Published:Updated:

மக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு!

"இன்னும் சில நிமிடங்களில் என் உயிர் பிரிந்துவிடலாம். அது மதிய உணவு நேரத்துக்கு முன்பாக நிகழ்ந்துவிட்டதென்றால் யாரிடமும் என் மரணம் குறித்துச் சொல்ல வேண்டாம். பிள்ளைகள் பசியோடு இருப்பார்கள். அவர்கள் பசியாறி முடித்தபின் நிதானமாக இந்த உலகுக்குச் சொல்லுங்கள்."

மக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு!
மக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு!

வாழ்வின் இறுதித்தருணத்தில் அவர் இருந்தார். அப்போது பகல் மணி 11.30. சிலகணங்களில் தன் உயிர் இந்த உடலை விட்டு நீங்கிவிடும் என்பதை அந்த ஞானி அறிந்திருந்தார். அவருடைய மடத்துக்கு அருகிலேயே  மடத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் பள்ளி உள்ளது. அதில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் படிக்கிறார்கள். அவர்களுக்கு உணவு நேரம் இன்னும் ஒரு மணி நேரத்தில் தொடங்க இருக்கிறது. அந்த ஞானி தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம், ``இன்னும் சில நிமிடங்களில் என் உயிர் பிரிந்துவிடலாம். அது மதிய உணவு நேரத்துக்கு முன்பாக நிகழ்ந்துவிட்டதென்றால் யாரிடமும் என் மரணம் குறித்துச் சொல்ல வேண்டாம். பிள்ளைகள் பசியோடு இருப்பார்கள். அவர்கள் பசியாறி முடித்த பின் நிதானமாக இந்த உலகுக்குச் சொல்லுங்கள்'' என்று சொல்லிவிட்டுக் கண்ணை மூடிக்கொண்டார். அப்படியே அவரின் மரணம் சில நிமிடங்களில் நிகழ்ந்தது. அவர் ஆணைப்படி அவரின் சீடர்கள் செய்தியை மதிய உணவுக்குப் பின்னரே அறிவித்தனர். அவர் வேறு யாருமல்ல. நேற்று ஸித்தியடைந்த லிங்காயத் மதத்தைச் சார்ந்த சித்தகங்க மடத்தின் தலைவர் சிவகுமார சுவாமிகள்.   

லிங்காயத் பிரிவு 12-ம் நூற்றாண்டில், பசவா எனப்படும் பசவண்ணர் ஏற்படுத்தியது. பசவண்ணர் தோற்றுவித்த வீர சைவ மரபில் பல்வேறு மகான்கள் தோன்றி மக்களுக்குச் சேவை செய்துள்ளனர். அவர்களுள் முக்கியமானவர் சிவகுமார சுவாமிகள். பசவய்யாவின் மறு அவதாரம் என்று போற்றப்படுகிறவர் ஸ்ரீ சிவகுமார சுவாமிகள். அதனால் ‘நவீன பசவா’ என்று கர்நாடக மாநில மக்களால் போற்றப்படுகிறவர். 

சிவகுமார சுவாமிகள் 1907-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி கர்நாடக மாநிலத்திலுள்ள ராமநகர் மாவட்டத்தில் வீரபுரம் எனும் கிராமத்தில் பிறந்தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சிவன்னா. இவர், கங்கம்மா - ஹொன்னெகௌடா தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். எட்டு வயதானபோது தாயை இழந்தார் சிவன்னா. அதனால் ஏற்பட்ட தனிமை, தாயின் பிரிவு ஏற்படுத்திய காயம் ஆகியவற்றால் அவரது மனம் ஆன்மிகத்தைத் தேடத் தொடங்கியது. 1926-ம் ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்தார் சிவன்னா. அதன் பிறகு, தும்கூர் மாவட்டத்தில் இருக்கும் சித்தகங்கா மடத்தில் மாணவனாகச் சேர்ந்தார். மடத்தில் சேவை செய்தபடியே அவர் பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியிலும் படித்து வந்தார். கன்னடம், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் என்று பல மொழிகளில் பண்டிதராக விளங்கியவர் சிவன்னா. 

PC: abdulkalam.nic.in

மற்ற மாணவர்களுக்கு மத்தியில் சிவன்னா தனியாகத் தெரிந்தார். அவரின் இறைபக்தியையும் சேவையுள்ளத்தையும் புரிந்துகொண்ட அவரது குரு ஸ்ரீஉத்தனசிவயோகி, சிவன்னாவை  இளைய மடாதிபதியாகத் தேர்ந்தெடுத்தார். சிவன்னா, ஸ்ரீ சிவகுமார சுவாமிகள் என்ற நாமத்துடன் இளைய மடாதிபதியானார். பின்பு, 1930-ம் ஆண்டு சிவயோகி சுவாமிகளின் மறைவையடுத்து சித்தகங்கா மடத்தின் மடாதிபதியானார்.

மடாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டதும் சிவகுமார சுவாமிகள் கல்வி மற்றும் மருத்துவம் போன்ற சமூகப் பணிகளில் தனது கவனத்தைச் செலுத்தினார். கல்விதான் ஒடுக்கப்பட்டவர்களை முன்னேற்றம் காணச் செய்யும் என்பதை அவர் அறிந்திருந்தார். ஸ்ரீ சித்தகங்கா கல்வி அறக்கட்டளையை நிறுவினார். அதன் மூலம் 132-க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களைத் தொடங்கினார். அவர் உருவாக்கிய பள்ளிக் கூடங்கள், பொறியியல் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள், அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிகள் போன்றவற்றில் ஏழைக் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து இலவச தங்குமிடம், இலவச உணவு ஆகியவற்றை அளித்துக் கல்வி போதித்தார். இதனால், `கல்விக் கொடை வள்ளல்’ என்று மக்கள் அவரைப் புகழ்ந்தனர்.

PC: abdulkalam.nic.in

1965-ம் ஆண்டு கர்நாடகப் பல்கலைக்கழகம் இலக்கியத்துக்கான ‘கௌரவ டாக்டர்’ பட்டத்தை சிவகுமார சுவாமிகளுக்கு வழங்கியது. இவரது சமூகப் பணிகளால் கர்நாடக அரசு வழங்கும் உயரிய விருதான ‘கர்நாடக ரத்னா’ விருதைப் பெற்றார். 2015-ம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு ‘பத்மபூஷன்’ விருதை வழங்கிக் கௌரவித்தது. கர்நாடகத்தில் முக்கியத் தலைவராக விளங்கியவர் சிவகுமார சுவாமிகள். கர்நாடகத்துக்குச் செல்லும் எந்தவொரு அரசியல் தலைவரும் அவரைத் தரிசிக்காமல் திரும்பியதில்லை. 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சித்தகங்கா மடத்தில் நடைபெற்ற சிவகுமார சுவாமிகளின் நூற்றாண்டு பிறந்த தின விழாவில் கலந்துகொண்ட அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், ``சமூக ஏற்றத்தாழ்வுகளைப் போக்கும் விதத்தில் செயல்படும் சுவாமியின் சமூகப் பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்” என்று புகழ்ந்தார். 

அப்போது அவர் வாசித்து அளித்த கவிதை...

என் சக குடிமக்களே

கொடுப்பதன் மூலம் பெறுங்கள்

மகிழ்ச்சியை 

உங்கள் உடலிலும் உள்ளத்திலும்

பகிர்வதற்கு  உள்ளது உங்களிடம்

அறிவை, செல்வங்களை

மற்றும் உங்களிடம் உள்ளவைகள் எல்லாம்

மனதையும் எண்ணத்தையும் பயன்படுத்துங்கள்

வருத்தத்தில் உள்ளவர்களை மகிழ்விக்க

கொடுப்பதன் மூலம் மகிழ்வீர்கள்

அவற்றுக்காக பேரிறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்

சிவகுமார சுவாமிகள் ஒரு கர்மயோகி. தன் வாழ்வைச் சேவையிலும் பக்தியிலுமே செலவிட்டவர். ஒருநாளை அவர் செலவிடும் முறையை அறிந்தவர்கள் அனைவருமே மிகவும் வியப்படைவர். தினமும் அதிகாலை 2.30 மணிக்கு எழுந்துகொள்வார். அதிகாலை முழுவதும் அவர் ஆண்டவனைத் தியானிப்பார். பின்பு நீராடுவார். அன்றைய தினத்துக்கான வேலைகளைக் குறித்துக்கொண்டு 6 மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருப்பார். பின்பு நாள் முழுவதும் மடத்தின் வேலைகள் மற்றும் கல்வி நிறுவனப்பணிகளைப் பார்வையிடுவார். இடையிடையே கிடைக்கும் நேரத்தில் நூல்களை வாசிப்பதில் செலவிடுவார். அவர் நூல்களை வாசிக்காத நாள்களே இல்லை. மீண்டும் இரவு வேலைகளை முடித்து அவர் உறங்கப்போகும்போது மணி சரியாக இரவு 11 ஆக இருக்கும். ஒரு நாளில் மூன்று மணி நேரம் மட்டுமே தூங்கும் வழக்கம் அவருடையது. இந்தப் பழக்கத்தை அவர் தனது 110 வயதிலும் பின்பற்றினார் என்பதுதான் வியப்பு. 

சுவாமிகளின் சேவை எல்லையற்றது. 111 வயதுவரை அவர் தனது சேவையை ஒரு நாளும் நிறுத்தாமல் செய்து வந்தார். கடந்த மாதம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்குக் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. உடல் நலம் தேறிய பிறகு, தும்கூருக்குப் புறப்பட்டார். மீண்டும் அவரது உடல் நலத்தில் பின்னடைவு ஏற்பட்டது. நேற்று காலை அவர் சிவமூர்த்தத்தோடு ஐக்கியமானார். அன்னாருக்கு ஒட்டுமொத்த நாடும் அஞ்சலி செலுத்தி வருகிறது. கர்நாடக மாநிலம் மூன்று நாள்கள் துக்கம் அனுஷ்டிக்கிறது.

சிறு வயது முதலே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு, உரிய பருவத்தில் துறவறம் மேற்கொண்டு, `துறவு என்பது அனைத்தும் துறப்பதல்ல; தன்னலம் துறந்து மற்றவர்களுக்குச் சேவை செய்வதுதான் உண்மையான துறவறம்’ என்று துறவுக்கு இலக்கணம் வகுத்து வாழ்ந்த மகானின் திருவடிகளைப் பணிந்து போற்றுவோம்.