Published:Updated:

அப்பர், திருமங்கையாழ்வார், பரமஹம்சர் ஆன்மிக வாழ்வுக்குப் பின்னணியாக இருந்த பெண்கள்! #WomensDay

அப்பர், திருமங்கையாழ்வார், பரமஹம்சர் ஆன்மிக வாழ்வுக்குப் பின்னணியாக இருந்த பெண்கள்!  #WomensDay
அப்பர், திருமங்கையாழ்வார், பரமஹம்சர் ஆன்மிக வாழ்வுக்குப் பின்னணியாக இருந்த பெண்கள்! #WomensDay

அப்பர், திருமங்கையாழ்வார், பரமஹம்சர் ஆன்மிக வாழ்வுக்குப் பின்னணியாக இருந்த பெண்கள்! #WomensDay

ண்களுக்கு இணையாக அனைத்துத் துறைகளிலும் பெண்கள் தற்போது கோலோச்சிக்கொண்டிருக்கிறார்கள். ஆன்மிகத்திலும் பெண்கள் ஆற்றிய தொண்டு அளப்பரியது. மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆன்மிகத்தில் தொண்டாற்றி காலத்தால் அழியாமல் மக்கள் மனதில் வாழும் மகளிர் பற்றியும் அவர்கள் செய்த தொண்டுகள் பற்றியும் அறிந்துகொள்வோம்.

திலகவதியார் 

தேவார மூவருள் முதன்மையானவராகப் போற்றப்படுபவர் அப்பர். வரலாற்றில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் மகேந்திரவர்ம பல்லவனைச் சமணத்திலிருந்து சைவ சமயத்தைப் பின்பற்றச் செய்தவர் அப்பர்தான். அப்பரும் தொடக்கத்தில் சமண மதத்தைப் பின்பற்றி, பிறகு சைவத்துக்கு மாறியவர். ஈசனிடமே வாகீசர் என்றும் நாவுக்கரசர் என்றும் பட்டம் பெற்றவர் அப்பர். அவரை மீண்டும் சமணத்திலிருந்து சைவத்துக்குத் திருப்பிய பெருமைமிகு பெண்தான் திலகவதியார். அப்போது அப்பருக்குத் திருநாவுக்கரசர் என்றோ வாகீசர் என்றோ பெயர் கிடையாது. அவருடைய இயற்பெயர் மருள்நீக்கியார். சமணம் தழுவியபோது தம் இயற்பெயரை தர்மசேனர் என்று மாற்றிக்கொண்டார். சமண சமய நூல்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்து, சமண சமயத் தலைவராகவும் விளங்கினார்.

சிறு வயதில் நிச்சயம் செய்யப்பட்ட கணவன் போரில் இறந்தும் உடன்கட்டை ஏறாமல் தனது தம்பி மருள்நீக்கிக்காகவே உயிர் வாழ்ந்த உத்தமி திலகவதியார். மருள்நீக்கியாரை மீண்டும் தாய் மதத்துக்கு அழைத்துச் செல்வதற்காகப் போராடினார். ஆனால், தர்மசேனர் அதைக் கண்டுகொள்ளாமல் சமணத்தைப் பரப்புவதிலேயே ஈடுபட்டிருந்தார். இந்தநிலையில், தர்மசேனருக்கு சூலை நோய் தாக்கியது. கடுமையான வயிற்று வலியில் அவதிப்பட்டார். சமண மத வைத்தியர்களும் சமண மதப் பெரியோர்களும் எவ்வளவோ முயன்றும் தர்மசேனரின் வயிற்று வலியைப் போக்க முடியவில்லை. இந்த நிலையில் திலகவதியார் சிவபெருமானின் பாதத்தில் வைத்துப் பூஜை செய்த திருநீற்றைக் கொண்டு சென்று தர்மசேனரின் நெற்றியில் பூசினார். வயிற்று வலி குறைந்தது. பிறகு, திலகவதியாரின் ஆலோசனைப்படி ‘கூற்றாயினவாறு விலக்ககலீர்’ என்ற பாடலை மனமுருகிப் பாடினார். அவருடைய வயிற்று வலி காணாமல் போனது. அதன் பிறகு, சைவ சமயத்துக்குத் திரும்பி மனமுருக வைக்கும் பாடல்கள் மூலம் மக்களை அந்தச் சமயத்துக்குத் திருப்பினார். `நாவுக்கரசர்’ என்றும் போற்றப்பட்டார். பல்வேறு சிவாலயங்களை செப்பனிட்டு உழவாரப் பணி செய்து ‘உழவாரத் தொண்டர்’ என்றும் அழைக்கப்பட்டார். மகேந்திர பல்லவனை சைவ சமயத்தைப் பின்பற்றச் செய்தார்.

குமுதவல்லி நாச்சியார் 

திருமங்கையாழ்வார் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். சோழ நாட்டில் பிறந்த இவரது இயற்பெயர் கலியன். சோழ மன்னனின் படைத் தலைவராகவும் இருந்தவர். தனது வீரத்தின் மூலம் திருமங்கை எனும் பகுதியின் தலைவராகச் சோழ மன்னனால் நியமிக்கப்பட்டவர். அதனால் இவர் ‘திருமங்கை மன்னன்’ என்றும் அழைக்கப்பட்டார். அரசபோகங்களில் திளைத்திருந்த கலியனை, ஆன்மிகத்துக்குத் திருப்பி, வைணவம் வளர்க்கச் செய்தவர் குமுதவல்லி நாச்சியார்.

படைத் தலைவனான கலியன், குமுதவல்லி எனும் வைணவ மங்கை மீது காதல் கொண்டான். ஆனால், அவளோ அரசபோகங்களில் மனதைச் செலுத்தாமல், அரங்கப் பெருமானிடம் பக்தி செலுத்தும்  ஒருவரையே தான் மணக்க விரும்புவதாகக் கூறிவிட்டாள். அவளைத் திருமணம் செய்துகொள்வதில் மிகுந்த விருப்பம் கொண்டிருந்த கலியன், அவளுடைய விருப்பப்படியே ஆன்மிகத்தில் ஈடுபடுவதாகக் கூறி, குமுதவல்லியை மணந்துகொண்டான். பின்னர் தினமும் அடியார்களின் பசி தீர்ப்பதிலும் கோயில் திருப்பணிகள் செய்வதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டான். முதலில் தனது காதல் மனைவிக்காக வைணவத்தில் ஈடுபாடு செலுத்தியவன் பிறகு, தன்னை திருமாலின் சேவைக்கே பூரணமாக அர்ப்பணித்துக்கொண்டான். தனது செல்வங்கள் அனைத்தையும் வைணவ அடியார்களை உபசரிப்பதிலும், கோயில் திருப்பணிகளிலும் செலவிட்டான். வைணவத் தொண்டில் ஈடுபடுவதே தனது முதல் கடமையெனக் கருதிய கலியன், கடமையை நிறைவேற்ற யாசகம் பெற்றும் யாசகம் கிடைக்காத வேளைகளில் களவாடவும் செய்தான்.

கலியனின் பக்திக்கு அருள் செய்ய விரும்பிய திருமால், கலியன் வழிப்பறி செய்யும் காட்டுப் பகுதியில் மணக்கோலத்தில் வந்தார். அவர் யார் என்பதை அறியாத கலியன், அவர்களிடம் இருந்த நகைகளைக் கொள்ளையடித்தான். பெருமாளின் கால்களில் இருந்த தங்க மெட்டியைக் கழற்ற விரும்பி, அவரின் திருவடிகளில் கைவைத்தபோது, பகவானின் திருவடி ஸ்பரிச மகிமையால், திருமாலின் தரிசனம் பெற்று திருமங்கையாழ்வாராக உயர்வு பெற்றார். தேனினுமினிய பாசுரங்களால் திருமாலைப்பாடிய திருமங்கையாழ்வாரின் பெருமைக்கும் புகழுக்கும் காரணம் குமுதவல்லி நாச்சியார்தான்!

அன்னை சாரதா தேவி

உலகத்துக்கே சர்வ சமய சமரச நெறியை உணர்த்திய மகான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். அவர் நடத்திய ராமகிருஷ்ண இயக்கத்துக்கும் அவரது ஆன்மிக சாதனைகளுக்கும் ஆணிவேராக இருந்தவர்தான் அன்னை சாரதா தேவி. 

அன்னை சாரதா தேவி கொல்கத்தாவில் உள்ள  ஜெயராம்பாடி என்ற கிராமத்தில் பிறந்தார், தனது ஐந்தாவது வயதில் ராமகிருஷ்ணரின் மனைவியானார். தன் கணவரையே இறை வடிவாகவும் குருவாகவும் ஏற்று தானும் துறவு வாழ்க்கை வாழ்ந்தார். அப்போது முதல் ராமகிருஷ்ணரின் ஆன்மிக வாழ்க்கைக்குத் துணையாக இருந்து ஏராளமான சீடர்களை ஆன்மிகப் பாதையில் வழிநடத்தினார். தாம் முறைப்படி பள்ளிக்குச் சென்று கல்வி கற்காவிட்டாலும், பெண் கல்வியை ஊக்குவித்த அன்னை சாரதா தேவி, நிவேதிதையின் மறைவுக்குப் பிறகு அவர் தொடங்கிய பள்ளியைத் தொடர்ந்து இயக்கினார். 

பரமஹம்சரின் மறைவுக்குப் பிறகும் சீடர்களை வழிநடத்தி ஆன்மிகத்தைப் பரப்பியவர். அதன் பிறகு கங்கைக் கரையில் ராமகிருஷ்ண மடம் தோன்றுவதற்கு முக்கியக் காரணமாகவும் விளங்கினார். ‘சங்க ஜனனி’ என்று இவரைப் போற்றினார் விவேகானந்தர். 
’யாருமே அந்நியர் அல்லர். அனைவரும் என் குழந்தைகளே’ என்று ஆன்மிக வாழ்க்கை வாழ்ந்த மாதரசி அன்னை ஸ்ரீ சாரதா தேவி.

மகாபிரஜாபதி கௌதமி

PC : https://commons.wikimedia.org - MediaJet

பௌத்த சமயத்தின் முதல் பெண் துறவி கௌதமி. கௌதம புத்தரால் துறவற தீட்சை வழங்கப்பட்ட பெருமைக்குரிய முதல் பெண்மணி இவர். புத்தரின் முதன்மையான பத்து சீடர்களில் ஒருவர். தனது வாழ்நாள் முழுவதும் பௌத்த நெறியை மக்களிடையே  பரப்புவதில் ஈடுபட்டார்.

கௌதமி, புத்தரின் அன்னையான மாயாதேவியின் உடன் பிறந்த சகோதரியாவார். புத்தருக்கு வளர்ப்புத் தாயாக இருந்தவர் இவர். புத்தருடைய தந்தை சுத்தோதனர் இறந்த பிறகு, மகாபிரஜாபதி கௌதமியும் துறவறம் மேற்கொண்டார். ஆனால், புத்தர் தனது சங்கத்தில் பெண் துறவிகளைச் சேர்ப்பதில்லை எனும் கொள்கையுடன் இருந்ததால், கௌதமிக்குத் துறவற தீட்சை அளிக்க மறுத்துவிட்டார். அதன் பிறகு கௌதமி தனது தலைமுடியைத் தானே நீக்கி, மஞ்சள் ஆடை அணிந்துகொண்டு `பிக்குணி’யாக மாறினார். இவரைத் தொடர்ந்து பல்வேறு பெண்கள் இவரைப் பின் தொடர்ந்து தலைமுடி நீக்கி, மஞ்சள் ஆடை உடுத்திக்கொண்டார்கள். அதற்குப் பிறகு இவர்கள் அனைவரும் புத்தரிடம் தீட்சை வேண்ட அனைவருக்கும் புத்தர் துறவற தீட்சை வழங்கினார். 

பிற்காலத்தில், புத்தரின் பத்து முதன்மைச் சீடர்களுள் ஒருவராக மகாபிரஜாபதி கௌதமியும் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கௌதமியின் மகனான நந்தனும் புத்தரின் முதன்மைச் சீடர்களுள் ஒருவன். பெண்களுக்கு ஆன்மிகத் துறவறம் மறுக்கப்பட்ட காலத்தில் போராடி துறவறம் பெற்று, பௌத்தத்தை அனைவருக்கும் பரப்பியவர் கௌதமி. 

அடுத்த கட்டுரைக்கு