Published:Updated:

பூம்புகாரில் நடைபெற்ற சப்தகன்னியர் வழிபாடு! - மாசிமகத் தீர்த்தவாரி கோலாகலம்!

பூம்புகாரில் நடைபெற்ற சப்தகன்னியர் வழிபாடு! - மாசிமகத் தீர்த்தவாரி கோலாகலம்!
பூம்புகாரில் நடைபெற்ற சப்தகன்னியர் வழிபாடு! - மாசிமகத் தீர்த்தவாரி கோலாகலம்!

நாகை மாவட்டம், பூம்புகாரில் உள்ள கடலும், காவிரியும் சேரும் சங்கமத் துறையில் மாசிமகத் திருநாளான நேற்று (19.2.19) சப்தகன்னியர் வழிபாடு நடைபெற்றது. கடலோர கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு தங்கள் மீன்பிடித் தொழில் சிறக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.


பூம்புகாரில் ஒவ்வொரு ஆண்டும் மாசிமக பௌர்ணமி நாளில் கடற்கரை ஓரத்தில் மீனவ சமூக மக்கள் தங்கள் மீன்பிடித் தொழில் வெற்றிகரமாக நடக்க வேண்டியும், கடல் வளம் அதிகரிக்கவும் சப்தகன்னியருக்குப் பொங்கலிட்டு படையலிடுவர். இந்திரனின் சபையில் நடன மங்கையர்களாக இருக்கும் சப்தகன்னியர் மாசிமகத்தில் மட்டும் பூமியில் இறங்கிக் கடலுக்கு வருவதாகவும், இந்த நேரத்தில் இவர்களுக்குப்  படையலிட்டு வணங்கினால் வேண்டியதைத் தருவார்கள் என்பதும் இங்குள்ள மக்களின் நம்பிக்கை.

நேற்று மாலை 4 மணியளவில் பூம்புகார் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீதயாள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் உள்ள சப்தகன்னியருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஏராளமானோர் பொங்கலிட்டுப் படைத்தனர். பின்பு மாலை 6 மணியளவில் நிலவு தோன்றியதும் கடற்கரை ஓரத்தில் ஏழு இலைகளிட்டு அதில் பொரி, வாழைப்பழம், கடலை, சர்க்கரை, தேங்காய், கரும்பு முதலியவற்றைப் படையலிட்டு தீபாராதனை செய்து சப்தகன்னியரை  வணங்கினர்.

பிறகு ஒரு மண் கலசத்தை மலர்களால் அலங்கரித்து அதில் தீபம் ஏற்றி ஒரு படகின் மூலமாகக் கடலுக்குள் எடுத்துச் சென்று தீபத்தைக் கடல் நீரில் விட்டனர். அப்போது கரையில் இருந்தவர்கள் பட்டாசு வெடித்துத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். படகு கரையை அடைந்த சிறிது நேரத்தில் கலசம் கரையை அடைந்துவிடும் என்பதும், அப்படிக் கலசம் வந்துவிட்டால் சப்தகன்னியர் தங்களது வேண்டுதலை ஏற்றுக்கொண்டார்கள் என்றும், வரும் ஆண்டில் மீன்பிடி தொழில் சிறப்பாக நடைபெறும் என்பதும் இவ்வூர் மக்களின் நம்பிக்கை. 
மாலை 4 மணியளவில் தொடங்கிய இந்தப் பூஜை இரவு 8 மணிவரை நடைபெற்றது. அன்று இரவு நேரத்தில் கடற்கரை பகுதியில் யாரும் இருக்கக் கூடாது என்பதால், அனைவரும் கோயிலுக்குத் திரும்பிவிட்டனர். நேற்று யாரும் கடலுக்கு மீன் பிடிக்கவும் செல்லவில்லை. பூம்புகாரைப் போலவே நாகை மாவட்டத்தில் உள்ள மற்ற மீனவ கிராமங்களிலும் சப்தகன்னியர் வழிபாடு நடைபெற்றது. 

மேலும், நேற்று மாசிமகத் தீர்த்தவாரி என்பதால் பூம்புகார் காவிரி சங்கமத் துறையில் சுற்றுவட்டாரத்தில் உள்ள கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.