Published:Updated:

ஹஜ் கடமையின்போது கஃஅபா-வை எப்படி வலம் வர வேண்டும்?

ஹஜ் கடமையின்போது கஃஅபா-வை எப்படி வலம் வர வேண்டும்?
ஹஜ் கடமையின்போது கஃஅபா-வை எப்படி வலம் வர வேண்டும்?

ஹஜ் கடமையின்போது கஃஅபா-வை எப்படி வலம் வர வேண்டும்?

ஹஜருல் அஸ்வத் கல்லை ஏன் முத்தமிடுகிறார்கள்?

ஒரு வினாவிலிருந்து தொடங்குவோம். சொர்க்கத்திலிருந்து ஒரு பொருளை உங்களுக்காக இறக்கிக் கொடுத்தால், அதை என்ன செய்வீர்கள். முதலில் கண்கள் விரிய கண்டுகளிப்பீர்கள். உள்ளம் பூரிக்கத் தொட்டு உணர்வீர்கள். உதடுகள் குவிய முத்தமிடுவீர்கள். அப்புறம், அதைப் பத்திரப்படுத்துவீர்கள். அது உங்களிடம் இருப்பதே இவ்வுலகில் நீங்கள் பெற்ற பெரும் பேறு. அப்படித்தானே!

குறைந்தபட்சம், இதைக் குறுகிய சில வினாடிகளாவது அனுபவிக்க வேண்டுமா, `இஸ்லாமியக் கடமைகளில் ஆயுளில் ஒரு தடவையாவது நிறைவேற்றுங்கள்' என்று கட்டளையிடப்பட்ட ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும். மெக்காவுக்குச் செல்ல வேண்டும். மனம் முழுக்க ஏக இறைவனையே நினைவுகூர்ந்து நம்மைப் படைத்தவனிடம் மட்டுமே பணிந்து அவனது ஆதிப் பள்ளிவாசலுக்குள் நுழையவேண்டும். உள்ளத்தால், உதட்டால், உடல் உறுப்புகளால் பரிபூரணமாய் அர்ப்பணமாகி தைக்கப்படாத வெண்மை உடையில் அந்தப் பள்ளிவாசலை வலம் வர வேண்டும்.

`லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்..’ அல்லாஹ்வே, இதோ வந்துவிட்டேன்; வந்துவிட்டேன் என்று குரல் எழுப்பியவாறு, `புகழ்ச்சிகள் அனைத்தும், அருட்கொடைகள் அனைத்தும், ஆட்சிகள் அனைத்தும் உனக்கே சொந்தம். உனக்கு எவருமே இணை இல்லை’ என்று தொடர்ந்து முழங்கவேண்டும். 

இதுதான் ஹஜ்ஜின் ஏகத்துவத் தத்துவ முழக்கம். ஆன்மிக வாழ்வின் ஆழமான நோக்கம். படைப்புகள் அனைத்தையும் படைப்பாளனின் தனித்தன்மைகளுக்கு முன் தனிமைப்படுத்தி, படைத்தவனுக்கு முன் எதுவும் இணையில்லை என்கிற பிரகடனம்.
இதற்காக நீங்கள் ஹஜ்ஜுக்குச் சென்று, உங்கள் கண்கள் முன்பு கஃஅபா கம்பீரமாய் உயர்ந்து நிற்கும்போது, அதை ஏழு முறை வலம் வர எடுத்து வைக்கின்ற முதல் அடியை அந்தக் கட்டடத்தின் கிழக்கே அமைந்த ஒரு மூலையிலிருந்து கணக்கிட வேண்டும். அங்கு பூமியிலிருந்து சுமார் ஒன்றரை மீட்டர் உயரத்தில் முட்டை வடிவக் கோலத்தில் வெள்ளிக் குடம் ஒன்றின் வாய் திறந்திருப்பதுபோல் அந்த மூலையின் முக்கியப் பகுதி தென்படும். 

உண்மையில் அது ஒரு வெள்ளிச் சட்டகம். அதன் நடுவே பதிக்கப்பட்டதுதான் ஹஜருல் அஸ்வத். இந்த அரபுச்சொல்லுக்கு `கறுப்புக் கல்’ எனப் பொருள். ஹஜர் - கல்; அஸ்வத் - கறுப்பு.

இக்கல்லின் மூலையிலிருந்து வலப்பக்கமாக வலம் வரத் தொடங்குவதே ஹஜ்ஜின் முக்கியத் தொடக்கப்புள்ளி. முதல் மூன்று சுற்றுகள் சற்று ஓடுதல் நிலையில் அமையவேண்டும். அடுத்த நான்கு சுற்றுகள் நடந்தவாறு பொறுமையுடன் இருக்கவேண்டும். ஒவ்வொரு முறையும் ஹஜருல் அஸ்வதின் மூலைக்கு நேராக வரும்போதெல்லாம் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று முழக்கமிடுவார் முஸ்லிம்.

ஒரு வழிபாடு ஹஜருல் அஸ்வதிலிருந்து தொடங்குகிறது. ஆனால், அதை வழிபடுவதில்லை; வழிபடக் கூடாது என்பதே இங்கு நாம் அறிய வேண்டிய தனித்தன்மை. இதற்கும் இந்தக் கறுப்புக்கல்லைப் பற்றி அறிகின்ற பலவீனமான மனதுக்காரர்கள் இதுவும் வழிபடத் தகுதியானதே என்று நினைக்கலாம். ஏனெனில், இது சொர்க்கத்தின் கல். சொர்க்கப் படைப்பு ஒன்றை இப்பூமியில் காண்பதற்கு இது தவிர வேறு வாய்ப்பில்லை. என்றாலும், இதை எவராவது வணங்கினால் அதைவிடப் பெரிய பாவம் ஏதுமில்லை. எனவே, எவருமே அதை வணங்கமாட்டார்கள்.

இரண்டாவது கலீஃபா உமர் இப்னு கத்தாப் (ரழி) ஒரு முறை இந்தக் கல்லை முத்தமிட்டுவிட்டு, `ஏ கல்லே, நீ வெறும் கல்தான் என்பது எனக்கு நன்கு தெரியும். எனக்குப் பலன் அளிக்கவோ, தீங்கிழைக்கவோ உன்னால் முடியாது என்றும் எனக்குத் தெரியும். இறைத்தூதர் அவர்கள் உன்னை முத்தமிட்டதை நான் பார்க்காமல் இருந்திருந்தால் உன்னை நிச்சயம் முத்தமிட்டிருக்கமாட்டேன்’ என்றார். (ஆதார நூல்: புகாரீ 1520)

இறைத்தூதர் அதன் மீது பிரியமாக முத்தமிட்டார். அதனால் நானும் முத்தமிடுகிறேன். மற்றபடி உன்னை நான் வணங்கவில்லை என்று அக்கல்லை நோக்கிச் சொல்லும் தொனியில் தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறார் உமர். இதுதான் இறைநம்பிக்கையின் உச்சம். வழிபாடு என்பது இறைவனைப் பெருமைப்படுத்தி, அவனுக்கே அஞ்சிப் பணிவதாகும். இதை ஒரு படைப்புக்குச் செய்வது நிந்தனை என்பது இஸ்லாமிய இறைக்கோட்பாட்டின் தனித்துவமான சிந்தனை.

சொர்க்கத்தின் கல்லே என்றாலும் இதுதான் எல்லை. அதை முத்தமிட அனுமதி உண்டு. அது முடியாவிட்டால் கையால் தொட்டு முத்தமிட்டுக்கொள்ளலாம். அதற்கும் முடியாவிட்டால் ஒரு தடியால் தொட்டு அதை முத்தமிடலாம். அதற்கும் வழியில்லையா, நெருங்க முடியாத கூட்டமா, அதன் திசையில் கை அசைத்துவிட்டு நகரலாம். அவ்வளவுதான். எல்லை மீறக் கூடாது. ஏதோ இறை தரிசனத்துக்கு முண்டியடிப்பது போன்று மக்களை நெருக்கித் தள்ளி அந்தக் கல்லை நெருங்க எத்தனிப்பது இறைத்தூதர் வழிமுறைக்கு முற்றிலும் எதிரானது.

இது ஏன், அதை வழிபட முஸ்லிமுக்கு அனுமதி இல்லை. ஒரு கல்லை முத்தமிட்டாலும் அதற்கு இறைத்தூதரின் அறிவுரையும் வழிமுறையுமே ஆதாரமாக இருக்கவேண்டும் என்பது படிப்பினை. அந்த வகையில் இறைத்தூதரின் வழிகாட்டலை வாழ்க்கையின் மற்ற விவகாரங்கள் அனைத்திலும் மறுகேள்வி இன்றி பின்பற்றுவது எவ்வளவு முக்கியமானது என்கிற சிந்தனைக்கும் இது தூண்டலாகின்றது.
ஒரு கல்லைக் காட்டி இறைத்தூதர் ‘இது சொர்க்கக் கல். முத்தமிடுங்கள்’ என்கிறார்.

நாம் அவரின் சொல்லை உண்மை என்று நம்புகிறோம். அவர் சொன்னவாறே முத்தமிடவும் ஆசை கொள்கிறோம். அப்படியானால், இறைத்தூதர் சொன்ன அனைத்துக்கும் இதுதானே அணுகுமுறை. அவர் இக்கல்லின் விஷயத்தில் உண்மையே சொன்னார் எனும்போது மற்றவைக்கும் அப்படித்தானே.

ஆனால், மனிதர்கள் அவரின் வழிகாட்டலை உதறிவிட்டு பாவங்களில் வேகமாக முன்னேறுகிறார்கள். இந்த இறைத்தூதரை மட்டுமல்ல, இவருக்கு முன்பு வந்த தூதர்கள் பலரையும் இப்படித்தான் புறக்கணித்தார்கள். பாவங்களைத் துணிந்து செய்தார்கள். இறைவனுக்கு இணைவைத்தார்கள். அவன் வெறுக்கும் குணங்களை விளைச்சல் செய்தார்கள்.

விளைவு, ஹஜருல் அஸ்வத் எனும் சொர்க்கக் கல் அதன் ஆதி நிறத்தை இழந்து கருத்துப்போனது. ஆமாம், உண்மை தெரியுமா, முதன்முதலில் இந்தப் பூமிக்கு அது இறக்கப்பட்டபோது பாலைவிட வெண்மையாக இருந்தது. பாலின் வெண்மை பூமியின் படைப்புக்கு. ஆனால், பாலைவிட ஒரு வெண்மை இருக்கிறது. அது சொர்க்கப் படைப்புக்கு. அந்த மகத்தான அழகு நிறத்துடன்தான் இந்தக் கல் இருந்தது. நபிகள் பெருமகனார் கூறுகிறார்கள்: `ஹஜருல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து வந்தபோது பாலைவிட வெண்மையாக இருந்தது. ஆனால், ஆதாமுடைய பிள்ளைகளின், அதாவது மனிதர்களின் பாவங்கள் காரணமாக அது கறுப்பாகிவிட்டது.’ (ஆதாரநூல்: திர்மிதி 877)

நம்முடைய பாவங்கள் ஒரு சொர்க்கக் கல்லின் வெள்ளை நிறத்தையும் கறுப்பாக்கிவிடும் என்றால், நமது உள்ளத்தை எந்தளவு கரி பிடிக்கச் செய்துவிடும் என்பதை மட்டும் சிந்தியுங்கள். அதிலிருந்து தொடங்கும் நமது வாழ்க்கை மாற்றம்; மனமாற்றம்.

அடுத்த கட்டுரைக்கு