Published:Updated:

சுகப் பிரசவ வரமருளும் சித்தாய்மூர் பொன்வைத்தநாதர்! - ஏழைப்பெண்ணுக்கு அருள்பாலித்த தலம்!

இந்தத் தலத்தில் வேண்டிக்கொள்ளும் பெண்கள் அனைவருக்கும் சுகப்பிரசவமே நிகழவேண்டும் என்று பிரார்த்தித்தாள் அன்பிற்பெரியாள். அவளின் பிரார்த்தனை இன்றளவும் நிறைவேறுவதாகச் சொல்கிறார்கள்.

சுகப் பிரசவ வரமருளும் சித்தாய்மூர் பொன்வைத்தநாதர்! -  ஏழைப்பெண்ணுக்கு அருள்பாலித்த தலம்!
சுகப் பிரசவ வரமருளும் சித்தாய்மூர் பொன்வைத்தநாதர்! - ஏழைப்பெண்ணுக்கு அருள்பாலித்த தலம்!

காவிரித் தென்கரைத் தலங்களுள் 106 வது தலம் சித்தாய்மூர் பொன்வைத்தநாதர் ஆலயம்.

முன்னொரு காலத்தில் பிரம்ம ரிஷி ஒருவர் இந்தக் கோயிலில் சுயம்புவாகத் தோன்றிய லிங்க மூர்த்திக்கு அர்த்தஜாம பூஜை செய்வதைத் தம் கடமையாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் தனது அனுஷ்டானங்கள் முடித்து வருவதற்குள் கோயில் நடை மூடிவிட்டனர். எப்படியும் ஈசனுக்கு அர்த்தஜாம பூஜை செய்யவேண்டும் என்று நினைத்த ரிஷி, ஒரு தேனியாக உருவெடுத்து ஆலயத்தின் கதவில் இருந்த துவாரம் வழியாக உள்நுழைந்து சென்றார். அவரோடு வந்த ரிஷிகளும் அவ்வாறே உருமாற்றம் கொண்டு உள்நுழைந்து சென்று அர்த்தஜாம பூஜையினை மேற்கொண்டனர் என்கிறது தல புராணம். இன்றும் ஆலய வளாகத்தில் உள்ள அர்த்தமண்டபத்தில் தேன் கூடுகள் எப்போதும் இருக்கின்றன. அர்த்தஜாம பூஜை நேரத்தில் தேன்கூட்டிற்கும் பூஜைகள் செய்கின்றனர். திருஞானசம்பந்தர் தனது  'வாண்முக மாதர்பாட வார்சடை' என்னும் பதிகத்தில் இந்தத் தல இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார். அப்பரும் தனது தேவாரத்தில் இந்தத் தலத்து இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார்.


தேவாரப் பதிகத்தில் பாடப்பட்டிருப்பதால் இந்தத் தலத்தின் தொன்மை 1500 ஆண்டுகள் என்று சொல்கின்றனர். இங்கு அன்னை அகிலாண்டேஸ்வரியாக அருள்பாலிக்கிறார். இந்தத் தலத்து இறைவனையும் இறைவியையும் கர்ப்பமுற்ற பெண்கள்  வேண்டிக்கொள்ளச் சுகப்பிரசவம் ஆகும் என்பது ஐதீகம். இதற்கு ஒரு கதையையும் தலபுராணம் தெரிவிக்கிறது.

சங்கரன் என்கிற சிவபக்தர் திருமணம் செய்துகொண்டு இந்த ஊரில் வந்து குடியேறினார். அவர் மனைவியின் பெயர் அன்பிற்பெரியாள். இனிய அவர்கள் இல்லறத்தில் சிறு இடைவெளிபோல சங்கரன் வணிகத்துக்காக வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டி இருந்தது. சங்கரன் அவளிடம் சொல்லிக்கொண்டு வணிகத்திற்காகச் சிங்கப்பூர் சென்றார். அப்போது அன்பிற்பெரியாள் கருவுற்றிருந்ததை தம்பதிகள் அறிந்திருக்கவில்லை. 

சங்கரனைப் போலவே அன்பிற்பெரியாளும் சிவபக்தியில் உயர்ந்துநின்றாள். தினமும் ஆலயத்தைச் சுத்தம் செய்து நீர் தெளித்துக் கோலமிட்டுக் கைங்கரியம் செய்து வந்தாள். இறைவனுக்கு மலர்கள் சாற்றுவதற்கென்று ஒரு தோட்டம் அமைத்து மலர் பறித்து மாலை தொடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். இறைவன் அவள் தொண்டில் மகிழ்ந்து தினமும் கோயில் வாசல்படியில் ஒரு பொற்காசை வைப்பார். வைத்தார் யார் என்பதை அறியாததாலும், அதைக் கேட்டு யாரும் வராததாலும் அவள் அதை மகிழ்வோடு எடுத்துச் செல்வாள்.

நாள்கள் உருண்டோடின. அவள் கருத்தரித்து கருவும் வளர்ந்தது. கணவன் ஊரில் இல்லாதபோது அவள் கர்ப்பமுற்றிருப்பது எப்படி என்று பழிச்சொல் கூறி, அவளை ஊரைவிட்டே தள்ளி வைத்தனர். அவளோ செய்வதறியாது திகைத்தாள். அவளுக்குப் பிரசவ நாளும் நெருங்கியது. யாரும் அவளுக்கு உதவ முன்வரவில்லை. அவள் பொன்வைத்தநாதர் ஆலயத்திற்கு வந்து மனமுருகி வேண்டினாள்.
அப்பன் பொறுத்திருந்தாலும் அன்னை பொறுப்பாளா? கர்ப்பரட்சாம்பிகையாகிய அன்னை அகிலாண்டேஸ்வரியே மருத்துவச்சியாக வந்து அவளுக்குப் பிரசவம் பார்த்தாள். அவளுக்குக் குழந்தை பிறந்தது. சில நாள்களில் வணிகத்துக்குச் சென்றிருந்த சங்கரனும் திரும்பி வந்தார். ஊரார் அவரிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அவர் மனதைக் கலைத்தனர். அவர் தன் மனைவியிடம் சென்று ஊரார் சொல்வதைப் பற்றிக் கூறி விளக்கம் கேட்டார். அவளோ, ஈசன் அருள் அன்றி வேறொன்றைத் தான் அறிந்திருக்கவில்லை என்று பதிலளித்தாள்.

மனைவியின் சொல்லில் நம்பிக்கையும் சிவனின் மேல் பக்தியும் கொண்ட சங்கரன் ஊராருக்கு உண்மையை உணர்த்த வேண்டும் என்று விரும்பினார். தன் மனைவியிடம், ''நீ சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், ஊராருக்கு உண்மையை உணர்த்தவேண்டும். எனவே, நீ இறைவனைப் பிரார்த்தித்து, மூடியிருக்கும் கோயில் கதவுகளைத் தானாகத் திறக்கும்படிச் செய்வதுடன், நந்தி தேவரின் பின்பக்கமிருக்கும் பலிபீடம் முன்புறம் வரவேண்டும். தலவிருட்சமான ஆத்திமரம் கோயிலுக்கு முன்பு வந்து நிற்கவேண்டும். யாருமே இல்லாமல் அர்த்தஜாம பூஜை நடைபெறவேண்டும். நீ இப்படிச் செய்துவிட்டால், ஊரார் உன்னைப் பற்றிக் கூறிய பழிச்சொற்கள் நீங்கிவிடும். மற்றபடி நான் உன்னை நம்பவே செய்கிறேன்' என்று கூறினார்.

அன்பிற்பெரியாளும் இறைவனை மனமுருகி வேண்டினாள். மூடியிருந்த ஆலயக் கதவுகள் ஊரே பார்க்கத் திறந்தன. பலிபீடம் நந்திக்கு முன் போனது. தலவிருட்சம் கோயிலுக்கு முன்வந்து வளர ஆரம்பித்தது. யாருமே இல்லாமல் அர்த்தஜாம பூஜைகள் நடைபெற்றன. இதைக் கண்ட சங்கரனும் ஊராரும் அன்பிற்பெரியாளிடம் மன்னிப்புக் கேட்டனர். அவளோ மனம் உவந்து இறைவனை வேண்டிக்கொண்டாள். 

உதவிக்கு யாருமின்றித் தனித்திருந்த வேளையில் தனக்கு அன்னை சுகப்பிரசவம் நிகழ உதவியதைப் போலவே இந்தத் தலத்தில் வேண்டிக்கொள்ளும் பெண்கள் அனைவருக்கும் சுகப்பிரசவமே நிகழவேண்டும் என்று பிரார்த்தித்தாள். அவளின் பிரார்த்தனை இன்றளவும் நிறைவேறுவதாகச் சொல்கிறார்கள். ஏராளமான கர்ப்பிணிப் பெண்கள் இங்கு வந்து வழிபாடு செய்து போகிறார்கள். அவர்களின் வேண்டுதல்களும் நிறைவேறுகின்றன. வேண்டிக் கொண்டவர்கள் சுகப்பிரசவம் ஆனதும் மீண்டும் இந்தத் தலத்துக்கு வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும் என்பது நியதி.

வறுமையில் இருந்தவளுக்குப் பொன் வைத்துக் காத்ததால் இந்தத் தலத்து இறைவன் 'பொன்வைத்தநாதர்' எனப்பட்டார். பொன்வைத்தநாதரை வழிபட செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம்.

பொன்வைத்தநாதரை, அகத்தியர், பிரம்மன், இந்திரன், நாகராஜன் ஆகியோர் வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. 

செல்வது எப்படி : திருவாரூரிலிருந்து திருத்துறைபூண்டி செல்லும் வழியில் ஆலத்தம்பாடி யிலிருந்து  6 கி.மீ. தொலைவில் உள்ளது சித்தாய்மூர் பொன்வைத்தநாதர் திருக்கோயில்.