Published:Updated:

பட்டி பெருகோணும்... பால் பொங்கி வழியோணும் ... மகிழ்ச்சி தரும் மாட்டுப்பொங்கல்

பட்டி பெருகோணும்... பால் பொங்கி வழியோணும் ... மகிழ்ச்சி தரும் மாட்டுப்பொங்கல்
பட்டி பெருகோணும்... பால் பொங்கி வழியோணும் ... மகிழ்ச்சி தரும் மாட்டுப்பொங்கல்

தமிழர்களின் பாரம்பர்யத் திருவிழாக்களில் முதன்மையானது பொங்கல் பண்டிகை. போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாள்கள் நடைபெறும் திருவிழாவாக பொங்கல் பண்டிகை அமைந்துள்ளது. 

மாடு என்றால் செல்வம் என்று பொருள். பண்டைய மக்கள் தங்கள் வாழ்வில் பசுக்களையும் காளைகளையுமே சிறந்த செல்வங்களாகப் போற்றி வந்தனர். ஒரு நாட்டின் மீது படையெடுக்க விரும்பும் மன்னன், முதலில் பகை நாட்டின் பசுக் கூட்டங்களைக் கவர்ந்துவருவான்.  இதற்கு 'ஆநிரை கவர்தல் 'என்று பெயர். மாடுகளைக் களவாடக் கொடுத்தல் நாட்டையே கொடுத்ததற்குச் சமம். எனவே, பசுக்களைப் பகைவனிடம் பறிகொடுத்த மன்னன், பகைவனைத் தொடர்ந்து சென்று, அவனுடன் போர் செய்து பசுக்கூட்டங்களை மீட்டு வருவான். தமிழர்களின் புறவாழ்க்கை பற்றிய திணைப் பகுப்பு இப்படித்தான் தொடங்குகிறது. பெரும்போர்கள் அனைத்துமே   மாடுகளைக் கவர்வதிலும் மீட்பதிலுமே தொடங்குகின்றன.  மாடுகள்தான் உண்மையான செல்வம் என்று அறிந்து அதைப் பாதுகாத்த பாரம்பர்யம் தமிழர்களுடையது.


பொங்கல் அன்று நாம் சூரியக் கடவுளை வழிபடுகிறோம். சூரியனே  உழவர்களின் உழவுத் தொழிலுக்கு உற்ற துணையாக இருந்து உணவு உற்பத்திக்கு உதவுகிறான். அவனுக்கு இணையான பணியை கால்நடைகளும் செய்கின்றன. உழுவதிலிருந்து போர் அடிப்பது வரையிலும், அறுவடையானவற்றைச் சுமந்து சென்று சேர்ப்பது வரையிலும் காளைகளின் பணி பெரியதென்றால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அருந்தும் உணவான பால் கொடுத்து மனிதர்களுக்கு உதவுவன பசுக்கள். அத்தகைய கால்நடைச் செல்வங்களுக்குப் பொங்கலிட்டு வழிபாடு செய்து நம் நன்றியைத் தெரிவிக்கும் நாள்  மாட்டுப் பொங்கல்.

தமிழகத்தின் சில இடங்களில் இதனை, 'பட்டிப் பொங்கல்' என்று அழைப்பதும் உண்டு. பட்டி என்றால் மாடுகளை அடைத்துவைக்கும் இடம். 'பட்டியாரே' என்று மாடுகளை அழைத்து இந்த நாளில் பாடல்கள் பாடுவதும் உண்டு. 
இந்த நாளில் மாடுகளைக் குளிப்பாட்டி அலங்கரிப்பார்கள். பின் மாட்டுக் கொட்டகைக்கு முன் பொங்கல் இடுவர். பின்னர் அதை மாடுகளுக்கு உண்ணத் தருவார்கள். பிறகு அவற்றை ஊர்வலமாக அழைத்துச் செல்வர். மாலவன் கோயில்களுக்கு மாடுகளை அழைத்துச் செல்லும் வழக்கமும் உண்டு. அங்கு மாடுகளுக்கு ஆரத்தி எடுத்து நெற்றியில் குங்குமம் இடுவர். மாடுகளுக்கு காதோலை, கருகமணி ஆகியனவும் அணிவித்து அலங்கரிப்பர். இதன் மூலம் மாடுகளுக்கு திருஷ்டி ஏற்படாது என்பது நம்பிக்கை.  

 'பொங்கல் பொங்கோணும் - வெள்ளாமை வெளையோணும்
பட்டி பெருகோணும் - பால் பொங்கி வழியோணும் '     


என்று கோவை வட்டார நாட்டுப் பாடல் தெரிவிக்கிறது.

காணும் பொங்கல் - ஏறுதழுவுதல் 


இந்த நாள், 'கன்னிப் பொங்கல்' என்றும், 'கன்றுப் பொங்கல்' என்று இருவகைப்படும். கல்யாணமாகாத கன்னிப் பெண்கள் கூடி வைக்கும் பொங்கல் கன்னிப் பொங்கல் என்று கூறுவர். இந்த நாளில்தான் இளைஞர்கள் காளைகளைத் தழுவி, தங்கள் வீரத்தை வெளிப்படுத்துவர். சில ஊர்களில் ஏறு தழுவுதல் பிறகு ஏதேனும் ஒருநாளில் நடைபெறும் வழக்கமும் உள்ளது.

ஏறு தழுவுதல் சங்ககாலந் தொட்டு விளங்கிவரும் வீரவிளையாட்டு. மாயோன் ஆன கண்ணன் 7 மாடுகளை அடக்கித் தன் மாமன் மகளான நப்பின்னையைத் திருமணம் செய்துகொண்டான் என்கின்றன பழந்தமிழ் இலக்கியங்கள். கலித்தொகை   'கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்  புல்லாளே ஆய மகள்' என்று பழந்தமிழர் வீரம் குறித்துப் பேசுகிறது. வீரத்தையும் காதலையும் தம் வாழ்வியல் விழுமியங்களாகக் கொண்ட தமிழர் மரபின் தொடர்ச்சியாக இன்றும் பொங்கல் பண்டிகையை ஒட்டி 'ஜல்லிக்கட்டு' நடைபெறுகிறது. அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் புகழ்பெற்றவை.

காணும் பொங்கலின் மற்றொரு வழக்கம், அன்றைய நாளில் பெரியோர்களைச் சென்று வணங்குதல் ஆகும். மக்கள், அறிஞர்களையும் செல்வந்தர்களையும் சென்று சந்திப்பர். பெரியோர்களும் ஆசியும் பரிசும் வழங்குவர். இந்த நாள்களில் நாம் ஆலயங்களுக்குச் சென்று இறைவனை தரிசனம் செய்வது சிறப்புடையதாகும். 

இன்று இந்தப் பழக்கம் மாற்றம் கண்டுள்ளது.  மக்கள் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று கொண்டாடுகின்றனர். சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மெரினா கடற்கரை மற்றும் பூங்காக்களில் மக்கள் கொண்டாட்டம் நிறைந்து காணப்படும். இது ஒரு வகையில் அந்த நாள்களில் வழக்கில் இருந்த 'கூட்டாஞ்சோறு' சாப்பிடும் நிகழ்வினை ஒத்தது. மக்கள் ஒரே இடத்தில் கூடி சமைத்து உண்பது கூட்டாஞ்சோறு ஆகும்.

இந்த நாள் திருவள்ளுவர் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. ஆண்டுக் கணக்குகளை திருவள்ளுவரை அடிப்படையாகக் கொண்டு பிரிப்பதும் உண்டு. ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 17 அன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. 
தமிழர் பாரம்பர்யமான  இந்தப் பொங்கல் பண்டிகை நாள்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் சொந்த ஊருக்குச் சென்று, தங்கள் மண்ணில் இந்தத் திருவிழாக்களைக் கொண்டாடி மகிழ்கின்றனர். உலகமயமாக்கலில் தொலைந்து போன நம் பாரம்பர்யத்தைத் திரும்பிப் பார்க்கும் நாள்களாகப் பொங்கல் பண்டிகைகள் அமைகின்றன என்றால் மிகையல்ல.