Published:Updated:

தீவினைபோக்கி நல்லருள் தரும் குருவழிபாடு - மஹான் சேஷாத்திரி சுவாமிகளின் 149-ம் ஆண்டு ஜயந்தி வழி

தீவினைபோக்கி நல்லருள் தரும் குருவழிபாடு - மஹான் சேஷாத்திரி சுவாமிகளின் 149-ம் ஆண்டு ஜயந்தி வழி
தீவினைபோக்கி நல்லருள் தரும் குருவழிபாடு - மஹான் சேஷாத்திரி சுவாமிகளின் 149-ம் ஆண்டு ஜயந்தி வழி

மஹான் ஸ்ரீசேஷாத்திரி ஸ்வாமிகளைப் போல் மிக உயர்ந்த ஆன்மிக நிலையை என்னால் அடைய முடியுமா?' என காஞ்சி மஹா பெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளே வியந்து போற்றிய பெருமைக்கு உரிய மஹான் ஸ்ரீசேஷாத்திரி ஸ்வாமிகள். அவரது 149-வது ஜயந்தி தினம் 26.1.19 - சனிக்கிழமை அன்று அவர் பிறந்த தை மாத அஸ்த நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு அவரது பக்தர்களால் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

சேஷாத்திரி சுவாமிகள், காஞ்சிபுரத்தில்  22.1.1870 அன்று அஸ்த நட்சத்திரத்தில் வரதராஜன் - மரகதம் தம்பதிக்கு மூத்த மகனாகப்  பிறந்தார். 4-வது வயதில் பல தெய்வங்களின் ஸ்தோத்திரங்களைப் பெற்றோர் கற்றுக்கொடுத்தனர். 5-ம் வயதில் தன் தாயிடமிருந்து முறைப்படி சங்கீதத்தைக் கற்று அதில் அசாதாரண முறையில் தேர்ச்சி பெற்றார். அதோடு கம்பராமாயணம், திருக்குறள், நாலடியார், நைடதம், நன்னூல் மற்றும் இன்னபிற தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் ஆழ்ந்த தேர்ச்சி பெற்றார். 7-வது வயதில் உபநயனத்துக்குப்பின் வேத பாடசாலையில் சேர்ந்து முறைப்படி வேதங்களைப் பயின்றார். நித்திய அனுஷ்டானங்களான சந்தியாவந்தனம் மற்றும் காயத்ரி மந்திர ஜபம் ஆகியவற்றைத் தினமும் தவறாமல் செய்து வந்தார். 

அவருடைய 14-வது வயதில் அவருடைய மனதுக்குள் மாற்றம் ஏற்படுத்தும்படியான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அந்த வயதில்தான் அவர் தன் தந்தையை இழந்தார். தந்தையின் இழப்பினால் மனமாற்றம் ஏற்பட்டு,  உலகின் நிலையற்ற தன்மை குறித்து அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினார்.

இந்த உலகில் தோன்றிய, பிறந்த, உருவாக்கப்பட்ட எல்லாம் என்றாவது ஒரு நாள் மறைந்து, இறந்து, அழிந்து போவது தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்தவர், மிகத் தீவிர வைராக்கியம் கொண்டவராகப்  பல மணிநேரம் இறைச் சிந்தனையிலேயே மூழ்கிவிட்டார். நாம ஜபங்களைச் செய்வதிலும், நீண்ட தியானத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, ஆன்மிக சாதனைகளைச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும், தன் தாத்தாவிடம் கற்றுக்கொண்ட வேதாந்த - உபநிடத உண்மைகளை மக்களுக்கு விளக்கிச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தினார்.

17-வது வயதில் திருமணம் செய்ய உத்தேசித்து ஜோதிடரிடம் இவரது ஜாதகத்தைத்  தாயார் காட்டினார். ஜாதகத்தை ஆராய்ந்துப் பார்த்த ஜோதிடர், அவருக்குத் திருமண யோகம் இல்லை என்றும், ஆனால் பார் போற்றும் மஹானாக பரிணமிப்பார் என்றும் கூறினார். அதனால் திருமண முயற்சி கைவிடப்பட்டது. இந்தச் சம்பவத்துக்குப்பின் இவரது தாயார் உடல்நலக்குறைவால் மறைந்தார். தாயாரின் மறைவிற்குப்பின், கூட்டுக்குடும்பத்தில் பலரும் வசித்ததால், ஆன்மிக சாதனைகளை வீட்டில் தனி அறையில் அமர்ந்து செய்ய முடியவில்லை. எனவே, கோயிலில் இருந்து அவற்றைச் செய்யத் தொடங்கினார். 

கோயிலிலும் பல சங்கடங்கள் ஏற்பட்டதால் மயானத்தில் அமர்ந்து  பயிற்சி செய்தார்.  இதை அறிந்த உறவினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனவே, வீட்டின் ஓர் அறையில் இவரைப் பூட்டி வைத்தனர். உணவுகூட உட்கொள்ளாமல் அறையின் உட்புறம் தாழிட்டுக் கொண்டு தொடர்ந்து நாலைந்து நாள்கள் மிகத் தீவிரமாக மந்த்ர ஜபங்களைச் செய்து வந்தார். இவரது முகத்தில் பிரகாசித்த தேஜஸைக் கண்டு உறவினர்களுக்குப் பயம் ஏற்பட்டது. இவரது அபூர்வ நடவடிக்கைகள் அக்கம்பக்கம் வசிப்பவர்களை ஆச்சர்யப்பட வைத்தது. திருமணம் செய்தால் இயல்பு நிலைக்கு வருவார் என எண்ணி உறவினர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினர். 

இதைப்பற்றிக் கேள்விப்பட்ட மஹான், தனக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்தால், வீட்டை விட்டு வெளியேறிவிடுவதாகக் கூறினார். தம்முடைய ஆன்மிக சாதனைகளுக்கு வீட்டில் இருப்பவர்கள் இடையூறாகவே இருக்கவே, வீட்டுக்கு வருவதைக் குறைத்துக்கொண்டு மயானம், மரத்தடி, கோயில் எனத் தன் ஆன்மிக சாதனைகளிலேயே கவனம் செலுத்தினார். தினமும் மயானத்துக்குப் போய்விட்டு வீட்டுக்குள் வரக்கூடாது என உறவினர்கள் சொன்னதால் வீட்டுக்கு வருவதையும் நிறுத்திக்கொண்டார். 

தந்தையின் சிராத்தத்தன்று ஸ்ரீமஹானின் சித்தப்பா இவரை வலுக்கட்டாயமாக வீட்டின் ஓர் அறையில் அடைத்து வெளியில் பூட்டினார். சிராத்தச் சடங்குகள் முடிந்தபின் பித்ருக்களின் ஆசி பெறவேண்டிய தருணத்தில், ஸ்ரீமஹானை வைத்துப் பூட்டிய அறையைத் திறந்து பார்த்தபோது ஸ்ரீஸ்வாமிகள் அந்த அறையில் இல்லை. ஓட்டைப் பிரித்து வெளியில் தப்பிப் போயிருப்பார் என நினைத்து மேற்கூரையைப் பரிசோதித்தபோது எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. ஞானிகள் மனிதர்களின் பிடியுள் அகப்படுவது கடினம் என உணர்ந்த உறவினர்கள், பூட்டிய அறையிலிருந்து மாயமாக வெளியேறிவிட்ட மஹானின் மகத்துவத்தைப் புரிந்துகொண்டனர்.

காவேரிப்பாக்கம், திண்டிவனம் எனப் பல ஊர்க் கோயில்களில் தங்கி ஆன்மிக சாதனைகளைச் செய்து இறுதியாக நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலைத் திருத்தலத்தை அடைந்து சமாதி அடையும்வரை கிட்டத்தட்ட நாற்பதாண்டுகள் வசித்துப் பல பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றியதுடன் எண்ணற்ற பல  அற்புதங்களையும் நிகழ்த்தினார். கம்பத்திளையனார்  கோயிலில் இரவில் உறங்குவார். மற்ற நேரங்களில் எந்த ஆன்மிக சாதகனுக்கு எந்த நேரத்தில் உதவி தேவையோ அப்போது அவர்களின் முன்தோன்றி அவர்களின் தீவினைகளை நொடிப்பொழுதில் மாற்றிப் பற்பல யோக சித்திகளை அவர்களுக்கு வழங்கினார். திருவண்ணாமலையில் கடைகளில் நுழைந்து வியாபாரம் செழிக்க ஆசி தந்து அருளி அவர்களைப் பொருளாதாரநிலையில் இருந்து தாழ்ந்துவிடாமல் காத்தார். அதே தருணத்தில் தவறிழைப்பவர்களைக் தண்டிக்கவும் செய்தார்.

இளம் வயதில் ரமண மகரிஷி தவத்தில் அமர்ந்திருந்தபோது, கரையான் புற்று அவர் உடலைச் சுற்றி வளரத் தொடங்கியது. அப்போது ஆன்மிக அன்பர்களை அழைத்துச்சென்று ரமண மகரிஷிக்குப் பணிவிடைகள் செய்து வேறு இடத்தில் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தவர் மஹான் ஸ்ரீசேஷாத்திரி ஸ்வாமிகள். 

1928-ம் ஆண்டு இறுதியில் சில பக்தர்கள் ஸ்ரீமஹானுக்கு அபிஷேக அலங்காரம் செய்து புகைப்படமெடுக்க விரும்பினர். குளித்தால் காய்ச்சல் வந்துவிடும் என்று மறுத்தார். ஆனாலும் முகச்சவரம் செய்து பன்னீர் கலந்த தண்ணீர் ஊற்றி பக்தர்கள் அபிஷேகம் செய்தனர். அதற்குப்பின் புத்தாடை உடுத்தி, திருநீறு பூசி, பூ மற்றும் ருத்திராக்ஷ மாலைகளைச் சாற்றி புகைப்படம் எடுத்தனர். இதனால் குளிர் காய்ச்சல் ஏற்பட்டு 40 நாள்களுக்கும்மேல் அவதிப்பட்டார். 4.1.1929-ம் தேதி மஹாஸமாதி அடைந்தார்.

மஹான் ஸ்ரீசேஷாத்திரி ஸ்வாமிகள் தன் பக்தர்களுக்குக் கூறிய மிக முக்கிய உபதேசங்கள் 

* பகவான் ஸ்ரீராமர், தர்மத்தின் அடியொற்றி வாழ்ந்தவர். ராமாயணத்தைப் படிப்பவர்கள் நடைமுறை வாழ்க்கையில் தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஸ்ரீராமனைப்போல் வாழ்ந்து காட்ட வேண்டும். 

* தினமும் ஏழுமுறை சுந்தர காண்டம் சிரத்தையுடன் பாராயணம் செய்தால் ஞானம் பெருகும்.

* ஸ்ரீராம நாம ஜபம் எல்லா நலன்களையும் நல்கும். 

* நாராயண மந்திரம் முக்திக்கு எளிதில் வழிவகுக்கும். 

* ராமேஸ்வரத்துக்கு யாத்திரை செல்வதால் மனம் ஒருநிலைப்படும். பிரம்மஹத்தி தோஷம்கூட விலகும்.

* மஹாபாரதத்தின்  18 பருவங்களையும் படிப்பதால் செய்த பாபங்கள் விலகும். ஒரே நாளில் படித்து முடிப்பது கடினம். எனவே, தினமும் சில பக்கங்கள் படிப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். 

* சிவமே குரு. குருவே சிவம்.

* விபூதி-குங்குமம் இரண்டும் சிவ-சக்தி ஸ்வரூபம். எனவே, இரண்டையும் நெற்றியில் அணிய வேண்டும். 

* மண், பெண், பொன் இவை நிலையற்றவை. ஞானம், மோட்சம் இவை மட்டுமே நிலையானது. பிறவிப்பிணியிலிருந்து தப்புவதற்கு இதை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். 

* கிடைப்பதைக் கொண்டு திருப்திப்பட வேண்டும். இதுவே  ஆசையை ஒழிக்கச் சிறந்த வழி.

அடுத்த கட்டுரைக்கு