Published:Updated:

சிந்தனை செய் மனமே!

சிந்தனை செய் மனமே!

சிந்தனை செய் மனமே!

சிந்தனை செய் மனமே!

Published:Updated:
சிந்தனை செய் மனமே!
சிந்தனை செய் மனமே!
சிந்தனை செய் மனமே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'பழைமை என்பதால் அனைத்தையும் ஏற்க வேண்டும் என்பதில்லை; புதுமை என்பதால் அனைத்தையும் தவிர்க்க வேண்டும் என்பதும் இல்லை. சிந்தனையாளர்கள், பழைமை- புதுமை பாகுபாடுகளை ஒதுக்கிவிட்டு, ஏற்கவேண்டியதை இனம் கண்டு பின்பற்றுவார்கள். பிறரது முடிவை ஆராயாமல் அப்படியே ஏற்பவர்கள், அறிவற்றவர்கள்’ என்பது மகாகவி காளிதாசனின் அறிவுரை!  

அதுமட்டுமா?

* மாறுபட்ட இயல்பு கொண்ட மக்கள் அனைவரையும் மகிழ்விப்பது நாடகம் ஒன்றுதான்!

* ஒரு குறையானது, பல நிறைகளைக்கூட மறைக்க வல்லது.

* மனதை ஈர்க்கிற சூழலிலும், சுதாரித்துச் செயல்படு பவனே தைரியசாலி.

* தேவை வந்துவிடின், தனக்குக் கீழே உள்ளவரிடம்கூடத் தலைகுனிவான், தலைவன். ஆனால், நெருப்பானது தன்னை வளர்த்துக்கொள்ள, காற்றை வணங்குவதில்லை.

* சிறப்புகளைக் கொண்டவர்கள், அடைக்கலம் தேடி அலையமாட்டார்கள். ஆனால், அவர்களுக்கு அடைக்கலம் தர, அனைவரும் ஏங்குவார்கள்.

* கடமையாற்றுவதற்கு முதலும் முழுமையுமான கருவி, நம்முடைய உடல்.

* ஆசையில் மூழ்கியவன், அவமானத்தைப் பார்க்கமாட்டான்.

##~##
* வெற்றியை எட்டியவனிடம், அதுவரை அதற்காக அவன் அனுபவித்த துயரங்கள் யாவும் மறைந்துவிடும்.

* ஒழுக்கம் ஓங்கியிருக்கும் இடத்தில், ஆண்-பெண் பாகுபாடு மறைந்துவிடும்.

* தெளிவுற்ற மனம் கொண்டவரை, மாறுபாடுகள் ஆட்கொள்வதில்லை.

* இலக்கை நோக்கிப் பயணித்த மனம், பள்ளத்தை நோக்கிப் பாயும் ஒழுக்கு - இரண்டையும் திசை திருப்ப இயலாது.  

* கர்வமின்றி இருப்பதே வீரத்துக்கு அழகு.

* ஆசைக்கு எல்லைக்கோடு இல்லை.

* சேவகனிடம்,  கோபம் தலைதூக்காது.

* காமந்தக்காரனுக்கு அசையும் பொருள், அசையாப் பொருள் எனும் பாகுபாடு தெரியாது.

* வாழ்க்கை முழுவதும் இன்பம் அல்லது துன்பம் என்று மட்டுமே இருக்காது. சக்கரச் சுழற்சிபோல், இரண்டும் மாறி மாறி வந்து கொண்டிருக்கும்.

* சூரியன், தனது கிரணங்களால் தினமும் நீரை உறிஞ்சுகிறான். அப்படி உறிஞ்சிய நீரை, ஆயிரம் மடங்காக மழையெனத் திருப்பித் தருகிறான். மக்களிடம் இருந்து வரிப்பணத்தைப் பெறுகிறான் அரசன். அதனை ஆயிரம் மடங்காக்கி, மக்களுக்கு அளித்து மகிழ்விக்கிறான்.

* நல்லோரை அலட்சியப்படுத்துவது, நமது முன்னேற்றத்துக்குத் தடையாக மாறிவிடும்.  

* கடவுள் விருப்பம், விஷத்தையும் அமுதமாக்கும்; அமுதத்தையும் விஷமாக்கும். பூதனையின் தாய்ப்பால், அவளுக்கு விஷமாக மாறியது; ஆலகால விஷம் ஈசனுக்கு அமுதமாக மாறியது.

* நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிற துயரம், பொறுத்துக் கொள்ளும் அளவுக்கு இறங்கிவிடும்.

* ஜனநாயகத்தில் ஆழ்ந்தவனுக்கு, இளைப்பாற நேரம் இருக்காது.

* கடும் வெப்பத்தைத் தலையில் சுமந்து, தன்னை அண்டியவர்களுக்கு நிழல் தந்து குளிர்விக்கிறது மரம்!  

- இப்படியான பலப்பல நல்லுரைகளும் மகாகவி காளிதாசன் அருளியவைதான்.

பிரம்மன், வேதத்தின் துணையுடன் நாட்டிய சாஸ்திரத்தை இயற்றினார்; பரத முனி, அதனை நடைமுறைப்படுத்தினார்; காளிதாசன், தனது படைப்புகளில் இன்னும் விரிவுபடுத்தினான். 'பாவம்’ - அதாவது அபிநயத்துடன் மிளிரும் நிருத்யம், தாளத்துடன் இணைந்த நிருத்தம்- இந்த இரண்டையும் செயல்படுத்திப் படைப்புக்கு மெருகூட்டினான்!

காதலுக்கு ஒரு நாடகம்- அபிஞ்ஞான சாகுந்தலம்; நாட்டியத்துக்கு (நிருத்யம்)- மாளவிகாக்னிமித்திரம்; நிருத்தத்துக்கு- விக்ரமோர் வசியம். தேவர்கள், மனிதர்கள் பாகுபாடின்றி, நாடகத்தின் தரத்தை உயர்த்த முனைந்தவன் காளிதாசன்! இயல், இசை, நாடகம் - இந்த மூன்றையும் கையாண்டு, காப்பியங்களை இயற்றி, கவிகளில் முதல்வனாகத் திகழ்ந்தவன், அவன்!

முருகப்பெருமானைச் சிறப்பிக்க, குமாரசம்பவம்; சூர்ய வம்சத்துப் பரம்பரையின் பெருமையைச் சொல்ல, ரகுவம்சம்; பருவகாலங்களின் சிறப்புகளை விவரிக்க, ரிது சம்ஹாரம்; பிரிந்த காதலர்களைத் தேற்ற, மேகதூதம்... இப்படிச் சிறப்புமிக்க காவியங்களைப் படைத்தவன், காளிதாசன்.  

சிந்தனை செய் மனமே!

ஆன்மிகவாதிகள் அனைவரும் தங்களது கொள்கையை நிலைநாட்ட, காளிதாசனின் உரைகளை எடுத்துக்காட்டாக பயன்படுத்துவர். 'காளிதாசன் உரைத்த அறக்கோட்பாட்டுக்கு இணங்க...’ என்று சொல்வர் (காளிதாசஸ்மிருதௌ).

'தெளிவான மனதில் உதயமாகும் கோட்பாடு, முடிவை எட்டுகிற சான்றாக எடுத்துக் கொள்ள லாம்’ எனும் தகவலை (ஆத்மதுஷ்டிப்ரமாணம்), அறிமிகப்படுத்தியவனே, அவன்தான்! அதுமட்டுமா?! இமயம் முதல் குமரிமுனை வரை என பரத கண்டத்தின் எல்லையைக் கோடிட்டுக் காட்டியதும் அவனே! அவனது படைப்புகளில், பாரதப் பண்பு, பளிச்செனத் தென்படும்.

ஆன்மிகத்தைத் தெளிவுற விளக்குவதற்கு, அவனுக்கு ஒரேயரு உவமை போதும். 'உலகவியலில் பற்றற்றவன், எப்படி சம்சார சாகரத்தை எளிதாகத் தாண்டுவானோ, அப்படி ஆழ்கடலைத் தாண்டினான் அனுமன்’ என்கிறான் காளிதாசன்.

திலீபனுக்கு ரகு பிறந்தான். அவனைப் பெருமைப்படுத்த வேண்டும்; அதேநேரம், திலீபனை தரம் தாழ்த்தக்கூடாது. இரண்டுபேருமே, சிறப்புப் பெறவேண்டும். 'ஒரு அகல் விளக்கிலிருந்து ஏற்றிய மற்றொரு அகல்விளக்கு போல், திலீபனிடமிருந்து ரகு தோன்றினான்’ எனும் உவமையைச் சொன்னான் காளிதாசன் (ப்ரவர்த்திதோதீப இவப்ரதீபாத்).

இந்துமதி சுயம்வரம். அரசகுமாரர்கள் ஆவலுடன் அமர்ந்து, இந்துமதி தங்களுக்குக் கிடைப்பாள் எனும் ஆவலில் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.  இந்துமதி கையில் வரணமாலையை ஏந்தி, தோழியுடன் வந்தாள். அந்தத் தோழி, ஒவ்வொரு அரசகுமாரனின் பெருமையையும் விளக்கியபடி வர, இறுதியில் அஜமகாராஜனை அடைந்ததும், அவனது பெருமையால் ஈர்க்கப்பட்டு, அவனை வரித்துக்கொண்டாள் இந்துமதி என்பர். 'நகர்ந்து வரும் தீப ஒளி, அரசகுமாரனை நெருங்கியதும் அவன் முகத்தின் களிப்பைக் காட்டும். அங்கிருந்து நகர்ந்ததும், அடுத்த முகம்  ஒளி வீசும். ஒளியைக் கடந்த முகம் இருளில் மறையும்’ என அழகுற விவரித்தான் காளிதாசன்! இந்துமதி தனக்குக் கிடைப்பாள் என சுயம்வரத்தில் கலந்துகொண்ட ஒவ்வொரு அரசகுமாரன் நினைப்பதையும், பின்பு அவர்களின் நம்பிக்கை முறிவதையும் விளக்க காளிதாசன் எடுத்துரைத்த இந்த உவமை நிகரில்லாத ஒன்றாக அமைந்து விட்டது.

நவரசங்களில் சிருங்காரத்தைக் கையாளுவதில் சிறப்புப் பெற்றவன், காளிதாசன். சிவ- பார்வதியின் சிருங்காரத்தை, நெருடலின்றிக் கையாண்டு, அனைவரையும் ஈர்த்தவன்! மேகதூதத்தில் காதலர்களது அன்பின் எல்லையை விவரித்த வன் அவன். காளிதாசன் கையாளாதது என எந்தக் கலையும் இல்லை

காளிதாசனின் அபிஞ்ஞான சாகுந்தலம், மொழிபெயர்க்கப்பட்டு வெளிநாடுகளில் பெருமதிப்பைப் பெற்றது. மேக சந்தேசம் வெளிநாட்டவரால் போற்றப்படுகிறது. பிறகு வந்த தூதுக் காப்பியங்களுக்கு அதுவே ஆதாரம்! வாழ்வில் சந்திக்கும் ஆறு பருவ காலங்களை அழகாக, அமைதியாக, மகிழ்ச்சியாகக் கடப்பதற்கு 'ரிது சம்ஹாரம்’ பெரிதும் உதவும்!

பாரதத்தில், அனைத்து தேசத்தவர்களும் தங்கள் தேசத்தைச் சேர்ந்தவன்தான் காளிதாசன் என நினைப்பார்கள். அந்த அளவுக்கு, அந்தந்த தேசத்தின் சிறப்புகளைத் தத்ரூபமாகக் காப்பியங்களில் விளக்கியவன் அவன்! இத்தனைக்கும், பாரத தேசத்தில் காளிதாசன் எங்கு பிறந்தான், எப்படி வளர்ந்தான், அவனது காலம் என்ன என்பது பற்றி யாருக்கும் தெளிவாகத் தெரியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகச் சொல்வர்!

அவனது காலம் எதுவானால் என்ன... அவனது படைப்புகள், காலத்தையும் விஞ்சி நின்று, பாரதத்தின் பெருமையை அழியாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. காளிதாசனின் இலக்கியங்கள் சிரஞ்ஜீவித் தன்மையுடன் இன்றைக்கும் சிறப்பு பெற்றிருக்கின்றன. அந்த மகாகவியின் படைப்புகள், இன்றைய தலைமுறையினரை நல்வழிபடுத்த உதவும்!  

( இன்னும் சிந்திப்போம் )

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism