Published:Updated:

உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் மடி ஸ்நானாவைத் தொடர்ந்து ஏதே ஸ்நானாவுக்கும் தடை!

உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் மடி ஸ்நானாவைத் தொடர்ந்து ஏதே ஸ்நானாவுக்கும் தடை!
உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் மடி ஸ்நானாவைத் தொடர்ந்து ஏதே ஸ்நானாவுக்கும் தடை!

கர்நாடக மாவட்டம், உடுப்பியில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் நடைபெற்று வந்த சுப்ரமணிய சாஸ்திரி விழாவில் ஏதே ஸ்நான என்ற வழிபாட்டு முறைக்குப் பரியாய பாலிமர் மடம் தடை விதித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குமுன் தடைசெய்யப்பட்ட மடி ஸ்நானம் என்ற வழிபாட்டுமுறைக்குப் பதிலாகக் கொண்டுவரப்பட்டதுதான் ஏதே ஸ்நானம்.  இப்போது அதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.


மடி ஸ்நானம் என்பது பிராமணர்கள் மதிய உணவு சாப்பிட்ட எச்சில் இலைகளில் பழங்குடி மக்களும் பட்டியலின மக்களும் உருளும் விழாவாகும். ஏதே ஸ்நானமும் இதே முறையிலான விழாதான். ஆனால், இதில் தெய்வங்களுக்கு உணவு  படைக்கப்பட்ட இலைகளின்மீது பக்தர்கள் உருண்டு வருவார்கள். அப்படி பக்தர்கள் உருண்ட இலைகளைப் பிரசாதம் என்கின்றனர். பக்தர்கள் உருண்ட பின்னர் அந்த இலைப் பிரசாதங்களை எடுத்துப் பசுக்களுக்குக் கொடுப்பதன்மூலம் இந்த வழிபாட்டு முறை நிறைவுபெறும்.

பர்யாய பாலிமர் மடத்தின் ஸ்ரீவித்யதேச தீர்த்த ஸ்வாமி இரண்டு ஆண்டுகளுக்குமுன் இந்த மடி ஸ்நானம் தடை செய்யப்படுவதாக அறிவித்ததோடு ஏதே ஸ்நானம் தொடரும் என்று அறிவித்தார். இந்த வழிபாட்டுமுறை பல்வேறு சர்ச்சைகளுக்கும் ஊடகங்களில் பெரிய அளவில் விவாதத்துக்கும் உள்ளானதால் ஏதே ஸ்நானமும் இப்போது தடை செய்யப்பட்டுள்ளது. ``பொதுமக்களின் நலனுக்காகவே இதுபோன்ற பூஜைகள் செய்யப்படுகின்றன. ஆனால், தேவையற்ற சர்ச்சைகள் எழுவதால் அதைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார் ஸ்ரீ வித்யதேச தீர்த்த ஸ்வாமி.

இந்தத் தடையைத் தொடர்ந்து இதற்கு மாற்றாகக் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும் என்று மடத்தின் சார்பாக அறிவித்துள்ளனர். இந்த முடிவு அறிவிக்கப்பட்ட பின்னரும் நேற்று (14.12.2018) தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் உள்ள குக்கே சுப்ரமணியன் கோயிலில் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த பூஜையில் கலந்துகொண்டிருந்திருக்கின்றனர்.


மடி ஸ்நானத்துக்குக் கடந்த சில ஆண்டுகளாகவே பலமான எதிர்ப்புகள் எழுந்தன. இப்படி எதிர்ப்புகள் இருந்தபோதும் சிலர் அந்த பூஜை தங்களின் தோல் வியாதிகள் மற்றும் சில வியாதிகளைக் குணப்படுத்த உதவுவதாகக் கூறியுள்ளனர். பல பக்தர்கள் மடி ஸ்நானாவை ஒரு வேண்டுதலாகவே செய்கின்றனர்.

2017-ல் கர்நாடக அரசு மனித உரிமை மீறலைத் தடுத்தல் மற்றும் மந்திர தந்திரங்களை தடுத்தல் என்ற சட்டத்தின்கீழ் மடி ஸ்நானாவைத் தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.