Published:Updated:

செந்தாமரை போன்ற விழிகளைத் திறந்து எம் துயர் தீர்ப்பாய் கண்ணா..! திருப்பாவை - 22

செந்தாமரை போன்ற விழிகளைத் திறந்து எம் துயர் தீர்ப்பாய் கண்ணா..! திருப்பாவை - 22
செந்தாமரை போன்ற விழிகளைத் திறந்து எம் துயர் தீர்ப்பாய் கண்ணா..! திருப்பாவை - 22

பகல் - இரவைத் தோற்றுவிப்பவனும், தன் நித்திய கடமைகளில் சற்றும் தவறாதவனும், பூமி தோன்றுவதற்கு முன்பே தோன்றியவனுமான சூரியன், ஒளி வீசும் அழகுடன் திகழ்ந்தான். அவனுடைய அழகைக் கண்டு பொறாமை கொண்ட அசுரர்கள், அவன் செல்லும் வழியெல்லாம் இடையூறு செய்தார்கள்.


"அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கமி ருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்...


'அகிலத்து அரசர்கள் அனைவரும், தங்கள் ஆணவம் தொலைத்தவர்களாக, உன்னுடைய அரியணையின் கீழே ஒன்று சேர்ந்து நிற்பதுபோல், நாங்களும் எங்களுடைய மன மாயையைகள் அத்தனையும் தொலைத்தவர்களாக, உன்னைச் சரணடைந்து, இதோ இப்போது நீ கண்விழிப்ப தற்காகக் காத்திருக்கிறோம். சற்றே வாய் பிளந்த சலங்கை போல, பாதி மலர்ந்த செந்தாமரை போன்ற சிவந்த கண்களை உடையவனே, உன் இருவிழிப் பார்வை எங்கள் மேல் படாதா..? சூரிய சந்திரர்கள் ஒரே நேரத்தில் உதயமாவது போல், இரு விழிகளால் நீ எங்களைப் பார்த்தால், எங்கள் பாவங்கள் அகன்றுவிடுமே... அன்பு கூர்ந்து விழித்திடுவாய் எம் பெருமானே' என்று கண்ணனைத் துயிலெழுப்புகிறாள் கோதை!

பாதி மலர்ந்த செந்தாமரை போன்ற கண்களை உடையவனாம் கண்ணன். அனந்த கல்யாண குணங்கள் பொருந்தியவனாம் கண்ணன். அதுமட்டுமா? அவனுடைய திருமேனியழகை திருவடி முதல் திருமுடி வரை தரிசிப்பவர்கள், உடனே அவனுக்கு அடிமையாகிவிடுவார்களாம்! 
எத்தனையோ மலர்கள் இருக்கும்போது, கண்ணனை தாமரைக் கண்ணன் என்று கோதை அழைப்பதற்குக் காரணம், தாமரை மலருக்கு அத்தனை சிறப்புகள் இருப்பதால்தானாம். 
பரந்தாமனின் தேவியான மகாலட்சுமி வாசம் செய்யும் மலர் அல்லவா செந்தாமரை?! மகாலட்சுமியின் வாசஸ்தலம் மட்டுமல்ல, அந்த மகாலட்சுமியே தாமரைதான் என்கிறது ஒரு கதை...

பகல் - இரவைத் தோற்றுவிப்பவனும், தன் நித்திய கடமைகளில் சற்றும் தவறாதவனும், பூமி தோன்றுவதற்கு முன்பே தோன்றியவனுமான சூரியன், ஒளி வீசும் அழகுடன் திகழ்ந்தான். அவனுடைய அழகைக் கண்டு பொறாமை கொண்ட அசுரர்கள், அவன் செல்லும் வழியெல்லாம் இடையூறு செய்தார்கள்.
மனம் வருந்திய சூரியன், மகாவிஷ்ணுவைச் சரணடைந்தான். சூரியனின் துன்பத்தைப் போக்க நினைத்த விஷ்ணு மூர்த்தி, தாமே சூரியநாராயணராக வடிவெடுத்து, அதிகாலைக் கீழ்வானில் குங்கும வண்ணத்தில் பிரகாசிக்கத் தொடங்கினார். அவரைச் சூரியன் என்று நினைத்த அசுரர்கள், அவரிடமும் வம்பு செய்தனர். அவர்களைத் தம் சக்கராயுதத்தால் வதம் செய்தார் மகாவிஷ்ணு. 

சூரியநாராயணரின் சிவந்த பேரழகைக் கண்டு மயங்கிய மகாலட்சுமி, தன் நாயகனின் அழகு வடிவத்தை தரிசிக்கக் கண்கள் இரண்டு போதாது என்று நினைத்து, கோடிக்கணக்கான செந்தாமரை மலர்களாக பூமியில் மலர்ந்து, பெருமானின் பேரழகை தரிசித்தாளாம். இதனால்தான், செஞ்சூரியன் வானில் தோன்றும்போது செந்தாமரை மலர்கிறது போலும்! இந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான், ஆரோக்கியமும் செல்வமும் பெற மகாலட்சுமி தேவியை செந்தாமரை மலர்களால் அர்ச்சிக்க ஆரம்பித்தனர் என்று கூறப்படுகிறது.
கண்ணனின் கண்கள்தான் தாமரை என்றால், அவன் திருக்கரத்திலும் தாமரை... அவனுடைய திருமார்பை அலங்கரிக்கும் மகாலட்சுமியும் செந்தாமரை வடிவாகவும், செந்தாமரையில் அமர்ந்தவளாகவும் திகழ்பவள்... கண்ணன் அவன் திருவடிகளும் தாமரைப் பாதங்கள்! அந்த அளவுக்குத் தாமரை மலருக்குச் சிறப்புச் சேர்த்தவன் கண்ணன்.


தாமரைப் பூவில் வெண்மை, சிவப்பு, மஞ்சள் எனப் பல நிறங்கள் உண்டு என்றாலும், செந்தாமரையே அவனுடைய பிரியத்துக்கு உகந்த மலராகும். 
இறைவனுக்கு நாம் வெள்ளைத் தாமரைகளால் அர்ச்சனை செய்யும்போது நம் வேண்டுதல்களை இறைவனிடம் கொண்டு சேர்க்கும்; மஞ்சள் நிறத் தாமரைகள் நம் நன்றியைத் தெரிவிக்கும்; செந்தாமரை மலர்களோ நம் துன்பங்களைக் கடவுளிடம் எடுத்துச் சொல்லுமாம்!
முசுகுந்தச் சக்கரவர்த்தியை தாமரையாகத் தன் திருக்கரத்தில் ஏந்தியவன் கண்ணன்...
பிரம்மதேவரும் திருமாலின் நாபியிலிருந்து தோன்றிய தாமரை மலரில் தோன்றியவர்தான்!
தாமரையின் அழகிலும் நறுமணத்திலும் திருமால் மனதைப் பறிகொடுத்த ஒரு செய்தியும் சொல்லப்படுகிறது. 
சுப்ரபன் என்ற திருமால் பக்தன், தன் சங்கடங்கள் தீரவேண்டி, தினமும் தூய்மையும், பேரழகும், நறுமணமும் வாய்ந்த தாமரை மலர்களைக் கொண்டு  இறைவனை அர்ச்சித்து வந்தானாம். அவன் அர்ச்சித்த மலர்களின் அழகிலும், வாசனையிலும் மயங்கிய இறைவன், இத்தனை சிறப்பான மலர்களை சுப்ரபன் எங்கிருந்து பறித்து வருகிறான் என்பதை அறிவதற்காக, ஒருநாள் அவனைத் தொடர்ந்து சென்றார். 
அருகில் இருந்த பொய்கைக்குச் சென்ற சுப்ரபன், பக்திப் பரவசத்துடன் தாமரை மலர்களைப் பறிக்கும் அழகில் லயித்துவிட்ட திருமால், பொய்கைக் கரையிலேயே அமர்ந்துவிட்டாராம்! மலர்களைப் பறித்துக் கொண்டு கரைக்குத் திரும்பிய சுப்ரபன், அங்கே திருமால் அமர்ந்திருக்கக் கண்டு பதற்றமாகி, ''ஐயனே, தாங்கள் ஏன் இங்கு வந்திருக்கிறீர்கள், என் பூஜையில் ஏதேனும் குறை உள்ளதோ?'' என்று கேட்டான்.


திருமால், ''நீ எனக்கு அர்ப்பணிக்கக் கொண்டு வரும் தாமரை மலர்களைக் கொஞ்சம்கூட வாடாமல் பார்க்கவேண்டும் என்பதற்காகவே உன்னைத் தொடர்ந்து வந்தேன்'' என்று சொல்லி, அந்த பக்தனுக்கு அங்கேயே அருள்புரிந்து ஆட்கொண்டாராம் திருமால்.
மருத்துவ ரீதியாகவும்,  தாமரை பல மருத்துவப் பண்புகளைக் கொண்டிருக்கிறது.
தாமரை மலரில் புரதச்சத்து, லினோலிக் அமிலம், பாஸ்ஃபரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி, தாமிரச்சத்து, மாங்கனீஸ் போன்றவை காணப்படுவதுடன், தாமரையின் தண்டுகளிலுள்ள நீர்ச்சத்தும் நார்ச்சத்தும், நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு, ரத்த சோகை, மன அழுத்தம் போன்றவற்றைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

தாமரையின் இதழ்கள் உடல் வெப்பத்தால் ஏற்படும் கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் போன்ற கண் நோய்களுக்குப் பயன்படுகின்றன. மேலும், தாமரை மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியைத் தூண்டுகிறது. நரம்புகளுக்கு பலம் கொடுக்கிறது என்று சித்த மருத்துவமும் கூறுகிறது...
இத்தனை சிறப்பு கொண்ட தாமரையை, குறிப்பாக நம் துன்பங்களை இறைவனிடம் எடுத்துச் சொல்லும் தன்மையுடைய செந்தாமரையை கண்ணனின் இரு விழிகளுக்கு உவமையாகச் சொல்கிறாள் கோதை.
'செந்தாமரை மலர் போன்ற கண்களை உடைய கண்ணனே, உன்னை விட்டுப் பிரியாமல் இருக்கவேண்டும் என்று விரும்பி, உன் புகழ் பாட வந்துள்ளோம் விழித்தெழுவாய்' என்று வேண்டிப் பாடுகிறாள் கோதை!

அடுத்த கட்டுரைக்கு