Election bannerElection banner
Published:Updated:

`நான் என் பக்தனுக்கு அருள விரும்பினால் அதை எந்தக் கதவுகளாலும் தடுக்கமுடியாது'- சாய்பாபா #SaiBaba

`நான் என் பக்தனுக்கு அருள விரும்பினால் அதை எந்தக் கதவுகளாலும் தடுக்கமுடியாது'- சாய்பாபா #SaiBaba
`நான் என் பக்தனுக்கு அருள விரும்பினால் அதை எந்தக் கதவுகளாலும் தடுக்கமுடியாது'- சாய்பாபா #SaiBaba

`நான் என் பக்தனுக்கு அருள விரும்பினால் அதை எந்தக் கதவுகளாலும் தடுக்கமுடியாது'- சாய்பாபா #SaiBaba

திடுக்கிட்டு விழித்த மேகாவால் அதை ஒரு கனவு என்று நம்பமுடியவில்லை. கதவுகள் மூடியிருக்கின்றன. யாரும் உள்ளே வந்திருக்க வழியில்லை. ஆனால், சற்றுமுன் மகான் சாய்பாபா இந்த இடத்தில்தான் நின்று தரிசனம் கொடுத்தார். இதோ இந்தச் சுவரைக் காட்டி, `இங்கு ஒரு திரிசூலம் வரைவாயாக' என்று சொன்னார். தன் கைகளால் அட்சதைகளையும் தூவினார். அட்சதைகள் தன் மேல் விழும் உணர்வு மேலிடத்தான் விழிப்புத் தட்டியது. அட்சதைகள் கீழே கிடக்கின்றன. அப்படியானால்... 

மேகாவுக்கு உடல் சிலிர்த்தது. மகான் சாயியைத் தவிர இப்படியெல்லாம் நம்மை இத்தனை சாமானியமாய் அணுகி அருள்பாலிப்பவர் யார்?

மேகா இன்னும் அந்த தரிசனத்தின் பிடியிலிருந்து மீளமுடியாமல் தவித்தார். `ஏன் இப்போதே போய் பாபாவிடம் இந்த தரிசனம் குறித்துக் கேட்கக் கூடாது' என்று நினைத்தார்.

வேகவேகமாகக் கிளம்பி சாயிநாதரை தரிசிக்கக் கிளம்பினார்.

`வந்தது நீங்கள்தானா என்று கேட்டால் பாபா என்ன நினைத்துக்கொள்வார்? இன்னுமா உனக்கு என் மேல் நம்பிக்கை வரவில்லை என்று கேட்டுவிட மாட்டாரா?' 

மேகா பழைய நினைவுகளில் மூழ்கினார்...

*

அன்று பக்தி மிகுதியால் அவர் ஷீரடிக்கு வரவில்லை. விருப்பம் இல்லாமல்தான் வந்தார். பாபாவின் பக்தர்களில் ஒருவரான ஸாதே என்பவரிடம் மேகா சமையல்காரராக வேலைபார்த்தார். 

``மேகா, இந்த இளமையில் உனக்கு வாய்த்திருக்கும் பக்தி அற்புதமானது. நீ ஒரு முறை சாயிநாதரைப் பார். அவர் தரிசனம் உன்னை ஆன்மிகத்தில் வழிநடத்தும். அவரை விடச் சிறந்த குரு உனக்குக் கிடைப்பது கஷ்டம்'' என்றார் ஸாதே. ஆனால் மேகாவுக்கு அதில் சம்மதம் இல்லை. 

பாபா ஒரு பக்கிரியைப் போல் காட்சி தருவதும், எப்போதும் `அல்லா மாலிக்' என்று சொல்வதும் மேகாவுக்குத் தெரியும் என்பதால், அவர் பாபாவை ஓர் இஸ்லாமியராகவே நினைத்தார். எனவே ஓர் பக்கிரியைப் பார்ப்பதில் அவருக்கு விருப்பமில்லை.

ஸாதேவும் மேகாவை விடாமல் வற்புறுத்திக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் தன் எஜமானரின் கட்டளையை மீறமுடியாமல் மேகா ஷீரடிக்குச் செல்ல நேரிட்டது.

பாபா துவாரகாமாயியில் இருந்தார். உள்ளே நுழையவே மேகாவின் கால்கள் கூசின. `ஆசாரமான இந்துக் குடும்பத்தைச் சேர்ந்த நான் போயும் போயும் துவாரகாமாயிக்குள் நுழைவதா என்ற தயக்கத்தோடு நின்றார். அப்போது பாபா வெளியே வந்தார். பாபா மேகாவைப் பார்த்தார். `கை எடுத்துக் கும்பிடவா அல்லது கால்களில் விழவா என்ன செய்வது?' என்கிற குழப்பம் மேகாவுக்குள். ஆனால் பாபாவோ, ``நான் ஒரு பக்கிரி. அழுக்குப் பிடித்தவன். நீ ஏன் இங்கு வருகிறாய்? போ, போய்  உன் சாதியையும் வர்ணத்தையும் காப்பாற்றிக்கொள் " என்று சீறும் குரலில் சொன்னார். 

மேகா ஒரு கணம் அதிர்ந்தார். இந்த மனிதர் எப்படி நம் மனதின் குரலைப் பேசுகிறார் என்று வியந்தார். ஆனால் குரல்தான் அப்படி இருந்ததே ஒழிய அவர் பார்வை அத்தனை குளிர்ச்சியாக அல்லவா இருக்கிறது?

மேகா அப்போதைக்கு அங்கிருந்து வந்துவிட்டாரே ஒழிய, அவரின் மனம் அங்கேயேதான் நிலைகொண்டிருந்தது. அந்த சாந்தம் ததும்பிய விழிகளும் அவரின் தாமரைப் பாதங்களும் அவர் கண்களிலிருந்து அகல மறுத்தன. 

மேகா ஒரு சிவபக்தர். `நமச்சிவாய' என்னும் நாமத்தை உச்சரித்தபடியே இருப்பார். ஒருநாள் அவர் சிவபூஜை செய்தபோது அவருக்குப் பாபாவின் நினைவு வந்தது. அவர் மனம் முழுமையையும் பாபாவே நிறைத்துக் கொண்டார். தான் பூஜித்துக்கொண்டிருப்பது பாபாவுக்கா சிவனுக்கா என்று ஐயம் ஏற்படும் அளவுக்கு அவர் மனம் குழப்பமுற்றது. 

மேகா மனதுக்குள் ஆயிரம் கேள்விகள்... சிவனும் பாபாவும் ஒருவரா? 

இந்தக் கேள்வி தோன்றினாலும் மேகாவால் பாபாவின் நினைவு தோன்றாமல் சிவபூஜை செய்யவே முடிவதில்லை. ஷீரடி நோக்கி நடந்தார். இந்த முறை பாபா அவரை விரட்டவில்லை. ஞானத்தின் அடுத்த படி நிலைக்கு உயர்ந்துவிட்ட மேகாவை தொட்டு ஆசீர்வதித்தார்.

பாபாவின் தொடுதல் போதாதா, ஞானம் ஸித்திக்க. மேகாவுக்கு பாபாவின் மேல் பக்தி பிறந்தது. சிவ பூஜை செய்யும்போது உள்ளூர பாபாவுக்கே செய்வதாக நினைத்துக்கொண்டார். தினமும் சிவபூஜைக்கு அபிஷேக நீரை நெடும்தொலைவு நடந்து சென்று கோதாவரி நதியிலிருந்து எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டார். சிவனை அபிஷேகிக்கும்போது பாபாவுக்கே அபிஷேகிக்கும் பரவசம் அவருக்கு ஏற்பட்டது.

ஒரு நாள் அவருக்குள் ஒரு விபரீத ஆசை. தினமும் ஏன் சிவரூபமாகவே பாபாவுக்கு அபிஷேகிக்க வேண்டும். பேசாமல் பாபாவுக்கே செய்துவிட்டால்...

மேகா புனித நீரை எடுத்துக்கொண்டு பாபாவின் இருப்பிடம் சென்றார்.

``பாபா, நான் தங்களை அபிஷேகிக்க விரும்புகிறேன்"

பாபா புன்னகை மாறாமல் இருந்தார். 

இந்த உலகில் இறைவன் உறையாத பொருள் எது? அவன் அம்சம் இல்லாத எதை நாம் வணங்க இயலும்? சிவலிங்கத்துள் உறைந்து கிடக்கும் அந்த பரப்பிரம்மமே குருவுக்குள்ளும் இருக்கிறது. இதை அறிந்துகொண்டவன் குருவையும் பரப்பிரம்மத்தையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அதே போல குருவுக்குள் இருக்கும் பரப்பிரம்மமே தனக்குள்ளும் இருக்கிறான் என்று அறியும்போது தானும் உயர்ஞான நிலையை அடைகிறான். 

ஞான நிலைகளில் ஒவ்வொரு படிநிலையாக உயர்ந்துகொண்டிருந்த மேகாவை, பாபா அடுத்த படிநிலைக்கு உயர்த்த திருவுளம் கொண்டார்.

``மேகா, நான் ஒரு பக்கீர். என் இயல்பு அபிஷேகம் செய்வதற்கு இடம் தராது" என்றார்.

ஆனால் பக்திப் பெருக்கில் நின்ற மேகாவுக்கு பாபா கூறிய வார்த்தைகள் எதுவும் காதில் விழவில்லை. பாபாவின் தலையில்தான் கொண்டுவந்திருந்த புனித நீரை ஊற்றினார். 

என்ன அதிசயம், பாபாவின் தலையில் ஊற்றப்பட்ட  நீரினால் பாபாவின் திருமேனி நனையவே இல்லை. தலையில் மட்டும் கங்கையைச் சுமக்கும் அந்த கங்காதரனைப் போலத் தலையில் மட்டும் ஈரம் சுமந்து புன்னகையோடு நின்றார் பாபா.

மேகாவுக்கு உடல் சிலிர்த்தது. பாபாவை வணங்கி நின்றார். பாபாவும் சிவனும் வேறுவேறு இல்லை என்கிற ஞானம் அவருக்கு வாய்த்தது. 

*

இத்தனை அனுபவத்திற்குப் பிறகும், தற்போது தரிசனம் தந்தது நீங்கள்தானா என்று அவரிடம் கேட்க மேகாவுக்குக் கூச்சமாக இருந்தது.   

ஆனால் அவர் வரவை எதிர்பார்த்திருந்தது போல பாபா புன்னகையோடு அவரை வரவேற்றார். அங்கே ஒரு பக்தர் புனேவிலிருந்து வந்திருந்தார். அவர் பாபாவுக்கு ஒரு சிவலிங்கத்தைப் பரிசளித்தார். பாபா அதை வாங்கி அப்படியே மேகாவிடம் கொடுத்தார்.

``பார்த்தாயா மேகா, உன் சிவன் உன்னிடமே வந்துவிட்டார். வைத்துக்கொள். வைத்து தினமும் வழிபடு. உன்னை சூலம் வரையச் சொன்னது இதற்குத்தான். புரிகிறதா? சிவனை மட்டுமல்ல மேகா யார் எந்த இறைவனை வணங்கினாலும் அவர்கள் என்னையே வணங்குகிறார்கள். உண்மையான பக்தி இருக்கும் இடத்தில் நான் இருப்பேன்  

மேகா ஒன்று சொல்கிறேன். நான் என் பக்தனுக்கு அருள விரும்பினால் அதை எந்தக் கதவுகளால் தடுத்து நிறுத்தமுடியும்?"

மேகாவுக்குச் சொன்னதை இன்றுவரைக்கும் பாபா மெய்ப்பித்துக்கொண்டுதான் இருக்கிறார்.  

ஷீரடி சாய் பாபா பற்றி முழுமையாகப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்....

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு