
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்ஓவியம்: பாலகிருஷ்ணன்

வாய்த்தது நம் தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்’ என்பது அப்பர் பெருமான் வாக்கு. `வாழ்க்கையை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.’ இப்படி அப்பர் சொல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டது ஏன்?
இந்த மண்ணில் புறநெறிகளின் படையெடுப்பால் வாழ்வாங்கு வாழவேண்டிய வாழ்க்கை நெறிமுறைகளை விட்டுவிட்டு, மனித சமூகம் விலகிச் செல்லவேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டது.

வாழ்க்கை பொய். மனைவி, மக்கள் பொய். உறவுகள் பொய். சுற்றம் பொய். நட்பு பொய். எல்லாம் பொய்... எனப் புறநெறிகள் படையெடுக்கும்போது, உங்கள் இன்ப, துன்பத்துக்காக உங்களோடு பேசி, பழகி, மகிழ்ந்து, களித்து வாழும் உங்கள் வாழ்க்கைத்துணை நலம் எப்படிப் பொய்யாகிப்போகும்?
இன்று வாழ்க்கை எப்படி இருக்கிறது... நமக்கென்று ஓர் அஞ்சலக முகவரி இருந்தால், நாம் வாழ்கிற பட்டியலில் வந்துவிடுவோமா... நமக்கென ஆதார் அட்டை இருந்தால், நாம் வாழ்கிற பட்டியலில் சேர்ந்துவிடுவோமா?
பலரைப் பார்த்துக் கேட்கிறோம்... `எப்படி இருக்கிறீர்கள்?’
`ஏதோ இருக்கிறேன். ஏதோ பிழைக்கிறேன்...’
இருத்தலும் பிழைத்தலும் வாழ்க்கை ஆகிவிடுமா... இன்றைக்கு யாரால் `நான் வாழ்கிறேன்’ என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல முடியும்? அப்படிச் சொல்பவர்கள்தாம் வாழ்கிறவர்களின் பட்டியலுக்குள் வருவார்கள்.
ஜென் தத்துவம் சொல்கிறது... `Don’t drink. Please live with Tea.’ அதாவது, `தேநீரோடு வாழுங்கள். தேநீரைப் பருகாதீர்கள்’ என்கிறது. தேநீரோடு வாழ்வதென்பது, அதைக் குடிக்கும்போது, அதனோடு கலந்து கரைந்து நிற்பது. உயிரோடு இருப்பதல்ல வாழ்க்கை. உயிர்ப்போடு இருப்பதுதான் வாழ்க்கை. நம்மில் எத்தனை பேர் உயிர்ப்போடு வாழ்க்கையை நகர்த்துகிறோம்?

திருஞானசம்பந்தப் பெருமானின் தோற்றத்தைப் பாடவந்த சேக்கிழார், `அசைவில் செழுந்தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்ல திரு அவதாரம் செய்தார்’ என்கிறார். தமிழ் வழக்கு எது... அயல் வழக்கு எது? `எல்லாம் பொய்’ என்ற நிலையில், வாழ்க்கையை விட்டு வெளியே செல்லவேண்டும் என்ற நிர்பந்தத்தில், வாழ்க்கை எப்படிப் பொய்யாகும்? `வாழ்வதற்கே வாழ்க்கை’ என்பதை நம் தமிழ்ப் பண்பாட்டு நெறி வலியுறுத்தியது.
‘நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும்
பெருமை யுடைத்து இவ்வுலகு’
நேற்று இருந்தவன் இன்று இல்லை. ஆனால், நேற்று இருந்தவன் ஆற்றிய அறச் செயல்கள் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. ராஜராஜன் இன்று இல்லை; அவன் எழுப்பிய தஞ்சைப் பெரிய கோயில் கம்பீரமாகக் காட்சி தருகிறது. கரிகாலன் இன்று இல்லை; அவன் கட்டிய கல்லணை உலக மானுடத்தின் அதிசயமாகப் பேசப்படுகிறது.
ஆக, வாழ்க்கை நிலையில்லாமல் இருக்கலாம். ஆனால், நல்லவற்றைக் காண வேண்டும்; நல்லவற்றைப் பேச வேண்டும். நல்லவற்றை நுகர வேண்டும். வீட்டுக்கு மட்டும் விளக்காக இல்லாமல் வீதியின் விளக்காக மாறுவதே வாழ்க்கை. பண்ணோடு கலந்த பைந்தமிழின் இனிய இசை கேட்டு மகிழ்ந்து வாழ்ந்தது தமிழ்ப் பண்பாட்டின் தடம். இறைவனுக்கும் ஆன்மாவுக்கும் இடையேயுள்ள இடைவெளியை இட்டு நிரப்பியது இசை. இசைதான் இந்த உலகத்தை ஆள்கிறது; மனித ஆன்மாவைப் பக்குவப்படுத்துகிறது. எங்கும் இசை, எதிலும் இசை. `கானப்பறவை கலகலெனும் ஓசையிலும்...’ என்ற பாடலில் இசையின் அருமையைப் பட்டியலிடுகிறார் பாரதி.
அக்பர் அரசவையில் இசைவாணராக இருந்தவர் தான்சேன். அவரின் இசையில் நெகிழ்ந்துபோய் அக்பர் ஒருமுறை சொன்னார்... ``உன் இசையே இப்படி மயக்குகிறதென்றால், உனக்குக் கற்றுக்கொடுத்த உன் குருநாதரின் இசை எப்படி இருக்கும்... அதை நான் கேட்க வேண்டுமே...’
``குருநாதர் இங்கெல்லாம் வர மாட்டார். நாம்தான் அவரைச் சென்று பார்க்க வேண்டும்.’’
ஒப்புக்கொண்டார் அக்பர். ஒருநாள் அதிகாலைப் பொழுதில் அவரைத் தேடிப் போனார்கள். தான்சேனின் குருநாதர் ஹரிதாஸ் கங்கையில் நீராடிவிட்டு, இறைவன் சந்நிதியில் பாடினார். இசையாகவே மாறிப்போயிருந்தார். அந்த இசையில் சொக்கிப்போன அக்பர், ``தான்சேன், நீ சிறந்த பாடகன்தான். ஆனால், உன் குருநாதர்போல் உன்னால் சிறப்பாகப் பாட முடியவில்லையே... ஏன்?’’ என்று கேட்டார்.
``மன்னிக்க வேண்டும் அரசே. நான் உங்களுக்காகப் பாடுகிறேன். என் குருநாதரோ இறைவனுக்காகப் பாடுகிறார். பரிசுகளுக்காக அவர் பாடுவதில்லை. பாடுவதற்காகவே அவர் பாடுகிறார். அதனால்தான் அவர் இசை எல்லாவற்றிலும் உயர்ந்ததாக இருக்கிறது. அது, தெய்விகமானது.’’
எந்தப் பணியையும் தனக்காகச் செய்யாமல் சமூகத்துக்காக, உலகத்துக்காக, இறைமைக்காகச் செய்யும்போது அது, அற்புதத்தின் எல்லையை அடைகிறது.
தமிழகத்தில் தமிழில் பாடத் தடை இருந்த காலம். சில மேடைகளில் `துக்கடா’ என்று தமிழ்ப்பாடல்களைப் பாடுவார்கள். அப்படி ஒரு மேடையில் துக்கடா பாடியதற்காக, `தீட்டாகிவிட்டது’ என்று மேடையைக் கழுவிவிட்டார்கள். அப்போது ஒரு தனிமனிதர் சுயமரியாதையோடு வீறுகொண்டு எழுந்தார். ‘தமிழ்நாட்டு மேடைகளில் தமிழுக்கு இடமில்லையா... இனி எங்கும் தமிழிசை முழங்க வேண்டும்’ என்று முழங்கினார். அதை நடைமுறைப்படுத்தவும் செய்தார். அவர், `அண்ணாமலை அரசர்.’ அது, தமிழிசை இயக்கமாக உருவெடுத்தது.

உலக நன்மைக்காக, சமூக மேம்பாட்டுக்காகச் சிந்திப்பவர்களின் இதயம் விசாலமானது. இளையான்குடிமாற நாயனார் என்ற அடியவர் இல்லத்தில் வறுமை. ஆனால், அவருடைய இதயத்தில், எண்ணத்தில் வளமை. யார் பசியென்று வந்தாலும் உணவு தருகிற மனம் அவருக்கிருந்தது. இப்படிப்பட்ட கொடையுள்ளம் கொண்டவர்கள்தாம் நம் சமூகத்துக்குத் தேவைப்படுகிறார்கள்.
வாழ்க்கை நிலையில்லாதது. நேற்று செல்வந்தராக இருந்தார்; இன்று ஏழையாகிவிட்டார்; நேற்று உயர்ந்த பதவியில் இருந்தார்; இன்று பணிநிறைவு அடைந்துவிட்டார். நிலையாமையின் உச்சம் மரணம். அதைத்தான், ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி...’ பாடல் விவரிக்கிறது. மரணம், சிலரைக் கடவுளாக்குகிறது. சிலரை மனிதகுலம் உள்ளவரை மறக்க முடியாத மகாத்மாவாக்கிவிடுகிறது.
இயேசு பெருமான் செங்குருதி கொட்ட சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்ததால், அவரைக் கடவுளின் குமாரனாகக் கண்டார்கள். மத ஒற்றுமைக்காக உயிர் நீத்ததால்தான் காந்தி, மகாத்மாவாக மாற முடிந்தது.
32 வயதில் ஆதிசங்கரரின் உலக வாழ்வு முடிந்தது.
35 வயதில் இயேசு; 39 வயதில் பாரதி; 40 வயது நிறைவதற்குள் விவேகானந்தர்... இப்படி ஞானிகளும் மேதைகளும் இளமையிலேயே மரணத்தைத் தழுவியதைப் பார்த்து, `சாவே… உனக்கு ஒருநாள் சாவு வராதா என்று சபிக்கத் தோன்றுகிறது’ என்றார் கண்ணதாசன்.
வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது. நிலையில்லாத வாழ்வில் நிலைத்திருக்கும் பணிகளை ஆற்றி, உலகத்தின் இருளை விரட்ட, ஒளிவிளக்காக வழிகாட்டியவர்கள் அந்த மகாத்மாக்கள். அவர்கள் காட்டிய வழி, மரணமில்லாப் பெருவாழ்வுக்கு நம்மை அழைத்துப் போகும் தடம். மரணத்தை வென்று மாமனிதர்களாக வாழ முடியும் என்று அவர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள்.
ஒரு குறுந்தொகைப் பாடலில் ஒரு காட்சி விவரிக்கப்படுகிறது. ஆண் குரங்கு இறந்துவிடுகிறது. பெண் குரங்கு தனிமையில், கைம்மைக் கோலத்தில் வாழ விரும்பாமல் தானும் இறக்கத் துடிக்கிறது. அந்த நேரத்தில் தாய்க் குரங்கின் மடியைக் குட்டிக் குரங்கு நெருடுகிறது. குனிந்து பார்க்கிறது தாய். இன்னும் அந்தக் குட்டி, மரம் விட்டு மரம் தாவும் பயிற்சியைப் பெறவில்லை. கண்ணீர்த்துளிகளால் குட்டிக் குரங்கைக் குளிப்பாட்டுகிறது தாய். குட்டிக் குரங்கை அன்போடு இறுகப் பற்றிக்கொண்டு, மரம் விட்டு மரம் தாவும் பயிற்சியைக் கற்றுக் கொடுத்துவிட்டு, அந்த மந்தி, தன் ஆண் துணையை நினைத்து உயிர்த் தியாகம் செய்கிறது. `விலங்கு உணர்வு’ என்று சொல்வார்கள். ஆனால், விலங்குக்குள்ளும் எத்தகைய அன்பு உணர்வு!
புறா தன் துணையைத் தவிர வேறொன்றைத் தேடாது. `இலினோயில்’ என்னும் கிளி, துணைக்கிளி இறந்துவிட்டால் தானும் இறந்துவிடும். `வீட்டியா’ என்கிற பறவை தன் இணை மறைந்த ஒரு மாதத்துக்குள் அதே நினைவாக இருந்து மரணத்தைத் தழுவிவிடும். `கோல்டன் ஈகிள்’ எனப்படும் கழுகு, வேறொன்றை நாடாமல் தன் துணையோடு மட்டுமே நூறாண்டுகள் வாழும்.
பல அறிவுஜீவிகளுக்கு வாழ்க்கைத் துணைநலம் சரியாக அமையாமல்போனதும் உண்டு. `அன்னா கரீனினா’ நாவல் உட்பட உலகத்தையே புரட்டிப்போட்ட எழுத்துகளுக்குச் சொந்தக்காரர் லியோ டால்ஸ்டாய்க்கு அந்த நிலைதான். ‘உலகத்தை அறிந்துகொள்வதற்கு முன் உன்னை அறிந்துகொள்’ என்ற கிரேக்க அறிஞர் சாக்ரடீஸுக்கும் அதே நிலைதான். வாழ்க்கைத்துணை நலம் என்பது அன்பின் எல்லையில் வாழ்வது. அன்புதான் வாழ்க்கையின் அடித்தளம். அதைப் புரிந்துகொண்டால் இல்லாமையிலும் இனிய வாழ்க்கை வாழலாம்.
உலகப் புகழ்பெற்ற பாப் பாடகர் க்ளிஃப் ரிச்சர்டு (Cliff Richard). ஒருமுறை வங்கதேசத்திலிருக்கும் ஓர் அகதிகள் முகாமுக்குப் போனார். ஆதரவற்ற குழந்தைகள் நிறைய பேர் இருந்தார்கள். அவர்களில் பலருக்கு சொறி, சிரங்குகள், புண்கள்... புகைப்படக்காரர், ரிச்சர்டை ஒரு குழந்தையின் அருகே நிற்கச் சொன்னார். ரிச்சர்டு, குழந்தையை நோக்கிக் குனிந்தார். அதன் பரிதாபமான நிலையைப் பார்த்து அவருக்கே அருவருப்பாக இருந்தது. அதே நேரம், அந்தப் பக்கமாக வந்த ஒருவர், குழந்தையைத் தெரியாமல் மிதித்துவிட, குழந்தை வீறிட்டு அழுதது. உடனே ரிச்சர்டு, அதைத் தூக்கி வாரி அணைத்துக்கொண்டார். குழந்தை அழுவதை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்தது. புகைப்படக்காரர் அந்தக் காட்சியைப் படம் பிடித்தார். குழந்தையின் அழுகுரல் நின்றபோதுதான் அன்பின் அர்த்தத்தை, மகத்துவத்தை உணர்ந்துகொண்டார் ரிச்சர்டு. அந்தப் புகைப்படத்தை அரிய பொக்கிஷமாக, தன் படுக்கை அறையிலேயே வாழ்நாள் முழுக்க வைத்திருந்தார். அன்புதான் வாழ்க்கையின் ஆதார ஸ்ருதி.
வாழ்க்கையில் கண்ணீருக்கு நடுவே, காயங்களுக்கு இடையே, போர்க்களங்களுக்கு மத்தியில் அமைதியையும் அன்பையும் பூத்துக் குலுங்கச்செய்தார்கள் சில மகாத்மாக்கள். அவர்களின் வழியை நாம் வலிமைப்படுத்துவோம். அந்தத் தடத்தில் பயணம் செய்வோம்.
- புரிவோம்...
அடிகளாரைக் கேளுங்கள்

இந்தியா முழுக்க நதி நீர் இணைப்பு சாத்தியப்பட என்ன செய்ய வேண்டும்?
- சியாமளா ரங்கன், சென்னை - 28.
நதிநீர் தேசியமயமாக்கப்பட வேண்டும்.
மதத் தீவிரவாதம் களைவதற்கான வழி என்ன?
- ஆ.சிவசூரியன், தூத்துக்குடி-2.
ஒவ்வொருவரும் தங்கள் சமயக் கோட்பாடுகள் காட்டும் அன்பின் அடிப்படையைப் புரிந்துகொண்டால், மதத் தீவிரவாதத்துக்கு வேலை இருக்காது.
துக்க தருணங்களின்போது, இரங்கலை வெளிப்படுத்த உபயோகப்படுத்தப்படும் வார்த்தை, `அஞ்சலி.’ இதை, பெண் குழந்தைகளுக்குப் பெயராக வைப்பது பொருத்தமாக இருக்குமா?
- அ.முஹம்மது நிஜாமுத்தீன், நீடூர்.
`அஞ்சலி’ என்று குழந்தையை அன்பாக அழைக்கும்போது வேறு பொருள்கொள்ளத் தேவை இல்லையே... தாராளமாக `அஞ்சலி’ என்று குழந்தையை அழைக்கலாம்.
நாயன்மார்களால் பாடல்பெற்ற பல ஆலயங்கள் பராமரிக்கப்படாமல் பூஜை செய்யப்படாமல் இருக்கின்றன. அவற்றைச் செப்பனிடாமல் புதிது புதிதாகக் கோயில்கள் கட்டப்படுவது தொடர்கிறதே?
- ப.த.தங்கவேலு, பண்ருட்டி.
பழைமையான பாடல்பெற்ற ஆலயங்கள் பராமரிக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வை பக்தர்கள் பெற வேண்டும்.
ஆன்மிகம், நாத்திகம், அரசியல், சமூகப் பணி... இவற்றில் மனித அடையாளம் எது?
- வ.பக்கிரிசாமி, தஞ்சை-1.
ஆன்மிகம், நாத்திகம், அரசியல், சமூகப் பணி என அனைத்துமே மனிதர்களுக்காகத்தான் பேசப்படுகின்றன.
அடிகளாரைக் கேளுங்கள் பகுதிக்கு கேள்விகளை 7358202444 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள். அஞ்சல் மூலம் கேள்விகள் அனுப்ப விரும்புபவர்கள், அடிகளாரைக் கேளுங்கள் பகுதி, ஆனந்தவிகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600002 என்ற முகவரிக்கு அனுப்பலாம். சிறந்த கேள்விகள் பிரசுரிக்கப்படும்.