ந்தோஷம் அருளும் சந்தோஷி மாதாவின் திருக்கதையையும் வழிபாட்டையும் சென்ற இதழில் பார்த்தோம். இந்த இதழில் பகவான் மகாவிஷ்ணுவால் நாரதருக்கு உபதேசம் செய்யப்பட்ட, மிக அற்புதமான சத்ய நாராயண விரதத்தைக் குறித்து அறிந்துகொள்வோம்.

சக்தி கொடு! - 4

இன, மத, மொழி பேதம் இல்லாமல் எவரும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். பௌர்ணமித் திருநாளன்று மாலையில் சந்திர உதய காலத்தில், சத்யநாராயண விரதம் கடைப்பிடித்து பூஜிக்கலாம் என்று ஸ்காந்த புராணம் கூறுகிறது.

இயலாதவர்கள் ஞாயிறு, திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலோ, அமாவாசை, அஷ்டமி, துவாதசி, சங்கராந்தி, தீபாவளி ஆகிய நாள்களிலோ, புரட்டாசி மாத சனிக்கிழமைகளிலோ இந்த விரதத்தைக் கடைப்பிடித்து வழிபடலாம்.

விரதம் இருப்பவர்கள், விரத பூஜைகளைச் செய்வதுடன் அதன் பெருமைகளை விளக்கும் திருக்கதைகளைப் படிப்பதும் கேட்பதும் விசேஷ பலன்களைத் தரும். நைமிசாரண்யம் எனும் திருத்தலத்தில் ‘சத்ர’ யாகம் நடந்தபோது, அங்கிருந்த முனிவர்கள், அவர்களின் சீடர்கள், அரசர்கள், அடியார்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் சூதபௌராணிகர் ஒருவர், இந்தக் கதைகளைக் கூறியதாக ஞான நூல்கள் தெரிவிக்கின்றன. நாமும் இந்த விரதத்தின் நியதிகள் மற்றும் வழிபாட்டு முறைகளைத் தெரிந்து கொள்ளுமுன், இதன் மகத்துவத்தை விளக்கும் புனிதக் கதைகளைத் தெரிந்துகொள்வோம், வாருங்கள்!

அசுரர்கள், தேவர்கள் என அனைவராலும் போற்றப்படக்கூடியவர் நாரதர். இருசாராரும் தங்களுடைய பிரச்னைகளை அவரிடம் சொல்லி, அவை தீர வழியும் கேட்பார்கள். இப்படி, அனைவருக்கும் நல்வழி காட்டும் நாரதருக்கே ஒரு பிரச்னை. நாராயணரின் திருமுன் சென்று நின்றார்.

அன்பர் மனம் வாடுவதைச் சற்றும் பொறுக்காத பகவான், ‘‘எப்போதும் நாமசங்கீர்த்தனமும் மகிழ்ச்சியுமாக இருக்கும் உன் முகம், இன்று ஏன் இப்படி வாட்டத்துடன் இருக்கிறது’’ என்று கேட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனதின் பாரத்தை இறக்கிவைக்கும்படி மாதவனே உத்தரவிட்டதால், நாரதர் வாய் திறந்தார்.

‘‘பரந்தாமா! சதா சுற்றி அலையும் நான் பூலோகத்துக்கும் சென்றிருந்தேன். அங்கே மானிடர்கள் எல்லாம் அவரவர் செயல்களால், மறுபடியும் பிறக்கிறார்கள்; அளவில்லாத துயரங்களை அனுபவிக்கிறார்கள். அதைப் பார்த்துத்தான் என் மனம் வாட்டம் அடைந்தது. துயரங்களில் மூழ்கிக் கிடக்கும் அவர்களை மீட்டு, மகிழ்ச்சியோடு வாழவைக்க நினைக்கிறேன். வழி தெரியவில்லை. அதற்காகத் தங்களிடம் வந்திருக்கிறேன். லட்சுமி நாயகா! பக்தர்களைக் காப்பவரே! மக்கள் கடைத்தேற, வழி ஒன்றைத் தாங்கள் காட்டியருள வேண்டும்!’’ என்றார்.

நாராயணர் புன்முறுவல் பூத்தார். ‘‘நாரதா, உன் எண்ணம் புரிகிறது. உயர்ந்த சிந்தனையுடன் எம்மை நாடி வந்திருக்கிறாய். ‘நாராயண... நாராயண...’ என்று எம் திருநாமத்தைச் சொல்லி, துயரக்கடலில் மூழ்கும் மக்களுக்காக எம்மிடம் வந்திருக்கிறாய். இரக்கம் நிறைந்தவனே, நீ கேட்டதைப்போல, மக்கள் சந்தோஷமாக வாழ வழி இருக்கிறது. சத்யநாராயண விரதத்தைத் தூயபக்தியோடும் ஊக்கத்தோடும் செய்தால் போதும். அவர்கள் எனது பரிபூரணமான அருள் பெறுவார்கள். சகல செல்வங்களையும் அடைவார்கள். முடிவில் முக்தி அடைவார்கள். உன் விருப்பம் நிறைவேறும். என் ஆசியும் அருளும் உனக்கு என்றும் உண்டு!’’ என்று வழிகாட்டினார்.

வாட்டம் நீக்க வழி தெரிந்த நாரதர் மகிழ்ந்தார்.

‘‘நீலமேகவண்ணா! தாங்கள் கூறிய சத்யநாராயண விரதத்தை, யாரெல்லாம் செய்திருக்கிறார்கள்? அதனால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன? தயவு செய்து தாங்கள் சொல்லி அருள வேண்டும்!’’ என வேண்டினார்.

மகாவிஷ்ணு தொடர்ந்தார். ‘‘சத்யநாராயண விரதம் அனுஷ்டிப்பதனால் துன்பங்கள் நீங்கும். இன்பமும் மகிழ்ச்சியும் வளரும். குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறக்கும். பெண்கள், சுமங்கலிகளாக இருப்பார்கள். வியாபாரம் மேன்மேலும் பெருகும். கல்வியில் மேன்மை அடையலாம். விரதம் இருந்து பூஜை செய்தவர்கள், அதில் கலந்து கொண்டவர்களுக்குப் பிரசாதம் தரவேண்டும். இது முக்கியம்!’’ என்ற பகவான், விரத முறைகளை விளக்கினார்.

சக்தி கொடு! - 4

செல்வம் அளித்த சீரிய விரதம்!

புண்ணியத் தலங்களில் உயர்ந்தது காசி. தாரக மந்திரமான ராமநாமத்தை, சிவபெருமான் சொல்லும் திருத்தலம். அருள்வளத்துடன் பொருள்வளமும் நிறைந்த புண்ணிய பூமி இது.

காசிநகரில் ஒரு பிராமணன் இருந்தான். ஏழ்மையில் உழன்ற அவன், தினந்தோறும் பிட்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் பொருள் இல்லையே தவிர, பக்தி நிறைய இருந்தது.அவன் பக்தி,  அவன் முன்னால் ஆண்டவனைக் கொண்டு வந்து நிறுத்தியது. உலகத்தைக் காத்து ரட்சிக்கும் பகவான், அந்தணன் முன்னால் மானிட வடிவில் தரிசனம் தந்தார்.

அவன் தனது வழக்கப்படி பகவானை தியானம் செய்துவிட்டு, யாசகம் முடிந்து ஒரு மரத்தின் நிழலில் ஓய்வாக உட்கார்ந்திருந்தான். வறுமையின் ரேகைகள் உடலெங்கும் தோன்ற உட்கார்ந்திருந்த அந்தணனை அன்போடு பார்த்தார் பகவான்.

‘‘ஐயா! உங்களைப் பார்த்தால் வறுமை தெரிகிறது. இந்த நிலையிலும் நீங்கள் அலைந்து திரிந்து பொருள் தேடுவதைப் பார்த்தால், எனக்கு வேதனையாக இருக்கிறது’’ என்றார் பகவான்.

அந்தணன், ‘‘ஐயா!  என்னைப் பார்த்து, இன்னும் அந்த ஸ்வாமி மனம் இரங்கவில்லை. எனது பாவம் போலிருக்கிறது. பச்... என்ன செய்வது? ஐயா! உங்களைப் பார்த்தவுடன், என் மனம் நிம்மதி அடைகிறது. பகவான் நாராயணனே உங்கள் வடிவில் வந்திருப்பதாக நினைக்கிறேன். எனது பாவங்கள் நீங்கி, நல்லபடியாக வாழ வழி இருந்தால், தயவுசெய்து எனக்குச் சொல்லுங்கள்!’’ என்று கூறினான்.

தன் கரங்களால் அவனை வருடிக்கொடுத்த ஸ்வாமி ‘‘கவலைப்படாதே! நீ வேண்டியபடி துயரங்களைப் போக்கி, எல்லாவிதச் செல்வங்களையும் பெற ஒரு வழி இருக்கிறது. ‘சத்யநாராயண விரதம்’ என்று ஒன்று உண்டு. முறையாக அதை நீ கடைப்பிடித்தால் உனது துயர்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும். நீ தேடி அலையும் செல்வம், தேடாமலேயே உன்னிடம் வந்து சேரும். நல்வாழ்வை அடைவாய்!’’ என்றார்.

‘‘ஸ்வாமி! எனது தரித்திரம் தீர, தெய்வமே வந்து வழிகாட்டியதாக நினைக்கிறேன். தாங்கள் சொன்ன அந்த விரதத்தைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கிறேன். அதற்குரிய வழி வகைகளை தயவு செய்து சொல்லுங்கள்!’’ என்று வேண்டினான். அவனிடம் சத்யநாராயண விரத முறைகளைத் தெளிவாக விவரித்த ஸ்வாமி, அங்கிருந்து மறைந்தார்.

அவன் சிந்தனை சத்யநாராயண விரதத்திலும், அதற்கு வழிகாட்டிய பெரியவரிடமும் லயித்திருந்தது. பூஜையை நல்ல விதமாகச் செய்து முடிக்க, உரிய வழிகளைக் குறித்து யோசிக்க ஆரம்பித்தான். காலையில் எழுந்த அந்தணன், கர்ம அனுஷ்டானங்களை முடித்து, வழக்கப்படி யாசகம் செய்யக் கிளம்பினான்.

அவன் உள்ளம் அன்று இனம் புரியாத ஆனந்தத்தில் மூழ்கியது. அன்று அவனுக்கு ஏராளமான பொருள்கள் கிடைத்தன. அவனைப் பார்த்ததும் ‘‘போ! போ!’’ என்று விரட்டுபவர்கள்கூட அன்று அவனுக்குப் பிட்சை கொடுத்தார்கள். இப்படி விரத பூஜைக்குத் தேவையான அனைத்துப் பொருள்களுடனும் வீடு திரும்பினான் அந்தணன்.

பின்பு, பக்தியுடனும் ஊக்கத்துடனும் முறைப்படி சத்யநாராயண விரத பூஜையைச் செய்து முடித்தான்.

அதன் பலனாக அந்தணனுக்கு உயர்ந்த பதவி கிடைத்தது. ஏழையாக இருந்தபோது அவன் தேடி அலைந்த செல்வம் அவன் வீட்டில் தாண்டவம் ஆடியது. அவன் குடும்பமும், உற்றார் உறவினர்களும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். அந்தணன் அனுசரித்த சத்யநாராயண விரதம், முடிவில் அவனுக்கு முக்தியையும் அளித்தது.

இந்த அந்தணனிடம் இருந்து சத்யநாராயண விரத பூஜையின் மகிமையை விறகு வெட்டி ஒருவன் முதலில் அறிந்து கொண்டதாக சூதபௌராணிகர் கூறினார். அதையும் தெரிந்து கொள்வோம்.

அறிந்ததைச் செய்ததால் கிடைத்த ஐஸ்வரியம்!

தெய்வம் சொன்ன சத்யநாராயண விரதத்தைத் தவறாமல் செய்து வந்தான் அந்தணன். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் மாலை நேரம், தவறாமல் சத்யநாராயண விரத பூஜை நடைபெற்றது.

ரு நாள்... ஊர் சுற்றி விறகு விற்கும் ஒருவன், களைப்பு மிகுதியால் தாகம் தணிக்கும் பொருட்டு அந்தணன் வீட்டுக்கு வந்தான்.

அப்போது, அங்கு சத்ய நாராயண விரத பூஜை நடந்து கொண்டிருந்தது. ஆர்வத்துடன் அதை கவனித்தான் விறகு வெட்டி. பூஜை முடிந்ததும் அந்தணன், அங்கிருந்த அனைவருக்கும் பிரசாதம் கொடுத்தான். அதை வாங்கி அங்கேயே சாப்பிட்டான் விறகு வெட்டி.

பிறகு, தனிமையில் இருந்த அந்தணனை நெருங்கினான். ‘‘ஐயா! இப்போது நீங்கள் செய்தது என்ன பூஜை? அதை எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும் என்று எனக்குச் சொன்னால், நானும் அதைச்செய்து துயரங்களைப் போக்கிக் கொள்வேனே!’’ என வேண்டினான்.

அந்தணன் அவனிடம் சத்ய நாராயண விரதத்தைப் பற்றியும் அதனால், தான் அடைந்த நன்மைகளையும் விவரித்தான். அந்தணனுக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த விறகு வெட்டி,

‘‘உங்களிடம் இருந்து நல்லதைத் தெரிந்து கொண்டேன். இந்த சத்யநாராயண விரதத்தை நானும் கடைப்பிடிக்கப் போகிறேன். வருகிறேன் ஐயா!’’ என்று சொல்லிவிட்டுத் தனது இருப்பிடம் அடைந்தான்.

மறுநாள் பொழுது விடிந்ததும் அவன் வழக்கம் போல் விறகு விற்கப் புறப்பட்டான். அன்று அவன் கொண்டு வந்த விறகு முழுவதும் விரைவிலேயே விற்றுத் தீர்ந்தது. சத்யநாராயண பூஜையைப் பார்த்து, அந்தப் பிரசாதத்தை உண்டதன் விளைவே இது.

‘நல்லதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கும்போதே, தெய்வத்தின் அருள் நமக்குக் கை கொடுக்கிறதே... அப்படியானால் முழு மூச்சுடன் செய்தால் எவ்வளவு பலன் கிடைக்கும்! நம் பிறவி, பலன் உள்ளதாக ஆகிவிடாதா...’ என்று பூரித்துப் போனான் விறகு வெட்டி. இதை அடுத்து, சத்யநாராயண பூஜைக்குத் தேவையான பொருள்களுடன் வீடு திரும்பினான்.

அந்தணன் சொன்னபடி முறையாக, மாதம் தவறாமல் சத்யநாராயண பூஜை செய்தான் விறகுவெட்டி. அதன் பலன்... அவனது வீட்டில் தாண்டவமாடிய தரித்திரம் விலகிப் போயிற்று. அங்கு அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்யத் தொடங்கினர். குடும்பத்தாருடன் அமைதியான வாழ்க்கை நடத்திய விறகு வெட்டி, முடிவில் மோட்சத்தை அடைந்தான்.

இன்னும் சில கதைகளையும், சத்ய நாராயண விரத மகிமைகளையும் அடுத்த இதழில் காண்போம்...

- சந்திப்போம்...

சோம்பலே காரணம்!

சக்தி கொடு! - 4

அன்பர் ஒருவர் திருமுருக கிருபானந்த வாரியாரிடம், ‘‘இப்போது எல்லோரும் நேரமில்லை என்று காரணம் கூறி கடவுளைக் கும்பிடாமல், இருக்கிறார்களே... இது சரியா’’ என்று கேட்டார். அதற்கு வாரியார் நீண்ட பதிலளித்தார்:

‘‘நேரம் இல்லை’ என்பதை நான் ஏற்க மாட்டேன். நான் தினமும் காரிலோ, ரயிலிலோ, விமானத்திலோ பல மைல் தூரம் பயணம் செய்கிறேன். இருந்தும் தவறாமல் தினமும் இரண்டு மணி நேரம் பூஜை செய்கிறேன். அதிகாலை 6 மணிக்கு ரயில் என்றால், மூன்று மணிக்கே எழுந்து விடுவேன். ஐந்தரைக்கு பூஜை முடிந்து விடும். மக்கள் சவரம் பண்ணிக் கொள்ளாமல் இருக்கிறார்களா? காலைக் கடன்களை முடிக்காமல் இருக்கிறார்களா? அதற்கெல்லாம் நேரம் இருக்கும்போது, இறைவனை பூஜிக்க மட்டும் நேரம் இல்லாமல் போகுமா? சோம்பலே காரணம். அதைத் தவிர்த்து இறைவனை சிறிது நேரம் கும்பிட்டாலும் ஆத்ம திருப்தி உண்டாகும்’’

- ஏ.என்.சுப்ரமணியம், அக்ரஹாரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism