Published:Updated:

செல்வ வளம் அருளும் அமிர்தகலச அபிஷேகம் - அனுவாவி ஆஞ்சநேயர்கோயிலில் அனுமத் ஜயந்தி!

செல்வ வளம் அருளும் அமிர்தகலச அபிஷேகம் - அனுவாவி ஆஞ்சநேயர்கோயிலில் அனுமத் ஜயந்தி!
செல்வ வளம் அருளும் அமிர்தகலச அபிஷேகம் - அனுவாவி ஆஞ்சநேயர்கோயிலில் அனுமத் ஜயந்தி!

தேனினால் அபிஷேகம் செய்து வழிபட ஆஞ்சநேயர் அருள் கிடைக்கும். செல்வச் செழிப்பு அதிகரிக்கும். சனிபகவான் பார்வையால் ஏற்படக்கூடிய கஷ்டங்கள் விலகி நன்மை உண்டாகும்.

ராம ராவண யுத்தம் உக்கிரமாக நடந்துகொண்டிருந்தது. ராவணனின் மைந்தன் இந்திரஜித் அசுர சேனைகளின் தலைமை ஏற்று யுத்தக் களம் புகுந்தான். இளைய பெருமாளான லட்சுமணருக்கும் இந்திரஜித்துக்கும் கடும் போர் மூண்டது. இந்திரஜித் பிரம்மாஸ்திரத்தை லட்சுமணர் மீது  எய்தினான்.

பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்டு இளைய பெருமாள் மூர்ச்சையானார். அகிலத்துக்கெல்லாம் அருமருந்தான ஶ்ரீராமச்சந்திரமூர்த்தி, அனுமனின் மாட்சியை விளக்கச் சித்தம் கொண்டார். சகோதரனின் நிலை கண்டு அண்ணலும் வருந்துபவர் போலானார். 

அப்போது ஜாம்பவான் சஞ்சீவி மூலிகையைக் கொணர்ந்தால் இளைய பெருமாளின் மயக்கம் தெளிவிக்கலாம் என்று கூற அனுமன் ஒரு நொடியும் தாமதியாமல் ராம நாம ஜெபம் செய்து விண்ணேகி சஞ்சீவி மலையை அடைந்தார். மருந்துகள் நிறைந்த அந்த அற்புத மலையில் எது ஜாம்பவான் குறிப்பிட்ட மூலிகை என்பதைக் கண்டுபிடிக்க முடியாததால் அனுமன் அந்த மலையையே பெயர்த்து எடுத்துக்கொண்டு பறந்துவந்தார்.
திரும்பிவரும் வழியில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்கு மேல் பறந்துகொண்டிருந்தபோது அனுமனுக்குத் தண்ணீர் தாகம் ஏற்பட்டது. அனுமன் எங்கு தேடியும் அந்த மலையில் தண்ணீர் கிடைக்கவில்லை. கங்கையைத் தலையில் கொண்ட சிவபெருமானை மனதுள் தியானித்தார் அனுமன். தனது அம்சமான அனுமனின் தாகத்தைப் போக்குமாறு சிவன், தனது மைந்தன் முருகனை நோக்கி அனுமனின் தாகம் தணிக்க ஒரு வாவி உண்டாக்கு என்றார். வாவி என்றால் நீரூற்று. முருகக்கடவுளும் தன் கைவேல் கொண்டு மலை ஒன்றில் குத்த அங்கு ஓர் ஊற்று உருவானது. அந்த ஊற்றில் நீரருந்தி அனுமன் தன் தாகம் தீர்த்தார். அனுமன் வாவியில் நீரருந்தியதால் அந்த இடத்துக்கு  அனுமன்வாவி என்று பெயர் வந்தது. அதுவே பின்மருவி அனுவாவியானது.


தாகம் தணிந்த அனுமன், முருகக் கடவுளை நோக்கி, இந்த இடத்தில் வள்ளி தெய்வானையுடன் கோயில் கொண்டு அனுவாவி சுப்ரமணியராக பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்குக் கருணையே வடிவான முருகக் கடவுளும் இசைந்தார். அனுமன் தனது விஸ்வரூப தரிசனத்தை முருகனுக்குக் காட்டிப் பின் சஞ்சீவி மலையோடு மீண்டும் இலங்கைக்குப் பயணமானார் என்கிறது புராணம்.


 இத்தகைய புராணப் பெருமை பெற்ற தலம் கோவை மாவட்டம் பெரிய தடாகம் பகுதியில் அமைந்துள்ளது. மலைமீது அனுமனுக்கு வாக்களித்தபடி முருகக்கடவுள் அனுவாவி சுப்ரமணியராக வள்ளி தேவசேனா சமேதராக அருள்பாலிக்கிறார்.

மலையடிவாரத்தில் ஆஞ்சநேயருக்கு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர் 45 அடி உயரம் கொண்டு விஸ்வரூப தரிசனக் கோலத்தில் காட்சி தருகிறார்.  ஆலய நந்தவனத்தில் ஶ்ரீராமர் பாதமும் அமைக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் இங்கு அனுமத் ஜயந்தி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 4, 5, 6 ஆகிய தேதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. 1008 கலச பூஜையும் 108 அமிர்த கலச அபிஷேகமும் நடைபெற உள்ளது.  அமிர்த கலசம் என்றால் தேன் நிரப்பப்பட்ட வெள்ளிக் கலசம் என்று பொருள்.  

அபிஷேகங்களில் தேன் அபிஷேகம் விசேஷமானது. அனுமனுக்குத் தேனினால் அபிஷேகம் செய்து வழிபட அன்னை மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். செல்வச் செழிப்பு அதிகரிக்கும். சனிபகவான் பார்வையால் ஏற்படக்கூடிய கஷ்டங்கள் விலகி நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை.

விஸ்வரூப தரிசனம் தரும் அனுவாவி ஆஞ்சநேயருக்கு அமிர்தகலச அபிஷேகத்தைக் கண்டு வழிபடக் கல்வி, செல்வம் கிட்டி நல்லருள் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

அனுமத் ஜயந்தி பண்டிகை நாள்களில் ஶ்ரீராமர் பாதத்துக்கு பக்தர்கள் பூஜைசெய்யவும் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் அனுமத் ஜயந்தி நன்னாளான இன்று விஸ்வரூப அனுமனை வழிபட்டு சகல செல்வங்களையும் பெறலாம். வேண்டுகிறோம்.

செல்லும் வழி : கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 11A, 26A என்ற பேருந்துகள் மூலமாக பெரிய தடாகம், ஸ்ரீஅனுவாவி ஆஞ்சநேயர் நந்தவனத்தை அடையலாம்.

அடுத்த கட்டுரைக்கு