Published:Updated:

தன்னைப் பணியாத எதிரிகளை வெற்றிகொள்ளும் கோவிந்தனே... எமக்கும் அருள் புரிவாய்! திருப்பாவை -27

நீ தரும் புத்தாடைகளை அணிந்து இந்த விரதத்தை நிறைவு செய்யும் வகையில், உன்னுடன் கூடி அமர்ந்து முழங்கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்" என்று பாடுகிறாள் கோதை.;';

தன்னைப் பணியாத எதிரிகளை வெற்றிகொள்ளும் கோவிந்தனே... எமக்கும் அருள் புரிவாய்! திருப்பாவை -27
தன்னைப் பணியாத எதிரிகளை வெற்றிகொள்ளும் கோவிந்தனே... எமக்கும் அருள் புரிவாய்! திருப்பாவை -27


"கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா உன்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை யுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்..! -திருப்பாவை

``தன்னைப் பணியாத எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே.. உன்னைப் பாடி அருள் பெற வந்துள்ளோம். நாடு வியந்து போற்றும் பரிசுகளான, கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் தோள் வளைகள், காதில் அணியும் தோடுகள் ஆகிய அணிகலன்களை எங்களுக்குத் தருவாயாக. மேலும், நீ தரும் புத்தாடைகளை அணிந்து இந்த விரதத்தை நிறைவு செய்யும் வகையில், உன்னுடன் கூடி அமர்ந்து முழங்கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்" என்று பாடுகிறாள் கோதை.


``கூடாரவல்லி.."
மார்கழி 27-ம் நாளான இன்று, பாவை நோன்பிலேயே, மிகச் சிறப்பு வாய்ந்த நாளாகும். ஆம், பரந்தாமன் இன்றுதான் ஆண்டாளுக்கு அருள்புரிந்த திருநாளாகும்.
ஆண்டாள் இதுவரை, 'நெய்யுண்ணோம்... பாலுண்ணோம்...' என்று பசி மறந்து, தூக்கம் மறந்து இறைவனைப் பாடித் துதித்தவள்,  இன்று கிண்ணத்தில் பால் சாதம் மூழ்கும் அளவுக்கு நெய் விட்டுச் சாப்பிடுவோம் என  `பாற்சோறு மூடநெய் பெய்து...' என்று மகிழ்வில் திளைக்கிறாள்..
மனிதனுடைய பரம எதிரி பசிதான் என்கின்றன வேதங்கள். 
தன் நிலையை மறக்கச் செய்து, அறத்தையும் மீறச் செய்வது பசி. ஆனால், அந்தப் பசி என்ற கண்ணுக்குத் தெரியாத எதிரியை, விரதம் என்ற உண்ணாநோன்பின் வாயிலாக நம் மனதால் அதைக் கட்டுப்பட வைப்பவன் கண்ணன். 
மனதை மட்டுமல்ல... நம் உடலையும், நோயின்றி சுறுசுறுப்புடன் கட்டுக்குள் வைத்திட உண்ணா நோன்பே பெரிதும் உதவுகிறது என்கிறது மருத்துவ அறிவியல்.
'Most effective Biological method of treatment' என்று மருத்துவர்களால் கொண்டாடப்படும் இதுபோன்ற விரத முறைகள், பல்வேறு நோய்களுக்கு மாமருந்தாகவும் திகழ்கின்றன. அனைத்து மதங்களிலும், வாரம் ஒருமுறை, மாதம் ஒருமுறை அல்லது மாதம் முழுவதும் என விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன..


மருத்துவ ரீதியாக, உண்ணா நோன்பின்போது முதலில் உடலின் அதிகப்படியான கொழுப்பு அளவுகளும், சர்க்கரை அளவும் கட்டுக்குள் வருவதுடன், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளும், கல்லீரலில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் சர்க்கரையும் எரிசக்தியாக மாறுவதால் உடலின் எடை குறைகிறது.  (Glycogenolysis & Neoglucogenesis).  
மேலும், உண்ணாநோன்பு கல்லீரல், கணையம் ஆகியவற்றின் நொதி சுரப்பிகளை நன்கு கட்டுப்படுத்துவதுடன், செல்களின் வீக்கத்தைக் குறைப்பதால் இரைப்பை, சிறுகுடல் மற்றும் பெருங்குடலுக்குத் தேவையான ஓய்வையும் அளிக்கிறது. கூடவே இந்த விரதமுறைகள், வாழ்க்கை முறையினால் உருவாகும் நோய்களான நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், மாரடைப்பு, உடற்பருமன், புற்றுநோய்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி, நோயெதிர்ப்புச் சக்தியையும் அதிகரித்து மனிதனின் ஆயுட்காலத்தைக் கூட்டுகிறது .


அதிமுக்கியமாக, இந்த உண்ணா நோன்பு  நியூரான்களின் உற்பத்தியைப் பெருக்கி, மனித வளர்ச்சிக்கான Growth Hormone அளவை சீராகச் சுரக்க வைப்பதுடன், Endorphins எனப்படும் சுரப்பிகளையும் அதிகரிக்கச் செய்வதால், ஞாபகத்திறனை அதிகரிக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தையும் தருகிறது. மனிதனை எந்நேரமும் சுறுசுறுப்புடன், இளமையுடன் வாழச் செய்கிறது என்கிறது மருத்துவ அறிவியல்.
மாதம் முழுவதும் நோன்பிருந்து, திருமாலின் நாமாவளியைப் பாடிய ஆயர்குலப் பெண்கள் இன்று... `பாற்சோறு மூடநெய் பெய்து..', அது முழங்கை வழியாக ஓடி வழி அமைக்கும் அளவுக்குச் செய்த அக்கார அடிசிலை சீர்கோவிந்தனுக்கு  அமுதாகப் படைக்கின்றனராம். ஆனால், பால் சோறு படைத்தால் உடனே சாப்பிட்டு விடுபவனா கண்ணன்.? அதிலும் சில திருவிளையாடல்களை செய்தல்லவா பார்ப்பான்..! 


பக்தனிடம் எப்போதும் விளையாடும் கண்ணன், தனது சகி ராதையுடனும் பசியை வைத்து விளையாடிய சுவாரஸ்யமான கதை ஒன்று உள்ளது.
காற்று இதமாக வீசிக் கொண்டிருந்த முன்னிரவில், நாள் முழுவதும் பணிசெய்து ஓய்ந்திருந்த ராதை, சிறிது ஒய்வாகக் கண்ணன் அருகில் அமர்ந்து, அவன் தலையில் சூடியிருந்த மயில்பீலி காற்றில் படபடக்கும் அழகை ரசித்தாள்.
ஆழ்ந்த யோசனையில் இருந்த கண்ணன் திடீரென்று,  ``பசிக்கிறதே... உண்ண எதுவும் இருக்கிறதா.?" என்று கேட்டான். 
ஓய்வெடுக்க வந்த ராதை ஓடிப்போய் புதிதாய்ச் சமைத்து எடுத்து வந்து, 'பரிமாறவா.?' என்று கேட்ட ராதையைப் பார்த்தான் கண்ணன்.
``எனக்கா பரிமாறுகிறாய்..? எனக்குத்தான் பசிக்கவேயில்லையே.!" என்று கூறி யமுனையை நோக்கிக் கையை நீட்டினான்.
``அதோ, அந்தக் கரையில் ஒரு மரத்தடியில் இருக்கிறாரே துர்வாசர்... அவர்தான் பசியுடன் இருக்கிறார். போய்ப் பரிமாறிவிட்டு வா.!" என்றான்.
தனக்குப் பசிக்கிறது என்று பொய் சொல்லி விட்டானே இந்தக் கண்ணன் என்று மனதுக்குள் பொருமியபடி,  
``அவருக்கு பசிக்கிறது என்று உங்களிடம் சொன்னாரா..?" என்று கோபத்துடன் ராதை அங்கலாய்த்தாள்.  
``ராதே.. என் மனதில் நீ இருக்கிறாய். அவர் மனதில் நான் இருக்கிறேன்...  அவ்வளவுதான். போ, போய்ப் பரிமாறி விட்டு வா!" என்று சொல்ல, வேறு வழியின்றி உணவை எடுத்துக்கொண்டு, கணுக்காலளவு நீர்தான் இருந்த யமுனை நதியில் இறங்கி நடந்து, அக்கரையை அடைந்தாள் ராதை.
துர்வாச ரிஷிக்கு உணவு பரிமாறினாள். அவரும் கண்ணனுக்கு நன்றி சொல்லியபடி, இலையில் படைத்ததை, முழுமையாக உண்டார்.  வயிறார உண்டு முடித்து, நன்றியும், வாழ்த்தும் கூறிய துர்வாசரிடம் விடைபெற்றுக்கொண்டு திரும்பினாள் ராதை.
என்ன மாயம்? வரும்போது காலளவு இருந்த யமுனை சட்டென உயர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ராதை திகைத்தாள். மானசீகமாக தனது மணாளனை அழைத்து, மறுகரைக்குத் திரும்ப உதவும்படி கேட்டாள்.
மாயக்கண்ணனோ மனதுள் அந்தக் காட்சியைக் கண்டு சிரித்துக்கொண்டே, 

``ராதா, நீ யமுனையிடம்,  `இப்போது உணவு உண்ட துர்வாசர் இன்னும் பட்டினியாக இருப்பது உண்மையானால் எனக்கு வழிவிடு யமுனையே.!' என்று கூறு. அவள் உனக்கு வழிவிடுவாள்" என்று கூறினான். 
ராதைக்குக் கோபம் வந்தது. 
``என்ன விளையாடுகிறாயா கண்ணா..? இப்போதுதானே நான்  உணவைப் பரிமாறி துர்வாசர் வயிறார உண்டார்..? அப்படியிருக்க யமுனையிடம் இப்படியொரு பொய்யைச் சொல்லச் சொல்கிறாயே..? என்று கண்ணனிடம் கேட்டாள். 
மறுமொழியாகக் கண்ணன்,  `` ராதா, அது பொய்யா, நிஜமா என்பதை யமுனையே முடிவு செய்து கொள்ளட்டும்... நான் சொல்வதை மட்டும் நீ நதியிடம் சொல்.." என்கிறான்.
ராதைக்கு வேறு வழி...கண்ணன் சொன்னபடி யமுனையிடம் கூறினாள். என்ன வியப்பு... யமுனை இரண்டாகப் பிளந்து ராதை நடந்துசெல்ல வழிவிட்டது. 
யமுனையைக் கடந்து  கண்ணனிடம் வந்த ராதை கோபத்துடன், 
``உன் பொய்க்கு அளவே இல்லையா கண்ணா..? பசிக்கிறது என்றாய், ஓடிச் சென்று உணவை எடுத்து வந்தால், பசியில்லை என்றாய். பிறகு, பக்தனுக்குப் பசிக்கிறது என்றாய். அவருக்குப் பரிமாறி பசியாற்றிய பின்பும் அவர் உண்ணவில்லை என்கிறாய். உன் பொய்களுக்கு இந்த நதியுமல்லவா துணைபோகின்றது..!" என்று  கேட்டாள். 
அப்போதும் சிரித்தபடி கண்ணன்,

``நதிகள் எப்போதும் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்கும். இப்போதும் துர்வாசர் பசியோடிருக்கிறார் என்பது உண்மைதான்.. பசியோடிருந்த துர்வாசருக்கு, நீ அந்த உணவைப் படைத்தாய்... ஆனால் துர்வாசரோ, அதை எனக்குப் படைத்தபடி சாப்பிட்டார். அவர் என்னையே நினைத்தபடி உண்டதால், அவர் இன்னும்கூடப் பசியோடுதான் இருக்கிறார். எனக்குத்தான் பசியாறி விட்டது. என் பக்தர்களின் பக்தியால்தான் எனக்கு எப்போதும் பலம் கூடுகிறது. அவர் உண்ட உணவின் பலம் இப்போது என் உடலில் கூடிவிட்டது பார்..." என்றார்.
ராதை தான் அறியாத ரகசியத்தை யமுனை அறிந்திருந்தது கண்டு வியந்தாள்.
துர்வாசர் மட்டுமா... பரந்தாமனின் பக்தர்கள் அனைவரும் `சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.!' என்றுதான் உண்ணும் முன் சொல்கின்றனர்.  
இப்படி எதையும் கடவுளுக்குப் படைத்துச் செய்வதில் ஒரு பயன் இருக்கிறது. அப்படிச் செய்பவன் காரியத்தின் கர்த்தாவாக இல்லாமல் கருவி ஆகிறான். குறி தப்பிவிட்டது என்று அம்பு என்றுமே வருத்தப்படுவதில்லை. வருத்தமெல்லாம் எய்தவனுக்குத்தான். 
அதேபோல, வெற்றியோ தோல்வியோ, இறைவனுக்கே அது சமர்ப்பணம் என நினைத்துச் செய்பவனை எந்தத் துன்பமும் பாதிப்பதில்லை. ஏனெனில் அவனுக்கு நேரும் துன்பத்தையெல்லாம் அவன் இதயத்தின் உள்ளிருக்கும் இறைவன் தாங்கிக்கொண்டு விடுகிறான். 

எந்தவொரு செயலையும் கடவுளுக்குச் சமர்ப்பித்த பின்னரே தொடங்கும்போது, அது  ஆண்டவனுக்கு படைக்கத் தகுந்ததுதானா எனும் ஒரு சீர்தூக்கல் வருகிறது. 
தொடர்ந்து  இறைவனுக்குச் சமர்ப்பிக்கும் முன்பாக செய்யப்படும் இந்தச் சீர்தூக்கல்,  பிழைகளைத் தவிர்த்து  நல்லதை மட்டுமே செய்யத் தலைப்படுதல் என்ற வாழ்க்கைமுறை ஆகிறது. 
அல்லன தவிர்த்து நல்லன செய்தலே, ஆண்டவனுக்குச் சமர்ப்பிப்பதன் அடிப்படைக் காரணமாகும். 
இப்படி எதிரிகளை மட்டுமல்ல, எதிரிகளாக நம்முள் இருக்கும் தீயகுணங்களையும் வென்று ஆட்கொள்ளும் இறைவனாம், கூடாரை வென்றவனான கோவிந்தனைப் பற்றி கோதை பாடியதால் இந்தப் பாசுரத்தின் பெயரை `கூடாரவல்லி' என்று அழைக்கின்றனர்.
`உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையெல்லாம் கண்ணன்'
என்று அனைத்தையும் கண்ணனாகப் பார்த்த கோதை, தான் படைத்த உணவை ஏற்றுகொள்ள ``கூடியிருந்து குளிர்ந்தேலோர்..." என்று கண்ணனை அழைத்து ஏற்றுக்கொள்ள வேண்டுகிறாள் கோதை..!!