Published:Updated:

திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் - யாகசாலை பூஜைகள் தொடங்கின

திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் - யாகசாலை பூஜைகள் தொடங்கின
திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் - யாகசாலை பூஜைகள் தொடங்கின

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் வரும் 11-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதையொட்டி, சிறப்பு யாகசாலை பூஜைகள் இன்று தொடங்குகின்றன.


திருநள்ளாறில் உள்ள தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. நவகிரகங்களில் ஒருவரான சனி பகவானுக்கு இங்குத் தனி சந்நிதி அமைந்துள்ளது. சனி பகவான் தனக்கு ஏற்பட்ட தோஷத்தையும், சாபத்தையும் திருநள்ளாறு கோயிலில் உள்ள புனித தீர்த்தத்தில் நீராடி வீற்றிருக்கும் இறைவனான தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி சாப விமோசனமடைந்தார் என்பது ஐதீகம். மேலும் நள மகாராஜா சனி பகவானால் ஏற்பட்ட பாதிப்பினால் பெரும் துன்பமுற்று நாடு, மனைவி, மக்கள் என அனைத்தையும் இழந்தார். இறுதியில் இந்தத் தலத்திற்கு வந்து இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சாபம் நீங்கப் பெற்றார் என்கிறது தல புராணத்தில். எனவே சனி தோஷம் உடையவர்களுக்கான பரிகாரத்தலமாக இந்தத் தலம் விளங்குகிறது. 


இத்தகைய சிறப்புகளை உடைய இந்த ஆலயத்தில் வரும் திங்கள் கிழமை 11.2.19 அன்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதன் முதல் நிகழ்வாக நேற்று ஆலயத்தில் சிவாச்சாரியார்களால் வாஸ்து சாந்தி பூஜை நடத்தப்பட்டது. மேலும் இன்று மாலை யாகசாலை பூஜை தொடங்குகின்றன. யாகசாலை பூஜைகள் 11 -ம் தேதி வரை நடைபெறும். 11-ம் தேதி காலை 9.10 மணிக்கு மேல் 10.10 மணிக்குள் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறும் என தர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வில் புதுச்சேரி முதல்வர், அமைச்சர்கள் உட்பட உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த விழாவிற்கு வெளியூரிலிருந்து வரும் பக்தர்களின் வசதிக்காகச் சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.