Published:Updated:

பாம்பு வடிவில் சுனை... காவிரிக்குச் சுரங்கம்..! - அமானுஷ்யமான கரூர் ஏழு கன்னிமார் அருஞ்சுனை

பாம்பு வடிவில் சுனை... காவிரிக்குச் சுரங்கம்..! - அமானுஷ்யமான கரூர் ஏழு கன்னிமார் அருஞ்சுனை
பாம்பு வடிவில் சுனை... காவிரிக்குச் சுரங்கம்..! - அமானுஷ்யமான கரூர் ஏழு கன்னிமார் அருஞ்சுனை

``ந்த சுனையின் ஆழம் எவ்வளவுன்னு யாருக்கும் தெரியாது. இங்கே மழை அதிகம் பெய்யாது. வெயில்தான் தகதகவென்னு கொளுத்தி எடுக்கும். ஆனா, வருஷத்துல 365 நாளும் இந்த ஏழு கன்னிமார் அருஞ்சுனையில் தண்ணீர் வத்தாது. இதைத் தீர்த்தமாக அள்ளிக் குடித்தால், தீராத தலைவலிகளும் தீரும். இங்கிருந்து ஏழு கிலோமீட்டரில் ஓடும் காவிரிக்கு குறுகலான ஒரு சுரங்கம் இருக்கு’’ 
சொல்லும்போதே கண்கள் விரிய ஆச்சர்யத்தோடு சொல்கிறார்  உப்புபாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன்.

கரூரிலிருந்து ஈரோடு செல்லும் நெடுஞ்சாலையில் 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது உப்புபாளையம். இந்தக் கிராமத்தில் நெடுஞ்சாலையை ஒட்டியிருக்கிறது ஏழு கன்னிமார் கோயில். அதன் அருகேதான் இந்தச் சுனை இருக்கிறது. பரந்து கிடக்கும் கரும்பாறையின் நடுவே ஆழமாகக் கோடு கிழித்ததுபோல் பாம்பு வடிவில் இருக்கிறது இந்தச் சுனை. இந்தச் சுனையைப் பற்றிப் பல அமானுஷ்ய தகவல்களைச் சொல்லி, நமக்கு ஆர்வத்தைத் தூண்டுகிறார்கள் இந்த ஊர் மக்கள். ``சற்று விரிவாகச் சொல்லுங்களேன்’’ கேட்டோம். 

``தமிழகத்திலேயே வறட்சியான பகுதின்னு இந்தப் பகுதி பேர் வாங்கிக்கிட்டு வருது. இங்கே மழை அதிகம் பெய்யாது. வெயில்தான் தகதகவென்னு கொளுத்தி எடுக்கும். ஆனா, வருஷத்துல 365 நாளும் இந்தச் சுனையில் தண்ணீர் வத்தாது. இந்தச் சுனை இன்னைக்கு நேத்து இல்லை, கடந்த 400 வருஷமா இங்க இருக்குன்னு சொல்றாங்க. இந்தக் கரும்பாறையில் 400 வருஷத்துக்கு முன்னாடி பெரிய இடி ஒண்ணு விழுந்து, இப்படிப் பாம்பு வடிவில் சுனை ஏற்பட்டிருக்கு.

அப்போதிருந்தே, இந்தச் சுனையில் தண்ணீர் தேங்கி இருந்திருக்கு. ஆனா, இது தீர்த்தமா மாறுனது கடந்த 150 வருடங்களாகத்தான்’’ என்று சொல்லி சில நொடி நிறுத்தித் தொடர்ந்தார். 

``150 வருஷத்துக்கு முன்னாடி பக்கத்தூரைச் சேர்ந்த ஆறு சிறுமிங்க வீட்டுக்குத் தெரியாம இரவு நேரத்துல நொய்யலுக்கு கூத்துப் பார்க்க போயிருக்காங்க. திரும்பி வரும்போது, நடுசாமமா ஆயிட்டு. `வீட்டுக்கு போனா பிரச்னையாயிடும்'னு பயந்துபோன ஆறு பேரும், இந்தச் சுனையில் குதிச்சு இறந்துட்டாங்க. அதன் பின் ஊருக்குள்ள சில துர்சகுணங்கள் நிகழ்ந்திருக்கு. அதனால் ஊர்க்காரங்க சேர்ந்து அந்தச் சிறுமிகள் நினைவாக சுனையை ஒட்டி ஏழு கன்னிமார் தெய்வங்களுக்குக்  கோயில் கட்டி வழிபட்டிருக்காங்க. 

அதேபோல், 80 வருஷத்துக்கு முன்னாடி இந்தச் சுனை ஓரமா இருந்த தொரட்டி மரத்துல தூக்குப்போட்டு ஒருவர் இறந்துபோயிருக்கார். அவரோட ஆவியால கெடுதல் வராம இருக்க அந்த மரத்திலேயே அவரை கருப்பண்ணசாமியா நினைச்சு வணங்க ஆரம்பிச்சுட்டாங்க. இந்தத் தொரட்டி மரத்துல என்ன விசேஷம்னா இந்த மரம் காய்ச்சு கருகி அழிஞ்சாலும், அதே இடத்தில புதுசா ஒரு தொரட்டி மரம் முளைச்சு வந்துருமாம். காலம்காலமா இப்படி நடக்கிறதா சொல்றாங்க. இதற்குக் கருப்பண்ணசாமியோட அருள்தான் காரணம்னு நெனைச்சு இந்த மரத்தை சாமி மரமா வணங்கி வர்றோம். 

இந்தச் சுனை பாம்பு வடிவில் இருக்கு. இந்தச் சுனையில் பாம்புகளும் பெரிய பெரிய மீன்களும் இருக்கு. எங்க ஊர்ல நிலத்தடி நீர் மட்டமே 900 அடிக்குக் கீழே போய்ட்டு. ஆனா, இந்தக் கரும்பாறை ஏழு கன்னிமார் சுனையில மட்டும் தண்ணீர் எப்போதும் வத்தவே வத்தாது. அளவும் குறையாது. இந்தச் சுனை கடுமையான ஆழம் கொண்டதுன்னு எங்க முன்னோர்கள் சொல்லி வச்சுருக்காங்க. இந்தச் சுனை தண்ணீரை ஏழு கன்னிமார், கருப்பண்ணசாமியை வேண்டிக்கொண்டு தீர்த்தமாக வீட்டுக்கு எடுத்துபோய் குடிப்பதோடு, தலையில் தெளித்துக்கொண்டால் தீராத தலைவலியும் தீரும் என்பது நம்பிக்கை. இந்த வழியாகப் போற திருச்சி, நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல் மாவட்ட மக்கள்கூட, தங்கள் பிரச்னைகள் தீர இங்கே வர்றாங்க. 


அதேபோல், இந்தச் சுனை பற்றி இன்னொரு அதிசயமும் இருக்கு. இந்தச் சுனையின் கீழிருந்து காவிரியாறு ஓடும் ஏழு கிலோமீட்டரில் உள்ள புங்கோடை வரை சிறிய அளவில் சுரங்கம் இருக்கு.  ஏழுகன்னிமார் கோயில் திருவிழாவின்போது பூஜை செய்யப்பட்ட சொம்பை இந்தச் சுனையில் விட்டால், அது அந்தச் சுரங்கம் வழியாகப் போய், காவிரி ஆற்றில் சேர்ந்து செல்லுமாம். கடந்த 60 வருஷத்துக்கு முன்புவரை அப்படி நடந்திருக்கு. அதன் பிறகு, அது நடக்கலை. ஒருவேளை அந்தச் சுரங்கம் தூர்ந்துபோயிருக்கலாம். ஊர்மக்களும் சுனைக்குள் இறங்கி அதை ஆய்வு பண்ண பயந்துக்கிட்டு, அப்படியே விட்டுட்டாங்க. சுனையின் ஓரமாகப் பாறையைச் செதுக்கி படிகள் அமைச்சுருக்கிறோம். அதுல, பக்தர்கள் நின்னுகிட்டு தீர்த்தத்தை எடுப்பதோடு சரி. சுனைக்குள் யாரும் இறங்குவதில்லை. 

வருஷாவருஷம் கார்த்திகை மாசம் ஏழு கன்னிமார் சாமிக்கு திருவிழா எடுப்போம். வாரத்துல திங்கள், வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை தினங்களில் ஏழு கன்னிமார் சாமிக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடுவோம். இதைத் தவிர, குறைகளை வேண்டிக்கிட்டு போகும் பக்தர்கள், வேண்டுதல் நிறைவேறினா, கருப்பண்ணசாமிக்கு வந்து வேண்டுதலை நிறைவேத்துவாங்க. சேவல், ஆடு காணிக்கையா தருவாங்க.  'கரும்பாறையில் இப்படி ஒரு அருஞ்சுனையா?' னு பக்தர்கள் பலரும் இதை ஆச்சர்யத்தோடு வந்து பார்த்துட்டுப் போறாங்க. 

கரூரிலிருந்து ஈரோடு சாலையில் எங்க ஊர்கிட்ட மட்டும் விபத்து ஏதும் நடக்காது. அதுக்குக் காரணம், ஏழு கன்னிமாரும் கருப்பண்ணசாமியும்தான்’’ என்று பக்தியோடு கூறினார் செல்லப்பன். 
நாம் பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு பக்தர் தனது மகனோடு ஏழுகன்னிமார் மற்றும் கருப்பண்ணசாமியை பவ்யமாக வணங்கிவிட்டு அருஞ்சுனையில் தீர்த்தத்தை சேகரித்துக்கொண்டிருந்தார். அவரோடு பேசினோம்.

``என் பெயர் வேலுச்சாமி. நான் பழனி பக்கமுள்ள சத்திரப்பட்டியில் இருந்து வர்றேன். என் மகனுக்கு சில வருடங்களுக்கு முன்பு கடுமையான தலைவலி. என்ன வைத்தியம் பார்த்தும் சரியாகலை. அப்பதான், இந்த அருஞ்சுனை தீர்த்தம் பத்தி கேள்விப்பட்டு, இங்க வந்தோம்.

இந்தத் தீர்த்தத்தை அவனுக்குக் கொடுத்ததும், எந்த வைத்தியத்துக்கும் சுகப்படாத அவனோட தீராத தலைவலி சடார்ன்னு மட்டுப்பட்டுட்டு. அன்னையில் இருந்து இந்தப் பக்கமா எப்போ வந்தாலும், ஒரு எட்டு வந்து இந்த அருஞ்சுனையைப் பார்ப்போம். ஏழு கன்னிமார், கருப்பண்ணசாமியை மனசு தீர வேண்டிக்கிட்டு போவோம். எங்க குடும்பத்துக்கு இஷ்ட தெய்வமாகவும் இஷ்ட இடமாகவும் இது மாறிட்டு சார்’’ என்று உணர்வுமேலிடப் பேசினார்.