Published:Updated:

எப்போதும் இன்புற்றிருக்க...

எப்போதும் இன்புற்றிருக்க...

எப்போதும் இன்புற்றிருக்க...

எப்போதும் இன்புற்றிருக்க...

Published:Updated:
எப்போதும் இன்புற்றிருக்க...

மொத்த மகிழ்ச்சிக் குறியீடு

எப்போதும் இன்புற்றிருக்க...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டுத்தவர்களை அதிர்ச்சிக்கும் ஏமாற்றத்துக்கும் ஆளாக்கிப் பார்ப்பதில் ஒரு சிலருக்கு ஏனோ அப்படியரு சந்தோஷம்!

ஓர் ஏழையின் செருப்புகளை விளையாட்டாக ஒளித்து வைத்த மகனை அழைத்துத் தந்தை சொன்னார்... ''மகனே! செருப்புகளை இருந்த இடத்தில் முன் போல வை. வேர்க்க வியர்க்கப் பணி முடித்து வந்த பின்பு, தன் செருப்பு காணவில்லை என்றால், அந்த உழைப்பாளியின் மனம் என்ன பாடுபடும் என்பதை யோசித்துப் பார்! மாறாக, அவர் தன் செருப்புகளுக் குப் பக்கத்தில் ஒரு பத்து ரூபாய்த் தாளைக் கண்டால் எத்தனை மகிழ்ச்சி அடைவார்! அடுத்தவர்களை எதிர் பாராத மகிழ்ச்சிக்கு ஆளாக்கிப் பார்ப்பதில் இருக்கும் இனிமை, அவர்களை பயப்பட வைப்பதிலோ, பதற்றப் பட வைப்பதிலோ இல்லை என்பதை உணர்ந்து கொள்!'' என்று சொல்லி, பத்து ரூபாயைக் கொடுத்து, அந்தச் செருப்புகளுக்குப் பக்கத்தில் வைக்கச் சொன்னார்.

அந்தத் தந்தை சொன்ன தத்துவமே மகிழ்ச்சிக்கான மந்திரம். நான் நிறையப் பேரைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அவர்கள் தங்கள் வாழ்க்கை குறித்து சுவாரஸ்யமாகச் சொல்வதை ஆர்வத்தோடு கேட்பேன். பலர் தங்கள் இளமைப் பருவ சந்தோஷங்களைப் பற்றி விவரிப்பார்கள். அவர்களிடம் இப்போது எல்லாப் பொருட்களும் இருக்கும். கை தட்டி அழைத்தால், ஓடி வருகிற பணியாளர்கள் இருப்பார்கள்; விரல்களைச் சொடுக்கினால் விலையுயர்ந்த கார்கள் வந்து நிற்கும். ஆனாலும், அவர்கள் சொல்வார்கள்... ''இப்போ வசதியா இருக்கோம்; ஆனா, சின்ன வயசுல இருந்தது மாதிரி அத்தனை மகிழ்ச்சியா இல்லை!''

##~##
மகிழ்ச்சி, கல்லாப் பெட்டியின் கனத் தோடோ, வங்கிக் கணக்கின் விவரங்களோடோ தொடர்பு உடையது அல்ல.

ஒரு நாட்டின் வளர்ச்சியை 'மொத்த தேசிய வருமானம்’ கொண்டுதான் பொருளாதாரம் மதிப்பீடு செய்கிறது.  அந்த நாட்டில் உற்பத்தியாகிற எல்லாப் பொருட்களுடைய மதிப்பையும் கூட்டி வருகிற தொகையைக் கொண்டே, அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணக்கிடப் படுகிறது. அப்படிக் கணக்கிடும்போது, கண்ணுக்குத் தெரியாத பல உழைப்புகள் காணாமல் போய்விடுகின்றன. வளர்ச்சி அடைந்த பல நாடுகளில் நடக்கும் வன்முறைகளைப் பார்க்கும்போதும், உயிருக்கு உத்தரவாதமற்ற தன்மையை நோக்கும்போதும் 'இந்த நாட்டைப்போய் உயர்ந்த நாடாகக் கருதுகிறார்களே!’ என்று தோன்றும்.  

'எங்களுக்கு மொத்த தேசிய வருமானம் முக்கியமல்ல; மொத்த மகிழ்ச்சிக் குறியீடுதான் முக்கியம்’ என்று ஒரு நாடு அறிவித்தது.  அது ஒன்றும் செல்வாக்கு மிகுந்த நாடு அல்ல; அணு ஆயுதங்களை அடுக்கி வைத்திருக்கும் நாடும் அல்ல; உலக நாடுகளுக்குத் தன்னைத் தானே மேஸ்திரி என அறிவித்துக்கொள்ளும் நாடும் அல்ல.  நாகரிகம் தன் மண்ணில்தான் உதயமானது எனப் பெருமை பேசும் நாடும் அல்ல!

அதுவொரு மிகச் சிறிய நாடு; அமைதியான, அழகான நாடு;  அன்பு மயமான நாடு; புத்தநெறி பூத்துக் குலுங்கும் நாடு. நான் அந்த நாட்டுக்குச் சென்றிருக்கிறேன். அது- பூடான்.  

1972-ஆம் ஆண்டு, அந்த நாட்டு அரசர்தான் அப்படியரு அறிவிப்பை முதன்முதலில் வெளியிட்டார். ''புத்தநெறி சார்ந்த புதிய பொருளாதாரக் கொள்கையின் மூலம் பூடானை புனர்நிர்மாணம் செய்வேன்'' என அவர் தனது அர்ப்பணிப்பைப் பற்றிக் கூறும்போது, அப்படிச் சொன்னார். அதன் பின்னர், அவர் சொன்ன அந்த 'மகிழ்ச்சிக் குறியீடு’ பற்றி விஞ்ஞான ரீதியாக அலசி, ஆராயத் தொடங்கினார்கள்.

எப்போதும் இன்புற்றிருக்க...

மொத்த மகிழ்ச்சிக் குறியீட்டுக்கு நான்கு தூண்கள் தேவை. அவை-  தாக்குப் பிடிக்கும் மேம்பாடு, பண்பாட்டுக் கூறுகளின் வளர்ச்சி, இயற்கைச் சூழல் பாதுகாப்பு, சிறந்த நிர்வாகம்.

'மொத்த தேசிய வருமானம்’ என்பது, இவற்றையெல்லாம் காவு கொடுத் துக்கூட குறுகிய கால அளவில் நிகழ வாய்ப்பு உண்டு. பொன் முட்டை இடுகிற வாத்துகளைப் பலியிட்டுப் பரிதாப நிலையை அடையும் குடும்பங்

களும் இருக்கின்றன; நாடுகளும் உள்ளன. இயற்கை வளங்களைக் கண்மூடித்தனமாகப் பயன்படுத்தி, வீணடித்து, பின்னர் முற்றிலுமாக அழிந்துபோன தீவுகள், வரலாற்றில் நிறைய உண்டு.

ஒரு நாடு மகிழ்ச்சி மிகுந்த நாடாகத் திகழவேண்டும் என்றால், அது ஏழு கோணங்களில் சிறந்து விளங்கவேண்டும்.

முதலாவது, பொருளாதாரத் தன்னிறைவு. போதிய அளவு வருமானம் இருந்தால்தான், பசியற்று, மகிழ்வுடன் இயங்கமுடியும். எல் லோருக்கும் அடிப்படைத் தேவைகள் எளிதில் நிறைவேறும்.  

இரண்டாவது, சுற்றுச் சூழல் நிறைவு. மாசு இல்லாத சூழல், சத்தம், போக்குவரத்து நெரிசல் இல்லாத சுற்றுப்புறம் ஆகியவை அத்தியாவசியம். அழகான சுற்றுலாத் தலத்துக்குப் பயணம் போக மனம் விரும்புகிறதே... ஏன்? அங்கே இவையெல்லாம் கிடைக்கும் என்பதால்தான்! இவற்றை நம் இடத்திலேயே பெறமுடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

மூன்றாவது, ஆரோக்கியமான மக்கள். அவர்கள்தான் நாட்டின் உண்மையான சொத்து! நோஞ்சான் களைக் கொண்டு மகிழ்ச்சியான தேசத்தை உருவாக்க முடியாது.

நான்காவது, மன நலம். பகிர்ந்துகொள்ள முடியாத இறுக்கம், எந்நேரமும் பதற்றம், அன் பற்ற குடும்பம், சுயநலமான அண்டைவீட்டார், சந்தர்ப்பவாத நண்பர்கள், பொறாமை கொண்ட அலுவலகச் சூழல் ஆகியவற்றில் சிக்கிக் கொண்டு, மனத்தின் அடித்தன்மையைப் பலர் இழந்துவிடுகிறார்கள். அதிக சம்பளத்துக்காக, ஓய்வே கிடைக்காத பணியில், பொருத்தமற்ற நிறுவனத்தில் வேலை பார்க்கும் பலர், விரைவிலேயே இப்படிப்பட்ட நிலையை அடைகிறார்கள். உடல் நலமின்மை, அருகில் இருப்பவர்களை மட்டுமே தொற்றும்; மன நலமின்மையோ தொலைபேசியில் உரையாடுபவர்களையும் தொற்றிக்கொள்ளும். மன முறிவோ, மண முறிவோ இல்லாத, பிணக்கு இல்லாத குடும்பச் சூழலில்தான் மன நலம் செம்மைப்படும்.

ஐந்தாவது, நல்ல பணிச் சூழல். தங்கள் பணிகளைப் பெரும்பாலோர் நேசிக்கவே செய்கின்றனர். தங்களுடைய இருத்தலை நியாயப்படுத்தும் வகையில் ஏதேனும் செய்து, தனது முக்கியத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என நினைப்பவர்கள் அதிகம். ஆனால், அலுவலகச் சூழல் அவர்களை இன்னும் தீவிரமாகவும், முனைப்பாகவும் பணி செய்ய ஊக்குவிப்பதாக அமைய வேண்டும். எந்த நாட்டில் மக்களின் மனநிலையும், அலுவலகச் சூழலும் இயைந்து இயங்குகின்றதோ, அங்கு மேலாளர்கள் தேவையில்லை; தொழிலாளியே கண்காணிப்பாளராக மாறும் அதிசயம் நிகழும்.

அடுத்தது, சமூக நலம். சமூகத்தில் பரஸ்பரம் நிலவும் சமத் தன்மையும், மதிப்பும் முக்கியமானவை. சமுதாயப் பிரிவுகள் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சி மலராது; குரோதமே குருத்துவிடும்.  இரட்டைக்குவளை இருக்கும் ஊரில் எப்படி மகிழ்ச்சி நடை பயில முடியும்? பல்வேறு வேறுபாடுகள் இருக்கின்ற நாட்டில் விரோதமும், பயமும், கழுத்தறுக்கும் போட்டியும், உள்வன்மமும், கலவரங்களும், கதவடைப்புகளுமே இருக்கும். பொருளாதாரத்தில் எவ்வ ளவுதான் முன்னேற்றம் அடைந்தாலும், 'எந்த நேரத்தில் வேண்டுமானாலும் குண்டு விழும்’ என்ற எண்ணம் இருந்தால், எப்படி மகிழ்ச்சி ஏற்படும்?

இறுதியாக, அரசியல் சூழல். சிறந்த ஆட்சி முறை, இருக்கின்ற சட்டங்களைப் பாரபட்சமின்றி செயல்படுத்தும் நிர்வாகம், ஊழல் அற்ற நிர்வாகம், தனி மனித சுதந்திரம், வெளிநாட்டு ஆக்கிரமிப்பற்ற இறையாண்மை ஆகியவை இருக்கும் நாட்டில், 'ஒட்டுமொத்த மகிழ்ச்சிக் குறியீடு’ அதிகரிக்கும்.

மகிழ்ச்சியான குடும்பங்களின் தொகுப்பே, மகிழ்ச்சியான தேசத்துக்கான அச்சாரம்!

'மகிழ்ச்சியாக இருக்கிறோம்’ என்ற எண் ணமே, நாம் இன்னும் உற்சாகமாகப் பணியாற்றவும், மற்றவர்களுடன் மனம்விட்டு நம் கருத்துக்களைப் பரிமாறவும் ஆதாரமாக இருக்கும்; எப்போதும் இன்புற்றிருக்கவும் முடியும்!

(இன்பம் பொங்கும்)
படம்: கே.ராஜசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism