ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!

ந்த ஒரு விஷயத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் முக்கியம். அந்த ஆர்வம் இருந்தால்தான், ஆழ்ந்த ஈடுபாட்டுடன் அதனைச் செவ்வனே கற்றறிய முடியும். அப்பா சொன்னார் என்று ஹிந்தி கிளாஸ் போவதோ, அம்மா ஆசைப்பட்டாள் என்று பாட்டு வகுப்புக்குச் செல்வதோ ஓர் ஆரம்பமாக இருக்கலாம். ஆனால், அடுத்தடுத்த கட்டங்களில், ஹிந்தியையும் பாட்டையும் கற்றுக்கொள்வதில், தனக்குள்ளாக ஓர் ஈடுபாடு வரவேண்டும் என்பதுதான் முக்கியம். அப்படி ஈடுபாடு வராவிட்டால், கற்றுக் கொள்வதற்கான நேரமும், பணமும், சொல்லிக் கொடுத்தவரின் உணர்வும் அங்கே விரயமாகிப் போகும்.

##~##
''அப்பாவுக்காகத்தான் ஹிந்தி கிளாஸ் போனேன். வேண்டா வெறுப்பாகத்தான் கற்றுக் கொண்டேன். எல்லாப் பாடங்களிலும் முதல் வகுப்பில் தேறினேன். பின்னாளில், வங்கி வேலை கிடைத்து டெல்லி, மும்பை என்று மாறுதலாகிப் போனபோது, என் பதின்மூன்று வயதில் அப்பாவின் ஆசைக்காக கற்றுக்கொண்ட ஹிந்தி ரொம்பவே கைகொடுத்தது'' என்று சொன்ன வங்கியின் உயர் அதிகாரியை நான் அறிவேன்.

அதேபோல்தான், அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணியும் என்னை வியக்க வைத்தார். மாயவரத்தைப் பூர்விகமாகக் கொண்ட அந்தப் பெண்மணியின் அம்மாவுக்குக் கர்னாடக சங்கீதம் என்றால் உயிராம். ஆனால் 13 வயதிலேயே திருமணம், 15-வது வயதில் குழந்தை என்று வாழ்க்கையே திசை மாறிப் போக, பாட்டு வகுப்புக்கும் போக முடியவில்லை; பாடகியாக வேண்டும் என்கிற ஆசையும் கனவாகிப் போனது. 'நம்மாலதான் பெரிய பாடகியாக வரமுடியலை. நம்ம பொண்ணாவது நல்லா பாட்டு கத்துக்கட்டும்’ என்று மகளை பாட்டு வகுப்புக்கு அனுப்பினாள். வேண்டாவெறுப்பாகச் சென்று, விருப்பமே இல்லாமல் ஸ்வரங்களை, ராகங்களை உள்வாங்கிக்கொண்ட அந்தப் பெண் பெரியவளாகி, திருமணம் செய்துகொண்டு, கணவருக்கு அமெரிக்காவில் வேலை கிடைக்க, அங்கே சென்று செட்டிலாகிவிட்டாள்.

வாழ்க வளமுடன்!

ஆனால், அமெரிக்காவில் அவளுக்குத் துணையாக இருந்தது எது தெரியுமா? பாடல்கள்தான். அந்தப் பாடல்களைக் கேட்கக் கேட்க... சிறுவயதில் கற்றுக்கொண்ட கர்னாடக சங்கீதம் நினைவுக்கு வந்தது. தனக்குத் தெரிந்த கீர்த்தனைகளை தனக்குள்ளாக அடிக்கடி பாடிப் பார்த்தாள். மெள்ள மெள்ள இசையின் மீது தன்னையறியாமலே ஒரு ஈடுபாடு வர... ஒரு கோடை விடுமுறையில் தமிழகத்துக்கு வந்தவள், பாட்டு வகுப்புக்குச் சென்று, தன் நினைவில் இருப்பதெல்லாம் சரியா என்று தனது பழைய பாட்டு டீச்சரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, திருத்தங்கள் தேவைப்பட்ட இடங்களில் திருத்திக்கொண்டு, பிறகு அமெரிக்காவுக்குத் திரும்பிச் சென்றாள். அவள் இப்போது அங்கே இருபது குழந்தைகளுக்கு சங்கீத வகுப்பு எடுக்கிறாளாம். 'இந்த இசை, ஏதோ மாயவரத்திலேயே நான் இருப்பதான உணர்வை ஏற்படுத்துகிறது சுவாமி’ என லயித்துச் சொன்னாள்.

வாழ்க வளமுடன்!

கற்றுக்கொள்ள எந்த ஆசையோ விருப்பமோ இல்லாமல், எந்த ஈடுபாடோ முனைப்போ காட்டாமல் இருந்தபோதிலும்கூட, கற்றுக்கொண்ட விஷயங்கள் இவர்களுக்கு எப்படி உதவியிருக்கிறது, பார்த்தீர்களா? அப்படியானால் ஒரு விஷயத்தை மிக உண்மையாகவும், நேர்மையாகவும், ஆழ்ந்த ஈடுபாட்டுடனும், ஆவலுடனும் கற்றுக்கொண்டால், அது எத்தகு நன்மைகளைத் தரும் என்பதை உணரமுடிகிறதுதானே உங்களால்?

மனவளக் கலைப் பயிற்சியும் அப்படித்தான். உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் கைகொடுக்கப் போகிற, பக்கபலமாக இருக்கப் போகிற பயிற்சி இது. கிட்டத்தட்ட ஆயுள்பரியந்தம் நமக்குள் உறவாடுகிற, நம்மை உயிர்ப்பிக்கிற பயிற்சி! இந்தப் பயிற்சியின் ஓர் அங்கமாக இருக்கிற மகராசனத்தைக் கூர்ந்து அறிந்துகொண்டால், நம் வீட்டையும் வாழ்க்கையையும் சொர்க்க பூமியாக மாற்றிக் கொள்ளலாம்.

முதலில், மல்லாந்து படுத்துக் கொள்ளுங்கள். கைகள் இரண்டையும் உங்கள் உடலில் இருந்து சுமார் 45 டிகிரி கோணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அப்போது நம் உள்ளங்கைகள் மேல்நோக்கியபடி, வானம் பார்த்தபடி இருக்கட்டும். பெருவிரலையும் அதாவது கட்டைவிரலையும் ஆள்காட்டி விரலையும் சின் முத்திரை காட்டியபடி வைத்துக் கொள்ளுங்கள். மகராசனத்தின் முதற் பகுதிப் பயிற்சி முழுவதும் இப்படி சின்முத்திரையிலேயே விரல்கள் இருக்கட்டும்.

நன்றாக, நேராகக் கால்களை நீட்டி, தலையை நேராக வைத்து, 45 டிகிரி கோணத்தில் கைகளை இரண்டு பக்கமும் வைத்து, விரல்களில் சின்முத்திரையுடன் இருக்கிறீர்களா? மெள்ளக் கண்களை மூடிக் கொள்ளுங்கள். நம் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் மனதால் நோட்டமிடுங்கள். அப்போது மெல்லியதாக ஒரு தெய்விகச் சக்தியானது உடலுள் நிரம்பிக் கொண்டிருப்பதை உணர்வீர்கள்.

நம் குதிகால்களும் கால்களின் கட்டைவிரல்களும் ஒட்டியிருக்கும்படி வைத்துக் கொள்ளுங்கள். பயிற்சி முடியும்வரை, கால்களைப் பிரிக்கவேண்டாம்; கைகளில் உள்ள சின்முத்திரையை எடுக்கவேண்டாம்.

இப்போது, தலையை வலப் புறமாகவும், இடுப்புப் பகுதியை இடப் புறமாகவும் திருப்புங்கள். வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் போது, தெருமுனை வந்துவிட்டால் என்ன செய்வோம்? சட்டென்று வேகத்தைக் குறைத்து, மெதுவாகத்தானே திரும்புவோம்! இங்கேயும் அப்படித்தான்... தலையைத் திருப்பும்போதும், இடுப்பைத் திருப்பும்போதும் வேகம் காட்டாமல், மெள்ள... மெதுவாக, மிகுந்த ஈடுபாட்டுடனும் ஒருவித லயத்துடனும் திருப்புங்கள். இங்கே ஒரு விஷயம்... இடுப்பை இடதுபுறமாகத் திருப்புகிறபோது, கட்டைவிரல்களும் குதிகால்களும் ஒட்டியபடி இருக்கிற நிலையிலேயே வைத்துக்கொண்டு, கால்களை அப்படியே இடது பக்கமாகத் திருப்புங்கள். அதாவது, தலை வலது புறம் திரும்ப... இடுப்பும் கால்களும் இடது பக்கம் திரும்பட்டும்.

வாழ்க வளமுடன்!

நம் தோள்பட்டைகள் அப்போது நம்மிடம் பேசும். புத்தி முழுவதும் தோள்பட்டை பற்றிய நினைப்புக்கு வந்துவிடும். ஏன் தெரியுமா? நம் உடலின் மொத்த எடையும் இப்போது தோள்பகுதிக்கு வந்து, அதுதான் நம்மைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே, தோள்பட்டை 'என்னை விட்டுடேன்’ என்று கெஞ்சும். கொஞ்ச நேரத்துக்கு விடாதீர்கள். 'நீ விடாட்டி போ’ என்று மூளைக்கு சமிக்ஞை செய்ய... சட்டென்று தோள்பட்டை தரையில் இருந்து எழுந்திருக்கப் பார்க்கும். ம்ஹூம்... சில விநாடிகள் வரைக்கும்கூட, நம் உடலின் பாகங்களை நாம் கட்டுப்படுத்தாவிட்டால், நம் உடற்பாகங்கள் நம் பேச்சைக் கேட்காவிட்டால், வாழ்நாள் முழுவதும் இந்த உடலுடன் நம் ஆத்மாவானது எப்படி குடித்தனம் நடத்தமுடியும்? கருத்து வேறுபாட்டில் கசமுசாவென்று சத்தமிட்டு, சண்டையிட்டுக் கொண்டிருக்கிற தம்பதி போலான வாழ்க்கை எத்தகு துயரமானது! அப்படியரு துயரத்துடன் நாம் வாழ வேண்டிய நிலையில் இருந்து விடுபட்டால்தானே, எல்லா நாளும் இனிய நாளாக நம் வாழ்வை நம்மால் அமைத்துக் கொள்ளமுடியும்.

எனவே, அந்தச் சில நிமிடங்கள் வரைக்கும், அதாவது மகராசனத்தில் இருந்தபடி, தலையை வலது பக்கம் திருப்பி, இடுப்பையும் கால்களையும் இடது பக்கம் திருப்பி வைத்துக் கொள்கிற அந்தத் தருணத்தில், தோள்பட்டையை தரையிலேயே படும்படி வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு, தோள்பட்டை உங்கள் வசமாகும். நினைத்த மாத்திரத்தில், நினைத்தபடி பாகங்களை இந்தப் பக்கம் அந்தப் பக்கம் என்று திருப்பமுடியும். விஷயத்தைப் புரிந்துகொண்டதும் தோள்பட்டை நம்மிடம் ஸாரி கேட்கும். 'என்ன சொல்றியோ... அதைச் செய்யறேன்’ என வாக்குறுதி தரும்.

'தோள் கொடுப்பான் தோழன்’ என்று சும்மாவா சொன்னார்கள்!

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா