. 

விவேகானந்தர் பேசத் தொடங்கியதும் கூட்டத்தினர் அனைவரும் எழுந்து நின்றுவிட்டார்கள். அனைவரின் கைத்தட்டல்களும் அடங்க வெகுநேரம் ஆனது. பிறகு தனது வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை முடித்தார். அவர் பேசி முடித்தபோது மேலை நாட்டு மக்கள் இந்தியாவைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்த எண்ணங்கள் அனைத்தும் மாறியிருந்தன. சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றி 125 ஆண்டுகள் கடந்திருக்கும் சூழலில் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலம் செப்டம்பர் 11-ம் தேதியை 'சுவாமி விவேகானந்தர்' நாளாக அறிவித்து பெருமைப்படுத்தியிருக்கிறது.

இல்லினாய்ஸ் மாநிலத்தின் கவர்னர் புரூஸ் ரேனார் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் " 'அமெரிக்காவின் சகோதரர்களே, சகோதரிகளே' என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்றொடரோடு ஓர் அற்புத உரையை சிகாகோவில் நடைபெற்ற உலகச் சமய மாநாட்டில் நிகழ்த்தியவர் சுவாமி விவேகானந்தர். 'யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன' என்ற பகவத் கீதையின் நித்திய உண்மையை அவர் உலகுக்கு வெளிப்படுத்திய தினம் செப்டம்பர் 11, 1893. இந்த நாளை சுவாமி விவேகானந்தர் தினமாகக் கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.  

இது இந்தியாவுக்குக் கிடைத்த பெருமை!

அடுத்த கட்டுரைக்கு