Published:Updated:

ஷீர்டி சாய்பாபாவின் அருள் வாழ்க்கையை கண்முன் நிறுத்திய 'பாபா' நாடகம்!

ஷீர்டி சாய்பாபாவின் அருள் வாழ்க்கையை கண்முன் நிறுத்திய 'பாபா' நாடகம்!
ஷீர்டி சாய்பாபாவின் அருள் வாழ்க்கையை கண்முன் நிறுத்திய 'பாபா' நாடகம்!

ஷீர்டி சாய்பாபாவின் அருள் வாழ்க்கையை கண்முன் நிறுத்திய 'பாபா' நாடகம்!

சாய்பாபா சமாதியடைந்து நூற்றாண்டு நிறைவு நிகழ்வு, அனைத்து சாய்பாபா கோயில்களிலும் பக்திபூர்வமாக நிகழ்ந்து வருகிறது. இதையொட்டி, மயிலாப்பூர் நாரத கான சபாவில், சாய்பாபாவின் வாழ்க்கையை விவரிக்கும்  நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. பாம்பே ஞானம் இயக்கத்தில், மகாலட்சுமி நாடகக் குழுவினர் சாய்பாபாவின் வரலாற்றைக் கண் முன் நிறுத்தினார்கள்.

நாடகத்தின் கதைச் சுருக்கம் இதுதான்.

சத்யா, சாய்பாபாவின் அதிதீவிர பக்தன். திடீரென அவனது தாய் உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அறுவை சிகிச்சை செய்வதற்கு அவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால், அரியவகை ரத்தம் என்பதால், ரத்தம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் மருத்துவர்கள் கைவிரித்து விடுகிறார்கள். தன் தாயைக் காப்பாற்ற பரிதவிக்கும் சத்யா, மருத்துவனை வளாகத்தில் இருக்கும் அனைவரிடமும் ரத்தம் கேட்டு கெஞ்சுகிறான். யாருமே அவனுக்கு உதவ முன்வரவில்லை. இந்தச் சூழலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய மருத்துவர் மருத்துவமனையை விட்டு வெளியே வருகிறார். அப்போது அவருடைய  காலில் விழுந்து சத்யா கெஞ்சுகிறான். அவரோ,  'உன் அம்மாவைக் காப்பத்தணும்னா ரத்தத்தோட வா...' என்று சொல்லிவிட்டுச் செல்கிறார்.

‘தன் தாயைக் காப்பாற்ற முடியாதோ’ என்று சத்யா பரிதவிக்கும் சூழலில், சாய்பாபா ரதத்துடன் ஒரு பக்தர் மருத்துவமனை வளாகத்துக்கு வருகிறார். உடனே சத்யா, அந்த ரதத்தில் இருந்த சாய்பாபாவின் படத்துக்கு முன் சென்று, 'எனக்கு நீதான் பாபா உதவி செய்யணும். உன்னை விட்டா எனக்கு யாரு இருக்கா? என் தாயை நீ காப்பாத்தலேன்னா உன்னை சும்மாவிட மாட்டேன்’ என்று ஆவேசமாகக் கத்துகிறான்.

அப்போது அந்த ரதத்தை ஓட்டி வந்த பக்தர் மருத்துவரை சுட்டிக் காட்டி, 'உன் தாய்க்குத் தேவைப்படும் ரத்தம்தான் இந்த மருத்துவரின் உடலிலும் ஓடுகிறது. அவரிடம் சென்று கேள். அவர் உன் தாயைக் காப்பாற்றுவார்' என்று கூறுகிறார்.

உடனே சத்யா, மருத்துவரின் காலில் விழுந்து ரத்தம் கொடுக்குமாறு கெஞ்சுகிறான். டாக்டரும் மனமிரங்கி ரத்தம் கொடுக்கிறார். சத்யாவின் தாய் பிழைத்துக்கொள்கிறார். இதனால் மகிழ்ச்சியடைந்த சத்யா, அனைவருக்கும் இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறான். இதற்காக சாய்பாபாவுக்கு நன்றி தெரிவித்து வணங்குகிறான். 

அதைப் பார்த்ததும் மருத்துவர் கோபமடைந்து, 'உன் தாய்க்கு ரத்தம் கொடுத்து, மருத்துவம் பார்த்துப் பிழைக்க வைத்தது நான். ஆனால், நீயோ சாய்பாபாவுக்கு நன்றி சொல்றியே?' என்று ஆவேசமாகக் கேட்கிறார். அப்போது ரதத்தை ஓட்டிவந்த பக்தர், சாய்பாபாவின் வரலாற்றையும், அவரது பெருமைகளையும் அந்த மருத்துவரிடம்  கூறுகிறார். சாய்பாபாவின் மகிமை, அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் ஆகியவற்றைக் கேட்கும் மருத்துவர் மனம் மாறி இறுதியில் சாய்பாபாவின் பக்தராகவே மாறிவிடுவார். இதுதான் நாடகத்தின் கதை.

மருத்துவருக்கும், சாய்பாபாவின் பக்தருக்கும் இடையே நடக்கும் உரையாடலே காட்சிகளாகவும் விரிகிறது. இந்த நாடகத்தில் நடித்த அனைவரும் பெண்கள். 

வேதியர் வீட்டில் குழந்தையாக அவதரித்த சாய்பாபா, இஸ்லாமியர் வீட்டுக்குச் செல்வது, இறுதியாக வெங்கூசா என்பவரிடம் சிஷ்யராகச் சேர்வது, வெங்கூசா சமாதி நிலையை அடைவது என்று  முக்கியமான நிகழ்ச்சிகள் நாடகத்தில் இடம்பெற்றுள்ளன. கொட்டும் மழையை சாய்பாபா தனது சக்தியின் மூலம் நிறுத்துவது, கொதிக்கும் கொதிகலனுக்குள் கையை விட்டு அரிசி வெந்துவிட்டதா என்று பார்ப்பது,  தீயில் சிக்கியக் குழந்தையை நெருப்புக்குள் கைவிட்டுக் காப்பாற்றுவது, தனது பக்தனின் வேண்டுகோளை நிறைவேற்ற தம்முடைய கால் கட்டை விரலிலிருந்து கங்கை நீரை வரவழைப்பது என்று ஒவ்வொரு காட்சியையும் தத்ரூபமாக நிகழ்த்தி பிரமிக்கச் செய்துள்ளனர்.

நாடகத்தின் இறுதியில் ஒருவன், தான் மனம் மாறிவிட்டதாகக் கூறி பாபாவிடம் ஆசி பெற வருவான். அவனது கன்னத்தில் அறைந்த பாபா, 'மதம் மாறினால் உனக்கு நல்லது நடக்கும்னு எவன்டா உபதேசிச்சது? உன்னோட கர்ம வினைகள் உன்னை சுத்தி வர்றப்ப யாராலயும், எந்த தெய்வத்தாலேயும் காப்பாத்த முடியாது. மதம் மாறி, நீ பிறந்த மதத்துக்கும் துரோகம் செஞ்சிட்ட, புது மதத்துக்கும் துரோகம் செஞ்சிட்ட. நீ துரோகி. என்னைவிட்டு போ' என்று பாபா கோபத்தோடு கத்திப் பேசும் காட்சியின்போது அரங்கில் எழும்பிய கரவொலி அடங்க வெகுநேரம் ஆனது. 

சாய்பாபாவாக நடித்த வர்ஷா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

தனது நாடக அனுபவம் குறித்து வர்ஷா கூறுகையில், ``சாய்பாபாவாக நடித்ததை அவரது அருளாகவே கருதுகிறேன். ஷீர்டி சென்று சாய்பாபாவை வணங்கிவிட்டு வந்த ஒரு வாரத்தில் எனக்குக் கிடைத்த அற்புத வாய்ப்பு இது. என் வாழ்நாளில் நடைபெற்ற முக்கியமான நிகழ்வு இது" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

சாய்பாபா நாடகத்தை இயக்கிய பாம்பே ஞானம், ``நாடகத்தில் நடித்த அனைவருமே சாய்பாபாவின் பக்தர்கள்தான். இது திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட  நாடகம் இல்லை. திடீரென்று தோன்றிய எண்ணம். சாய்பாபாவின் அருளால் இதை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறோம். எங்கள் குழுவின் ஐந்தாவது ஆன்மிக நாடகம் இது. இதற்கு முன்பு ரமணர், ஆதிசங்கரர், ஜெயதேவர், போதேந்திரா ஆகிய மகான்களின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக்கியிருக்கிறோம். இவர்களின் வரிசையில் சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றையும் இப்போது அனைவரும் அறியும் வகையில் நாடகமாக்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று நெகிழ்ச்சியாகக் கூறினார்.

சாய் பாபாவின் 'நூற்றாண்டு சமாதி தினத்தை' முன்னிட்டு  சென்னை ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் 19-ம் தேதி வரை தினமும்  இரவு 7 மணிக்கு சாய்பாபா நாடகம் நடைபெறவிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு