Published:Updated:

நங்கநல்லூரில் அருள்பாலிக்கும் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ம நவநீதகிருஷ்ணன்!

நங்கநல்லூரில் அருள்பாலிக்கும் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ம நவநீதகிருஷ்ணன்!
நங்கநல்லூரில் அருள்பாலிக்கும் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ம நவநீதகிருஷ்ணன்!

பல புகழ்பெற்ற ஆலயங்கள்  நங்கநல்லூரில் உள்ளன. நங்கநல்லூர்வாசிகள்  தங்கள் ஊரை 'புண்ணியத் தலம்' என்றே சொல்கிறார்கள்.

கும்பகோணத்தைக் `கோயில் நகரம்’ என்பர். அதே போன்று சென்னை நங்கநல்லூரையும், `கோயில் நகரம்’ என்று அழைக்கலாம். புகழ்பெற்ற 32 அடி உயர விஸ்வரூப பக்த ஆஞ்சநேயர் கோயில், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம நவநீதகிருஷ்ணன் திருக்கோயில், ஸ்ரீதர்ம லிங்கேஸ்வரர் கோயில், அன்னை ராஜராஜேஸ்வரி கோயில், ஸ்ரீலக்ஷ்மி ஹயக்கிரீவர் கோயில், அர்த்தநாரீஸ்வரர் கோயில், ஸ்ரீ குருவாயூரப்பன் கோயில், ஸ்ரீ ஐயப்பன் கோயில் எனப் பல புகழ்பெற்ற ஆலயங்கள் நங்கநல்லூரில் உள்ளன. நங்கநல்லூர்வாசிகள் தங்கள் ஊரை `புண்ணியத் தலம்’ என்றே சொல்கிறார்கள்.

மேற்சொன்ன ஆலயங்களுள் 1,500 ஆண்டுக்காலப் பழைமையும் பெருமையும் வாய்ந்தது, ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம நவநீத கிருஷ்ணன் திருக்கோயில். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தைமாத மூன்றாவது வெள்ளிக்கிழமையில் `சரடு உற்சவம்’ சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு அந்த உற்சவம் கடந்த 1.2.2019 அன்று விமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.  

1974-ம் ஆண்டு இந்த இடத்தை வீடுகட்டுவதற்கு எனத் தற்செயலாகத் தோண்டும்போது நிலத்தில் இருந்து ஆலய பூஜைக்குரிய தூபக்கால், தீபத்தட்டு, மணி ஆகியவை கிடைத்தன. இதைத் தொடர்ந்து அந்த இடம் மிகக் கவனமாகத் தோண்டப்பட்டது. அப்போது, சங்கு சக்கரதாரியான மகாவிஷ்ணுவின் விக்கிரகத் திருமேனி ஒன்றும் சிதைந்த கோயிலின் பகுதிகள் சிலவும் கிடைத்தன. இந்தத் தலத்தில் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம் ஒன்று பல்லவர் காலத்தில் இருந்திருப்பதைக் கல்வெட்டுச் செய்திகள் உறுதிசெய்தன. உடனே, நங்கநல்லூரில் அதே பகுதியில் வசிக்கும் பக்தர்களால் நடத்தப்படும் `ஸ்ரீ கிருஷ்ண பக்த சபையினர் ஒன்றிணைந்து அதே இடத்தில் இப்போதிருக்கும் புதிய கோயிலைக் கட்டி எழுப்பினர். 

இங்கு மூலவராக ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மப் பெருமாள் லக்ஷ்மி தாயாரோடு ஆனந்தத் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். ஆலயத்தின் கருவறைக்கு ஒருபுறம் ஸ்ரீ ராமர் சீதா தேவியோடும் இளையபெருமாளோடும் காட்சிகொடுக்கிறார். இவருக்கு எதிரே ஆஞ்சநேயர் கைகூப்பியபடி அருள்கிறார். மற்றொருபுறம் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் சந்நிதி உள்ளது. இவை தவிர, பன்னிரு ஆழ்வார்கள் மற்றும் வேதாந்த தேசிகர் சந்நிதியும் உள்ளது. ஆண்டாளுக்குத் தனிச் சந்நிதியில் காட்சிகொடுக்கிறார்.

சரடு உற்சவப் பணிகளில் பரபரப்பாக இருந்த திருக்கோயிலின் செயலர் ராகவனைச் சந்தித்தோம்.

``இந்தத் தலம், பரசுராமரின்‌ தந்தை ஜமதக்னி முனிவர் மகா யக்ஞம் செய்த இடம். இங்கு, முன்பிருந்த பழைமையான கோயில் ஸ்ரீராமானுஜர் காலத்துக்கு முற்பட்ட சிறப்பை உடையது. 1974-ம் ஆண்டு அகழ்வாய்வில் பெருமாள் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு, இங்கு உள்ளூர்வாசிகள் கூடி இந்தப் புதிய திருக்கோயிலை எழுப்பினோம். இந்தக் கோயிலில் நடைபெறும் திருமாங்கல்யச் சரடு உற்சவம் எனும் திருக்கல்யாணம் விசேஷமானது. இந்த வைபவம் 1978-ம் ஆண்டு‌ முதல், சுமார் 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆண்டுதோறும், தை மாதம் மூன்றாம் வெள்ளியன்று நடைபெற்றுவருகிறது. திருமணக் கோலத்தில் காட்சிதரும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரையும், ஸ்ரீ மகாலட்சுமித் தாயாரையும் காணக் கண்கோடி வேண்டும். இதில் கலந்துகொள்ளும் திருமணமாகாத இளைஞர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. இந்த நிகழ்வையொட்டி தாயாருக்குப் பத்தாயிரத்திற்கும் மேலான திருமாங்கல்யச்  சரடுகள் சார்த்தப்பட்டு, உற்சவம் முடிந்ததும் இந்தச் சரடுகள் கோயிலுக்கு வரும் பெண்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்வு வேறு எந்தத் தலத்திலும் காணக் கிடைக்காத ஒரு சிறப்பான நிகழ்வாகும்.  

இந்தக் கோயிலில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலையில் நடைபெறும் `கோ’ பூஜை சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள ராமர் சந்நிதி முன் எழுந்தருளியிருக்கும் ஆஞ்சநேயருக்கு `அமெரிக்க ஆஞ்சநேயர்’ என்ற செல்லப் பெயரும் உண்டு. இவரை வேண்டிக்கொண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பெற்றவர்கள் அநேகர். சக்கரத்தாழ்வார் சந்நிதியும் உடன் இணைந்த யோக நரசிம்மர் சந்நிதியும் தனிச்சிறப்புடையன. சக்கரத் தாழ்வாருக்கு முன்பாக ஒரு பிரார்த்தனைச் சக்கரம் உள்ளது. அது அகழ்வாய்வின்போது கிடைத்த பெருமாளின் சிலையில் இருந்த பிரயோகச் சக்கரம். அதை இங்கு சக்கரத்தாழ்வார் சந்நிதி முன்பாகப் பிரதிஷ்டை செய்திருக்கிறோம். அந்தச் சக்கரத்தின் மீது கைகளை வைத்து வழிபட, நினைத்தது நிறைவேறும் என்பது ஐதிகம்’’ என்றார்.

செல்வது எப்படி : பழவந்தாங்கல் ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது. நங்கநல்லூர், மூவரசம்பேட்டை செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.  

விழாக்கள் : கிருஷ்ண ஜயந்தி, நரசிம்ம ஜயந்தி, சரடு உற்சவம் ஆகியன. 

அடுத்த கட்டுரைக்கு