Published:Updated:

காவிரிக் கரையில் கருவாகி மகவாக உதித்த மந்திராலய மகான்... ஶ்ரீராகவேந்திரர்!

துங்கபத்திரையின் கரையில் கோயில் கொள்ளவேண்டிய மகான் காவிரிக் கரையில் கருவாகி மகவானான். இந்த முழு உலகையும் தன் அருள் கரத்தால் தாங்கப்போகும் அந்த மகானின் திருவடிகள் இந்த பூமியில் படிந்தது.

காவிரிக் கரையில் கருவாகி மகவாக உதித்த மந்திராலய மகான்... ஶ்ரீராகவேந்திரர்!
காவிரிக் கரையில் கருவாகி மகவாக உதித்த மந்திராலய மகான்... ஶ்ரீராகவேந்திரர்!

நான் துங்கபத்திரை. நதிகளில் நான் பாக்கியவதி. சதா சர்வ காலமும் இந்த உலகுக்குப் பக்தியை விளக்க வந்த மஹான், பிருந்தாவனத்தில் தன் சூட்சும சரீரமாய் இருந்து ராமநாம ஜபம் செய்யும் மஹான் ஶ்ரீ ராகவேந்திர சுவாமிகள் உறையும் புண்ணியபூமியைத் தழுவியபடி செல்கிறவள். இதோ இப்போதும் கேட்கிறது யுகம் யுகமாய் பக்தி செய்யும் அந்த மஹானின் நாம ஜபம். ஞானிகள் என்போர் பிறப்பில்லா பேரின்ப நிலையை - மோட்சத்தைத்தான் வேண்டி தவமியற்றுவார்கள். ஆனால், இன்று கேட்பவருக்குக் கேட்கும் வரமருளும் அந்த குருதேவர், மண்ணுலக மக்களை நன்னெறிப் படுத்தவேண்டும் என்று கருணை கொண்டவராகக் கேட்டுப் பெற்றதுதான் இந்தப் பிறவி. இந்தப் பிறவி மட்டுமா...? இதற்கு முந்திய பிறவிகளும் அப்படியே. பக்தியினால் மானுடர்கள் பிறப்பறுப்பர் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் பக்தியினால் பிறப்பைப் பெற்ற மகான் இவர். வாருங்கள் அவரின் புண்ணிய சரிதத்தைக் கேட்போம்.

பிரம்மதேவர் பூஜைக்குத் தயாரானார். பிரம்மனின் பூஜைக்குரிய தேவர் ஶ்ரீமன் நாராயணனே. நாராயணனின் தசாவதார ரூபங்கள் எப்படி அமையும் என்று  யுகம்தோறும் உலகையும் உயிர்களையும் படைக்கும் பிரம்மன் அறிவான் அல்லவா. அப்படியான திறத்தால் அவன் அறிந்திருந்த தசாவதார ரூபங்களின் மூர்த்திகளைச் செய்து வழிபடுவான். பூஜை என்றால் அதற்கு மலர்களும் தூப தீபாதிகளும் அவசியம் இல்லையா? அதைச் சேகரித்துத் தருவதுதான் ஒருவன் வேலை. அவன் பெயர் சங்குகர்ணன்.


இட்ட வேலையைத் திட்டமிட்டு முடிக்கும் வல்லவன். பூஜை அவன் செய்வதில்லை என்றாலும் பூஜிக்கும் பிரம்மன் அருகிலிருந்து காண்பான். அப்படி பிரம்மன் பூஜிக்கும்போது ஒவ்வொரு மூர்த்தத்தின் அவதார மகிமைகளைக் கேட்டுக் கேட்டு மகிழ்வான். அந்த மகிழ்வே அவனை ஆர்வமுடன் சேவை செய்ய உந்தியது.

அன்று தசாவதாரத்தில் ஶ்ரீ ராமன் அவதார மூர்த்தத்துக்கு பூஜை. சங்கு கர்ணன், ``பிரம்ம தேவா, இதுவரை நிகழ்ந்த அவதாரங்கள் எல்லாம் மாறுபட்ட விசேஷித்த தோற்றத்தோடு விளங்கினர். ஆனால் இவரோ சாதாரண மானுடர் போல் காணப்படுகிறாரே? இவர் தாங்கள் பூஜிக்கும் அளவுக்கு மகிமை பொருந்தியவரா? இவரது மகிமைகளைச் சொல்லுங்கள். கேட்கக் காத்திருக்கிறேன்" என்றான் பக்தியுடன்.
பிரம்மதேவன் அவனைப் பார்த்தான். பின்பு அவனுக்கு ராமச்சந்திர மூர்த்தியின் அவதார மகிமைகளைச் சொல்ல விழைந்தார்.
``சங்குகர்ணா, நீ பேறுபெற்றவன். மூவுலகும் இனி போற்றப்போகும் அவதாரத்தின் கதையினைக் கேட்கப் போகிறாய். பரம்பொருள் சாதாரண மானுடராகத் திருவுளம் கொண்ட அவதாரம் அது. லட்சிய புருஷனாக, தெய்வமாக, மகானாக இருந்து லட்சியம் பேசுவது எளிது. ஆனால் மானுட வாழ்வில் சாதாரணனாய் இருந்து அதைக் கடைப்பிடித்தல் சிரமம். 

துயரங்கள் அண்டாத வாழ்வில் இருந்துகொண்டு தெய்வங்களும், முனிவர்களும், ஜனங்களுக்குத் துயரம் மாயை என்று சொல்வது வேடிக்கை. ஆனால் மானுடனாகப் பிறந்து மானுட வாழ்வை வாழ்ந்து மானுட தர்மத்தைப் பின்பற்றி, தன்  மகிமை பொருந்திய தெய்வ சக்திகளை துறந்து பின் மானுடர்க்கு ஆதார புருஷராய் வாழ்ந்து காட்டுவது சிரமத்திலும் சிரமம். ஶ்ரீமன் நாராயணன் இந்த அவதாரத்தில் அந்தச் செயற்கரிய காரியத்தைச் செய்யத் துணிந்தார். மேலும் அவர் அவதாரத்தின் கல்யாண குணங்களையும், மானுட வாழ்வின் சிக்கல்களை அவர் எதிர்கொண்டு தீர்த்த விதத்தையும் சொல்கிறேன் கேள்... "
பிரம்மதேவர் ராம சரிதத்தைச் சொல்லத் தொடங்கினார்... கருணையே உருவான ராமனின் கதையைக் கேட்கக் கேட்க சங்குகர்ணன் வியந்து நின்றான். அவன் காருண்யத்தால் விலங்குக்கும் அசுரருக்கும் அருள்பாலித்த திறத்தைக் கேட்டுச் சிலிர்த்தான். ஒரு சாதாரண மானுடனாக இல்லறத்தில் நின்று, மண்ணுலக மக்களுக்கு ஓர் ஆதர்ச புருஷனாக வாடிய தன்மையைக் கேட்டுக் கண்ணீர் மல்கினான். அவனால் மேற்கொண்டு பேசமுடியவில்லை. 

அவன் மனம் முழுவதும் ஶ்ரீராமச்சந்திரரே விஸ்வரூபம் கொண்டு நிற்கலானார். அவன் கண்களில் பிரம்மதேவரோ பிரம்மலோகமோ தெரியவில்லை. அவன் காணும் இடமெல்லாம் ஶ்ரீராமனாகவே தெரிந்தது. அவன் உதடுகள் அவனறியாமல் ராம நாமத்தை ஜபிக்கத் தொடங்கின. 

கதை சொல்வதோடு பூஜையிலும் ஈடுபட்டிருந்தார் பிரம்ம தேவர், ``சங்குகர்ணா, அந்த பாரிஜாத மலரை எடு..."
சங்குகர்ணன் அந்த உலகத்தில் இருந்தால்தானே. அவனோ திரேதாயுகத்தில் ராமச்சந்திர மூர்த்தியின் சந்நிதியில் அல்லவா இருக்கிறான்.
மறுபடியும் பிரம்மன் ..."சங்கு கர்ணா... அந்த மலரை எடு"

சங்கு கர்ணன் ராமனின் பாதார விந்தங்களை தியானித்துக்கொண்டிருந்தான். பிரம்மன் பொறுமை இழந்தார்.
``சங்குகர்ணா என்ன இது, பக்தி இருக்கலாம் ஆனால் இப்படித் தன்னிலை மறப்பது மனிதத் தன்மை. நீயோ தேவன். எல்லா உணர்வு நிலைகளையும் கடந்தவன். இப்படி உன் கடமையிலிருந்து தவறலாமா..." என்றவர் தொடர்ந்து,
``சங்குகர்ணா, உன் நிலை புரிகிறது. நீ பக்தியில் மூழ்கி இறைவனின் பாதார விந்தங்களை அடைய விரும்புகிறாய். தெய்வ சங்கல்பம் அதுவானால் நீ விரும்பும் வண்ணம் வைராக்கிய பக்தனாகவே மண்ணுலகில் அவதரிப்பாய். இது சாபம் அல்ல என்பதை நீ அறிவாய். இது பூவுலகத்துக்கு வரம். மண்ணுலகில் பக்தி குறையும் யுகங்களில் நீ பிறந்து வைராக்கிய பக்தனாக வாழ்ந்து பூவுலகுக்கு அருள்வாய்.
உன் முதல் பிறப்பில் பாகவதோத்தமனான பிரகலாதனாகப் பிறப்பாய். அடுத்து வியாசராயனாய்ப் பிறந்து  நிலைத்து நிற்கும் காவ்யம் படைப்பாய். கலியுகத்தில் ஶ்ரீ வேங்கடராகப் பிறந்து கல்வி பயின்று ஞானம் எய்தி ஶ்ரீ ராகவேந்திரர் என்று திருப்பெயர்கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பாய். மந்திராலயம் என்னும் புண்ணிய பூமி உன் வரவுக்காகக் காத்திருக்கிறது. நாராயணனின் நாமத்தைச் சொல்லி உன்னை வாழ்த்தியனுப்புகிறேன்" என்றார் பிரம்மதேவர்.


சங்கு கர்ணன் மகிழ்வின் உச்சிக்கே சென்றான். பிரம்மன் சொன்னதுபோலவே பக்தி வைராக்கியம் கொண்டு இறைவனின் அவதாரங்களை தரிசித்தான். இறுதியாக அவனது திரு அவதாரமான ராகவேந்திரராகப் பிறக்கும் நாளுக்காய்க் காத்திருந்தான். அந்த நாளும் கனிந்தது.
 

துங்கபத்திரையின் கரையில் கோயில் கொள்ளவேண்டிய மகான் காவிரிக் கரையில் கருவாகி மகவானான். இந்த முழு உலகையும் தன் அருள் கரத்தால் தாங்கப்போகும் அந்த மகானின் திருவடிகள் இந்த பூமியில் படிந்தது.