Published:Updated:

திருவெண்காட்டில் சிவபெருமான் நிகழ்த்திய சூரசம்ஹாரம்...

திருவெண்காட்டில் சிவபெருமான் நிகழ்த்திய சூரசம்ஹாரம்...
திருவெண்காட்டில் சிவபெருமான் நிகழ்த்திய சூரசம்ஹாரம்...

நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுவேதாரண்யேசுவரர் கோயிலில் மாசி மாதத்தில் இந்திரவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான இந்திரவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 5-ம் நாளான நேற்று சிவபெருமான் அகோரமூர்த்தியாகத் தோன்றி மருத்துவாசுரன் என்னும் அசுரனை சம்ஹாரம் செய்யும்  வைபவம் நடைபெற்றது.

இந்தத் தலத்தில் சிவபெருமான் தம்முடைய ஐந்து திருமுகங்களில் ஒன்றான அகோர முகத்தில் அகோரமூர்த்தியாகத் தனிச் சந்நிதியில் அருள்கிறார். முற்காலத்தில் மருத்துவாசுரன் என்பவன் சிவபெருமானைக் குறித்துத் தவமியற்றி, அவருடைய சூலத்தை வரமாகக் கேட்டுப் பெற்றான். சிவனாரின் அந்த ஆயுதத்தால் அவன் தேவர்களையும் முனிவர்களையும் பலவாறாகத் துன்புறுத்தினான். அவனுடைய அட்டகாசத்தை அடக்கத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், தம்முடைய வாகனமான நந்திதேவரை அழைத்து அசுரனிடம் சென்று அவனுக்கு அறிவுரை கூறிவரும்படி அனுப்பி வைத்தார். ஆனால், அசுரனோ சிவபெருமானிடம் பெற்ற சூலத்தால் நந்திதேவரைத் தாக்குகிறான். சிவனாரின் ஆயுதம் என்பதால், நந்திதேவர் அதைத் தடுக்கவில்லை. அதன் காரணமாக நந்தியின் கொம்பு முறிந்து, உடலிலும் காயங்கள் ஏற்பட்டன. இன்றைக்குக் கோயிலில் நந்தி உடலில் தழும்புகளுடன் காட்சி தருவதைக் கோயிலில் காணலாம்.

நடந்ததை அறிந்து சினம் கொண்ட சிவபெருமான், அகோரமூர்த்தியாகத் தோன்றி மருத்துவாசுரனை சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்ச்சியின் அடிப்படையில் ஆண்டுதோறும் மருத்துவாசுரன் சம்ஹாரம் நடைபெறுவது வழக்கம். 

நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாகக் கடந்த 18-ம் தேதி இரவு அகோரமூர்த்தி மகாமண்டபப் பிரவேசம் நடைபெற்றது. அதன் பின்னர் நேற்று காலை 10.30 மணியளவில் உற்சவரான அகோரமூர்த்தி கோயிலிலுள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றன. இரவு 10 மணியளவில் அகோரமூர்த்தி தட்சிணாமூர்த்தி சந்நிதிக்கு எதிரில் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நந்திதேவர் அசுரனுடன் போரிடுவது, நந்தி சிவபெருமானிடம் முறையிடுவது நடைபெற்றன. நந்தியின் நிலை கண்டு சினம் கொண்ட சிவபெருமான், அகோரமூர்த்தியாகத் தோன்றி மருத்துவாசுரனை சம்ஹாரம் செய்தார். தொடர்ந்து சுவாமியின் வீதியுலா நடைபெற்றது. வருடத்தில் இந்த ஒருநாள் மட்டுமே அகோரமூர்த்தி வீதியுலா வருவார் என்பதால், ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்தனர்.

விழாவின் அடுத்த பிரதான வைபவமாக வரும் 21-ம் தேதி சுவேதாரண்யேசுவரர் - வித்யாம்பிகை திருக்கல்யாண வைபவமும், 23-ம் தேதி தேர்த் திருவிழாவும், 26-ம் தேதி தெப்போற்சவமும் நடைபெற உள்ளன. திருவிழா நாள்களில் ஆலயத்தில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.