Published:Updated:

ராமசரிதத்தோடு கிருஷ்ண லீலையையும் பாடிய தியாகராஜர் - நௌக சரித்திரம்!

ராமசரிதத்தோடு கிருஷ்ண லீலையையும் பாடிய தியாகராஜர் - நௌக சரித்திரம்!
ராமசரிதத்தோடு கிருஷ்ண லீலையையும் பாடிய தியாகராஜர் - நௌக சரித்திரம்!

தியாகராஜ சுவாமிகள் என்றதும் நம் நினைவில் தோன்றுவது சுவாமிகளின் ராமபக்திதான். ராமனின் புகழைப் பாடுவதிலும் அவனுக்கு பூஜை செய்வதிலும் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர் தியாகராஜ சுவாமிகள். தியாகராஜர், வால்மீகியின் மறு அவதாரம் என்றும் சொல்லப்படுகிறது. தியாகராஜன் என்பது திருவாரூர் ஈசனின் பெயர். ஶ்ரீராமசந்திர மூர்த்திக்கும் இந்தப் பெயர் மிகவும் பொருத்தம்தான் என்பர் மகான்கள். தன் அரசையும் தியாகம் செய்தவன், ஆதலால் அவனுக்குத் தியாகராஜன் என்னும் பெயர் உரியதே என்பர். 

தியாகராஜர் இளம் வயதிலேயே ராமநாம உபதேசம் பெற்று பல லட்சம் முறை நாம ஜபம் செய்தவர்.  எனவே அவர் ராமாயணக் கதைகளையும் ராமனின் கல்யாண குணங்களையும் பாடியதில் வியப்பேதுமில்லை. அவர் கீர்த்தனைகளில்  ராம பக்தியும் சரணாகதித் தத்துவமுமே பிரதானம் . சிருங்கார ரசத்தை அதில் காண்பது அரிது. ஆனால், ராச லீலை போன்ற  சிருங்கார ரசம் தொனிக்கும்  கிருஷ்ணனின் லீலைகளைப் பேசும் ஓர் இசை  நாடகத்தைத் தியாகராஜர் படைத்திருக்கிறார் என்பது பலர் அறியாத ஒன்று.     

 அவரது இசை ஆக்கங்களில் இரண்டு நாடகங்களும் அடக்கம். அதில் ஒன்று 'நௌக சரித்திரம் ' மற்றொன்று 'பிரகலாத சரித்திரம்.'  நௌகம் என்றால் தெலுங்கில் படகு அல்லது ஓடம் என்று பொருள். நாட்டுப்புறப் பாடல் வடிவங்களான ஓடக்காரன் பாடல்களும் பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பின் பஜனை சம்பிரதாயத்தில்  இடம்பெறத்தொடங்கின. அதற்குப் பிறகு அது ஒரு தனிமரபாகவும் வளர்ந்தது.  இந்தப் பிறவிப் பெருங்கடலைக்  (சம்சார சாகரம்) கடப்பதற்கு உதவும் ஓடம் அல்லது படகாக இறை பக்தியைக் கருதுவர். 'பிறவிப்பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்' என்பதுதானே வள்ளுவன் வாக்கு. 

ஓடத்தில் பயணிக்க விரும்புபவர்கள் எல்லோராலும் ஓடத்தைச் செலுத்த முடியாது. நன்கு பழகியவர்களால்தான் பரந்து விரிந்த சாகரத்தில் ஓடத்தைச் செலுத்திக் கரை சேர்க்கமுடியும். அதேபோல், நாம் சம்சார சாகரம் என்ற கடலைக் கடக்க இறைவனின் அருள் அவசியம். அந்த இறைவனின் அருளை நாம் பெற்றிட வேண்டுமானால், அதற்கு உரிய வழியை நமக்குக் காட்டி அருள்பவர் குருநாதர். சம்சார சாகரத்தை நாம் கடக்க, ஓடக்காரனின் நிலையில் இருந்து நமக்கு உதவுபவர் குருநாதர். எனவே, ஓடக்காரன் பாடல்கள் எல்லா பஜனை சம்பிரதாயங்களிலும் இடம் பெறும்.

தியாகராஜருக்கு பாகவதத்தில் நல்ல பரிச்சயம் இருந்தது. அதிலிருந்து சில கதைகளை எடுத்துக்கொண்டு நௌக சரித்திரத்தைப் படைத்தார். நௌக சரித்திரம் கீர்த்தனை வடிவிலும் விருத்தப் பாடல்கள் முறையிலும் அமைந்தவை. மொத்தம் 20 பாடல்கள் கொண்ட இந்த இசை நாடகத்தில் முதல் மற்றும் கடைசிப் பாடல்கள் சுருட்டி ராகத்தில் அமைந்தவை. பிற பாடல்களில் புன்னாகவராளி, யதுகுல காம்போதி, சாரங்கா ,பைரவி,சாவேரி , கர்நாடக காப்பி , தேவகாந்தாரி, வராளி மற்றும் மோகனம் ஆகிய ராகங்களைப் பயன்படுத்தியுள்ளார். பொதுவாக ஓடக்காரன் பாடல்கள் இந்த ராகங்களில் அமைக்கப்படுவது வழக்கம்.

தியாகராஜரின் கீர்த்தனைகளில் சிருங்கார ரசம் தொனிப்பதில்லை என்ற குறையைத் தீர்க்கும் வகையில்,  இந்த நௌக சரித்திரத்தில் சிருங்கார ரசத்தை ஓர் அழகிய ஓவியம் போல அவர் தீட்டியிருக்கிறார். சிறு குழந்தையான கிருஷ்ணனைக் கூட்டிக்கொண்டு கோபியர்கள் யமுனை ஆற்றைக் கடக்கப் படகில் பயணிக்கிறார்கள். பெண்களின் மத்தியில் அவர் ஒருவனே ஆண். எனவே கோபியர் அவனைச் சீண்டுகின்றனர். சிலர் அவனை அலங்கரித்துப் பார்க்கிறார்கள். ஒரு சில கோபியர்கள் அவனை வம்புக்கு இழுக்கிறார்கள். 

கோபியர்களுடன் அவன் விளையாடிக்கொண்டே வருகிறான். எல்லோர் மனதிலும் கிருஷ்ணன் மீதான பிரேமை மேலோங்குகிறது. அவர்கள் அனைவரிடமும் கிருஷ்ணன் காதலாய் இருக்கிறான். அந்தப் படகே ராசலீலை நடைபெறும் பிருந்தாவனமாகிறது. ஒரு கட்டத்தில் கோபிகைகள் மனதுக்குள்  கர்வம் கொள்கின்றனர். 

இந்த உலகத்தில் அவர்களுக்கு இணையாக யார் இருக்கிறார்கள்? 'தேவாதி தேவர்களும், மும்மூர்த்திகளுமே  பெண்களாகிய எங்கள் அழகுக்கு அடிமை' என்று பாடத்தொடங்கு கின்றனர்.  'எவரு மனக்கு சமானமு' என்னும் கீர்த்தனத்தில் அவர்கள் கர்வம் மேலோங்கிப் பாடுகிறார்கள். 'பிரம்மனும், சிவனும், ஹரியுமே அவரவர்  தர்மபத்தினிகளின் அடிமைகள் ' என்று பாடுகிறார்கள். 

காவியங்களில் கோபியர்கள் எனக் குறிப்பிடப்படுபவர்கள் ஜீவாத்மாக்கள். அவர்கள் இறைவனின் துணையின்றி தங்கள் சுயபலத்தோடு இந்தப் பிறவிப் பெருங்கடலைக் கடக்க முயற்சி செய்கிறார்கள். அவர்களின் உலகாயதமான அழகு, அறிவு முதலிய செல்வங்கள் அகந்தையை உருவாக்குகிறது. தமக்கு நிகராக எவருமே இல்லை என்ற அகந்தையில் ஆட்டம் போடுகின்றனர்.

ஆனால், இறைவன் நம்மோடுதான் இருக்கிறான். உரிய நேரத்தில் அகந்தை ஒடுங்குமாறு செய்கிறான். அப்படித்தான் கோபியர்களின் இந்தக் களிநடனத்தின் ஊடாக ஒரு மாயப் புயலை உருவாக்குகிறான். கோபியர்களின் கர்வம் கலைந்து அஞ்சுகிறார்கள். கிருஷ்ணனிடம் தப்பிக்க உபாயம் கேட்கிறார்கள். அவன் சொல்லும் வழிகளை விருப்பம் இன்றிச் செய்கிறார்கள். ஆனால் அதுவல்ல அவன் அவர்களிடம் எதிர்பார்ப்பது. எந்த நிபந்தனையும் அற்ற சரணாகதி. 

ஒரு கட்டத்தில் அச்சம் அவர்களை வாட்ட,  அனைவரும் அவனின் திருவடிகளைச் சரணடை கிறார்கள். 'இறைவா, உம் வார்த்தைகளை நாங்கள் வேதவாக்காகக் கொள்கிறோம்' என்று சரணாகதி பண்ணுகிறார்கள். அவனுடைய திருவடிகளின் மகிமைகளைப் போற்றுகின்றனர். உடனே கிருஷ்ணன் இரங்கி அருள் செய்து அவர்களைக் காக்கிறான். தங்களின் பிராணனைக் காத்ததற்காக கோபியர்கள் சேர்ந்து அவனை அபிஷேகித்து அலங்கரிக்கின்றனர். அவனே நிரந்தரமான இறைவன் என்று அறிந்து துதிக்கிறார்கள் என்பதாக அந்த  நாடகம் முடிவடையும். 

நாடகத்தின் தொடக்கத்தில் அவர்கள் தங்களை அழகுபடுத்திக்கொண்டதற்கும் இறுதியில் கிருஷ்ணனைச் சரணடைந்தபின் அழகு செய்துகொள்வதற்கும் இடையில்  இருக்கும் மாறுபாடு அந்தக் கீர்த்தனங்களில் நன்கு வெளிப்படும். முதல்முறை தங்களை அழகுபடுத்திக் கொண்டபோது, அவர்களுடைய எண்ணம் முழுவதும் தங்களை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. ஆனால், கிருஷ்ணனைச் சரணடைந்த பிறகு அவர்கள் தங்களை அழகுபடுத்திக் கொண்டதானது, தாங்கள் பரிபூரணமாக சரணடைந்துவிட்ட பகவான் கிருஷ்ணன், தங்களைக் காணவேண்டும் என்பதாக இருந்தது. பகவானை சரணடைந்ததால் ஏற்பட்ட தெளிவு இது.

பக்தி பாவத்தில் சரணாகதித் தத்துவம் எவ்வளவு உயர்ந்ததோ அதே அளவு இறைவன் மேல் காதல் கொள்ளும் நாயக - நாயகி பாவமும் உயர்ந்தது.  தியாகராஜர் இரு வகையாகவும் பக்தி செய்கிறார். பாகவதம், கீத கோவிந்தம் ஆகியவற்றின் அத்தனை சாரமும் தொனிக்கத் தியாகராஜர் இயற்றி யிருக்கும்  இசை நாடகம் 'நௌக சரித்திரம்'. நௌக சரித்திரத்தைப் பாராயணம் செய்தால் கிடைக்கும் பலன்கள் குறித்த பலஸ்துதியும் காணப்படுகிறது.

நல்லோர்களின் இதயம் கவர்ந்ததும் 

புண்யமும் இனிமையுமான இந்தச் சரித்திரம்

இசைப்பவரும் கேட்பவரும்

அடைவாரே பகவான் கிருஷ்ணனின் ஆசிகளை !

நாம் அனைவரும் நௌக சரித்திரம் இசைத்தும், பிறர் இசைக்கக் கேட்டும் இறைவனின்  நல்லருள் பெறுவோம்.